Verified Web

ராக்கைன் மாநிலத்திற்கு விஜயம் செய்த பி.பி.சி. செய்தியாளரின் நேரடி வாக்குமூலம்

2017-09-17 17:39:45 M.I.Abdul Nazar

தமிழில் : எம்.ஐ.அப்துல் நஸார் 

கடந்த சில வாரங்­களில் மியன்­மாரின் ராக்கைன் மாநி­லத்­தி­லி­ருந்து 300,000 பொது­மக்கள் பங்­க­ளா­தே­ஷுக்கு தப்பி வந்­துள்­ளனர். அவர்கள் அனை­வரும் ஏற்­க­னவே இடம்­பெ­யர்ந்­தோ­ருக்­கான முகாம்­களில் தங்க வைப்­பட முடி­யாத அள­விற்கு அதிக எண்­ணிக்­கையில் காணப்­ப­டு­கின்­றனர். அவர்கள் ராக்கைன் மாநி­லத்தின் வடக்கு மாவட்­டங்­க­ளான மங்டௌ, புதிடொங் மற்றும் ரதெடங் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து வந்­த­வர்­க­ளாவர். 

இந்த மாவட்­டங்­க­ளுக்கு தற்­போது செல்­வது மிகவும் கடி­ன­மான காரி­ய­மாகும். மிக மோச­மான வீதி வழி­யா­கவே செல்ல வேண்டும். மேலும் குறித்த இடங்­க­ளுக்குச் செல்­வ­தற்கு அர­சாங்­கத்தின் அனு­ம­தியும் பெறப்­பட வேண்டும். அது ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு மிக அரி­தா­கவே கிடைக்­கின்­றது. 

எனவே உள்ளூர் மற்றும் வெளி­நாட்டு ஊட­க­வி­ய­லா­ளர்கள் 18 பேரை உள்­ள­டக்­கி­ய­தாக அர­சாங்­கத்­தினால் ஒழுங்கு செய்­யப்­பட்ட மங்­டௌ­வுக்­கான விஜ­யத்தில் இணைந்­து­கொண்டோம். 

இந்த விஜ­யத்­தின்­போது அவர்கள் அழைத்துச் செல்லும் இடங்­க­ளையும் அவர்கள் குறிப்­பிடும் நபர்­க­ளையும் மாத்­தி­ரமே பார்க்க முடி­யு­மாக இருந்­தது. ஆனால் இந்த வரை­ய­றை­க­ளுக்கு மத்­தி­யிலும் சில பெறு­ம­தி­யான தக­வல்­களை சேக­ரித்துக் கொண்டோம். 

மேலும் அர­சாங்கம் தனது கருத்தும் கேட்­கப்­பட வேண்டும் என வாதி­டு­கின்­றது. அது தற்­போது ஆயுதப் போராட்­ட­மொன்­றினை எதிர்­கொண்­டுள்­ளது. எனினும் சிலர் இது புனை­யப்­பட்ட கதை எனத் தெரி­விக்­கின்­றனர். ராக்கைன் மாநி­லத்தில் நில­வு­கின்ற இன முரண்­பாடு என்­பது நீண்ட வர­லாற்றைக் கொண்­டது. அதனை கையாள்­வது எந்த அர­சாங்­கத்­திற்கும் கடி­ன­மான விட­ய­மாகும். 

ராக்கைன் மாநி­லத்தின் தலை­ந­க­ரான சிட்­விக்கு வந்து சேர்ந்­த­போது, யாரும் குழுவில் இருந்து விலகிச் செல்லக் கூடாது எனவும் சுதந்­தி­ர­மாக செயல்­பட எத்­த­னிக்கக் கூடாது எனவும் அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டது. அங்கு மாலை 6 மணிக்கு ஊர­டங்குச் சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன் கார­ண­மாக இரவு வேளையில் நட­மாட முடி­யாது. நாம் எந்­தெந்த இடங்­களை பார்க்க விரும்­பு­கின்­றோமோ அதனை கோரிக்­கை­யாக முன்­வைக்க முடிந்­தது. ஆனால் பாது­காப்புக் கார­ணங்­களின் அடிப்­ப­டையில் அக் கோரிக்­கைகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டன. எங்­க­ளது பாது­காப்பு தொடர்பில் உயர் கரி­ச­னையை அவர்கள் வெளிப்­ப­டுத்­தி­னார்கள் என நாம் நம்­பினோம். 

