Verified Web

நீதியின் பிடியில் நிர்வாகிகள்

2017-09-13 17:41:05 A.L.M. Satthar

கடந்த ஆட்­சியின் போது ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்டோர், மற்றும் அரச வளங்­களை முறை­கே­டாகப் பயன் படுத்­தியோர், சட்­டத்தின் முன் கொண்­டு­வ­ரப்­ப­டுவர், மக்கள் மீது ஏற்­றப்­பட்­டுள்ள பொரு­ளா­தாரச் சுமை குறைக்­கப்­படும், சிறு­பான்மை சமூ­கங்கள் அச்­ச­மின்றி வாழும் சூழல் உரு­வாக்­கப்­படும் போன்ற வாக்­கு­று­தி­களை முன் வைத்தே நல்­லாட்சி என்ற கோஷத்­துடன் இந்த அரசு பத­விக்கு வந்­தது. 

தேர்தல் பிர­சார மேடை­களில் முழங்­கிய மேற்­கண்ட இனி­மை­யான வார்த்­தை­களை நம்­பியே மக்­களும் ஆணை வழங்கி இந்த அரசை பத­வியில் அமர்த்­தினர். இந்த அரசு வந்து இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யாகும் நிலை­யிலும் வாக்­கு­று­திகள் எத­னையும் நிறை­வேற்­ற­வில்லை என்றும் முன்­னைய அரசில் ஊழல், மோச­டிகள், அரச வளங்­களைத் துஷ்­பி­ர­யோகம் செய்தோர் எவரும் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை என்றும், பதி­லாக அத்­த­கைய குற்­ற­வா­ளி­களை அரச உயர்­மட்­டத்­தி­னுள்ள சிலர் காப்­பாற்­று­கின்­றனர் என்றே பலரும் அங்­க­லாய்த்துக் கொண்­டி­ருந்­தனர். 

இத்­த­கைய சந்­தர்ப்­பத்­திலே தான், அர­சியல் ரீதியில் குற்றச் செயல்­களில் ஈடு­பட்ட முக்­கி­யஸ்­தர்கள் இருவர் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­பட்டு கொழும்பு மேல் நீதி­மன்றம் தண்­டனை விதித்­துள்­ளது. சிறை, அப­ராதம், நஷ்­ட­ஈடு செலுத்­துதல் ஆகிய மூன்று தண்­ட­னை­களும் இவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. 

இரு­வ­ருக்கும் மூன்று வருட கடூ­ழியச் சிறையும், தலா இரு­பது இலட்சம் ரூபா அப­ரா­தமும் தொலைத்­தொ­டர்பு ஒழுங்­க­மைப்பு ஆணைக்­கு­ழு­வுக்கு தலா 5 கோடி ரூபா வீதம் இழப்­பீடு செலுத்த வேண்டும் என்றும் கொழும்பு மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி கிஹான் குல­துங்க தீர்ப்பு வழங்­கி­யுள்ளார். 

இந்த தீர்ப்பு நாட்டில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த அரசு பத­விக்கு வந்­தது முதல் பல­ராலும் எதிர்­பார்க்­கப்­பட்டு மக்கள் நம்­பிக்கை இழந்­தி­ருந்த நிலையில் மேற்­படி தீர்ப்பு மூலம் நீதி சாக­டிக்­கப்­ப­ட­வில்லை. மீண்டும் புத்­துயிர் பெற்­றுள்­ளது என்ற உணர்வு பல­ருக்கும் ஏற்­பட்­டுள்­ள­தென்றே கூறலாம். ஆனால் குற்­ற­வா­ளிகள் சார்ந்த அணி­யினர் மற்றும் மஹிந்த அணி­யி­ன­ருக்கும் ஜீர­ணிக்க முடி­யாத ஒன்­றா­கவே இந்த தீர்ப்பு அமைந்­துள்­ளதை அவர்கள் பக்­கத்­தி­லி­ருந்து எறி­யப்­படும் எதிர்க்­க­ணைகள் உணர்த்திக் கொண்­டி­ருக்­கின்­றன. 

