Verified Web

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மன அழுத்தங்களுக்கு வித்திடும் கல்வித் திணிப்பு

Hassan Iqbal

ஹஸன் இக்பால் இளம் ஊடகவியலாளர் ஆவார். இவர் உள்நாட்டு, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளை எழுதி வருவதுடன் சிறந்த ஆங்கிலக் கட்டுரைகளை தமிழுக்கு மொழிபெயர்த்தும் வருகிறார். 

2017-10-25 00:50:56 Hassan Iqbal

அழுத்­தங்கள் நிறைந்த கல்விச் சூழலை தற்­போது நடை­மு­றை­யி­லி­ருக்கும் கல்­வி­ய­மைப்புத் திட்­டத்தில் அடங்­கி­யுள்ள அம்­சங்­களில் வெளிப்­ப­டை­யாக காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. பெற்றுக் கொள்­ளப்­போகும் கல்வித் தகை­மைகள் மற்றும் அடை­வு­க­ளி­லேயே தமது பிள்­ளை­களின் சுபீட்­ச­மான எதிர்­காலம் பெரிதும் தங்­கி­யி­ருக்­கின்­றது என்­பதை பெரும்­பா­லான இன்­றைய பெற்­றோர்கள் நன்­கு­ணர்ந்து கொண்­டுள்­ளனர். எனினும், அழுத்தம் நிறைந்த செயற்­கை­யான கல்விச் சூழலை அவர்கள் மத்­தியில் ஏற்­ப­டு­த்து­வது அவர்­களின் வய­துக்­கேற்ற, இய­லு­மை­கேற்ற பிர­காரம் தேடிக் கற்றல் எனும் இயல்பில் பெரி­த­ளவில் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தி விடு­கின்­றது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

வளர்ந்­து­வரும் உலகின் அதி­யுயர் தொழில்­நுட்பம் மற்றும் வர்த்­தக மைய  பொரு­ளா­தார சூழலை எதிர்­கொள்ளத் தகை­மை­யான  பட்­ட­தா­ரி­களை நடை­மு­றை­யி­லி­ருக்கும் கல்வி முறைமை உரு­வாக்கத் தவ­று­கி­றது என்­பது தொடர்பில் பல்­வே­றான கருத்­துக்கள் நிலவி வந்­தன. இதன் பிர­காரம் எமது கல்வி முறை­மையில் நிலவி வந்த குறை­பா­டு­களை நீக்கும் வகையில் பல­வ­கை­யான செயற்­றிட்­டங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்டும் அவற்றில் சில நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டும் உள்­ளன. 

இதன் விளை­வாக நீண்­ட­தொரு காலப்­ப­கு­தியில், படி­முறை அடிப்­ப­டையில் பெற்றுக்கொள்ள வேண்­டிய கல்­வியை சிறு­வர்கள் மத்­தியில் பல­வந்­த­மாக திணிக்கும் ஒரு நிர்ப்­பந்த சூழல் இன்­றைய கல்­வி­ய­மைப்பில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. உதா­ர­ண­மாக, பாலர் பாட­சாலை கல்வி முறை என்­பது பிள்­ளை­களை அவர்கள் போக்கில் விளை­யாட விட்டு கேளிக்கை, விளை­யாட்டு என்­ப­வற்றின் மூலம் முதலாம் ஆண்டு பாட­சாலை சூழ­லுக்கு  தயா­ராக்கும் ஓரி­ட­மா­கவே செயற்­பட வேண்டும். மாறாக, முதலாம் ஆண்டு பாட­சா­லைக்கு நுழையும் முன்­னரே இளம் பிஞ்சு சிறார்கள் ஆங்­கில நெடுங்­க­ணக்கு மற்றும் எண்கள் என்­ப­வற்றை கச­டறக் கற்றுத் தேற வேண்டும் எனும் நோக்கில் பல­வந்­தப்­ப­டுத்­தப்படு­கின்­றனர்.

