Verified Web

டான் பிரி­யஷாத் உள்­ளிட்ட அறுவர் சி.சி.டி.யால் கைது

2017-10-02 05:27:30 MFM.Fazeer

ஒக். 9 வரை விளக்கமறியல்; மேலும் இரு­வ­ருக்கு வலை வீச்சு

 

கல்கிசை பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை அச்சுறுத்தி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் டான் பிரியஷாத் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் இருவரை தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

கல்­கிசைப் பொலிஸ் பிரிவில் ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ர­கத்தின் பாது­காப்பின் கீழ், மூன்று மாடி வீடொன்றில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த மியன்­மாரில் இருந்து வந்த ரோஹிங்ய முஸ்லிம் அக­தி­களை அங்­கி­ருந்து உட­ன­டி­யாக வெளி­யேற்றி நாடு கடத்­து­மாறு பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் செய்த அத்­து­மீ­றல்கள் மற்றும் தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்­னின்று செயற்­பட்ட டான் பிரி­யஷாத் எனும் நபர், பெண் ஒருவர் உள்­ள­டங்­க­லாக ஆறு பேரே இது­வரைக் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். மேலும் இரு­வரை அடை­யாளம் கண்­டுள்ள பொலிஸார் அவர்­களை கைது செய்ய தொடர்ந்து நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ள ஆறு பேரில் ஒருவர் நீதி­மன்­றினால் பொலிஸ் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள நிலையில், ஏனைய ஐவரும் எதிர்­வரும் 9 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் இந்த சம்­பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் நிசாந்த டி சொய்­ஸாவின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் இடம்­பெறும் விசா­ர­ணை­களில், இந்த அத்­து­மீ­றல்­க­ளுடன் தொடர்­பு­டையோர், அவ்­வா­றான மனி­தா­பி­மா­ன­மற்ற நட­வ­டிக்­கைக்கு காரணம் உள்­ளிட்ட பல அதிர்ச்சித் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் அவை தொடர்பில் மேலும் உறுதி செய்ய தொடர் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

 "சிங்­ஹலே அபி" எனும் தேசிய அமைப்பு சார்பில் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர், தலை­மையில் ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ரக பொறுப்பில் இருந்த அக­தி­க­ளுக்கு எதி­ராக  முற்­றுகை ஆர்ப்­பாட்டம் கல்­கிசைப் பகு­தியில் அவர்கள் தங்­கி­யி­ருந்த வீட்டின் முன்­பாக இடம்­பெற்­றது.

இதன்­போது அவர்கள் தங்­கி­யி­ருந்த வீடும் சேதப்­ப­டுத்­தப்­பட்­ட­துடன் இரு பொலி­ஸாரும் காய­ம­டைந்­தி­ருந்­தனர். இதன்­போது குறித்த அக­தி­க­ளுக்கு உயிர் அச்­சு­றுத்­தலும் விடுக்­கப்­பட்­டது. இந்­நி­லையில், குறித்த அக­தி­களை மிரி­கானை தடுப்பு முகா­முக்கு வெளியே எங்­கேனும் பாது­காப்­பான இடத்தில் தங்­க­வைக்க கல்­கிசை நீதி­வ­னிடம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட உத்­த­ர­வுக்கு அமைய அவர்கள் காலி, பூசா முகாமில் தற்­போது தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லை­யி­லேயே கடந்த வியாழன் அன்று ( செப் 28) இந்த சம்­பவம் தொடர்பில் பூரண விசா­ரணை ஒன்­றினை முன்­னெ­டுக்கும் பொறுப்பு பதில் பொலிஸ் மா அதி­ப­ராக கட­மை­யாற்­றிய சி.டி. விக்­ர­ம­ரத்­னவின் உத்­த­ர­வுக்கு அமைய கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­விடம் (சி.சி.டி.) கைய­ளிக்­கப்­பட்­டது.

இந் நிலையில், நேற்று முதல் விசா­ர­ணை­களை ஆரம்­பித்த கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, குறித்த ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ர­கத்தின் பாது­காப்பின் கீழ் , மூன்று மாடி வீடொன்றில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த மியன்­மாரில் இருந்து வந்த ரோஹிங்ய முஸ்லிம் அக­தி­களை அங்­கி­ருந்து உட­ன­டி­யாக வெளி­யேற்றி நாடு கடத்­து­மாறு பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் செய்த அத்­து­மீ­றல்கள் தொடர்பில் தொலைக்­காட்சி நிறு­வ­னங்­க­ளினால் பதிவு செய்­யப்­பட்­டுள்ள வீடியோ காணொ­ளி­களைப் பெற்று விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் நிசாந்த டி சொய்­ஸாவின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சந்­ர­தி­லக, பிர­தான பொலிஸ் பரி­சோ­த­கரும் அந்த பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யு­மான நெவில் டி சில்­வாவின் கீழ் மூன்று பிரத்­தி­யேக குழுக்கள் இது தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தன.

