Verified Web

ரோஹிங்யர்களை கைவிடுவதுதான் இந்தியாவின் அறமா

2017-09-13 17:32:36 Administrator

ஷிவ் விஸ்வநாதன், 
ஜிண்டால் குளோபல் சட்டக்கல்லூரி பேராசிரியர்

இப்­ப­டி­யொரு முடிவை அறி­விக்க, இதை­விட மோச­மான ஒரு நேரம் இருக்க முடி­யாது. மியான்­மரின் ரக்கைன் மாநி­லத்­தி­லி­ருந்து உயிரைக் காப்­பாற்­றிக்­கொள்ள ஆயி­ரக்­க­ணக்­கான ரோஹிங்ய­ முஸ்­லிம்கள் தப்பி ஓடி வந்­து­கொண்­டி­ருக்கும் நேரத்தில், அவர்­களை அடை­யாளம் கண்டு நாடு கடத்தும் முடி­வி­லி­ருந்து பின்­வாங்க முடி­யாது என்று இந்­திய மத்­திய அரசு அறி­வித்­தி­ருக்­கி­றது.

இந்­தியா என்ற கருணை மிக்க நாடு, ஜன­நா­யக நாடு, வந்­தாரை வாழ­வைக்கும் நாடு என்ற சிந்­தனை ஒரே வரியில் மாய­மாக மறைந்­து­விட்­டது. ஏற்­கெ­னவே நொந்­து­கி­டக்கும் ரோஹிங்­கி­யர்­க­ளுக்கு அது பேரி­டி­யாக நெஞ்சில் இறங்­கி­யது. கருணை, அன்பு, அர­வ­ணைப்பு, மற்­ற­வர்கள் மனம் நோகாமல் பேசும் பண்பு ஆகி­ய­வற்­றை­யெல்லாம் கைவிட்ட - இதயம் கல்­லான -அர­சாக மாறி­விட்டோம். தேவை­யில்­லாத அம்­சங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் தரும் அதி­கா­ர ­வர்க்­கமும், எல்­லைப்­புறப் பாது­காப்பை மட்டும் வலுப்­ப­டுத்த நினைக்கும் தேசிய ஆலோ­சனை நிபு­ணர்­களும் உலக அரங்கில் வளர நினைக்கும் இந்­தி­யா­வுக்கு ரோஹிங்­­யர்கள் அவ­சி­ய­மில்லை என்று கரு­தி­யி­ருக்­கலாம்.

வதைக்­கப்­பட்ட சிறு­பான்­மை­யினர்

‘சர்­வ­தேச சமூ­கத்தின் கடைசி மனி­தர்கள்’ என்று காந்தி கூறி­ய­வர்­க­ளுக்கு உதா­ர­ணம்தான் ரோஹிங்­­யர்கள். உல­கி­லேயே அதிகம் வதைக்­கப்­பட்ட சுன்னி பிரிவைச் சேர்ந்த இந்த முஸ்­லிம்கள் ரக்கைன் மாநி­லத்தில் ஆங்­காங்கே சித­றிக்­கி­டக்­கின்­றனர். மியன்மார் இராணு­வத்தால் அடி­மை­க­ளாக நடத்­தப்­ப­டு­கின்­றனர். பெளத்த பேரி­ன­வா­தி­களும் திட்­ட­மிட்டு வதைக்­கின்­றனர். தார்­மிகம், மனித உரி­மைகள் என்ற விழு­மி­யங்­களை, ரோஹிங்­­யர்கள் படும் வேத­னையைக் கண்டும் காணாமல் மெளனம் சாதிப்­பதன் மூலம் நாச­மாக்­கி­விட்டார் ஆங் சான் சூகி.

மியன்மார் இரா­ணுவ ஆட்­சிக்கு எதி­ராக மனித உரி­மைகள் மீட்­கப்­பட அவர் நடத்­திய நீண்ட காலப் போராட்­டம்தான் அவ­ருக்கு ‘அமை­தி’க்­கான நோபல் பரிசைப் பெற்­றுத்­தந்­தது. ரோஹிங்­யர்­க­ளுக்கு ஆத­ர­வாகக் குரல்­கொ­டுத்தால் அர­சி­யல்­ரீ­தி­யாகப் பின்­ன­டைவு ஏற்­படும் என்று அஞ்­சு­கிறார்.

ஒன்று மட்டும் நிச்­சயம் - நேருவின் அரசோ, இந்­திரா காந்தி யின் ஆட்­சியோ இப்­ப­டி­யொரு முடிவை நிச்­சயம் எடுத்­தி­ருக்­காது. அவ்­வி­ரு­வ­ருமே பாதிக்­கப்­பட்ட மக்­களை அர­வ­ணைத்­தார்கள், எல்­லை­களைத் திறந்து வைத்­தார்கள். ஜவா­ஹர்லால் நேரு திபெத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்தார், தலாய் லாமா இங்கே வந்து தங்­கு­வ­தற்குத் துணிச்­ச­லாக அனு­ம­தித்தார். அமெ­ரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன், வெளி­யு­றவு அமைச்சர் ஹென்றி கிஸ்­ஸிங்கர் போன்றோர் மிரட்­டி­ய­போதும் கிழக்கு பாகிஸ்­தா­னி­லி­ருந்து இந்­தி­யா­வுக்குள் வந்த அக­தி­க­ளுக்குப் புக­லிடம் அளித்தார் இந்­திரா.