ஆனால், கல்­வியைத் திணிக்கும் சூழல் நில­வாத கடந்த காலங்­களில், இவை அனைத்தும் முதலாம் ஆண்டில் பாட­சாலைக் கல்­வி­யின்­போதே பயிற்­று­விக்­கப்­பட்டு வந்­தன. தமது தாத்தா, பாட்­டிகள் உயர் வகுப்­புக்­களில் பயின்ற பல்­வேறு விட­ய­தா­னங்கள் பல­வற்றை இன்றோ ஆரம்ப வகுப்­புக்­க­ளி­லேயே சிறார்கள் பயில நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர். நிதா­ன­மான, இலகு முறைக் கல்வி அமைப்பின் பிர­காரம் கற்றுத் தேர்ந்த எமது முன்­னைய தலை­முறை தறி­கெட்டுப் போய் விட­வில்லை; மேலும் அவர்­களில் பலர் தத்­த­மது துறை­களில் சிறப்­புத்­தேர்ச்சி பெற்­ற­வர்­க­ளாக விளங்­கு­வ­தையும் நாம் அறிவோம். 

இன்­றைய கல்­வி­ய­மைப்பின் பிர­காரம் பாரிய புத்­தக மூட்­டை­களை முதுகில் சுமந்து செல்ல வேண்­டிய நிலைக்கு இன்­றைய சிறார்கள் ஆளாக்­கப்­பட்­டுள்­ளார்கள். இதுவே சிறார்­களின் இயல்­த­கை­மைக்கு மிகை­யாக கல்வி திணிக்­கப்­ப­டு­வ­தற்கும் இன்­றைய பாட­சாலை வாழ்க்­கையின் இயல்பை எடுத்­துக்­காட்டப் போது­மான அடை­யா­ள­மாக திகழ்­கி­றது. கேளிக்­கையும் மகிழ்வும் நிரம்­பிய அற்­பு­த­மான காலப்­ப­கு­தி­யா­கவே பாட­சாலை வாழ்க்­கையை முன்­னைய தலை­மு­றை­யினர் நினை­வு­கூ­ரு­கின்­றனர். ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்­சைக்­காக வருத்திப் பிழியும், க.பொ.த. சாதா­ரண தர பரீட்­சைக்­காக துரத்தித் திணிக்கும் நடை­மு­றை­களை அவர்கள் காலத்தில் காணக் கூடி­ய­தாக இருந்­தி­ருக்­க­வில்லை.

இன்­றைய முன்­னேற்­ற­க­ர­மான வளர்ச்­சி­ய­டைந்த நாடு­களின் கல்வி முறை­மைகள் ஆசி­ரியர் கூறு­வதை வெறு­மனே  மனப்­பாடம் செய்து ஒப்­பு­விக்கும் கல்வி முறை­க­ளாக அன்றி, தமது வெற்றி இலக்­கு­களை நோக்கி ஆசி­ரி­யர்­களின் வழி­காட்­டலின் கீழ் மாண­வர்கள் சுய­மாகத் தேடிக் கற்கும் வாய்ப்பை வழங்­கி­யுள்­ளது. இங்கே ஆசி­ரி­யர்கள் சொல்லித் திணிக்கும் குரு­நா­தர்­க­ளாக அன்றி வெற்றிப் பாதையை சுட்டிக் காட்டும் வழி­காட்­டி­க­ளாக மாத்­தி­ரமே செயற்­ப­டுவர். 

கல்வி அடை­வுகள் தொடர்பில் போட்டா போட்­டிகள் நிலவும் கல்வி முறை­மைக்கு மத்­தியில் மாண­வர்கள் தமக்குத் தாமே நிர்­ண­யித்துக் கொண்ட கல்­வி­யியல் அடை­வு­களை பெறத் தவ­றும்­போது மன உளைச்­ச­லுக்­குள்­ளாகி தற்­கொ­லைக்குத் தூண்­டப்­படும் நிகழ்­வுகள் ஜப்­பா­னிய மாண­வர்கள் மத்­தியில் அதி­க­ரித்துச் செல்­வ­தாக கருத்துக் கணிப்­புக்கள் தெரி­விக்­கின்­றன. இலங்கை நாட்டில் மாணவர் மைய நலன் சார்ந்த கல்­வி­மு­றை­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வதன் மூலம்  அழுத்தம் நிறைந்த கல்விச் சூழலை இல­கு­ப­டுத்தி எமது இன்­றைய தலை­முறை மாண­வர்­களை கிடுக்­கிப்­பி­டி­யி­லி­ருந்து விடு­விக்க முயற்­சிக்க வேண்டும். 

இன்­றைய உயர் அழுத்தக் கல்விச் சூழலின் அதி­யுச்ச வெளிப்­பா­டு­களில் ஒன்­றுதான் ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்­சை­யாகும். பிர­பல அர­சாங்க பாட­சா­லை­களில் இரண்டாம் நிலைக் கல்­வியை தொடர்­வ­தற்கு தகு­தி­யான மாண­வர்­களை தெரிவு செய்­வதே இப்­ப­ரீட்­சையின் பிர­தான நோக்­க­மாகும். தகு­தி­பெற்ற மாண­வர்­க­ளுக்கு அவர்கள் தமது கல்­வியை தொடர்­வ­தற்கு ஊக்­க­ம­ளிக்கும் வகையில் உத­வித்­தொ­கையை வழங்­கு­வது இப்­ப­ரீட்­சையின் இரண்­டாம்­நிலை நோக்­க­மாக கரு­தப்­ப­டு­கி­றது. 

ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்­சையின் கார­ண­மாக சிறார்கள் மத்­தியில் ஏற்­படும் எதிர்­வி­னைகள் தொடர்பில் பல்­வேறு கல்வி முறைமை ஆய்­வா­ளர்கள் மற்றும் புத்­தி­ஜீ­விகள் எழுதி வரு­கின்­றனர். இச்­சூ­ழலில் அவர்­களின் ஏகோ­பித்த கருத்து யாதெனில், வரு­டாந்தம் இப்­ப­ரீட்­சைக்கு தோற்றும் சுமார் 300,000 மாண­வர்கள் மத்­தியில் பரீட்சை மற்றும் அதற்­கான ஆயத்­தப்­ப­டுத்­தல்கள் தொடர்பில் உயர் நெருக்­க­டிக்கும் அழுத்­தங்­க­ளுக்கும் உள்­ளா­கின்­றனர் எனவும், சிறு­வ­யதில் இவ்­வ­கை­யான அழுத்­தங்கள் மாண­வர்­களின் மத்­தியில் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வது ஏற்­பு­டை­ய­தல்ல எனவும் தெரி­விக்­கின்­றனர். இவ்­வ­கை­யான அழுத்த சூழலை உரு­வாக்கும் போட்டிப் பரீட்சை இச்­சி­று­வ­யதில் இம்­மா­ண­வர்­க­ளுக்கு முற்­றிலும் அவ­சி­ய­மற்­றது என ஆய்­வா­ளர்கள் கரு­து­கின்­றனர். 

ஊட­கங்­களும் வர்த்­தக நோக்கம் கரு­திய கல்வி நிலை­யங்­களும் புலமைப் பரிசில் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­களை பிர­ப­லப்­ப­டுத்தி உச்­ச­பட்ச கொண்­டாட்­டங்­க­ளையும் வைப­வங்­க­ளையும் ஏற்­பாடு செய்யும் தரு­ணத்தில், சித்­தி­யெய்த தவ­றிய மாண­வர்­களின் உளப்­பாங்கு பெரிதும் பாதிப்­புக்­குள்­ளா­கி­றது. வர்த்­தக நோக்கம் கரு­திய கல்வி நிலை­யங்­களின் போலிப் பிர­சா­ரங்­க­ளினால் இப்­ப­ரீட்­சையின் முக்­கி­யத்­துவம் தொடர்பில் உண்­மைக்குப் புறம்­பான கற்­பிதம் பெற்றோர் மத்­தியில் உரு­வாக்­கப்­ப­டு­கி­றது. இறு­தியில், புலமைப் பரீட்­சையில் சித்­தி­யெய்­து­வது சமூக அடை­வொன்­றாக சித்­தி­ரிக்­கப்­ப­டு­கி­றது. 

புலமைப் பரிசில் பரீட்­சையில் சித்­தி­யெய்­திய மாண­வர்கள் தமது எதிர்­கால கல்வி அடை­வு­களில் (க.பொ.த. சாதா­ரண மற்றும் உயர்­தரம்) எவ்­வ­கையில் பிர­கா­சிக்­கி­றார்கள் என்­பது தொடர்பில் போதி­ய­ளவு புள்­ளி­வி­ப­ரங்கள் திரட்­டப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­ய­வில்லை. புலமைப் பரிசில் பரீட்­சையில் காட்­டப்­பட்டு வந்த பிரத்­தி­யேக அக்­கறை அவர்­களின் எதிர்­கால கல்விச் செயற்­பா­டு­க­ளிலும் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கி­றதா அல்­லது ஆண்டு ஐந்­தி­லேயே அனைத்து முயற்­சி­களும் எடுக்­கப்­பட்டு அத்­துடன் நிறைவு பெற்­று­வி­டு­கி­றதா? என்­பது தொடர்பில் காத்­தி­ர­மான ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். 