2015 ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில், மஹிந்த ராஜபக் ஷவின் வெற்­றிக்­காக அரச வளங்கள் முறை­கே­டாகப் பிர­யோ­கிக்­கப்­பட்ட குற்றச் செய­லுக்­கா­கவே மேற்­படி கடு­மை­யான தண்­ட­னையை கொழும்பு மேல் நீதி­மன்றம் விதித்­தி­ருக்­கி­றது. 
ஜனா­தி­பதித் தேர்தல் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட  கால­கட்­ட­மான 2014  ஒக்­டோபர் 30 ஆந் திக­திக்கும் 2015 ஜன­வரி 5 ஆந் திக­திக்கும் இடையில் தான் மேற்­படி குற்றச் செயல் புரி­யப்­பட்­ட­தாக நீதி­பதி தீர்ப்பில் குறிப்­பிட்­டுள்ளார். 

தொலைத்­தொ­டர்பு ஆணைக்­கு­ழுவின் பெய­ரி­லி­ருந்த 600 மில்­லியன் ரூபா பணம், இயக்­குநர் சபையின் ஒப்­பு­த­லின்றி, ஜனா­தி­ப­தியின் முன்னாள் செய­லாளர் லலித் வீர­துங்­கவின் வங்கிக் கணக்­கிற்கு தொலைத்­தொ­டர்பு ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் நாயகம் அனுஷ பெல்­பிட்ட மாற்­றி­யுள்ளார். இப்­ப­ணத்­திற்கு பௌத்த பக்­தர்கள் சீலம் அனு-ஷ்­டிக்கும் போது அணியும் வெள்ளைத் துணி கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளது. 

மஹிந்த ராஜபக் ஷவுக்கு வாக்­க­ளிக்கச் செய்யும் வகை­யிலே உரிய தேர்தல் காலத்தில் இத்துணிகள் விநி­யோ­கிக்­கப்­பட்­டமை நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் நீதி­பதி தீர்ப்பின் போது வெளி­யிட்­டி­ருந்தார். 

பொதுச் சொத்­துக்­களைக் கையா­டுவோர் அதன் மூலம் அர­சுக்கு நஷ்­டத்தை ஏற்­ப­டுத்தும் தொகையில், மூன்று மடங்கு பணத்­தினை நஷ்­ட­ஈ­டாக செலுத்த வேண்டும் என்று பொதுச் சொத்து சட்ட மூலத்தில் நீதி­மன்­றத்­திற்கு அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அப்­ப­டி­யி­ருந்தும் இவர்கள் இரு­வ­ருக்கும் ஐந்து கோடி ரூபாவே நஷ்­ட­ஈ­டாக செலுத்தும் படி தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. 

அரச சேவையில் ஜனா­தி­பதி செய­லாளர் பத­வியே மிகவும் உயர்ந்த பத­வி­யாகும். அந்த வகையில் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்டு, சிறை­வாசம் அனு­ப­விக்கும் முத­லா­வது ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்­க­வாகும். 

1950 ஆம் ஆண்டு மாத்­த­றையில் பிறந்த இவர், அங்­குள்ள ராஹுல, மற்றும் கொழும்பு ராஜ­கீய வித்­தி­யா­லயம் ஆகிய பாட­சா­லை­களில் கற்றார். கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் வர்த்­தக முகா­மைத்­து­வத்தில் முது­மாணிப் பட்டம் பெற்­றுள்ளார். அமெ­ரிக்­காவின் பென்சில் வேனி­யா­வி­லுள்ள அரச சர்­வ­க­லா­சா­லை­யிலும் சிறப்புப் பட்டம் பெற்­றுள்ளார். 

1977 ஜன­வ­ரியில் அரச நிரு­வாக சேவையில் இணைந்த இவர் அறி­வாற்றல் மிக்க, மிகவும் திறமை வாய்ந்த நிரு­வா­கி­யாக விளங்­கினார்.

மஹிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ராக இருந்த போது அவரின் செய­லா­ள­ராகப் பணி­யாற்­றி­யுள்ளார். பின்னர் 2005 ஆம் ஆண்டு, முதன் முத­லாக மஹிந்த ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­துடன், ஜனா­தி­பதி செய­லா­ள­ராக லலித் நிய­மனம் பெற்றார். இவ­ரது மனைவி இந்­தி­ராணி சுக­த­தா­ஸவும் சிறப்­புக்­கு­ரிய நிரு­வாக அதி­கா­ரி­யாகத் திகழ்ந்­தவர். மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் அந்­நிய செலா­வணி மற்றும் காப்­பு­றுதி ஆணைக்­கு­ழுவின் பணிப்­பாளர் நாய­க­மாகப் பணி­யாற்­றி­யவர். 

