Verified Web

அக்மீமன தயாரட்ன தேரர் கைது

2017-10-03 06:14:21 MFM.Fazeer

ஆஜராகாத தேரரை தேடி வலைவீச்சு

மியன்­மாரில் இருந்து வந்த ரோஹிங்ய முஸ்லிம் அக­தி­களை  உட­ன­டி­யாக வெளி­யேற்றி நாடு­க­டத்­து­மாறு பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் செய்த அத்­து­மீ­றல்கள் மற்றும் தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்­னின்று செயற்­பட்ட சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

நேற்று கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வுக்கு அழைக்­கப்­பட்ட அவ­ரிடம் சுமார் நான்கு மணி­நேர விசா­ர­ணை­களின் பின்னர் அவரைக் கைது செய்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார். 

அக்­மீ­மன தயா­ரத்ன தேர­ருக்கு மேல­தி­க­மாக அக­திகள் மீது அத்­து­மீ­றல்­களை முன்­னெ­டுத்த குற்­றச்­சாட்டில்  நுகே­கொட பகு­தியைச் சேர்ந்த ரவீந்ர வர்­ணஜித் பெரேரா என்­ப­வ­ரையும் கைது செய்­த­தாக பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். 

இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்­யப்­ப­ட­வுள்­ள­தா­கவும், நேற்று விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்டும் வருகை தராத அரம்­பே­பொல ரத­ன­சார தேர­ரையும் கைது செய்ய நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இந் நிலையில் கைது செய்­யப்­பட்ட அக்­மீ­மன தயா­ரத்ன தேரரும், ரவீந்ர வர்­ணஜித் பெரே­ராவும் கல்­கிசைப் பிர­தான நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்ட போது, அவர்­களை எதிர்­வரும் 9 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது. ஏற்­க­னவே கைதாகி விளக்­க­ம­றி­யலில் உள்ள 5 சந்­தேக நபர்­க­ளுடன் ரவீந்ர எனும் நேற்று கைதான சந்­தேக நபரை எதிர்­வரும் 9 ஆம் திகதி அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­து­மாறு இதன்­போது உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அதன்­படி ரோஹிங்ய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அத்­து­மீறல் தொடர்பில் இது­வரை தேரர், பெண்­ணொ­ருவர் உள்­ளிட்ட 8 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் ஒரு­வ­ருக்கு பொலிஸ் பிணை அளிக்­கப்­பட்­டுள்­ள­துடன் தேரர், பெண் உள்­ளிட்ட 7 பேர் எதிர்­வரும் 9 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இத­னி­டையே நேற்று விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்ட அரம்­பே­பொல ரத­ன­சார தேரரைக் கைது செய்ய விஷேட பொலிஸ் குழு­வொன்று கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி 30 ரோஹிங்ய முஸ்­லிம்கள் காங்­கே­சன்­துறை கடற்­ப­ரப்பில் தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருந்த நிலையில் கடற்­ப­டை­யி­னரால் காப்­பாற்­றப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலையில் குறித்த ரோஹிங்ய முஸ்­லிம்கள் மல்­லாகம் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். இத­னை­ய­டுத்து அவர்­களை மிரி­ஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது.

இந் நிலையில், கடந்த வெள்­ளி­யன்று (செப். 29) இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய முத­லா­வது சந்­தேக நபரை பம்­ப­லப்­பிட்டி பகு­தியில் வைத்து பொலிஸார் கைது செய்­தனர். பொது­பல சேனா அமைப்பின் தீவிர செயற்­பட்­டா­ளரும் பொது­ப­ல­ சேனா கடந்த பொதுத் தேர்­தலில் கள­மி­றக்­கிய பொது­ஜன பெர­முன எனும் கட்­சியின் மொரட்­டுவைத் தொகு­தியில் போட்­டி­யிட்­ட­வ­ரு­மான 34 வய­து­டைய , மொரட்­டுவை - றாவத்­தா­வத்­தவைச் சேர்த்த டெஷாந்த சமி­ருவான்  என்­பரைக் கைது செய்­தனர். இந் நிலையில், அவரை மறு நாள் கல்­கிசை நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்த பொலிஸார் அவரை எதிர்­வரும் அக்­டோபர் 9 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­தனர்.

இந் நிலையில், தொடர்ந்து கடந்த சனிக்­கி­ழமை (செப். 30) விஷேட நட­வ­டிக்­கை­யினை முன்­னெ­டுத்த பொலிஸார் காலை வேளையில், கல்­கிசைப் பகு­தியில் வைத்து பெண் ஒரு­வரைக் கைது செய்­தனர். 43 வய­து­டைய கல்­யாணி பொடி­மெ­னிகே எனும் பெண்ணே இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட நிலையில், அவர் ரோஹிங்ய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கல்­கிசை அத்­து­மீ­றல்­களின் போது முன்­னின்று செயற்­பட்­ட­மையை பொலிஸார் ஆதா­ரத்­துடன் கண்­ட­றிந்­துள்­ளனர்.

இந் நிலையில் மேலும் ஆறு பேரை வீடியோ காணொ­ளிகள் ஊடாக அடை­யாளம் கண்ட பொலிஸார் அவர்­களைக் கைது செய்ய அவர்கள் வசிக்கும் பிர­தே­சங்­க­ளுக்கு சென்ற போதும் அவர்கள் தலை­ம­றை­வா­கி­யி­ருந்­தனர். இந் நிலையில் நேற்­றுமுன் தினம் மாலை விஷேட பொலிஸ் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்த பொலிஸார், இந்த அக­திகள் மீதான அத்­து­மீ­றல்கள் மற்றும் அச்­சு­றுத்­தல்கள் தொடர்பில் அடை­யாளம் காணப்­பட்ட பிர­தான சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ரான டான் பிரி­யஷாத் என அறி­யப்­படும் சந்­தேக நபர் உள்­ளிட்ட நால்­வரைக் கைது செய்­தனர்.

வெல்­லம்­பிட்­டியைச் சேர்ந்த 31 வய­து­டைய டான் பிரி­யஷாத், 45 வய­து­டைய கணே­முல்­லையைச் சேர்ந்த ஜனித நிரோ­ஷன தீபகே, 44 வய­து­டைய அக்பர் நகர், எடே­ர­முல்­லையைச் சேர்ந்த சிந்­தக சஞ்­சீவ, நாவல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய என்.ஜி.கே. கயான் மதுஷான் செனவிரத்ன ஆகியோரே இவ்வாறு ஏற்கனவே  கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்களில் கயான் மதுஷான் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனையோர் கல்கிசை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையிலேயே நேற்று கைது செய்யப்பட்ட அக்மீமன தயாரத்ன தேரரும், மற்றைய சந்தேக நபரும் அதே திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.