Verified Web

துப்பாக்கி கலாசாரத்துக்கு அமெரிக்கா கொடுக்கும் விலை

2017-10-04 06:28:41 Administrator

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன் 525க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இச் சம்பவம் தீவிரவாத இயக்கங்களால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதல்ல எனவும் ஸ்டீபன் பெடோக் எனும் 64 வயதுடைய தனி நபர் ஒருவரின் செயலே இது எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை தொற்றுநோய் போல பல ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரம் பரவி வருகின்றது. அந்நாட்டில் உள்ள சாதாரண சூப்பர்மார்க்கெட்டில் கூட, எளிதாக துப்பாக்கி வாங்கலாம். இதன் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் பொதுமக்களாலேயே அங்கு அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. 

மன அழுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் திடீரென மக்கள் கூடும் இடங்களில், கண்மூடித்தனமாக துப்பாக்கியில் சுடுவதும், அதனால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் அமெரிக்காவில் அடிக்கடி நடைபெறும் நிகழ்வாக இருந்து வருகின்றது.
இந்த துப்பாக்கி கலாசாரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அமெரிக்காவில் பல தரப்பினர்களாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த 5 அண்டுகளில் அமெரிக்காவில் அந் நாட்டினராலேயே நடத்தப்பட்ட மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களாக  கடந்த 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி கொலராடோ மாநிலத்தில் உள்ள லிட்டில்டோன் நகரில் உள்ள பள்ளிக் கூடத்தில் இரண்டு இளைஞர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 மாணவர்கள் உட்பட ஒரு ஆசிரியர் பலியாகினர். 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தின் பளாக்ஸ்பர்க் நகரில் உள்ள வேர்ஜினியா பல்கலைக்கழகத்தில் புகுந்து 32 பேரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

மேலும் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி கனக்டிக்கட் மாநிலத்தில் உள்ள ஷான்டி ஹூக்கில் ஆரம்பப்பள்ளி ஒன்றில் தனது தாய் மற்றும் 20 குழந்தைகள் உட்பட 26 பேரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். 

2015 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள San Bernardino நகரில் விடுமுறை தின விருந்தின்போது கணவன், மனைவி சேர்ந்து 14 பேரை சுட்டுக்கொன்றனர். 2016 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரில் இரவு விடுதியில் தனி நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி இரவு லாஸ்வேகாசில் 64 வயது முதியவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 59 பேர் பலியாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் மற்றும் விற்பனை தொடர்பான சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெருகி வருவதற்குக் காரணம் அங்கு துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை போதிய அளவில் பரிசீலனை செய்யாததே என சுட்டிக்காட்டப்படுகிறது.  அங்கு தனிப்பட்ட முறையில் ஆயுதங்களை விற்கவோ, வாங்கவோ முடியும். இந்த துப்பாக்கி கலாசாரத்தை மாற்ற அமெரிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், டிரம்ப்பின் குடியரசு கட்சி பெரும்பான்மை வகிக்கும் அமெரிக்க செனட் சபை அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறது. 

எது எப்படியிருப்பினும் அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரத்தையும் அதன் கட்டுப்பாடற்ற புழக்கத்தையும் குறைக்கவும் அதற்கென இறுக்கமான சட்டங்களை இயற்றவும் அந்நாட்டு அரசாங்கம் முன்வர வேண்டும். இன்றேல் இவ்வாறு அநியாயமான முறையில் உயிர்கள் இழக்கப்படுவதை தடுக்க முடியாது போய்விடும்.