Verified Web

சிறுவர்கள் வாகனம் செலுத்துவதன் ஆபத்து

4 days ago Administrator

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வாகன விபத்துகள் காரணமாக விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம். நேற்று முன்தினம் அதிகாலை கொழும்பின் ராஜகிரிய பகுதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவர் செலுத்திச் சென்ற கெப் வண்டியில் பயணித்த மேலும் 9 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். 

விபத்தில் உயர்­தர வகுப்பில் கல்வி கற்­று­வரும் கல்­கி­சை­யைச் ­சேர்ந்த அமான்  கிச்சில் என்ற  18 வயது  மாணவன் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் வாக­னத்தில் இருந்த 9 பேர் காய­ம­டைந்­த நிலையில் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் அவ­சர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.  இவர்­களில் 3 பேர் அதி ­தீ­விர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்­று­ வ­ரு­கின்­றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தைச் செலுத்திய பாடசாலை மாணவனின் சாரதி அனுமதிப்பத்திரம் இதுவரை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மாணவனால் செலுத்திச் செல்லப்பட்ட குறித்த கெப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதேவேளை, குறித்த கெப் ரக வாகனத்தைத் தொடர்ந்து பயணித்த சிறிய ரக வாகனமொன்றும் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

பாட­சா­லையில் நடை­பெ­ற­வி­ருந்த ஊடக விழா­வுக்­கான ஏற்­பா­டு­களைச் செய்துவிட்டு தத்தமது வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவரான அமான்  கிச்சில், ரோயல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுள் மிகச் சிறந்த ஆளுமைகளுடன் கூடிய தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டவர் என அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். இன்று அவ்வாறானதொரு திறமைமிக்க மாணவரை முழு சமூகமுமே இழந்து தவிக்கிறது.

சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குரிய வயதை அடையாத அல்லது பாரிய வாகனங்களைச் செலுத்துவதற்கான முதிர்ச்சியைக் கொண்டிராத தமது பிள்ளைகளுக்கு பெற்றோர் வாகனங்களைச் செலுத்த அனுமதியளிப்பதனால் ஏற்படுகின்ற விளைவுகளுக்கு இந்த சம்பவம் நல்ல உதாரணமாகும். 

இலங்கையைப் பொறுத்தவரை இவ்வருடத்தின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் 2421 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றில் 2544 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடம் முடிவடைகின்ற போது விபத்துகளினதும் உயிரிழந்தோரினதும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

எனவேதான் விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் போக்குவரத்துச் சட்டங்கள் மேலும் இறுக்கமாக்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்தியாவில் சிறுவர்கள் வாகனம் செலுத்துவது தொடர்பில் அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கான சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் அதிகபட்ச அபராதம், மூன்று முறைக்கு மேல் போக்குவரத்து விதிமுறைகளை மீறி தீவிர குற்றமிழைத்தால் 2 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை இரத்துச் செய்தல் ஆகிய பரிந்துரைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

எனினும் இலங்கையிலும் அவ்வாறான இறுக்கமான விதிகள் அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் கடும் எதிர்ப்புகள் காரணமாக அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் நாட்டில் அதிகரிக்கும் விபத்துக்கள் மேற்படி இறுக்கமான விதிமுறைகள் அவசியம் என்பதையே மீளவும் வலியுறுத்தி நிற்கின்றன.