Verified Web

வாழ்வைத் தொலைத்து நிற்கும் சிரியாவின் சிறுசுகள்

2017-08-22 07:28:45 Administrator

மூலம் : அல் ஜஸீரா

தமிழில் : ஹஸன் இக்பால் 

சொந்த வீடு­களில் இருந்து பல மைல் தூரத்தில் அக­தி­க­ளாக சனத்­திரள் நிரம்பி வழியும் பெய்ரூட் முகாமில் வாழும் சிரியாவின் அகதிச் சிறார்கள் எதிர்­காலம் பற்­றிய கன­வு­களை சிதைத்து விட்டு வெறு­மனே தமது குடும்­பங்­களின் உயிர் நில­வு­கைக்­காக வேலைத்­த­ளங்­களில் வாடி வதங்கும் நிலைமை சொல்­லொணா துயரில் எம்மை ஆழ்த்­து­கி­றது. 

சிரிய அகதிச் சிறார்­களில் பாதிக்கும் சற்றுக் குறை­வான எண்­ணிக்­கை­யா­னோரே கடந்த வருடம் லெபனான் பாட­சா­லை­களில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­களில் 50 வீத­மானோர் தமது ஒன்­ப­தா­வது வய­திலும் மிகு­தி­யினர் பத்­தா­வது வய­திலும் பாட­சாலைக் கல்­வியை இடை­ந­டுவில் கைவிட்டு விடுவர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ஐ.நா. அறிக்கை தெரி­விக்­கின்­றது. 

அகதி முகா­மி­லி­ருந்து பாட­சா­லைக்­கான போக்­கு­வ­ரத்துச் செலவைக் கூட சமா­ளிக்க முடி­யாமல் திண்­டாடும் பெற்றோர் மத்­தியில் சிறார்­களின் எதிர்­காலக் கனவு குதிரைக் கொம்­பா­கவே உள்­ளது.  மேலும் லெபனான் நாட்டின் பாடத்­திட்­டங்­களில் சில பிரெஞ்ச் மற்றும் ஆங்­கில மொழியில் கற்­பிக்­கப்­ப­டு­வதும் சிரிய அகதிச் சிறார்கள் எதிர்­நோக்கும் மற்­று­மொரு சவா­லாகும். அகதிச் சிறார்கள் ஏனைய உள்­நாட்டு பாட­சாலை மாண­வர்­களின் கிண்டலுக்கு, கேலிக்கு உள்­ளா­வதும் சில­வேளை துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தப்­ப­டு­வதும் கூட மிக முக்­கிய தடைக்­கல்­லாக விளங்­கு­கி­றது. இவ்­வா­றான கார­ணி­களைக் கருத்­திற்­கொண்டே ஆண் சிறார்­களை சொற்ப ஊதி­யத்­திற்கு வேலைக்­க­மர்த்தி பெண் பிள்ளைகளை வீட்டில் தம்­முடன் வைத்துக் கொள்ள பெற்றோர் தலைப்­ப­டு­கின்­றனர். 

சிரியா இழந்து வரும் ஆயி­ரக்­க­ணக்­கான இளம் தலை­மு­றை­யி­னரில் ஒரு பானைச் சோற்­றுக்கு ஒரு சோறு பதம் எனும் வித­மாக ஓடே, முஹம்மத் மற்றும் சதாம் ஆகிய மூவரின் தற்­போ­தைய வாழ்­வோட்­டத்தைச் சற்று அல­சுவோம்.   

ஓடே

பெய்­ரூட்டின் புற­நகர்ப் பகு­தியில் அமைக்­கப்­பட்­டுள்ள அகதிச் சிறார்­க­ளுக்­கான பிரத்­தி­யேக பாட­சா­லையில் சிறார்கள் ஆங்­கில நெடுங்­க­ணக்­கினை மனதில் பதிய வைத்துக் கொண்­டி­ருக்கும் தருணம் பதின்ம வயதுச் சிறுவன் திடீ­ரென எழுந்து அறி­விப்­பொன்றைச் செய்­கின்றான். “இனிமேல் நான் பாட­சா­லைக்கு வரப்­போ­வ­தில்லை....... வேலைக்குச் செல்லப் போகிறேன்” என்­ப­தாக இருந்­தது அவ­னது அறி­விப்பு. 

லெப­னானின் உள்­நாட்டு பாட­சா­லைக்கு தகுதி காணும் பொருட்டு அமைக்­கப்­பட்­டுள்ள பிரத்­தி­யேக அக­திகள் பாட­சா­லையில் பயிலும் 12 வயது நிரம்­பிய ஓடே எனும் சிறு­வனின் இந்த அறி­விப்பின் பின்­னணி என்­ன­வா­கத்தான் இருக்க முடியும்? குடும்­பத்தின் வறு­மையைத் தவிர வேறொன்றுமில்லை.