ரோஹிங்­யர்­களின் வாழ்க்கை பாழாகிப் பல ஆண்­டு­க­ளா­கின்­றன. “மியன்மார் சமூ­கத்தின் ஆதி­கு­டிகள் அல்ல ரோஹிங்­யர்கள், பிற்­கா­லத்தில் குடி­யே­றி­ய­வர்கள்” என்று கூறி அவர்­களை வலுக்­கட்­டா­ய­மாக வெளி­யேற்ற அவர்­கள்­ மீது தாக்­கு­தலை நடத்­து­கி­றது மியன்மார் அரசு. சுயாட்­சியும் கலா­சார அந்­தஸ்தும் அவர்­க­ளுக்கு மறுக்­கப்­பட்­டன. குடி­மக்­க­ளா­வ­தற்­கான அனைத்து உரி­மை­க­ளையும் இழந்­தனர். கல்வி, சுகா­தாரம் மட்டும் மறுக்­கப்­ப­ட­வில்லை, குடி­யு­ரி­மைக்­காகக் கோரிக்கை வைக்கும் உரி­மை­ கூடத் தரப்­ப­ட­வில்லை.

மெது­வான வெளி­யேற்றம்

மியன்மார் இராணு­வத்­தாலும் பௌத்த பேரி­ன­வா­தி­க­ளாலும் நசுக்­கப்­பட்ட ரோஹிங்­யர்கள் இந்­தியா, வங்­க­தே­சத்தை நோக்கி வெளி­யே­றினர். இந்­தி­யாவில் ராஜஸ்தான், ஜம்­மு-­ காஷ்மீர், தமிழ்­நாடு, கேரளம் வரையில் குடி­யே­றி­யுள்­ளனர். சர்­வ­தேசத் தர­கர்கள் பல மடங்கு பணம் பெற்­றுக்­கொண்டு பல ஊர்­க­ளுக்கும் அவர்­களை அனுப்­பு­கின்­றனர். போதை மருந்து கடத்­து­கின்­றனர் என்று கூறி வங்­க­தேசம் ரோஹிங்­யர்கள் வர முடி­யாமல் எல்­லை­களை மூடி­விட்­டது.

மலே­சியா, தாய்­லாந்து, இந்­தோ­னே­சியா நாடு­க­ளுக்குப் பட­கு­களில் செல்ல முயன்­றனர். இஸ்­லா­மிய நாடு­க­ளான அவையும் அனு­தா­ப­மாக இல்லை. ‘அக­தி­களை முடிந்த அளவு ஏற்­றுக்­கொண்­டு­விட்டோம், இனி இட­மில்லை’ என்று கைவி­ரித்­து­விட்­டன. சிரியா அக­தி­க­ளுக்கு சர்­வ­தேசப் பத்­தி­ரி­கை­களின் முதல் பக்­கத்தில் கிடைத்த அனு­தாபம், ரோஹிங்யர்­க­ளுக்குக் கிடைக்­க­வில்லை.

ரோஹிங்­­யர்கள் பயங்­க­ர­வா­திகள் என்ற பிரச்­சாரம் ஓய வேண்டும் என்று பாப்­பாண்­டவர் பிரான்சிஸ் விடுத்த வேண்­டு­கோளை யாரும் பொருட்­ப­டுத்­த­வில்லை. அன்னை தெரே­சாவின் கரு­ணையும் தலைமைப் பண்பும் அர­சுக்கு இல்லை. அவர் இருந்­தி­ருந்தால் ரோஹிங்­யர்­களை அர­வ­ணைத்­தி­ருப்பார். இன அழிப்பைச் சந்­திக்கும் இத்­த­கைய எளிய மக்­களின் வாழ்க்­கையைத் தீர்­மா­னிப்­ப­வர்கள் அதி­கா­ரி­க­ளா­கத்தான் இருக்­கின்­றனர். அக­திகள் என்றால் அவர்கள் அர­வ­ணைப்­புக்கு உரி­ய­வர்கள்.

