Verified Web

இறுதி நேரத்தில் ஏமாற்றப்படும் யாத்திரிகர்கள்

24 days ago Administrator

இலங்கையிலிருந்து இம்முறை புனித ஹஜ் யாத்திரைக்காக செல்லவிருந்த 35 யாத்திரிகர்கள்  கடைசி நேரத்தில் அங்கு செல்ல முடியாத துரதிஷ்ட நிலை தோன்றியுள்ளது. குறித்த யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதாக உறுதிமொழியளித்து பணத்தையும் பெற்றிருந்த முகவர் நிலையம் ஒன்றின் செயற்பாட்டினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரைக்குச் செல்வதற்கான விசா கிடைத்துள்ள போதிலும் விமான டிக்கட்டினைப் பதிவு செய்வதில் குறித்த முகவர் நிறுவனம் அசமந்தமாக நடந்து கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுள்ளது.

விமான நிலையத்தில் வைத்து டிக்கட்டுக்கள் கையளிக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும் அங்கு சென்றபோதுதான் தாம் ஏமாற்றப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட யாத்திரிகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹஜ் யாத்திரைக்கு சகல ஏற்பாடுகளையும் செய்து வீடுகளிலிருந்து விடை பெற்று வந்த பின்னர் இறுதி நேரத்தில் யாத்திரைக்குச் செல்ல முடியாது ஏமாற்றத்தைச் சந்திக்கின்ற நிலை கடந்த சில வருடங்களாக குறிப்பிட்ட தொகுதியினருக்கு நேர்ந்து வருகின்றமை கவலைக்குரியதாகும்.

முகவர் நிறுவனங்கள் யாத்திரிகர்களின் நலன்களைப் புறந்தள்ளி பணத்தை மாத்திரமே குறியாகக் கொண்டு செயற்படுவதே இதற்குக் காரணமாகும்.

இது விடயமாக சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முஸ்லிம் சமய விவகார அமைச்சும் ஹஜ் குழுவும் அறிவித்துள்ளன. 

குறித்த யாத்திரிகர்களை சவூதி அரேபிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் எப்படியேனும் ஹஜ் யாத்திரைக்கு அனுப்பி வைப்பதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சர் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் மூலம் குறித்த யாத்திரிகர்கள் உளவியல் ரீதியாக கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். தமது வீடுகளுக்குக் கூடத் திரும்பிச் செல்ல முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

தமது வாழ்நாளில் ஒரு தடவையேனும் அந்த இறை இல்லத்தை தரிசிக்க வேண்டும் என்கின்ற மக்களின் ஆர்வத்தை தமது பணத்தாசைகளுக்காக துஷ்பிரயோகம் செய்கின்ற அவர்களது அமல்களில் விளையாடுகின்ற இவ்வாறான செயற்பாடுகள் வருடா வருடம் தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது. 

இவ்வாறான முகவர் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும். அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்காக இவ்வாறான முகவர்களைப் பாதுகாப்பதற்கு எவரும் முற்பட இடமளிக்கக் கூடாது. 

எனவே அரச ஹஜ் குழு, சகல யாத்திரிகர்களும் உரிய காலத்திற்குள் மக்காவைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்றை வகுக்க வேண்டும். இன்றேல் இவ்வாறான சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகிவிடும்.