Verified Web

வரலாற்றில் தடம்பதித்த மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர்

2017-09-05 11:33:12 Administrator

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்­வரின் மறை­வா­னது இலங்கை முஸ்லிம் சமூ­கத்தில் மாத்­தி­ர­மன்றி முழு நாட்டு மக்­க­ளுக்­குமே பாரிய இழப்­பையே தோற்­று­வித்­துள்­ளது என்­பதில் மாற்றுக் கருத்­தி­ருக்க முடி­யாது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­பிட்­டுள்­ளதைப் போன்று முஸ்லிம் தலைவர் என்­பதைத் தாண்டி சகல இன மக்­க­ளுக்­கு­மான தலை­வ­ரா­கவே அஸ்வர் நோக்­கப்­பட்டார். அந்த வகையில் அவ­ரது இழப்பு தேசிய ரீதியில் பாரிய வெற்­றி­டத்தை தோற்­று­வித்­துள்­ளது எனலாம்.

அஸ்வர் அர­சி­யல்­வாதி என்­ப­தற்கு அப்பால் சிறந்த ஆசி­ரி­ய­ராக, ஊட­க­வி­ய­லா­ள­ராக, பேச்­சா­ள­ராக , மொழி­பெ­யர்ப்­பா­ள­ராக, கிரிக்கட் வர்­ண­னை­யா­ள­ராக, எழுத்­தா­ள­ராக, கலை­ஞ­ராக, சமூக சேவ­க­ராக, வர­லாற்­றாய்­வா­ள­ராக என பன்­முக ஆளுமை கொண்ட மனி­த­ரா­கவே நம்­மத்­தியில் வாழ்ந்து விட்டுச் சென்­றி­ருக்­கிறார்.

ஐக்­கிய தேசியக் கட்சி மூல­மா­கவும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு மூல­மா­கவும் பாரா­ளு­மன்­றத்தில் அங்­கத்­துவம் வகித்த அவர் தனது ஆளுமை மற்றும் செல்­வாக்கு மூல­மாக முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஆற்­றிய பணிகள் மகத்­தா­னவை. குறிப்­பாக முஸ்லிம் சமூகம் சார்ந்த எந்­த­வொரு பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் பாரா­ளு­மன்­றத்தில் உரத்துக் குரல் கொடுப்­பதில் அவ­ருக்கு நிகர் அவ­ரே­யாவார். அதிலும் அல்­குர்ஆன், ஹதீஸ் வச­னங்­களை தனது உரை­களின் போது பாரா­ளு­மன்­றத்தில் மேற்­கோள்­காட்டி உரை­யாற்­று­வதன் மூலம் அவர் இஸ்­லாத்தின் செய்­தி­களை உயர் சபையில் எடுத்துக் கூறு­கின்ற தஃ வா பணி­யையும் மேற்­கொண்டார் என்­பதை இந்த இடத்தில் குறிப்­பிட்டுக் கூற வேண்டும்.

மர்ஹூம் அஸ்வர் இந்த நாட்­டி­லுள்ள சகல ஊட­கங்­க­ளு­டனும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­டனும் இன மத மொழி வேறு­பா­டு­களைக் கடந்து சிறந்த உறவைக் கொண்­டி­ருந்தார். குறிப்­பாக முஸ்லிம் ஊட­கங்­க­ளு­டனும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­டனும் அவர் தின­சரி உற­வா­டு­ப­வ­ரா­கவும் ஆலோ­ச­னைகள் அறி­வு­ரைகள் வழங்­கு­ப­வ­ரா­கவும் திகழ்ந்தார். அதனை நாம் நன்­றி­யுடன் இந்த இடத்தில் நினைவு கூரு­கிறோம்.
பலஸ்­தீன மக்­களின் போராட்­டத்­திற்­காக என்­றென்றும் துணிந்து குரல் கொடுத்து வந்த அவர், இஸ்­ரேலின் அட்­டூ­ழி­யங்­களை கார­சா­ர­மாக விமர்­சிப்­ப­வ­ரா­கவும் விளங்­கினார். இறு­தி­யாக அவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யிலும் கூட பலஸ்­தீன தூது­வரின் இல்­லத்தில் நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்து கொண்­ட­துடன் மீண்டும் அங்­கி­ருந்து வைத்­தி­ய­சா­லைக்கே சென்றார். அந்­த­ளவு தூரம் அவர் தனது இறுதிக் கால கட்­டத்­திலும் பலஸ்­தீ­னையும் அல் அக்­ஸா­வையும் நேசிப்­ப­வ­ராக விளங்­கினார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைப் பொறுத்­த­வரை அவர் ஓர் ஆசா­னா­கவே மதிக்­கப்­பட்டார். பாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­டளைச் சட்­டங்­களை அக்­கு­வேறு ஆணி வேறாகப் படித்து வைத்­தி­ருந்த அவர் சபா­நா­ய­கர்­க­ளுக்கு கூட அது தொடர்பில் பாடம் எடுப்­ப­வ­ராக விளங்­கினார்.

