Verified Web

வட்டமடு கண்டுகொள்ளப்படாத பிரச்சினை

2017-11-14 00:20:43 Administrator

அர­சி­யலில் இய­லுமை, இய­லாமை என்னும் இரு பிர­தான வகி­பாகங்கள் இருக்­கின்­றன. அவற்றுள் இய­லாமை என்னும் அர­சி­யலைக் காண வேண்­டு­மாக இருந்தால் அம்­பாறை மாவட்­டத்­திற்கு ஒரு முறை ஏனைய மாவட்­டத்­த­வர்கள் வந்து சென்றால் அந்த இய­லா­மையைக் கண்டுகொள்ள முடியும்.

வீதி எங்கும் விசிறிக் கிடக்­கின்­றார்கள் மனி­தர்கள். போராட்­டங்­களால் எதை­யா­வது வென்று கொள்­ளலாம் என்று வீதியில் இறங்­கி­ய­வர்­க­ளுக்கு அவ­ம­ரி­யா­தையும் பழிச் சொற்­க­ளுமே வெகு­ம­தி­யாகக் கிடைத்து வரு­கின்­றன.

நாட்கள் நகர்­கின்­றன, போராட்­டங்கள் தொடர்­கின்­றன, தீர்­வுகள் எட்டாக் கனிகள் போல் தூர­மா­கின்­றன. தமது போராட்­டத்தின் பின்னால் எந்த அர­சி­யல்­வா­தி­க­ளா­வது வந்து தீர்­வினைப் பெற்றுத் தரு­வார்­களா என்று அங்­க­லாய்க்கும் அப்­பாவி மக்­களின் கண்­களில் அர­சி­யல்­வா­திகள் காற்றில் திசை­மாறி வந்து விழும் தூசு­களைப் போலா­வது சிக்­கு­வார்­களா? என்று தேடி­னாலும் எங்­கேயும் காண­வில்லை அவர்­களை.

மக்­களை உசுப்­பேற்றி தேர்தற் காலங்­களில் மேடைக்கு மேடை உரிமைப் போராட்டம் நடத்தி வரும் சில முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் அம்­பாறை மாவட்­டத்தின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளிலும் நடந்­தே­றி­வரும் தலை­போகும் பிரச்­சி­னை­களை இன்னும் கண்டு கொள்­ளாமல் இருப்­பதன் மர்­மம்தான் என்­ன­வென்று புரி­ய­வில்லை.

சுய­ந­லத்­திற்­காக செயற்­பட்டு எடுப்பார் கைப்­பொம்­மை­யாக அர­சி­யல்­வா­திகள் இருக்­கின்­றார்­களா அல்­லது தன்னால் எது­வுமே செய்ய முடி­யாது என்ற உண்­மை­யினை உணர்ந்து கொண்டு ஓர­மாய் இருந்து கால­டியில் நடக்கும் பிரச்­சி­னை­களை காலா­கா­ல­மாக வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்­களா? என்று எண்ணத் தோன்­று­கின்­றது.

அம்­பாறை மாவட்­டத்தில் நடந்­தே­றி­வரும் முஸ்­லிம்­களின் மீதான அத்­து­மீ­றல்­களில் மற்­று­மொரு விட­யம்தான் திருக்­கோவில் பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட வட்­ட­மடு விவ­சாயக் காணி விவ­காரம்.

தமது பூர்­வீகக் காணி­களை நிரந்­த­ர­மாக கைய­கப்­ப­டுத்தும் முயற்­சியில் ‘வட்­ட­மடுக் காணி­களை மீட்கும் போராட்டம்’ எனும் தொனிப் பொருளில் கடந்த பத்துத் தினங்­க­ளாக நடு வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்­தியும் எவ்­வித தீர்­வுமே கிட்­டாமல் அப்­பாவி ஏழை விவ­சா­யிகள் நாட்­களை எண்ணிக் கொண்டு போராட்­டத்­தினை நகர்த்தி வரு­கின்­றனர்.

