Verified Web

கிழக்கு முஸ்­லிம்­களை மு.கா.வும் அ.இ.ம.கா.வும் ஏமாற்­று­கின்­றன

2017-10-11 00:04:24 Administrator

சாடு­கின்றார் முன்னாள் அமைச்சர் அதா­வுல்லாஹ்

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்­களை முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் போன்ற கட்­சிகள் ஏமாற்­று­கின்­றன என தேசிய காங்­கி­ரஸின் தலைவரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ் தெரி­வித்தார்.

கல்­மு­னையில் நேற்­று­முன்­தினம் இரவு இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் உறுப்­பி­னரும், கடந்த பொதுத் தேர்­தலில் அகில இலங்கை மக்கள் சார்பில் போட்­டி­யிட்ட வேட்­பா­ள­ரு­மான அன்வர் முஸ்­தபா இதன்­பேது தேசிய காங்­கி­ரஸில்  இணைந்து கொண்டார். 

இதன்­போது அதா­வுல்லாஹ் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,
முஸ்லிம் சமூ­கமும், தமிழ் சமூ­கமும் நீண்ட கால­மாக ஏமாற்­றப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். மாற்று அர­சியல் கட்­சி­க­ளிடம் முஸ்லிம் சமூ­கத்­தினைப் பற்­றிய எந்தக் குறிக்­கோளும் கிடை­யாது. இக்­கட்­சி­களில் மாட்டிக் கொண்­ட­வர்கள் இன்று தேசிய காங்­கி­ர­ஸுடன் இணைந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதன் மூல­மாக எமது கட்­சியைப் பலப்­ப­டுத்தி மக்கள், தேர்­தல்கள் மூல­மாக மக்கள் பிர­தி­நி­தி­களைப் பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்­பது எமது நோக்­க­மல்ல. முஸ்­லிம்­களின் அபி­லா­சை­களை அடைந்துகொள்ள வேண்­டு­மென்­பதே எமது இலக்­காகும்.

இன்­றைய அர­சாங்­கத்­தினால் கொண்டு வரப்­பட்­டள்ள உள்­ளூ­ராட்சி, மாகாண சபை தேர்தல் திருத்­தங்­களின் மூல­மாக கிழக்கு மாகா­ணத்­திற்கு அநியாயம் செய்­யப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு பாரிய அநி­யா­யங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் சமூ­கத்­தினை பாது­காத்துக் கொள்­வ­தற்கு நாம் அனை­வரும் அணி­தி­ரள வேண்டும்.

நல்­லாட்­சி­யா­னது பொல்­லாட்­சி­யா­கி­யுள்­ளது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு தேர்­தலை நடத்தக் கூடாது. மாகாண சபைத் தேர்­தலை நடத்தக் கூடாது என்­ப­தற்­கா­கவே 20வது திருத்தச் சட்ட மூலத்­தி­னைகட் கொண்டு வந்­தார்கள். தாங்கள் எதற்கு கைகளை உயர்த்­து­கின்றோம் என்று தெரி­யா­ம­லேயே முஸ்லிம் காங்­கி­ரஸின் உறுப்­பி­னர்கள் ஆத­ரவு அளித்­தார்கள். பின்னர் நீதி­மன்றம் இதற்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையும், சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பும் அவ­சியம் என்று தெரி­வித்­தது. இதன் பின்னர் தேர்­தலை பிற்­ப­டுத்த வேண்­டு­மென்­ப­தற்­காக அதிக பிர­யத்­த­னங்­களை எடுத்து மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தைக் கொண்டு வந்து தேர்­தலை பிற்­போட்­டுள்ளார். 