மன­சாட்­சிக்கு விரோ­த­மாக செயற்­பட முடி­யாது என்ற குறிக்­கோளை முன்­வைத்து, 2011 ஆம் ஆண்டு பத­வியை இரா­ஜி­னாமாச் செய்தார். இவ்­வாறு மிகவும் கௌர­வ­மான குடும்ப பின்­ன­ணியைக் கொண்­ட­வர்தான் லலித் வீர­துங்க. இதே போன்றே அனுஷ பெல்­பிட்­டவும் பணிப்­பாளர் நாய­க­மாக உயர் பதவி வகித்­த­வ­ரென்றால் அவரும் திறமை, ஆற்றல் மிக்­கவர், கௌர­வத்­துக்­கு­ரி­யவர் என்­பதும் தெளிவு. மஹிந்த ராஜபக் ஷவின் அரா­ஜ­கத்தில் நல்ல உள்­ளங்­களும் கூட ஆட்­சி­யா­ளர்­களின் பேரா­சையால் வேண்­டத்­த­காத வேலை­களில் ஈடு­பட நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர். அந்த வகையில் லலித் வீர­துங்­கவும் இரை­யாகி இன்று சிறையில் தள்­ளப்­பட்­டுள்ளார் என்று விமர்­ச­கர்கள் தெரி­விக்­கின்­றனர். 

2015 ஜனா­தி­பதி தேர்­தலின் போது, ட்ரான்ஸ் பெரன்ஸி இன்டர் நெஷனல் – ஸ்ரீலங்கா என்ற தேர்தல் கண்­கா­ணிக்கும் அமைப்பும் பணியில் ஈடு­பட்­டி­ருந்­தது. அதன் இலங்கை இணைப்­பா­ள­ராகக் கட­மை­யாற்­றிய ஷான் விஜே­துங்க மேற்­படி மோசடி குறித்து அழுத்தம் திருத்­த­மான கருத்­துக்­களை முன் வைத்­துள்ளார். 

அவ­ரது முறைப்­பாட்டில் 2015 ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு நான்கு தினங்­க­ளுக்கு முன்னர் (2015 ஜனவரி 4) வரும் போயா தினத்தில் இலங்­கை­யி­லுள்ள சகல விகா­ரை­க­ளிலும் பகிர்ந்­த­ளிப்­ப­தற்­காக சீலம் அனுஷ்­டிப்போர் அணியும் வெள்­ளைத்­துணி பொதிகள் தயார் நிலையில் இருப்­ப­தான தகவல் கிடைத்­தது. அத்­துடன் அதில் ஜனா­தி­பதி வேட்­பாளர் மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் வேண்­டுகோள் ஒன்றும் அடங்­கி­யி­ருப்­பதும் தெரிய வந்­தது. இது தேர்தல் சட்ட விதி­மு­றை­க­ளுக்கு முர­ணா­னது. 

மேலும் மேற்­படி துணி கொள்­வ­ன­வுக்­காக எத்­த­கைய கேள்வி மனுக்­கோ­ரலும் இன்றி, மூன்று நிறு­வ­னங்­க­ளிடம் துணி­கொள்­வ­னவு ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தது. ஒரு நிறு­வ­னத்­திற்கு 300 மில்­லியன் ரூபாவும் அடுத்த இரு நிறு­வ­னங்­க­ளுக்கும் தலா 150 மில்­லியன் ரூபா வீதமும் வழங்­கப்­பட்­டுள்­ளன. பௌத்த விகா­ரா­தி­ப­தி­க­ளுடன் இது பற்றி கதைத்து லொறி­களில் கொண்டு செல்லத் தயா­ரான போது நாமும் இதர கண்­கா­ணிப்பு அமைப்­பு­களும் தேர்தல் ஆணை­யா­ளரின் கவ­னத்­திற்குக் கொண்டு சென்றோம். 

அத்­துடன் சட்ட விரோ­த­மான இந்த நட­வ­டிக்­கைக்கு துணை­போக வேண்டாம் என்று விகா­ரா­தி­ப­தி­க­ளுக்கும் அறி­வித்தோம். இதன் விளை­வாக மறுநாள் பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான பிக்­குகள் குழு­வொன்று தேர்தல் ஆணை­யா­ளரின் அலு­வ­ல­கத்­தினுள் அத்­து­மீறிப் பிர­வே­சித்து, ஆணை­யா­ளருக்கு அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ளனர். என்­ஜி­யோக்கள் போடு­கின்ற தாளங்­க­ளுக்­கெல்லாம் ஆடக்­கூ­டாது, இது பௌத்த சாச­னத்­திற்­குண்­டான ஒரு புண்­ணிய பணி. இதற்கு தடை விதிக்­காது விநி­யோ­கிக்க அனு­மதி வழங்க வேண்டும் என்று அச்­சு­றுத்­த­லோடு அழுத்தம் கொடுத்­துள்ளனர். 

