Verified Web

இனசம்காரத்தில் சிக்குண்டுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள்

2017-08-30 12:53:32 Administrator

மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் வாழும் ரோஹிங்ய அகதிகள் மீது அந்நாட்டு இராணுவத்தினரும் ஆயுதக் குழுவினரும் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகள் இரத்தத்தையே உறைய வைப்பதாக அமைந்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் அங்கு இடம்பெறும் கொலைவெறித் தாக்குதல்களில் சிக்கி சிறுவர்கள், பெண்கள் அடங்கலாக நூற்றுக்கும் அதிகமானோர் இறந்து கிடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

தாக்குதல்களிலிருந்து தப்பித்து பங்களாதேஷை நோக்கி நகர்ந்த ஆயிரக்கணக்கான ரோஹிங்ய அகதிகள் ஈவிரக்கமற்ற வகையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பலர் தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளனர். வெட்டுக் காயங்களுக்கு இலக்கான பலர் காயங்களுக்கு சிகிச்சை பெற முடியாது அழுது புலம்பும் காட்சிகள் கண்ணீரை வரவழைக்கின்றன.

கடந்த வருடமும் ராக்கைன் மாநிலத்தில் மியன்மார் இராணுவத்தினரால்  முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் எதிரொலியாக சுமார் 65 ஆயிரம் ரோஹிங்ய முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி பங்-களாதேஷிற்குச் சென்றுள்ளதாக ஐ.நா. அறிக்கைகள் தெரிவித்தன.  தற்போதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறைகள் மியன்மாரின் அரச அதிகாரிகளால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் இது ஒரு அரச பயங்கரவாத செயல் என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஜனநாயகத்தின் காவலராகவும் மனித உரிமைப் போராளியாகவும் சர்வதேச ஊடகங்களால் வர்ணிக்கப்படும் ஆங் சாங் சூகியின் அனுசரணையைப் பெற்ற அரசாங்கமே தற்போது மியன்மாரில் ஆட்சியிலுள்ளது. எனினும் ஆங் சாங் சூகியும் ரோஹிங்யாக்கள் விடயத்தில் கள்ள மௌனம் சாதிப்பதுடன் அவர்களுக்கெதிரான வன்முறைகளை ஆமோதிக்கும் போக்கையும் கடைப்பிடித்து வருகிறார் என்பது சர்வதேச சமூகத்தை விசனிக்கச் செய்துள்ளது.

ரோஹிங்யாக்கள் இந்த உலகில் வாழத் தகுதியற்றவர்களாகவே மியன்மார் அரசினால் கணிக்கப்படுகிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர் கடல் வழியாக உயிர் தப்பிச் சென்ற நூற்றுக்கணக்கான அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பலர் பட்டினியால் உயிர் துறந்தனர். மனிதக் கடத்தல்காரர்களின் கைகளில் சிக்கி அவர்கள் பட்டபாடு முழு உலகையுமே சோகத்தில் ஆழ்த்தியது ஞாபகமிருக்கும்.

அந்த வகையில் ரோஹிங்ய முஸ்லிம்களின் நிம்மதியான வாழ்க்கைக்காக பிரார்த்திக்க வேண்டியதும் அவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டியதும் சர்வதேச முஸ்லிம் உம்மாவின் கடப்பாடாகும்.

துருக்கி தவிர்ந்த  முஸ்லிம் நாடுகள் ரோஹிங்யாக்கள் விடயத்தில் கடைப்பிடிக்கும் மௌனம் கலைக்கப்பட வேண்டும். மியன்மார் அரசு மீது அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.