இன்று முஸ்லிம் கூட்­ட­மைப்பு பற்றி பேசிக் கொள்­கின்­றார்கள். இன்று எல்லா சிறு­பான்மைக் கட்­சி­களும் ரணி­லுடன் உள்­ளன. இந்தக் கூட்­டுடன் நாம் இணைந்து கொண்டால் இன்று முஸ்­லிம்­க­ளுக்கு நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் அநீ­தி­க­ளுக்கு எங்­க­ளையும் துணை­யாக்கிக் கொள்­வார்கள். இதற்­காக கூட்­ட­மைப்பு அவ­சி­ய­மில்லை என்று சொல்­ல­வில்லை. கூட்­ட­மைப்பு என்­பது தேர்­தலில் மக்கள் பிர­தி­நி­தித்­து­வத்தை கூட்டிக் கொள்­வற்கு அவ­சி­ய­மாகும். ஆனால், இன்று தேர்­தலை விடமும் முஸ்­லிம்­களின் அபி­லா­சை­களில் கவனம் செலுத்த வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. இதற்­குத்தான் தேசிய காங்­கிரஸ் முன்­னு­ரிமை அளித்துச் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.
கிழக்கு முஸ்­லிம்கள் முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் போன்ற கட்­சி­க­ளினால் ஏமாற்­றப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். வட­மா­கா­ணத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு மின்­சா­ர­மில்லை. குடி தண்ணீர் இல்லை. குடி­யி­ருப்­ப­தற்கு வீடு­க­ளில்லை. இவ்­வாறு பல கஷ்­டங்­களை வட­மா­காண முஸ்­லிம்கள் எதிர் கொண்­டுள்­ளார்கள். மக்­களை நோயா­ளி­க­ளாக வைத்துக் கொண்டு அர­சியல் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்­நி­லையில் யாருடன், எந்த நோக்­கத்­திற்­காக கூட்டுச் சேர்­வது. இப்­போது அது பற்றி சிந்­திக்­கின்ற தரு­ண­மல்ல.

வட­மா­காண முஸ்­லிம்கள் தங்­களின் துய­ரங்­களை பகிர்ந்து கொள்­வ­தற்கு எங்­களை அழைக்­கின்­றார்கள். அதன் பேரில் நாங்கள் வட­மா­காண முஸ்­லிம்­களின் அவ­லங்­களை கேட்­ட­றிந்து கொண்டு வரு­கின்றோம். எமது வாக்­கு­களைப் பெற்று எங்­களை ஏமாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்று அங்­குள்­ள­வர்கள் முஸ்­லிம்கள் தெரி­விக்­கின்­றார்கள்;.

அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை வீட்டுத் திட்­டத்­தினை பொறுத்தவரை எமது நிலைப்­பாடு ஏனைய கட்­சி­களில் இருந்து வேறு­பட்­ட­தா­கவே உள்­ளன. தேசிய காங்­கி­ரஸை பொறுத்­த­வரை அது வீட்டுப் பிரச்­சி­னை­யல்ல. காணிப் பிரச்­சி­னை­யாகும். எமது மக்­க­ளுக்­கு­ரிய காணி எமது மக்­க­ளுக்கே நூறு வீதம் அளிக்­கப்­பட வேண்­டு­மென்­ப­தே எமது நிலைப்­பா­டாகும். 

இன்று முன்வைக்­கப்­பட்­டுள்ள தேர்தல் திருத்­தங்­க­ளினால் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே வாழும் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் மாத்­தி­ர­மின்றி வடக்கு, கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­து­வத்­தையும் குறைக்கும் வகையில் திட்­ட­மி­டப்­பட்டு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. இதற்கு அர­சாங்­கத்தில் உள்ள முஸ்லிம் கட்­சி­களும் துணை போய் இருப்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். தேர்தல் திருத்தம் பற்­றிய முன்­மொ­ழிவை நாங்கள் முன் வைத்த போது இதில் சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்தை பாது­காத்துக் கொள்ளும் வகையில் இன்னும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட உள்ளோம் என்று தெரி­வித்தோம். இதனை அன்று நான் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரையை எடுத்துப் பார்த்தால் தெளி­வாகப் புரிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும். ஒரு காலத்­திலும் தேசிய காங்­கிரஸ் சமூ­கத்­தினை விற்றுப் பிழைப்பு நடத்­தி­யது கிடை­யாது.