இதற்கு தேர்தல் ஆணை­யாளர் "சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கைகள் எத­னையும் எந்­த­வ­கை­யிலும் அனு­ம­தியேன்" என்று துணிச்­ச­லுடன் பதி­ல­ளித்தார். இதனால் ஒரு சில விகா­ரைகள் இதனைப் பெறாது நிரா­க­ரித்­தன. மற்றும் சில விகா­ரைகள் வாரி­ய­ணைத்துப் பெற்­றுக்­கொண்­டன. பெல்லன் வில, களனி போன்ற பெரிய  விகா­ரைகள் நிரா­க­ரித்த விகா­ரை­களில் குறிப்­பி­டத்­தக்­க­ன­வாகும். வடி­னா­பஹ சோமா­னந்த தேரர், பத்­தே­கம சமி­த­தேரர் போன்­ற­வர்கள் சீலத்­துணி விநி­யோ­கிப்­பதில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­ட­வர்­களில் குறிப்­பி­டத்­தக்­கோ­ராவர். 

யாருக்­காக யார் யாரெல்லாம் துணிந்து செயலில் இறங்­கி­னார்களோ அவர்களுள் இன்று சிறையில் தனித்து வாடு­வது லலித் வீர­துங்­கவும் அனு­ஷ­பெல்­பி­ட­வும்தான். இலங்கை வர­லாற்றில் மிகவும் ஊன்றிப் பதி­யப்­படும் நீதி­மன்றத் தீர்ப்பொன்­றாக இது அமைந்து விட்­டது. அர­சியல் மோச­டிக்­கா­ரர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­துவோம் என்று ஆட்சி அமைத்த  இந்த  அரசு பாதிப் பதவிக் காலத்தில் மோசடிக் குற்­றச்­சாட்டில் முதன் முத­லாக சிறைக்கு அனுப்­பப்பட்­ட­வர்கள்  இவர்கள் தான்.  அநி­யாயக்காரர்கள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும் என்று எதிர்­பார்த்­த­வர்­களின் வாய்க்கு  இனிப்­பா­கவும் மஹிந்த அணி­யி­னரின் வயிற்றில் புளி­யா­கவும் அமைந்­துள்­ளது.  மஹிந்த உட்­பட அவர் சார்ந்தோர்  இதனை அர­சியல் பழி­வாங்கல் என்று உல­குக்கு காட்ட முயன்­றாலும் இது சட்­டத்தின் – நீதி­யின்­பிடி என்­பதை  நடு­நி­லையில் சிந்­திப்போர் உணர்ந்­துள்­ளனர்.

அர­சியல் அதி­கா­ரத்­துக்கு வந்தால் காவல் துறையைக்  கையில் போட்­டுக்­கொள்­ளலாம்;  சட்­டத்தில் இருந்து தப்­பித்துக் கொள்­ளலாம் என்ற அநா­க­ரிக கலா­சா­ரத்­துக்கும் இந்தத் தீர்ப்பு சாவு­மணி அடித்­துள்­ளது. அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும்   ஓர் எச்­ச­ரிக்கை  விடுக்கப் பட்­டுள்­ளது. அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு அடி­மைப்­பட்டு  அவர்­களால் பணிக்­கப்­படும் சட்ட விரோத செயற்­பா­டு­களில் ஈடு­படும் நிர்­வா­கி­க­ளுக்கும் இது நல்­ல­தொரு பாட­மாகும்.

வழக்­குகள் இழுத்­த­டித்­துக்­கொண்டு காலம் கடத்­து­வதை விடுத்து இப்­போது அவ­சர அவ­ச­ர­மாக விசா­ரிக்­கப்­பட்டு தீர்ப்பு வழங்கும் முறைமை  வர­வேற்­கத்­தக்­க­தாகும். சில சமயம் சட்டம் சரி­யான பாதையில் பய­ணிக்க அண்­மையில் நீதி­ய­மைச்சில் ஏற்­பட்ட மாற்­றமும் ஒரு கார­ண­மென்ற  ஊகமும்  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.   