எமது பயணம் மியன்­மாரின் தாழ்­நிலப் பிர­தே­சங்­களில் ஓடை­களின் சதுப்பு நிலங்கள் மற்றும் நெருக்­க­மான பட­கு­களில் ஆறு­களைக் கடந்தும் தொடர்ந்­தது. ராக்கைன் மாநி­லத்தின் தலை­ந­க­ரான சிட்­வி­யி­லி­ருந்து புதி­டொங்கை வந்­த­டைய எமக்கு ஆறு மணித்­தி­யா­லங்கள் சென்­றன. அதன் பின்னர் மங்­டே­ளவைச் சென்­ற­டைய மாயு மலை­யோர கர­டு­மு­ர­டான பாதையில் ஒரு மணி­நேரம் பய­ணித்தோம். நாம் நகரை நோக்கிச் சென்­று­கொண்­டி­ருந்­த­போது எரிக்­கப்­பட்ட முத­லா­வது கிரா­ம­மான மையோ துகையை கடந்து சென்றோம். அங்கு மரங்கள் கூட கரு­கிப்­போ­யி­ருந்­தன. 

அர­சாங்­கத்தின் நோக்கம் பங்­க­ளா­தே­ஷுக்கு வந்­துள்ள ரோஹிங்ய மக்கள் வெளி­யிட்­டி­ருக்கும் எதிர்­ம­றை­யான கருத்­துக்களை மறு­த­லிப்­ப­தா­கவே இருந்­தது. பெரும்­பா­லான ரோஹிங்ய மக்­களின் கருத்து மியன்மார் இரா­ணு­வத்­தி­னாலும் ராக்கைன் கும்­பல்­க­ளி­னாலும் வேண்­டு­மென்று அழி­வுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும், வெளிப்­ப­டை­யான மனித உரிமை மீறல்கள் ஏற்­பட்­ட­தா­க­வுமே தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.  

அர­சாங்­கத்தின் நோக்கம் பிசு­பி­சுத்துப் போனது

நாங்கள் முதன் முத­லாக மங்டௌ அமைந்­துள்ள சிறிய பாட­சா­லை­யொன்­றிற்கு அழைத்துச் செல்­லப்­பட்டோம். அங்கு இடம்­பெ­யர்ந்த இந்துக் குடும்பங்கள் தங்­கி­யி­ருந்­தன. அவர்கள் அனை­வரும் முஸ்­லிம்கள் தாக்­கி­ய­தனால் பயத்­தினால் ஓடினோம் என பல­வா­றான கதை­களைக் கூறி­னார்கள். ஆனால் பங்­க­ளா­தே­ஷுக்கு தப்பி வந்­துள்ள இந்­துக்கள், தாம் ரோஹிங்யா முஸ்­லிம்­களின் தோற்­றத்தில் இருப்­பதால் உள்ளூர் ராக்கைன் பௌத்­தர்கள் தங்கள் மீதும் தாக்­குதல் நடத்­தி­ய­தாகத் தெரி­விக்­கின்­றனர். 

ஆயுதம் தாங்­கிய பொலி­ஸா­ரி­னாலும் அதி­கா­ரி­க­ளி­னாலும் நாம் அழைத்துச் செல்­லப்­பட்ட பாட­சா­லையில் தஞ்சம் புகுந்­தி­ருந்த மக்கள் சுதந்­தி­ர­மாக கருத்துத் தெரி­விக்­க­வில்லை. இரா­ணு­வத்­தினர் எவ்­வாறு தனது கிரா­மத்தின் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­தனர் என ஒருவர் கூற ஆரம்­பிக்­கும்­போது பக்­கத்­தி­லி­ருந்த நபர் பயத்­துடன் குறுக்­கிட்டு திருத்­து­கிறார். 

செம்­மஞ்சள் நிற இறேந்தை மற்றும் பழுப்பு நிற மேல் சட்டை மற்றும் இளம் ஊதா நிற லுங்­கியும் அணிந்­தி­ருந்த பெண்­ணொ­ருவர் முஸ்­லிம்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட செயற்­பா­டு­களை விசே­ட­மாகச் செய்து காட்­டினார். 

முஸ்­லிம்கள் எரிப்­பது போல் காண்­பிக்கும் போலி­யான புகைப்­ப­டங்கள்

பின்னர் பௌத்த ஆல­யத்­திற்கு அழைத்துச் செல்­லப்­பட்டோம். அங்கு தமது சொந்த வீடு­களை முஸ்­லிம்­களே எரித்­துக்­கொண்­ட­தாக துற­வி­யொ­ருவர் விப­ரித்தார். அவ்­வாறு அவர்கள் எரிக்­கும்­போது எடுக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் புகைப்­ப­டங்­களும் எமக்குக் கொடுக்­கப்­பட்­டன. அவை பார்ப்­ப­தற்கு புது­மை­யா­ன­தாக இருந்­தது. 

