Verified Web

எரிபொருள் நெருக்கடியின் பின்னணிதான் என்ன?

10 days ago Administrator

நாட்டில் தோற்றம் பெற்றுள்ள எரிபொருள் நெருக்கடியானது மக்களைப் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாக்கியுள்ளதுடன் அரசாங்கத்தின் மீதும் பலத்த விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் நாடெங்கிலும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்து நின்று எரிபொருளைப் பெற்று வருகின்றனர். நேற்று இரவு வரையும் இந்நிலை தொடர்ந்தது. இன்றும் இந்நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வாகனங்களை எரிபொருள் நிலையங்களுக்கு கொண்டு வந்து எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியாத நிலையில் போத்தல்களிலும் கலன்களிலும் பெற்றுச் செல்லும் நிலையே நேற்று வரை நீடித்தது.

கடந்த ஒக்டோபர் 18 ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கப்பலில் கொண்டுவரப்பட்ட எரிபொருளானது பாவனைக்குகந்தது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் குறித்த கப்பலானது தரமான எரிபொருளை ஒக்டோபர் 31 ஆம் திகதிக்குள் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்திருந்ததாகவும் எனினும் இதுவரை அக் கப்பல் வந்துசேரவில்லை என்றும் இதுவே எரிபொருள் நெருக்கடிக்கு காரணம் எனவும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் குறித்த கப்பல் இலங்கையை வந்தடையும் என்றும் நாளை முதல் எரிபொருள் விநியோகம் சீரடையும் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார்.
நாடெங்கும் தினசரி 2000 மெற்றிக் தொன் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. எனினும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந் நாட்களில் தினமும் 4000 மெற்றிக் தொன் எரிபொருள் நுகரப்பட்டுள்ளது. இதுவே தட்டுப்பாடு நிலவக் காரணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தமக்குத் தேவைப்படுவதை விடவும் அதிகமான எரிபொருளை நுகர்வதே இந்த நெருக்கடிக்குக் காரணம் என அமைச்சர் அர்ஜுன தெரிவித்துள்ளார். அளவுக்கு அதிகமாக எரிபொருளை நுகர வேண்டாம் என்றும் அவர் மக்களை வேண்டியுள்ளார்.
நிலைமை இவ்வாறிருக்க எரிபொருள் விவகாரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க் கொடி தூக்கியுள்ளன. அரசாங்கத்தின் வினைத்திறனற்ற நிர்வாகம் மற்றும் ஊழல்கள் காரணமாகவே நாட்டில் எரிபொருள் நெருக்கடி தோன்றியுள்ளதாக நேற்று பாராளுமன்றில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நெருக்கடியானது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதாக தாம் சந்தேகிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தனக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு பிரதமர் கோரியுள்ளார்.
எவ்வாறிருப்பினும் முழு நாட்டினதும் இயக்கமே தங்கியிருக்கும் எரிபொருளில் தட்டுப்பாடு ஏற்படுவதையோ நெருக்கடிகள் தோற்றம் பெறுவதையோ எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது. அவ்வாறானதொரு நிலை ஏற்படும் எனக் காணும் பட்சத்தில் அரசாங்கம் முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
இதுவிடயத்தில் பூரண விசாரணைகள் நடத்தப்பட்டு ஊழல் மோசடிகள் ஏதேனும் இடம்பெற்றுள்ளனவா அல்லது அரசியல்  ரீதியாக அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் ஏதேனும் சதிகள் இடம்பெற்றுள்ளனவா என்பதும் கண்டறியப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படாதவாறு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.