Verified Web

அரசியலமைப்பு திருத்தமும் பௌத்த மத பீடங்களும்

2017-10-11 01:01:34 Administrator

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் எனும் கருத்தையே பௌத்த மத பீடங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. 

இலங்கை நாடானது தொன்று தொட்டு சிங்கள பௌத்த நாடாகவே விளங்கி வந்துள்ளது எனவும், அதற்கு எதிராக உரிமை கோரும் வாதங்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அஸ்கிரிய பீட அனுநாயக்க தேரரும் ஏத்காந்த விகாரை பொறுப்பாளருமான ஆனமடுவே தம்மஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார். 

நாகுல பிரதேசத்தில் அமைந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிலிஹுடுகொல்ல விகாரை வைபமொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், “இலங்கையும் பௌத்தமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

சிங்கள சமூகம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே பௌத்தமும் மகா சங்கமும் பாதுகாக்கப்படும். இதுவே ஆன்மிக விருத்தி ஏற்படவும் நல்லொழுக்கமுள்ள சமூக உருவாக்கத்திற்கும் இன்றியமையாதது. உலகிலுள்ள எந்தவொரு நாடும் தமக்கென தனித்துவ அடையாளங்களை கொண்டதாகவே காணப்படுகின்றது. இத்தனித்துவ அடையாளத்தை பிறருக்கு கைமாற்றிக் கொடுத்து விட முடியாத ஓர் உரிமையாகும். வரலாறு நெடுகிலும் புராதன மன்னர் காலம் தொட்டு இலங்கையானது சிங்கள பௌத்த நாடாகவே திகழ்ந்து வந்துள்ளதுடன் இனிமேலும் இலங்கை சிங்கள பௌத்த நாடாகவே திகழ வேண்டும்” என  தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பௌத்த சாசனத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் எவ்வித விடயதானங்களையும் பிரேரிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு கொண்டிருக்கவில்லை என நாடாளுமன்ற அவைத் தலைவர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீஞானரத்ன தேரரிடம் தெரிவித்துள்ளார்.

 ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அறியும் வண்ணம் வெளிப்படைத் தன்மை கொண்டதாக புதிய அரசியலமைப்பு பகிரங்கமாகவே விவாதிக்கப்படும் என அமைச்சர் மேலும் உறுதியளித்துள்ளார். 

புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளில் வரலாற்றிலேயே முதன் முதலாக தமிழ் கட்சிகளும் பங்கேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியில் எவ்வித விட்டுக் கொடுப்புகளுமில்லை எனும் கருத்துக்கு அனைத்து தரப்பினரும் இணங்கியுள்ளதாகவும்,  பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் பௌத்த மத பீடங்கள் அரசியலமைப்பு திருத்தம் அவசியமில்லை என்றும் அவ்வாறு திருத்தங்களை மேற்கொண்டாலும் பௌத்த மதத்துக்குள்ள முன்னுரிமையையும் விசேட சலுகைகளையும் நீக்க இடமளிக்க முடியாது எனவும் தொடராக வலியுறுத்தி வருகின்றன. இதற்கப்பால் அரசியலமைப்பு திருத்தத்தை தடுத்து நிறுத்தும் முயற்சிகளையும் இந்த பீடங்கள் மறைமுகமாக மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது. 

தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவது ஒருபுறமிருக்க சிங்கள பௌத்த சக்திகளை சமாளித்துக் கொண்டு அரசியலமைப்பை திருத்துவதே அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக அமையப் போகிறது. இந்த சவாலை அரசாங்கம் எவ்வாறு வெற்றி கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.