மாற்றான் தாய்ப் பிள்ளை நம்­மிடம் வராமல் போனாலும் நாம் வாக்­க­ளித்த முஸ்லிம் அர­சியல் தலை­மை­களோ அல்­லது முஸ்லிம் மக்கள் பிர­தி­நி­தி­களோ எம் கண்­ணீரைத் துடைக்க வரு­வார்­களா என்று ஏங்கித் தவிக்கும் அப்­பாவி விவ­சா­யி­க­ளுக்கு கிடைத்த தீர்­வு­தான் பூச்­சி­ய­மா­கி­யுள்­ளது.

கடந்த அரை நூற்­றாண்­டுக்கும் மேலாக இப்­பி­ர­தே­சத்தில் நெற்­செய்கை மேற்­கொண்டு வந்த சுமார் 717 குடும்­பத்­த­வர்­களின் 1500 ஏக்­க­ரிற்கும் அதி­க­மாக நெற்­கா­ணி­களை சில தரப்­பினர் வேண்­டு­மென்றே முடக்கி விடு­கின்­றனர்.

இவ்­வி­வ­சாய நிலத்­தினை நம்­பியே தமது ஜீவ­னோ­பா­யத்­தினை நகர்த்தி வரும் இம்­மக்­களின் வாழ்­வா­தாரம் தற்­போது கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. ஆம் இப்­பி­ர­தே­சத்தில் விவ­சாயச் செய்கை மேற்­கொள்­ளக்­கூ­டாது அது ஒதுக்கு வனப் பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என வன இலாகா அதி­கா­ரிகள் அண்மைக் கால­மாக தடுத்து நிறுத்தி வரு­கின்­றனர்.

கடந்த சில வரு­டங்­க­ளாக தம்­மி­ட­முள்ள பொரு­ளா­தா­ரத்­தினைச் செலவு செய்து அப்­பி­ர­தே­சத்தில் விவ­சாயச் செய்கை மேற்­கொள்ளச் செல்லும் விவ­சா­யி­க­ளையும் விவ­சாயச் செய்­கைக்­காக பயன்­படுத்தப்­படும் உழவு இயந்­தி­ரங்கள் போன்­ற­வற்றை வன இலாகா அதி­கா­ரிகள் கைது செய்து திருக்­கோவில் பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­ப­டு­வதும், நீதி மன்­றத்­திற்கு கொண்டு செல்­லப்­ப­டு­வதும் பின்னர் விடு­தலை ஆவதும் வழக்­கா­றாக இருந்து வரு­கின்­றது.

வட்­ட­மடு, வேப்­பை­யடி, கொக்­கு­ழுவ, முறா­ண­வெட்டி, வட்­ட­மடு புதிய கண்டம் ஆகிய ஐந்து விவ­சாயக் கண்­டங்­க­ளி­லு­முள்ள சுமார் 1500 இற்கும் அதி­க­மான ஏக்கர் நிலப்­ப­ரப்பில் கடந்த ஐம்­பது ஆண்­டு­க­ளுக்கும் மேலாக விவ­சா­யிகள் எவ்­வித பிரச்­சி­னை­க­ளு­மில்­லாமல் நெற்­செய்­கை­யினை மேற்­கொண்டு வந்­துள்­ளனர்.