வெள்ளை நிற ஹாஜி தொப்­பி­ய­ணிந்த ஆண்கள் ஓலை­க­ளினால் வேயப்­பட்ட கூரை­மீது நெருப்பு வைப்­ப­துபோல் காணப்­பட்­டனர். இறேந்தை மேசை விரிப்பு போன்ற துணி­யினால் தனது தலையை மூடிக்­கொண்டு வாளையும் நெருப்புப் பந்­தத்­தையும் மூர்க்­கத்­துடன் காண்­பிக்கும் அந்தப் பெண்ணை அழைத்துச் செல்­லப்­பட்ட பாட­சா­லையில் தஞ்சம் புகுந்­தி­ருந்த இந்துப் பெண்கள் மத்­தியில் கண்டேன். அதே­போன்று இடம்­பெ­யர்ந்­துள்ள இந்­துக்­களுள் அந்த ஆண்களுள் ஒரு­வ­ரையும் கண்டேன். 

அதன் பின்னர் எல்லைப் பாது­காப்­புக்­கான உள்ளூர் அமைச்சர் கேர்ணல் போன் டின்டைச் சந்­தித்தோம். அவர் எவ்­வாறு “அரக்கான் ரோஹிங்ய விடு­தலை படையின் ஆயு­த­தா­ரிகள்” என அழைக்­கப்­படும் “பெங்­காலி பயங்­க­ர­வா­திகள்” எவ்­வாறு ரோஹிங்ய கிரா­மங்­களை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருந்­தனர் எனவும் ஒவ்­வொரு வீட்டில் இருந்தும் ஒரு­வரை தமது படைக்கு அனுப்ப வேண்டும் என வற்­பு­றுத்­தினர் எனவும் விப­ரித்தார். அதற்கு மறுப்புத் தெரி­வித்­தோரின் வீடுகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்தார். மிதி­வெ­டிகள் புதைக்­கப்­பட்­ட­மைக்கும் மூன்று பாலங்கள் நிர்­மூ­ல­மாக்­கப்­பட்­ட­மைக்கும் ஆயு­த­தா­ரி­களே பொறுப்பு எனவும் அவர் குற்­றம்­சாட்­டினார். 

“பத்­துக்கும் மேற்­பட்ட கிரா­மங்கள் எரிக்­கப்­பட்­டுள்­ளன. அவை அனைத்­துமே ஆயு­த­தா­ரி­க­ளி­னால்தான் எரிக்­கப்­பட்­டன என கூறு­கி­றீர்­களா?” என நான் கேட்டேன். “அதுதான் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு” என உறு­தி­படத் தெரி­வித்தார். இரா­ணு­வத்தின் அட்­டு­ழி­யங்கள் தொடர்பில் கேட்­கப்­பட்­ட­போது, அவற்றைப் புறந்­தள்­ளிய அவர், 'அதற்கு ஆதாரம் இருக்­கி­றதா?' எனக் கேட்டார் ரோஹிங்ய அக­தி­களை சுட்­டிக்­காட்­டிய அவர் 'இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்த அந்தப் பெண்­களைப் பாருங்கள். அவர்­களை யாரா­வது வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்த நினைப்­பார்­களா?'எனவும் கேள்வி எழுப்­பினார்.  

மெங்­டௌவில் மிகச் சொற்ப எண்­ணிக்­கை­யி­லான முஸ்­லிம்­க­ளையே கண்டோம். அவர்­களுள் பெரும்­பா­லானோர் ஒளிப்­ப­திவுக் கரு­விக்கு முன்னால் பேசு­வ­தற்கு மிகவும் அச்­சப்­பட்­டனர். எமது பாது­காப்பு வல­யத்­தி­லி­ருந்து விலகி அவர்­களுள் சில­ருடன் பேசினோம். தாம் வெளி­யே­று­வ­தற்கு இரா­ணு­வத்­தினர் தடை­வி­தித்­துள்­ள­மை­யி­னையும் உணவுத் தட்­டுப்­பாடு மற்றும் அச்சம் ஆகி­ய­வற்றால் எதிர்­கொள்ளும் சிர­மங்­க­ளையும் விப­ரித்­தனர். 