இன்­னொரு கோணத்தில், ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்­சையில் சித்­தி­யெய்­திய மாண­வர்கள் புதிய பாட­சா­லை­யொன்றில் சேர்க்­கப்­ப­டும்­போது அச்­சி­று­வ­ய­தினர் எதிர்­நோக்கும் சூழல் மாற்­றங்கள் அவர்­களின் கல்விச் செயற்­பா­டு­களில் பெரிதும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கி­றது. தாம் ஏற்­க­னவே ஐந்து வரு­டங்­க­ளாக இயை­பாக்கம் பெற்ற நண்­பர்கள், ஆசி­ரி­யர்கள் என்­ப­வர்­களை தவிர்ந்து முற்­றிலும் புதி­ய­தான சூழல் ஒன்­றுக்கு முகம் கொடுக்க இச்­சி­றார்கள் தலைப்­ப­டு­கின்­றனர். இது இவர்­களின் கல்விச் செயற்­பா­டுகள் முன்­னேற்றப் பாதையில் செல்­வதில் பின்­ன­டை­வாக விளங்­கு­கி­றது. 

சில சந்­தர்ப்­பங்­களில் கிராமப் பாட­சா­லையில் இருந்து பிர­பல நகரப் பாட­சா­லை­களில் இச்­சி­று­வர்கள் சேர்க்­கப்­படும் பட்­சத்தில் விடு­தியில் தங்கி கல்வி கற்க வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­ப­டு­கி­றது. பெற்­றோரை விட்டு பிரி­வது மற்றும் கிராம சூழலில் வளர்ந்த சிறார்கள் நகர சூழலில் வளர்ந்த சிறு­வர்­க­ளுடன் நட்பை ஏற்­ப­டுத்திக் கொள்­வதில் விளங்கும் இடர்­பா­டுகள், ஒவ்­வா­மைகள், பொருத்­தப்­பா­டின்­மைகள் கார­ண­மாக இச்­சி­று­வ­ய­தினர் மன­த­ளவில் பெரிதும் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். சிறு­வர்­களின் மனோ­பாவம் நெகிழ்­தன்மை வாய்ந்­தவை. காலப்­போக்கில் சூழல் இசை­வாக்கம் பெற்­று­வி­டுவர் என்­றாலும் இவ்­வகை தியா­கங்கள் இச்­சி­று­வ­யதில் தேவை­தானா எனும் கேள்வி எழு­கி­றது.

ஆண்டு ஐந்து புலமைப் பரி­சிலின் பின்னர் பாட­சாலை மாற்றம் கார­ண­மாக சூழல் இயை­பாக்­கத்தில் சிர­மங்­களை எதிர்­கொள்­வது கிரா­மப்­புற பாட­சா­லை­யி­லி­ருந்து நகர்ப்­புற பாட­சா­லை­களில் சேர்க்­கப்­படும் மாண­வர்கள் மாத்­திரம் அல்ல. நகர்ப்­புற பாட­சா­லையில் கல்­வி­கற்று நண்பர் சூழலை ஏற்­ப­டுத்திக் கொண்ட பல மாண­வர்கள் இன்­னொரு நகர்ப்­புற பாட­சா­லைக்கு மாற்றம் பெறும்­போதும் உள ரீதியில் பல்­வே­று­பட்ட சவால்­க­ளுக்கு முகம் கொடுக்க நேர்­கின்­றது.   இவ்­வாறு சிர­மங்­களை எதிர்­நோக்­கிய பல மாண­வர்கள் மீண்டும் தாம் கல்வி கற்ற முன்­னைய பாட­சா­லைக்கே மீளவும் திரும்­பு­கின்ற நிலை­மை­க­ளையும் நாம் அவ­தா­னித்தே வரு­கின்றோம். புதிய பாட­சாலை, புதிய நண்­பர்கள் சூழலை ஏற்றுக் கொள்­வதில் நெகிழ்­தன்­மை­யற்ற பிள்­ளைகள் பெற்­றோரை திருப்தி செய்­வ­தற்­காக மன அழுத்­தங்­க­ளுடன் புதிய பாட­சா­லை­யி­லேயே கல்­வியை தொடர்ந்து வரும் நிலையும் காணப்­ப­டு­கி­றது. இவ்­வ­கை­யான நெகிழ்­தன்­மை­யற்ற புதிய சூழலை எதிர்­நோக்கும் பிள்­ளை­களை  மீளவும் முன்­னைய பாட­சா­லைக்கு சேர்ப்­பதால் ஊராரின் கேலிப் பேச்­சுக்­க­ளுக்கு ஆளாக வேண்­டி­வரும் எனும் தயக்­கங்­க­ளுடன் பெற்­றோரும் பிள்­ளை­களை நிர்ப்­பந்­திக்­கின்­றனர். 

ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்­சை­யினால் ஏற்­படும் பிர­தி­கூ­லங்­களில் இன்­னு­மொன்று, பாட­சா­லை­களின் முன்­னேற்றம் பின்­தங்­கு­த­லாகும். பரீட்­சையில் சித்­தி­யெய்­திய மாண­வர்கள் பிர­பல பாட­சா­லை­களில் இணை­வதால் குறித்த பாட­சா­லை­களின் கல்­வித்­த­ரமும் அடை­வு­மட்­டங்­களும் வரு­டந்­தோறும் அதி­க­ரித்துச் செல்லும் அதே­வேளை திறமை மிகு மாண­வர்­களின் இழப்­பினால் ஏனைய பாட­சா­லை­களின் முன்­னேற்றம் பின்­தங்­கியே சென்­று­கொண்­டி­ருக்கும் நிலை ஏற்­ப­டு­வது பாரி­ய­தொரு எதிர்­வி­ளை­வாக அமை­கின்­றது. 

க.பொ.த. சாதா­ரண மற்றும் உயர் தரங்­களில் பிர­பல பாட­சா­லை­களில் பெருந்­தொ­கை­யான மாண­வர்கள் சிறப்பு சித்­தி­களை பெறு­வது தொடர்பில் சிலர் கருத்துத் தெரி­விக்­கையில், புலமைப் பரிசில் பரீட்சை மூலம் பாட­சா­லைக்கு தெரி­வான மாண­வர்­க­ளா­லேயே பிர­பல பாட­சா­லை­களின் நன்­ம­திப்பு அதி­க­ரித்துச் செல்­வ­தாக வாதி­டு­கின்­றனர். 

வளம் குன்­றிய பாட­சா­லைகள் தமது திறமை மிகு மாண­வர்­களை ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்­சையின் பின்னர் பிர­பல பாட­சா­லை­க­ளுக்கு தாரை வார்த்துக் கொடுப்­பதால், குறித்த பாட­சா­லை­களின் கல்­வித்­தர முன்­னேற்றம் கனவாகவே போய்விடுகிறது. 
ஒவ்வொரு மாவட்டத்திலும் அல்லது ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் அனைத்து உட்கட்டமைப்பு வளங்களும் நிரம்பியதான பாடசாலை ஒன்றை அமைத்துக் கொடுக்கும் செயற்றிட்டம் அரசினால் வாக்களிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் அமுலுக்குக் கொண்டுவரப்படவில்லை. இத்திட்டம் செயற்படுத்தப்படுமானால் ஆண்டு ஒன்றுக்கு பிரபல பாடசாலை நோக்கி படையெடுக்கும் பெற்றோர்களின் சிரமங்கள் எளிதாக்கப்படும். ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பின்னர் பிரபல பாடசாலை நோக்கி தமது பிள்ளைகளை வலிந்து திணிக்கும் இடர்பாடும் குறைக்கப்படும். அண்மையிலுள்ள பாடசாலையே பிரபல பாடசாலையாக மாற்றம் பெறும்போதே இவையனைத்தும் சாத்தியப்படுவதில் இடர்கள் இருக்காது.

பாடசாலை மற்றும் மாவட்டங்கள் வாரியாக பக்கச்சார்பாக கல்வித்தரங்களும் வளங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதே இப்பிரச்சினைகளின் பிரதான காரணியாக விளங்குகிறது.  சமத்துவமாக உட்கட்டமைப்பு வளங்களும் கல்வித்தரங்களும் பாடசாலைகளுக்கு மத்தியில் பகிர்ந்தளிக்கப்ப்படுமானால் பிரபல பாடசாலை நோக்கிய பெற்றோரின் படையெடுப்பு இழிவளவாக்கப்படும்; விளைவாக பிள்ளைகள் மீதான கல்வித் திணிப்புக்கள் குறைவடையும்.