இப்­ப­குதி நிலங்கள் 333/3 இலக்கம் கொண்ட விவ­சாயக் காணிக்­கான அதி விஷேட வர்த்­த­மானி மூலம் 1985.04.03 ஆம் திகதி அக்­க­ரைப்­பற்று கிழக்கு கம­நல சேவை நிலை­யத்தின் நிரு­வாக எல்­லை­யாக அறி­விக்­கப்­பட்டு பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அது­மாத்­தி­ர­மன்றி இப்­பி­ர­தே­சத்தில் விவ­சா­யிகள் தங்­கி­யி­ருந்து தமது விவ­சாய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தற்­கான பல்­வேறு ஆதா­ரங்­களும் இருப்­ப­தாக தெரிய வரு­கின்­றது. அப்­ப­கு­தியில் தங்­கி­யி­ருந்து விவ­சாயச் செய்கை மேற்­கொண்­ட­போது 1974.04.06ஆம் திகதி நடந்­தே­றிய ஒரு பிர­ச­வத்­தி­னைக்­கூட இங்கே அதற்­கான ஆதா­ர­மாகக் கொள்ள முடியும். கலந்தர் லெவ்வை முகைதீன் வதீர் என்­பவர் அப்­பி­ர­தே­சத்தில் பிறந்து அவ­ருக்­கான பிறப்புச் சான்று திருக்­கோவில் பிர­தேச செய­ல­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தையும் குறிப்­பிட்டுச் சொல்ல முடியும்.

இப்­பி­ர­தேச விவ­சாயக் காணி­க­ளுக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரத்­தினை சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு வழங்கும் வகையில் 1978. 08. 10ஆம் திகதி காணி அமைச்சின் மூலம் அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதி­ப­ருக்கு விஷேட கடிதத் தலைப்­பிட்டு அனுப்­பப்­பட்­ட­தற்­கான ஆதா­ரங்­களும் இவ்­வி­வ­சாயக் காணி­களில் நீண்ட கால­மாக மக்கள் நட­மா­டி­யி­ருக்­கின்­றார்கள் என்ற தட­யங்­களுள் ஒன்­றாகக் கொள்ள முடியும்.

இதற்கும் மேலாக 1979.06.20 ஆம் திகதி அம்­பாறை மாவட்டம் சாகாமம் நீர்ப்­பா­சன காரி­யா­ல­யத்தில் அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதி­பரின் பணிப்­பு­ரைக்­க­மை­வாக அப்­போது அக்­க­ரைப்­பற்று உதவி அர­சாங்க அதி­ப­ராக இருந்த சிறி­வர்­தன மற்றும் திருக்­கோவில் உதவி அர­சாங்க அதி­ப­ராக இருந்த வேத­நா­யகம் ஆகி­யோரின் பங்­கு­பற்­றுத­லுடன் விஷேட காணிக்­கச்­சேரி நடத்­தப்­பட்டு 1979ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை தொடர்ச்­சி­யாக அப்­ப­குதி விவ­சா­யி­க­ளுக்கு காணி அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்டும், பின்னர் LDO அனு­ம­திப்­பத்­தி­ரமும் வழங்­கப்­பட்­ட­மைக்­கான சான்­று­களும் உள்­ளன.

இது தவிர இவ்­வி­வ­சா­யிகள் நெல் விவ­சா­யத்­தினை சிறப்­புற மேற்­கொள்ள வேண்டும் என அக்­க­ரைப்­பற்று கம­நல சேவை மத்­திய நிலை­யத்­தினால் ALR, PLR பதி­வுகளும் மேற்கொள்­ளப்­பட்டு இப்­ப­குதி குளங்கள் அர­சாங்­கத்­தினால் புன­ர­மைக்­கப்­பட்டு வழங்­கப்­பட்­டுள்­ள­மை­யி­னையும் ஆதா­ர­மாகக் கொள்ள முடியும்.

இது இவ்­வா­றி­ருக்க யுத்த கால சூழ்­நி­லை­யிலும் இப்­பி­ர­தே­சத்தில் முஸ்லிம் விவ­சா­யிகள் எவ்­வித தங்கு தடை­யு­மின்றி தமது விவ­சாயச் செய்­கை­யினை மேற்­கொண்டு வந்­துள்­ளனர். தமது உயிரை மாய்த்துக் கொண்­டாலும் பர­வா­யில்லை என வயிற்றுப் பசி­யினைப் போக்கி வந்த இவ்­வி­வ­சா­யி­க­ளுக்கு போர் நிறுத்த சூழ்­நி­லையில் சாத­க­மான நிலையும் உரு­வாக்கிக் கொடுக்­கப்­பட்­டது எனலாம்.