'நாங்கள் பங்­க­ளா­தே­ஷிற்கு தப்பிச் செல்ல விரும்­பு­கின்றோம். ஆனால் எமது தலை­வர்கள் வெளி­யே­றாமல் இங்­கேயே இருப்­ப­தாக அதி­கா­ரி­க­ளுடன் ஒப்­பந்தம் செய்­து­கொண்­டுள்­ளனர்' என ஓர் இளைஞர் தெரி­வித்தார். தற்­போது அமை­தி­யாகக் காணப்­படும் பெங்­காலி சந்­தையில் ஒரு­வ­ரிடம் 'நீங்கள் யாருக்குப் பயப்­ப­டு­கி­றீர்கள்?'எனக் கேட்டேன். அதற்கு அவர் 'அர­சாங்­கத்­திற்கு' எனத் தெரி­வித்தார்.
எமது பயண நிகழ்ச்சி நிரலில் எமது பிர­தான முடி­விடம் மங்­டௌவின் வெளிப் பிர­தே­ச­மான அலெல் தான் கியோ என்ற கரை­யோர நக­ர­மாகும். இந்த நகரம் கடந்த 25 ஆந் திகதி முற்­பகல் வேளையில் அஸ்ரா ஆயு­த­தா­ரி­க­ளினால் தாக்­குதல் நடத்­தப்­பட்ட நக­ரங்­களுள் ஒன்­றாகும். நாங்கள் அந்த கிரா­மங்கள் ஒவ்­வொன்­றாகக் கடந்து சென்றோம். அனைத்­துமே வெறிச்­சோடிக் காணப்­பட்­டன. கைவி­டப்பட்ட நிலையில் பட­கு­களும் ஆடு­களும் வேறு கால்­ந­டை­களும் காணப்­பட்­டன. ஆனால் அங்கு மனி­தர்கள் எவ­ரையும் காண முடி­ய­வில்லை. 

அலெல் தான் கியோ பிர­தேசம் முற்­றாக எரித்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டி­ருந்­தது. தன்­னார்வ மருத்­துவ உதவி நிறு­வ­னத்­தினால் நடத்­தப்­பட்ட மருத்­துவ நிலையம் கூட அழிக்­கப்­பட்­டி­ருந்­தது. வடக்குப் பக்­க­மாக சிறிது தூரத்தில் நான்கு பகு­திகளில் புகை வந்­து­கொண்­டி­ருந்­ததை அவ­தா­னித்தோம். தன்­னி­யக்கத் துப்­பாக்­கி­யினால் வேட்டுத் தீர்க்கும் சத்­தமும் கேட்­டது. பெரும்­பா­லான கிரா­மங்கள் எரிக்­கப்­பட்­டு­விட்­டன என்­பதை நாம் அனு­மா­னித்தோம். 

தாக்­குதல் நடத்­தப்­படப் போவதை தாம் எவ்­வாறு முன்­கூட்­டியே அறி­வித்தோம் என பொலிஸ் லெப்­டினன்ட் அங்­கி­யயோ மோ எம்­மிடம் விப­ரித்தார். முஸ்­லிம்கள் அல்­லா­தோரை தனது காவ­ல­ர­ணினுள் பாது­காப்­ப­ளிப்­ப­தற்­காக அழைத்துக் கொண்­ட­தா­கவும் அதன் பின்னர் தனது அணி­யினர் துப்­பாக்­கிகள், வாள் மற்றும் நாட்டு வெடிகள் போன்­ற­வற்றை வைத்­தி­ருந்த ஆயு­த­தா­ரிகள் மீது தாக்­குதல் மேற்­கொண்­ட­தா­கவும் அவர்கள் தப்­பி­யோடும் வரை தாக்­குதல் தொடர்ந்­த­தா­கவும் அவர் தெரி­வித்தார். 17 ஆயு­த­தா­ரிகள் கொல்­லப்­பட்­ட­தோடு ஒரு குடி­யேற்ற உத்­தி­யோ­கத்­தரும் கொல்­லப்­பட்டார். அதன் பின்னர் முஸ்­லிம்­களும் தப்பிச் சென்­றனர் எனவும் குறிப்­பிட்டார். 'ஆனால் மழை காலத்தில், தாக்­குதல் நடத்­தப்­பட்டு இரு வாரங்கள் கழிந்த பின்­னரும் நகரின் சில பகு­திகள் தொடர்ந்தும் எரிந்­து­கொண்­டி­ருக்­கின்ற­னவே?' என கேட்­கப்­பட்ட கேள்­விக்கு பதில் சொல்ல முடி­யாமல் அவர் திண­றினார். 'சில முஸ்­லிம்கள் தங்­கி­யி­ருந்­தி­ருக்­கலாம். மிகச் சமீ­பத்தில் அவர்கள் வெளி­யே­றும்­போது தீயிட்டு விட்டுச் சென்­றி­ருக்­கலாம்' என வேண்டா வெறுப்­பாக பதி­ல­ளித்தார். 