 அதே நேரம் நாமல் ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ,  மகிந்­தா­னந்த  அளுத்­க­மகே, ஜொன்ஸ்டன்  பெர்­னாண்டோ  உட்­பட முன்னாள் அரசின் உயர் மட்­டத்­தினர்  பல­ருக்கும்  எதி­ரான வழக்­கு­களும் விரைவில் விசா­ர­ணைக்கு  எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவையும் துரி­த­மாக  விசா­ரிக்­கப்­பட்டு அவ­ச­ர­மாக  தீர்ப்­பு­களும் வழங்­கப்­ப­டு­மென்று எதிர்­பார்க்க முடி­கி­றது.  

இதற்கிடையில், அர­சாங்­கத்தின்  செயற்­பா­டுகள் குறித்து விரக்­தி­ய­டைந்­துள்ள  ஆளுந்­த­ரப்­பி­லுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த  அமைச்­சர்கள், பிர­தி­ய­மைச்­சர்கள் அடங்­கிய குழு ஒன்று  கடந்த  வியாழக் கிழமை ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளது. அதன்­போது, கள்­வர்கள்  மற்றும் ஊழல் மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கு  எதி­ராக உரிய சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். அதற்­கான சகல  ஒழுங்­கு­க­ளையும் அரசு  மேற்­கொண்டு வரு­கி­றது.  அதனால் பதற்­ற­ம­டை­யாமல்  பொறு­மை­யுடன்  செயற்­ப­டுங்கள்  என்று ஜனா­தி­பதி  தம்மைச் சந்­தித்த குழு­வி­ன­ரிடம்  தெரி­வித்­துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த சுசில் பிரேம் ஜயந்த, அனுர பிரி­ய­தர்ஷ ன யாப்பா, நிமல் லான்ஸா, டீ. பீ. ஏக்­க­நா­யக்க, துலிப் விஜே­சே­கர, சுசந்த புஞ்சி நிலமே உள்­ளிட்ட குழு­வி­னரே ஜனா­தி­ப­தியைச் சந்­தித்­துள்­ளனர். அதன்­போது உரிய சந்­தர்ப்­பத்தில் அரசை விட்டு வெளி­யேறப் போவ­தாக, தீர்­மா­ன­மொன்றை  எடுத்­தி­ருப்­ப­தா­க  ஜனா­தி­ப­தி­யிடம்  தெரி­வித்­த­போதே  ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு  இவர்­க­ளுக்கு  ஆறுதல்  கூறி­யுள்ளார். அதன்­போது அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்கள் பற்­றியும் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். 

தேர்தல் வாக்­கு­று­தி­களில் மற்­றொரு பிர­தான அம்­ச­மான ஏறிக்­கொண்டு  போகும் பொரு­ளா­தார சுமையைக் குறைப்­ப­தாகும்.  கடந்த ஆட்­சி­யாளர் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில்  விட்ட பிழை­க­ளையே  ஈடு செய்து கொண்­டி­ருப்­ப­தா­கவும்,  அவர்­களால் சுமக்க முடி­யாத அளவு ஏற்­றப்­பட்­டுள்ள கடன் பாரத்தை சிறுகச் சிறுக விடு­விப்­ப­தா­கவும் அரசு இரண்டு வரு­டங்­க­ளாகக் கூறிக் கொண்டு வரு­கி­றது. மேற்­படி நீதித்­துறை மாற்றம் போன்று இத­னையும் சீர் செய்­வார்­க­ளே­யானால் தேர்தல் கால வாக்­கு­று­தியில்   பிர­தா­ன­மா­ன­தொன்று நிறை­வேற்­றப்­ப­டு­வ­தாக அமையும். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.  

தேர்தல் வாக்­கு­று­தி­களில் அடுத்த கட்­டத்தில் இருப்­பது சிறு­பான்­மை­யி­ன­ருக்­குள்ள பிரச்­சி­னை­யாகும். இனப் பிரச்­சினை தீர்வு ஒரு புற­மி­ருக்க, பேரின கடும்­போக்கு பெளத்த பிக்­கு­க­ளாலும் பேரின கடும்­போக்கு அமைப்­பு­க­ளாலும் சிறு­பான்­மை­யினர் அடக்கி ஒடுக்­கப்­பட்டு அடி­மை­க­ளாக வைத்­தி­ருக்க முயலும் நட­வ­டிக்­கைகள் பெரும் அச்­சு­றுத்­த­லா­கவே உள்­ளது. குறிப்­பாக அண்­மைக்­கா­ல­மாக முஸ்­லிம்கள் மீது இவர்­க­ளது கழுகுப் பார்வை விழுந்­தி­ருக்­கி­றது.