கடந்த 2003.10.02ஆம் திகதி திங்­க­ளன்று அம்­பாறை மாவட்ட அரச அதிபர் தலை­மையில் விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் அம்­பாறை மாவட்ட முக்­கி­யஸ்­தர்கள், போர் நிறுத்தக் கண்­கா­ணிப்புக் குழு­வினர் இப்­பி­ர­தேச முஸ்லிம் விவ­சா­யிகள் போன்றோர் ஒரே மேசையில் கலந்­து­ரை­யாடி இவ்­வி­வ­சா­யிகள் தங்கு தடை­யின்றி தமது நெல் விவ­சாயச் செய்­கை­யினை மேற்­கொள்ள முடியும். அதற்­கான உத்­த­ர­வா­தத்­தி­னையும் பாது­காப்­பி­னையும் விடு­தலைப் புலி­களை இயக்­கத்­தினர் வழங்­கு­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­த­மை­யி­னையும் இங்கே குறிப்­பிட்டுக் கூற முடியும்.

ஆதா­ரங்கள் பல பல­மா­கவும் விவ­சா­யி­க­ளுக்கு சாத­க­மா­கவும் இருந்த போதி­லும்­கூட இவ்­வி­வ­சா­யி­க­ளுக்கு பற்­பல சோத­னைகள் வந்த வண்­ணமே உள்­ளன. இவ்­வி­வ­சாய நிலப்­ப­ரப்­பா­னது மேய்ச்சல் தரை என ஒரு சாராரும், ஒதுக்கு வனப் பிர­தேசம் என மறு சாராரும் இவ்­வி­வ­சா­யி­க­ளுக்கு பற்­பல தொல்­லை­களை கொடுத்த வண்­ணமே இருந்து வந்­தனர்.

கடந்த 1981ஆம் ஆண்டு கால்­நடைப் பண்­ணை­யா­ளர்­களால் இப்­பி­ர­தேசம் மேய்ச்சல் தரை என நீதி­மன்­றத்தில் வழக்குத் தொட­ரப்­பட்­டது.  PCA/1433 என்னும் வழக்­கி­லக்­கத்­திற்கு அமை­வாக அக்­க­ரைப்­பற்று நீதவான் நீதிமன்­றத்தில் தொட­ரப்­பட்டு வந்த வழக்­கிற்கு அமை­வாக அப்­போது கட­மையிலிருந்த நீதி­பதி அக்­கா­ணி­க­ளுக்குள் நேர­டி­யாகச் சென்று பார்­வை­யிட்­டதன் பின்னர் இப்­ப­குதி விவ­சாயக் காணி எனவும் இக்­கா­ணிகள் உள்ளே பண்­ணை­யா­ளர்கள் நேர­டி­யா­கவோ அல்­லது மறை­மு­க­மா­கவோ உட்­பி­ர­வே­சிக்க முடி­யாது என தடை விதித்து 1982.04.24ஆம் திகதி தீர்ப்பு வழங்­கி­ய­துடன், இவ்­வி­டயம் தொடர்பில் சிவில் நீதிமன்­றினை நாடும்­படி பணிக்­கப்­பட்­டது. இதற்­க­மை­வாக DCK/1584/L    என்னும் இலக்கம் கொண்ட வழக்கு கல்­முனை மாவட்ட நீதிமன்­றத்தில் தொட­ரப்­பட்டு வந்­தது. கடந்த 20 ஆண்டு கால­மாக இந்­நீதி மன்­ன­றத்தில் இடம்­பெற்று வந்த வழக்கு கடந்த 2001.04.23ஆம் திகதி செலவுத் தொகை­யுடன் இவ்­வி­வ­சா­யி­க­ளுக்கே வெற்றி கிட்­டி­யது.