அஸ்வர் ஓர் நட­மாடும் கலைக்­க­ளஞ்­சி­ய­மாகத் திகழ்ந்தார். கடந்த கால வர­லாற்று நிகழ்­வுகள் தொடர்பில் அவர் மிகச் சிறந்த ஞாபக சக்தி கொண்­ட­வ­ரா­கவும் அவற்றை ஆவ­ணங்கள் வடிவில் பேணிப் பாது­காப்­ப­வ­ரா­கவும் அவர் விளங்­கினார்.

பத­வி­க­ளுக்­கா­கவும் சலு­கை­க­ளுக்­கா­கவும் விலை­போகும் சம­கால முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு மத்­தியில் கறை­ப­டி­யாத அர­சி­யல்­வா­தி­யாக அஸ்வர் விளங்­கினார். தனக்கு கிடைத்த அர­சியல் அதி­காரம் மூல­மாக மக்­க­ளுக்கு சேவை செய்­வ­தையே அவர் குறி­யாகக் கொண்­டி­ருந்தார். குறிப்­பாக யாராலும் கண்டு கொள்­ளப்­ப­டாத, உரிய முறையில் உப­ச­ரிக்­கப்­ப­டாத கலை­ஞர்­களை இனம் கண்டு 'வாழ்­வோரை வாழ்த்­துவோம்' நிகழ்ச்சித் திட்டம் ஊடாக அவர் முன்­னெ­டுத்த பணி வர­லாற்றில் பதி­யப்­பட வேண்­டி­ய­தாகும். அத்­துடன் மீலாத் விழாக்கள் மூல­மாக அவ்­வப்­பி­ர­தேச முஸ்­லிம்­களின் வர­லாற்றை நூல் வடிவில் கொண்டு வர அவர் வழங்­கிய உத­விகள் மறக்­கப்­பட முடி­யா­தவை. அவ­ருக்குப் பின்னர் இந்த முக்­கிய பணி­களை எவரும் முன்­னெ­டுக்­க­வில்லை என்­பதும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

இறுதிக் கால கட்­டத்தில் அவர் எடுத்த அர­சியல் நிலைப்­பாடு பெரும்­பான்­மை­யான இலங்கை முஸ்­லிம்­களை அதி­ருப்­திக்­குள்­ளாக்­கு­வ­தா­கவே இருந்­தது. எனினும் அவர் தான் கொண்ட கொள்­கை­யி­லேயே இறு­தி­வரை உறு­தி­யா­க­வி­ருந்தார். இதனால் மர­ணத்தின் பின்­னரும் கூட சிலர் சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக அவ­ரது அர­சியல் நிலைப்­பாட்டை விமர்­சிப்­பதை காண முடி­கி­றது. இது கண்­டிப்­பாக தவிர்க்­கப்­பட வேண்­டி­ய­தாகும்.  அவ­ரது அர­சியல் நிலைப்­பா­டுகள் தொடர்பில் எமக்கு மாற்றுக் கருத்­துகள் இருக்க முடியும். அதற்­காக அவ­ரது ஒட்­டு­மொத்த சேவை­க­ளையும் கடந்த கால வர­லா­று­க­ளையும் மூடி மறைப்­ப­தற்கு இடமளிக்க முடியாது. 

அந்த வகையில் மர்ஹூம் அஸ்வர் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆற்றிய பணிகளும் அவரது வரலாறும் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். இன்றேல் இளம் தலைமுறையினர் அவர் தொடர்பில் தவறான புரிதலைக் கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது போய்விடும். இதுவிடயத்தில் முஸ்லிம் தலைமைகள் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அஸ்வர் அவர்களின் பாவங்களை மன்னித்து அன்னாருக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக.