Verified Web

இனச்சுத்திகரிப்பை நியாயப்படுத்தும் சூகி

2017-09-09 14:50:15 Administrator

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் முழு உலகையுமே கொதிப்படையச் செய்துள்ளன. கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் அங்கு இடம்பெற்றுவரும் வன்முறைகளால் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 125000 பேர் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு வெளியேறும் மக்களைக் கூட மியன்மார் இராணுவத்தினர் துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்வதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இம் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான வீடுகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. 

ஜனநாயகம் பற்றியும் மனித உரிமைகள் பற்றியும் உரத்துப் பேசும் இந்த நவீன உலகில்தான் இந்த இனச் சுத்திகரிப்பு பட்டப்பகலில் அரங்கேறுகிறது என்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாகவுள்ளது. அதுவும் அமைதியின் சின்னமென்றும் மனித உரிமைப் போராளி என்றும் வர்ணிக்கப்படுகின்ற அமைதிக்கான நோபல் பரிசை சென்ற ஆங் சாங் சூகி எனும் பெண்ணைத் தலைவராகக் கொண்ட அரசாங்கத்தினால் தான் இந்த அட்டூழியங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன என்பதும் நம்புவதற்குக் கஷ்டமான ஒன்றாகவே தெரிகிறது. 

இதனால்தான் ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை மீளப் பெற வேண்டும் எனும் கோரிக்கைகள் சர்வதேச ரீதியாக எழுந்துள்ளன. உலகின் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதற்காக உலகளவில் கையெழுத்து வேட்டைகளும் இடம்பெற்று வருகின்றன.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக மியன்மாரில் ரோஹிங்யர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்ற போதிலும் இது தொடர்பில் ஆங் சாங் சூகி நீண்ட மௌனத்தையே கடைப்பிடித்து வந்தார். கடந்த ஏப்ரலில் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், மியன்மாரில் நடப்பதை தான் இனச் சுத்திகரிப்பாக கருதவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். 

முஸ்லிம்கள் தொடர்பில் ஆங் சாங் சூகி மிகவும் எதிர்மறையான நிலைப்பாடுகளையே கொண்டுள்ளார் என்பதற்கு கடந்த ஒக்டோபரில் அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தனது கட்சி சார்பில் களமிறக்கிய 1151 வேட்பாளர்களில் ஒரு முஸ்லிமைக் கூட உள்ளடக்கவில்லை என்பது மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

சில தினங்களுக்கு முன்னர் ஆங் சாங் சூகியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட துருக்கி அதிபர் அர்துகான் ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் நீதியாக நடந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். தாம் ரோஹிங்யா விடயத்தில் அக்கறை கொண்டுள்ளதாக இதன்போது சூகி அர்துகானிடம் குறிப்பிட்டிருந்தார். எனினும் அவர் அர்துகானிடம் கூறியது பொய் என்பதை நேற்று முன்தினம் இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது தெரிவித்த கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

ராக்கைன் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் தமது நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு வழங்குவது மகிழ்ச்சியளிப்பதாக சூகி குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பை சூகி தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என சித்திரிப்பது உறுதியாகிறது. இதன் மூலம் அவர் இந்த இனப்படுகொலைகளை பகிரங்கமாக நியாயப்படுத்த முனைந்துள்ளார்.

அந்த வகையில் ஆங் சாங் சூகியின் உண்மை முகம் தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது. அவர் அமைதிக்கான நோபல் பரிசை தொடர்ந்தும் தன் வசம் வைத்திருப்பதற்கும் அப் பெயரைத் தாங்குவதற்கும் தகுதியிழந்து விட்டார் என்பது நிரூபணமாகியுள்ளது.

சர்வதேச சமூகம் மியன்மார் அரசாங்கம் மீது உச்சபட்ச அழுத்தத்தை பிரயோகிப்பதற்கான காலம் கனிந்துவிட்டது. எனினும் துருக்கி அதிபரும் மனிதாபிமானத்தின் காவலாளியுமான அர்துகானுக்கு இருக்கும் தைரியமும் முதுகெலும்பும் ரோஹிங்யா விடயத்தில் வேறு எவருக்கும் இல்லாமல் போய்விட்டது என்பதுதான் கவலைக்குரியது.

தனது மனிதாபிமானத்தின் மூலம் ரோஹிங்யா மக்களை மாத்திரமின்றி முழு உலக முஸ்லிம்களையும் நெகிழச் செய்த அர்துகானுக்கு எமது பாராட்டுக்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.