இது இவ்­வா­றி­ருக்க உண்­மைக்குப் புறம்­பான தக­வல்­களைக் காண்­பித்து சில தரப்­பி­னரால் கடந்த 2010.10.01ஆம் திகதி 1673/45 இலக்­கத்­து­ட­னான வர்த்­த­மானி அறி­வித்­தலில் இக்­கா­ணிகள் ஒதுக்கு வனம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது உண்­மைக்குப் புறம்­பான விடயம் என குறிப்­பிட்டு அவ்­வப்­போது விவ­சா­யி­களால் கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்­களும், உணவு தவிர்ப்புப் போராட்­டங்­களும் இடம்­பெற்று வரு­கின்­றன.

இப்­போ­ராட்­டங்­களின் தற்­கா­லிக தீர்­வாக இப்­ப­குதி விவ­சா­யி­க­ளுக்கு சொற்ப காணி­களில் சொற்ப நிலப்­ப­கு­திக்குள் விவ­சாயம் செய்­வ­தற்­கான அனு­ம­திகள் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னரால் வழங்­கப்­ப­டு­வதும் பின்னர் வன இலாகா அதி­கா­ரி­களால் விவ­சாயம் செய்­யப்­ப­டு­வது தடுக்­கப்­ப­டு­வ­து­மாக கடந்த சில வரு­டங்கள் உருண்­டோடிக் கொண்­டி­ருக்­கின்­றன.

தமக்­கான நிரந்­தரத் தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­பட வேண்டும் என இவ்­வி­வ­சா­யி­களால் கடந்த 2017.11.04ஆம் திகதி வட்­ட­மடுப் பிர­தே­சத்தில் கவ­ன­யீர்ப்புப் போராட்டம் இடம்­பெற்­றது. இரண்டு தினங்கள் அப்­பி­ர­தே­சத்தில் கொட்டும் மழை, எரிக்கும் வெயில் ஆகி­ய­வற்­றிற்கு மத்­தியில் கவ­ன­யீர்ப்பு தொட­ரப்­பட்ட போதிலும் தீர்வு எதும் எட்­டப்­ப­டாத நிலையில் தமது போராட்­டத்­தினை அக்­க­ரைப்­பற்று நக­ரிற்கு மாற்­றினர்.

அக்­க­ரைப்­பற்று மணிக்­கூட்டுக் கோபுர சுற்று வட்­டா­ரத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள கூடா­ரத்­தினுள் அமர்ந்­த­வாறு சாத்­வீக ரீதியில் கடந்த 10 தினங்­க­ளாக போராட்­டத்­தினை அவ்­வி­வ­சா­யிகள் தொடர்ந்து வரு­கின்­றனர். இக்­காலப் பகு­திக்குள் தமது விவ­சாய உப­க­ர­ணங்கள் சகிதம் அக்­க­ரைப்­பற்று மணிக்­கூட்டுக் கோபுர சுற்று வட்­டா­ரத்­தி­லுள்ள பிர­தான வீதி­யினை வழி மறித்து போராட்டத்தினை தொடர்ந்தனர்.

இதனால் சில மணி நேரம் இப்பிரதேச போக்குவரத்துக்கள் அனைத்தும் தடைப்பட்டன. அக்கரைப்பற்று பிரதான பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து நாட்டின் நாலா பாகங்களுக்கும் செல்வதற்கு ஆயத்தமான அரச தனியார் போக்கு வரத்துக்கள் மற்றும் இதர பொதுமக்களின் இதர போக்குவரத்துக்களும் தடைப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த அக்கரைப்பற்று பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் வகையில் நீதிமன்ற உத்தரவுப் பத்திரத்தினைக் கொண்டு வந்து அவ்விவசாயிகளை அங்கிருந்து வெளியேற்றினர். இது இவ்வாறிருக்க கடந்த வெள்ளிக்கிழமை(10) அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாசல் முன்னால் ஆரம்பமான காணி மீட்புப் பேரணி பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால்  இம்மக்களின் போராட்டங்களை கணக்கிலெடுக்கா வண்ணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இருக்கின்றார்களா? என எண்ணத் தோன்றுகின்றது. எது எப்படியோ இவ்விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு கிட்ட வேண்டும்.