இந் நிலையில், கடந்த வெள்­ளி­யன்று (செப். 29) இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய முத­லா­வது சந்­தேக நபரை பம்­ப­ல­பிட்டி பகு­தியில் வைத்து பொலிஸார் கைது செய்­தனர். பொது­பல சேனா அமைப்பின் முன்னாள் தீவிர செயற்­பட்­டா­ளரும் பொது­பல சேனா கடந்த பொதுத் தேர்­தலில் கள­மி­றக்­கிய பொதுஜன பெர­முன எனும் கட்­சியின் மொறட்­டுவைத் தொகு­தியில் போட்­டி­யிட்­ட­வ­ரு­மான 34 வய­து­டைய, மொரட்­டுவை  றாவத்­தா­வத்­தவைச் சேர்ந்த வீர­சே­க­ரகே டெஷாந்த சமி­ருவான் ரொட்­ரிகோ என்­பரை கைது செய்­தனர். இந்­நி­லையில், அவரை மறு நாள் கல்­கிசை நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்த பொலிஸார் அவரை எதிர்­வரும் அக்­டோபர் 9 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­தனர்.

இந் நிலையில், தொடர்ந்து நேற்­றுமுன் தினம் (செப். 30) விஷேட நட­வ­டிக்­கை­யினை முன்­னெ­டுத்த பொலிஸார் காலை­வே­ளையில், கல்­கிசைப் பகு­தியில் வைத்து பெண் ஒரு­வரைக் கைது செய்­தனர். 43 வய­து­டைய கல்­யாணி பொடி மெனிகே எனும் பெண்ணே இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட நிலையில், அவர் ரோஹிங்ய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கல்­கிசை  அத்­து­மீ­றல்­களின் போது, முன்­னின்று செயற்­பட்­ட­மையை பொலிஸார் ஆதா­ரத்­துடன் கண்­ட­றிந்­துள்­ளனர்.

இந் நிலையில், மேலும் ஆறு பேரை வீடியோ காணொ­ளிகள் ஊடாக அடை­யாளம் கண்ட பொலிஸார் அவர்­களைக் கைது செய்ய அவர்கள் வசிக்கும் பிர­தே­சங்­க­ளுக்கு சென்ற போதும் அவர்கள் தலை­ம­றை­வா­கி­யி­ருந்­தனர். இந் நிலையில், நேற்று முன் தினம் மாலை விஷேட பொலிஸ் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்த பொலிஸார், இந்த அக­திகள் மீதான அத்­து­மீ­றல்கள் மற்றும் அச்­சு­றுத்­தல்கள் தொடர்பில் அடை­யாளம் காணப்­பட்ட பிர­தான சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ரான டான் பிரி­யஷாத் என அறி­யப்­படும் சந்­தேக நபர் உள்­ளிட்ட நால்­வரைக் கைது செய்­தனர்.

வெல்­லம்­பிட்­டியைச் சேர்ந்த 31 வய­து­டைய டான் பிரி­யஷாத் எனப்­படும் லிய­னகே அபே­ரத்ன சுரேஷ் பிரி­யசாத், 45 வய­து­டைய கனே­முல்­லையைச் சேர்ந்த ஜனித நிரோ­ஷன தீபகே, 44 வய­து­டைய அக்பர் நகர், எடே­ர­முல்­லையைச் சேர்ந்த நாவ­லகே டொன் சிந்­தக சஞ்­சீவ, நாவல பகு­தியைச் சேர்ந்த 22 வய­து­டைய என்.ஜி.கே. கயான் மதுஷான் சென­வி­ரத்ன ஆகி­யோரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டனர். இவர்­களும் கைதான பெண்ணும் நேற்று கல்­கிசை நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். இதன்­போது மதுஷான் சென­வி­ரத்ன பொலிஸ் பிணையில் விடு­விக்­கப்­பட்­ட­துடன் ஏனைய அனை­வரும் எதிர்­வரும் அக்­டோபர் மாதம் 9 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர். இந் நிலையில், விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபர்கள் அனை­வரும் 9 ஆம் திகதி அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். இத­னை­விட அடை­யாளம் காணப்­பட்ட மேலும் இரு சந்­தேக நபர்­களை தேடும் பணி­களை பொலிஸார் முன்­னெ­டுத்­துள்­ளனர்.