அலெப்போ நகரை விட்டு அக­தி­க­ளாக வெளி­யேறி சுமார் ஒரு வரு­ட­மா­கி­யி­ருக்கும் நிலையில் ஓடேவின் ஐந்து உடன்­பி­றப்­புக்­க­ளு­டனும் வயது முதிர்ந்த பாட்­டியும் பெற்­றோரும் என ஒட்­டு­மொத்த குடும்­பமும் சின்­னஞ்­சிறு கூரையின் கீழே அக­தி­ வாழ்­வெனும் நீரோட்­டத்தில் அடித்துச் செல்­லப்­படும் சரு­காக காலத்தைக் கடத்­து­கின்­றனர்.  

“எனது தந்தை நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­பட்­டவர்.... இன்­சுலின் இன்றி வாழ்ந்­து­விட முடி­யாத நிலை.... எனது வயது முதிர்ந்த பாட்­டியோ உடல்­நிலை பாதிக்­கப்­பட்­டுள்ளார்.... முள்­ளந்­தண்டு முறிந்து சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்ட நிலையில் உயர் கண்­கா­ணிப்பு வேண்டி நிற்­கின்றார்... இவர்­களைக் கவ­னிக்க அதிக பணம் தேவைப்­ப­டு­கின்­றது....” ஓடே எனும் பதின்ம வயது சிறுவன் உதிர்க்கும் பக்­கு­வப்­பட்ட வார்த்­தைகள் இவை. 

“நான் வேலைக்குச் செல்ல வேண்டும்.... நான் மட்­டு­மன்றி எனது குடும்ப உறுப்­பி­னர்கள் அனை­வரும் வேலைக்குச் சென்றால் மாத்­தி­ரமே பசிப்­பிணி களைய வாய்ப்­புண்டு.... குடும்­பத்தின் அன்­றாட தேவைக்­காக நானும் கடனை மீளச் செலுத்­த­வென எனது தந்­தையும் சம்­பா­திக்க வேண்டும்.....” 

ஒரு வரு­டத்­திற்கும் மேலாக செலுத்தி முடிக்­கப்­ப­டாத வீட்டு வாடகை, இதர கடன்கள் என பொறுப்­புக்கள் இம­யமாய் அவர்கள் முன்னே நிற்க பதின்ம வயதுச் சிறுவன் ஓடே ஓடி­யாடி சம்­பா­தித்துக் கொண்­டு­வரும்  சொற்ப ஊதியம் 6 டொலர்கள் (900 ரூபா). அந்தச் சிறு தொகை அற்­பமாய் கரைந்து போகையில் என்­னதான் செய்­திட முடியும், இய­லா­மையில் கையைப் பிசை­வதைத் தவிர. 

இறைச்சிக் கடைகள், பல­ச­ரக்குக் கடைகள், தேநீர் கடைகள் என நிரம்பி வழியும் ஷட்­டிலா நகரில் சிறார்கள் தரை துடைக்­கவும், பொருட்கள் ஏற்றி இறக்­கவும், பாத்­தி­ரங்கள் கழு­வவும் என சொற்ப ஊதி­யத்­திற்கு இல­கு­வாக வேலை தேடிக் கொள்­கின்­றனர். நாளொன்­றுக்கு 12 மணி­நேரம் ஷட்­டிலா நகர சந்­தை­யொன்றில் உழைத்து களைக்கும் இச்­சி­றுவன் ஓடே கண்­களில் தெரி­வ­தென்­னவோ கல்விச் சொப்­ப­னமே! 

“நான் எதிர்­கா­லத்தில் என்­ன­வாக வர வேண்டும் என எனக்கே தெரி­ய­வில்லை.... அதற்கு முன்னே இறந்து விடு­வேனோ? நான் வளர்ந்த பிற­குதான் என்­ன­வாக வேண்டும் என்­பதை தீர்­மா­னிப்பேன்...” சிறு­வனின் கள்­ளங்­க­படம் இல்லாப் பேச்சு நம் நெஞ்சை உருக்­கு­கி­றது. 
குடும்­பத்தின் வறுமை நிலை­யி­னையும் கண­வரின் உடல்­ந­ல­மின்­மை­யையும்  கருத்­திற்­கொண்டே சிறு­வனின் எதிர்­கா­லத்தை அடகு வைத்­துள்­ள­தாக ஓடேவின் தாயார் கண்ணீர் ததும்பக் கூறு­கின்றார். 