மாகாண சபைத் தேர்தல் திருத்­தத்தில் 50:50யைக் கொண்டு வந்­துள்ளோம். இது எங்­களின் வெற்றி என்று சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதில் முஸ்­லிம்­க­ளுக்கு என்ன நன்­மைகள் உள்­ளன என்று கேட்­கின்றேன். இதிலும் முஸ்­லிம்­க­ளுக்கு பாத­கமே உள்­ளது. கட்­சி­களை பாது­காத்துக் கொள்­வ­தற்கும், இன­ரீ­தி­யாக முஸ்­லிம்­களை கையாள்­வ­தற்­குமே இது சாத்­தி­ய­மாகும்.  கட்­சி­களை பாது­காத்துக் கொள்ளும் நட­வ­டிக்­கை­களை விடவும் முஸ்லிம் சமூ­கத்தைப் பாது­காத்துக் கொள்ளும் நட­வ­டிக்­கை­களை நோக்­கியே தேசிய காங்­கிரஸ் சென்று கொண்­டி­ருக்­கின்­றது.

திரு­கோ­ண­ம­லையில் உள்ள வளங்­களை சூறை­யா­டு­வ­தற்­காக வெளி­நாட்டு சக்­திகள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இதற்­காக முஸ்­லிம்­களை பலி­யாக்­கு­வ­தற்கு துணிந்­துள்­ளார்கள். இந்­நி­லையில் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்­லிம்கள் தமி­ழர்­களின் அபி­லா­சை­க­ளுக்கு குறுக்கே நிற்கக் கூடா­தென்று தெரி­வித்­துள்ளார். நாங்கள் ஒரு போதும் தமி­ழர்­களின் அபி­லா­சை­க­க­ளுக்கு எதி­ராக நின்­ற­தில்லை. அவரை விடவும் நாங்­கள்தான் தமி­ழர்­க­ளுடன் நெருக்­க­மான உறவைக் கொண்­டுள்ளோம். இங்­குள்ள தமி­ழர்­க­ளுடன் நாங்­கள்தான் எல்லா வகை­யிலும் தொடர்­பு­களைக் கொண்­டுள்ளோம். தமி­ழர்­களின் அகிம்சை வழிப் போராட்டம் என்­றாலும், ஆயுதப் போராட்டம் என்­றாலும் வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் துணை­யாகச் செயற்­பட்­டுள்­ளார்கள். இதனை மறந்து தமிழர் தரப்­பினர் பேச முடி­யாது.  உரி­மைக்­கான போராட்­டத்தில் முஸ்லிம் சமூ­கமும் போதிய பங்­க­ளிப்பை செய்­துள்­ளது. இழப்­புக்­களைச் சந்­தித்­துள்­ளது. தமி­ழர்­களின் அபி­லா­சை­க­ளுக்கு எதி­ராக முஸ்­லிம்கள் நிற்கக் கூடா­தென்று சொல்­லு­கின்­றார்­களே. நான் கேட்­கின்றேன் அம்பாறையிலும், திருகோணமலையிலும் முஸ்லிம் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணக்கம் தெரிவிக்குமா என்று கேட்கின்றேன். இந்நிலையில் வடக்கும், கிழக்கும் இணைவதற்கு முஸ்லிம்கள் ஆதரவு தந்தால் முதலமைச்சரை தருவதாக சம்பந்தன் ஐயா தெரிவிக்கின்றார். இது வேண்டுமென்றால் ஹாபிஸ் நசீருக்கு தேவையாக இருக்கலாம். ஆனால், முஸ்லிம்களின் தேவை முதலமைச்சர் பதவியல்ல. யார் முதலமைச்சராக இருந்தாலும் முஸ்லிம்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதனை உறுதி செய்யும் திட்டங்கள் வேண்டும். இதுவே எமது இலக்காகும்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையும் கருத்துக்களை முன்வைத்தார்.