நேற்று சந்தேக நபர்கள் மன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது பாதிக்கப்பட்ட ரோஹிங்யா அகதிகள் சார்பில் ஆர்.ஆர்.டி. அமைப்பின் சார்பில் சட்டத்தரணி சிந்தக ரன்கொத்கே மன்றில் ஆஜரானார். அவர் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு கடும் ஆட்சேபனை வெளியிட்டார். அத்துடன் சந்தேக  நபர்களுக்கு எதிராக பொலிஸார் தண்டனை சட்டக் கோவையின் அத்தியாயங்களை மட்டும் உள்ளடக்கி குற்றச்சாட்டினை முன்வைத்திருந்த நிலையில், ஐ.சி.சி.பி.ஆர். எனப்படும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் ஏன் முன்வைக்கப்படவில்லை என சட்டத்தரணி சிந்தக ரன்கொத்கே கேள்வி எழுப்பினார். சந்தேக நபர்களுக்கு எதிராக சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டுச் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என இதன்போது சட்டத்தரணி சிந்தக சுட்டிக்காட்டினார்.

இதனை அடுத்து மன்றில் ஆஜரான சட்டத்தரணி அது தொடர்பில் சட்ட மா அதிபருடன்  கலந்துரையாடி மன்றுக்கு அறிவிப்பதாக தெரிவித்தார்.

குறிப்­பாக ரோஹிங்ய முஸ்லிம் அக­தி­க­ளுக்கு எதி­ராக திடீ­ரென முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்த அத்­து­மீ­றல்­களின் பின்­னணி தொடர்பில் விசா­ர­ணை­யா­ளர்கள் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். இதன்­போது பல்­வேறு அதிர்ச்­சி­கர தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த அக­திகள் மிரி­கான தடுப்பு முகாமில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த போது, சுக­யீ­ன­முற்று களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட அகதி இளம் பெண் ஒருவர், பாது­காப்பு கட­மையில் இருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார்.  கங்­கொ­ட­வில நீதிவான் நீதி­மன்றில் இது தொடர்­பி­லான வழக்கு பீ/ 2030 /17 எனும் இலக்­கத்தின் கீழ் நடை­பெற்று வரு­கின்­றது.

இதில் துஷ்­பி­ர­யோகம் செய்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரான டி.பி.ஜி. குண­வர்­தன வாசை பாதிக்­கப்­பட்ட யுவதி அடை­யா­ளமும் கண்­டி­ருந்தார். இந் நிலையில், அது தொடர்பில் குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் பணி இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டி­ருந்தார்.
இந்த பாலியல் துஷ்­பி­ர­யோக நட­வ­டிக்­கையைக் கருத்தில் கொண்டே மிரி­கா­னைக்கு வெளியே ரோஹிங்ய அக­தி­களை தங்­க­வைக்க நீதி­மன்றம் அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது.

இந் நிலையில், இந்த பாலியல் துஷ்­பி­ர­யோக சம்­ப­வத்தின் பிர­தான சாட்­சி­யா­ளர்­க­ளாக பாதிக்­கப்­பட்ட யுவ­தியும் அவ­ரது மைத்­து­ன­ரான மொஹம்மட் அமீன் என்­ப­வ­ருமே உள்­ளனர். இந்­நி­லையில் ரோஹிங்ய முஸ்லிம் அக­தி­களை முடி­யு­மான வரை அவ­ச­ர­மாக நாடு கடத்­து­வதன் ஊடாக இந்த வழக்கில் இருந்து தப்பிக் கொள்­ளலாம் எனும் எண்­ணத்தில் அக­தி­க­ளுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டமும் அத்து மீறலும் நடாத்­தப்­பட்­டுள்­ள­தாக  தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த அத்­து­மீ­றல்­களின் போது, துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளான பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரின் நண்­பர்கள் மற்றும் உற­வி­னர்கள் கலந்­து­கொண்­டமை ஊடாக இந்த தக­வல்கள் மற்றும் சந்­தேகம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கல்கிசையில் ரோஹிங்ய முஸ்லிம் அகதிகள் மீதான அத்துமீறல்கள் சிலரால் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதில் கலந்துகொண்ட ஏனையோர் உண்மை நோக்கத்தை அறியாது சட்டவிரோத கும்பலின் உறுப்பினர்களாக செயற்பட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளனர். எனினும் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் உறுதி செய்துகொள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இதனிடையே, ரோஹிங்ய முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு சொந்தமான பூசா முகாம் அருகில் தேரர்கள் உள்ளிட்ட எவருக்கும் ஆர்ப்பாட்டம் செய்யவோ, தரித்து நிற்கவோ முடியாது என தெரிவித்து காலி  நீதிவான் நிசாந்த பீரிஸ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். பூஷா அருகிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெறலாம் என உளவுத் துறைக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக ரத்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமல் கிரியெல்ல நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கை பிரகாரம் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.