இத்­த­கைய கடும்­போக்­கா­ளர்கள் சட்­டத்தைக் கையி­லெ­டுத்­துக்­கொண்டு, வெள்­ளைக்­காரன் ஆட்­டுத்­தோ­லுக்கு இடம் பிடித்த கதையைப் போன்று பௌத்­தர்கள் இல்­லாத தமிழ்,முஸ்லிம் பிர­தே­சங்­களில் புத்தர் சிலையை வைத்­து­விட்டு அப்­பி­ர­தே­சங்­களை ஆக்­கி­ர­மிக்கும் தந்­தி­ரங்கள் அரங்­கேற்­றப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

அரச ஆவ­ணங்கள் , நீதி­மன்ற பத்­தி­ரங்­க­ளை­யெல்லாம் பகி­ரங்­க­மாகக் கிழித்­தெ­றிந்தும் சிறு­பான்மை குடி­யி­ருப்­பு­களில் எல்லாம் அடா­வ­டித்­த­னங்­க­ளுடன் அட்­ட­காசம் புரிந்­து­கொண்­டுமிருக்­கி­றார்கள். இவர்கள் விட­யத்தில் பாது­காப்புத் துறை­யினர் பக்க சார்­பாக நடக்­கின்­றனர். சட்­டமும் சரி­யாகப் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வ­தாக இல்லை. எனவே அரசும் இந்த விட­யத்­திலும் மூக்கை நுழைத்து நீதி, நேர்­மையை நிலை­நாட்­டு­மே­யானால் சிறு­பான்­மை­யி­னங்கள் நிம்­ம­தி­யாக மூச்­சு­வி­டலாம். தேர்தல் வாக்­கு­று­தியும் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக அரசு திருப்­தி­ய­டை­யலாம். இது அடுத்த பதவிக் காலத்­திற்கும் அர­சுக்கு பக்­க­ப­ல­மாக அமையும்.

இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­ததைத் தொடர்ந்து பத­விக்கு வந்த ஐ.தே.க வும் பின்னர் மாறி­மாறி வந்த ஸ்ரீ .ல.சு.கட்­சியும் காணி, அர­ச­ப­த­விகள், அபி­வி­ருத்தி போன்ற பணி­களில் எல்லாம் பெரும்­பான்­மை­யி­னத்­திற்கு மேசைக்கரண்டியாலும் சிறுபான்மையினங்களுக்கு தேக்கரண்டி அல்லது அதையும் விட அற்ப அளவிலுமே மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே சேவையாற்றி வந்துள்ளன.
எஸ்.டப்ளியூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க முதன் முதலாக இனவாதத்தை முன்வைத்து பதவிக்கு வரும் முறைமையை ஆரம்பித்து வைத்தார். அது மஹிந்த ராஜபக் ஷவால் உச்ச நிலை அடைந்திருந்தது. இந்த நல்லாட்சியிலும் மகிந்த சார்பானவர்களால் இதுதொடர்வதை உணர முடிகிறது.

எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற பேராசையில், அரசின் நடவடிக்கைகளை இனவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடியவாறு பேரின மக்களை திசைதிருப்பும் காரியம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
புதிய அரசியல் யாப்பிற்கும் இதே சாயம் பூசப்பட்டிருக்கிறது. குற்றமிழைத்துள்ள அரசியல் வாதிகள், இராணுவ வீரர்கள் தண்டிக்கும் விடயத்திலும் கூட்டு எதிரணியினர் இதே பல்லவியைப் பாடிக்கொண்டிருக் கின்றனர். இதனால் அரசுக்கு பணிகளைத் தொடர முடியாது தடங்கல்களையே விளைவித்துக் கொண்டிருக்கின்றனர். 

சைட்டத்தை முன்வைத்து, வைத்தியர்கள், பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டம், அரச ஊழியர்களின் வேலை நிறுத்தம் என்றெல்லாம் நெருக்கடிகளைக் கொடுக்கும் நிலை தொடர்கிறது. இந்த விடயத்தில் பெற்றோலிய ஊழியர் வேலை நிறுத்தத்தில் அரசு துணிந்து செயற்பட்டது போன்று நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் நாட்டில் நல்லாட்சியை நிலவச் செய்யலாம். எனவே நீதித்துறையில் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கை போன்று பயணம் நீதி நேர்மையுடன் தொடருமானால் மக்களின் எதிர்பார்ப்பு கைகூடும். நாட்டிலும் நல்லாட்சி மலரும்.