 எதிர்­பா­ராத சம்­பவம் 

பின்னர் நாம் அலெல் தான் கியோ பிர­தே­சத்­திற்குத் திரும்­பி­ய­போது எதிர்­பா­ராத சம்­ப­வ­மொன்று நடை­பெற்­றது. 

வயல்­க­ளுக்கு அப்பால் மரங்­க­ளுக்கு நடுவே இருந்து கரும் புகை வெளிப்­பட்­டதை நாம் அவ­தா­னித்தோம். அந்த வீதி மற்­று­மொரு கிரா­மத்­திற்குச் செல்­கின்­றது. அப்­போ­துதான் தீ மூட்­டப்­பட்­டி­ருந்­தது. நாம் அனை­வரும் பொலிஸ் தொட­ர­ணி­யுடன் சென்ற எமது வேனை நிறுத்­தும்­படி சத்­த­மிட்டோம். வேன் நிறுத்­தப்­பட்­டதும் எமது பாது­காப்­புக்­காக எம்­முடன் வந்­தி­ருந்த பாது­காப்பு அதி­கா­ரி­க­ளையும் கவ­னிக்­காது சம்­பவ இடத்தை நோக்கி ஓடினோம். எம்­முடன் பொலி­ஸாரும் இணைந்­து­கொண்­டனர். பின்னர் கிரா­மத்­தினுள் நுழை­வது பாது­காப்­பா­ன­தல்ல என தெரி­வித்­தனர். பின்னர் அவர்கள் காட்­டிய வழியில் சென்றோம். 

எரியும் சத்­தமும் வெடிக்கும் சத்­தமும் அனைத்து இடங்­க­ளிலும் கேட்­டுக்­கொண்டே இருந்­தன. முஸ்லிம் பெண்­களின் ஆடைகள் களிமண் பாதையில் ஆங்­காங்கே சிதறிக் கிடந்­தன. அங்கு திட­காத்­தி­ர­மான ஆண்கள் வாள்­க­ளையும் நெருப்புப் பெட்­டி­க­ளையும் வைத்­துக்­கொண்டு பாதையில் நின்­றனர். திடீ­ரென 18 ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் கண்ட அவர்கள் எம்மை நோக்கி ஓடி வந்தனர். நாம் புகைப்படம் எடுப்பதை  அவர்கள் தவிர்த்தனர். அவர்களுள் இருவர் கிராமத்தினுள் சென்று மறைந்தனர்.  

நாங்கள் ரோஹிங்ய பௌத்தர்கள் என அவர்கள் தெரிவித்தனர். எங்களுடன் இருந்த ஊடகவியலாளர்களுள் ஒருவர் விரைவாக அந்த நபர்களுள் ஒருவருடன் பேசினார். “பொலிஸாரின் உதவியுடன் நாம் வீடுகளுக்கு தீயிட்டோம்” என அந் நபர் ஏற்றுக்கொண்டார். 
நாம் சிறிது தூரம் நடந்து சென்றபோது அப்போதுதான் மத்ரஸா ஒன்றின் கூரைமீது தீ வைக்கப்பட்டிருந்தது. அரபு மொழியிலான எழுத்துக்களைக் கொண்ட பாடசாலை புத்தகங்கள் வெளியே வீசப்பட்டிருந்தன. பெற்றோல் வாசம் வீசிய நிலையில் வெற்று பிளாஸ்ரிக் கோப்பையொன்று பாதையில் காணப்பட்டது. 

அது ‘கவுடுதர்யா’ என அழைக்கப்படும் கிராமமாகும். அது ஒரு முஸ்லிம் கிராமம். அங்கு எவரும் தற்போது வசிப்பதற்கான அடையாளங்கள் இல்லை. கிராமத்திற்கு தீயிட்ட ராக்கைனைச் சேர்ந்த நபர்கள் எமது பொலிஸ் பாதுகாப்புத் தொடரணியினை கடந்து சென்றனர். அவ்வாறு சென்ற அவர்கள் தீயிட்ட வீடுகளில் திருடிய பொருட்களையும் சுமந்து சென்றனர். 

பல பொலிஸ் காவலரண்கள் காணப்பட்ட இடங்களில் தீ பற்றி எரிந்த போதிலும் அதனை அணைப்பதற்கு எவரும் முன்வரவில்லை.