ஆனால், சட்­ட­வி­ரோதக் குடி­யே­றிகள் என்று முத்­திரை குத்­தி­விட்டால், அவர்­களை எப்­படி வேண்­டு­மா­னாலும் அலைக்­க­ழிக்­கலாம். முறை­சாராப் பொரு­ளா­தா­ரத்தில் கொத்­த­டி­மை­க­ளா­கத்தான் அக­திகள் நடத்­தப்­ப­டு­கின்­றனர். ரோஹிங்­யர்கள் சட்­ட­வி­ரோதக் குடி­யே­றிகள் என்­பதில் இணை­ய­மைச்சர் கிரண் ரிஜிஜு உறு­தி­யாக இருக்­கிறார். அவர்கள் இங்கே வாழ்­வ­தற்கு அடிப்­ப­டையே இல்லை என்­கிறார். மனி­தா­பி­மானச் சட்­டப்­ப­டியும் ஐ.நா. சபையின் மாநா­டுகள் எடுத்த முடி­வு­க­ளின்­ப­டியும் இந்­திய அரசின் நிலை சரி­யா­ன­து­தானா என்ற கேள்வி எழு­கி­றது.

ரோஹிங்­­யர்­களும் மனி­தர்­கள் தான்!

எப்­போதும் தூங்­கிக்­கொண்­டி­ருக்கும் தேசிய மனித உரிமை கள் ஆணையம் இந்த முறை சுறு­சு­றுப்­பாகி, ‘ரோஹிங்­யர்­களை ஏன் வெளி­யேற்றப் பார்க்­கி­றீர்கள், நான்கு வாரங்­களுக் குள் பதில் அளி­யுங்கள்’ என்று இந்­திய அரசைக் கேட்­டி­ருக்­கி­றது. “அடிப்­படை மனித உரி­மைகள் என்­பவை எல்­லோ­ருக்கும் பொது­வா­னவை. இந்­தியக் குடி­மக்­க­ளாக இருந்­தாலும் இல்லாவிட்­டாலும் உரி­மைகள் உண்டு” என்று உச்ச நீதி­மன்றம் கூறி­யி­ருப்­பதை மனித உரி­மைகள் ஆணையம் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றது.

இந்த அறி­வு­ரை­களும் வேண்டு­கோள்­களும் இப்­போ­தைய அதி­கா­ர­வர்க்­கத்­திடம் செல்­லு­ப­டி­யா­காது. அது நாட்டின் பாது­காப்பு, பயங்­க­ர­வாத ஆபத்து, சட்­டம்-­, ஒ­ழுங்குப் பிரச்­சினை ஆகி­ய­வற்­றைத்தான் ஆத­ர­வற்ற மக்கள் விஷ­யத்­திலும் முக்­கி­யத்­துவம் தந்து பேசும். ரோஹிங்­யர்கள் வெளி­நாட்­ட­வர்கள் என்­பதில் சந்­தேகம் இல்லை. ஆனால், அவர்­களும் மனி­தர்­கள்தான் என்று மனித உரி­மைகள் ஆணையம் சுட்டிக் காட்­டி­யி­ருக்­கி­றது.

ரோஹிங்­யர்­களின் வாழ்க்கை மிகவும் பரி­தா­ப­க­ர­மா­கி­விட்­டது. அவர்கள் மியான்­ம­ருக்குத் திரும்­பினால் உயிர் பிழைத்­தி­ருப்­பதே நிச்­சயம் இல்லை, அப்­ப­டியே உயி­ரோடு இருக்க முடிந்­தாலும் வதை­ப­டாமல் இருக்க முடி­யாது. இந்­தி­யாவை எதிர்­கொண்­டி­ருப்­பது தார்­மிகப் பிரச்­சினை. குடி­யு­ரிமை, சுதந்­திரம் என்றால் என்­ன­வென்று அது புரிந்­து­கொண்­டி­ருக்­கி­றது என்­பது தெரிய வேண்டும். ரோஹிங்­­யர்­களை நாம் இப்­போது கைவிட்டால், அக­தி­க­ளுக்கு நாம்தான் புக­லிடம் என்ற கொள்கையைக் கைவிட்டோம் என்­பதே நிலைக்கும்.

பார்சிகள், திபெத்தியர்கள், ஆப்கானிஸ்தானியர், யூதர்கள் என்று பலருக்குப் புகலிடம் அளித்துவிட்டு மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் ரோஹிங்யர்களைத் திருப்பி அனுப்புவது சரியல்ல. அரசின் இந்த முடிவுக்கு எதிராக மக்கள் அமைப்புகள் கிளர்ந்து எழும் என்று நம்புவோம். ஆதரவற்றவர்களுக்குத் துணை நிற்பதே அறம் என்ற தேசத்தின் ஆன்மாவைக் காப்பாற்றுவதே இங்கே முக்கியம். இந்தியா எப்படிப்பட்டதாக இருந்தது என்பதே இப்போது மாறிக்கொண்டிருக்கிறது. மக்கள் குழுக்கள் இனியும் வாய்மூடி மௌனிகளாக இருக்கப்போகின்றனவா? நம் அனைவருக்குள்ளும் ஒரு ரோஹிங்யர் இருக்கிறார், மறந்துவிடக் கூடாது.
 
நன்றி: ‘தி இந்து’