“குடும்ப நிலை கருதி ஓடே மட்­டு­மல்ல எனது இளைய மகன்கள் (வயது 7, 10) இரு­வரும் கூட கல்­வியைக் கைவிட்டு வேலைக்கு செல்­கின்­றனர்...உடல்­ந­ல­மின்மை கார­ண­மாக எனது கண­வரால் தொடர்ச்­சி­யான வேலை­யொன்றில் இருக்க முடி­ய­வில்லை....கைக்­கு­ழந்­தையைப் பார்த்துக் கொள்ள வேண்­டி­யி­ருப்­பதால் என்­னாலும் வேலைக்குச் செல்ல இய­ல­வில்லை.....'' 
அவ­ரது கண்கள் இயல்­பா­கவே கண்­ணீரை ஏந்தி நிற்கத் தயா­ரா­கின்­றன. “லெப­னானில் அகதி வாழ்க்கை வாழ்­வ­தென்­பது கொடு­மைதான்..... இருப்­பினும் சிரி­யாவில் யுத்த களத்தில் இரத்தம் சிந்­து­வதைக் காட்­டிலும் இது பர­வா­யில்லை...” 
சிரி­யாவில் தமது இருப்­பிடம் முற்று முழு­தாக அழிக்­கப்­பட்டு விட்­ட­தா­கவும் இறந்த கால வாழ்­வினை மறந்து விட எத்­த­னிப்­ப­தா­கவும் ஓடேவின் தாயார் வெறு­மை­யான பார்­வை­யுடன் கூறினார். 

“ஒன்­றுக்கும் பயப்­படத் தேவை­யில்லை..... வீட்டு வாடகை, கடன்­களை செலுத்தி முடிக்க வேண்டும்...” என்­ப­துவே சிறுவன் ஓடேவின் பொறுப்­பாக இருந்­தது. 

சதாம்

“நான் வளர்ந்­ததும் பல­ச­ரக்குக் கடை முத­லா­ளி­யாக வேண்டும்....”

சிரி­யாவை விட்டு அக­தி­யாக வெளி­யேறி நான்கு வரு­டங்­க­ளாக பல­ச­ரக்கு கடை­யொன்றில் பணி­பு­ரியும் பாடசாலையில் காலடி கூட எடுத்து வைத்திராத சிறு­வனின் கனவு இது­வாக இருப்­பதில் ஆச்­ச­ரி­ய­மில்­லைதான். 

“ஒவ்­வொ­ரு­நாளும் 8 மணிக்கு துயில் எழுந்து கடைக்கு வந்து விடுவேன்... வெற்றுப் பெட்­டி­களை துடைத்துச் சுத்தம் செய்து பொருட்­களை அடுக்கி இறாக்­கையில் வைத்து விடுவேன்.... இரவு எட்டு மணி வரை இதுதான்....” வாரத்­திற்கு அச்­சி­றுவன் பெறும் ஊதியம் 43 டொலர்கள். வீட்டு வாட­கையை செலுத்­தவும் இது போது­மா­ன­தாக இல்லை. 

சதாமின் சுக­வீ­ன­முற்ற தந்­தையால் தொடர்ச்­சி­யாக தொழிலைச் செய்து விட இய­ல­வில்லை. எப்­போ­தா­வது அரு­கி­லுள்ள பள்­ளி­வா­சலைச் சுத்தம் செய்து சிறு­தொகை அன்­ப­ளிப்புப் பணத்­துடன் வீடு வருவார். தாயார் இதய நோயி­னாலும் நீரி­ழிவு நோயி­னாலும் பாதிக்­கப்­பட்­டவர். ஒன்­பது பிள்­ளை­களின் தாய்.

ஐ.நா. உண­வுக்­காக வழங்கும் 189 டொலர்கள் உத­விப்­பணம் குடும்­பத்தின் கால்­வ­யிற்­றை­யேனும் நிறைத்­து­விட போது­மா­ன­தாக இல்லை. “சதாம் கல்வி கற்க வேண்­டிய வயதில் வேலைக்குச் செல்­வதில் எனக்கு வருத்­தமும் ஏமாற்­றமும் இல்­லாமல் இல்­லைதான்.... இருப்­பினும் குடும்பச் செல­வு­களை சிறு­வர்­களின் தலையில் சுமத்­து­வதில் சிறிதும் உடன்­பாடு இல்­லை. .... வேறு தீர்வே இல்­லா­த­போது என்­னதான் செய்­வது?” 

போரினால் இயல்பு வாழ்க்கை முற்­றிலும் பாதிக்­கப்­பட்ட, சிறு­பரா­யத்தின் சிற்­சிறு இன்­பங்­க­ளையும் தொலைத்த சிறுவன் சதாம் அமை­தி­யா­கவே பேசு­கின்றான். 

“எனக்கும் மற்ற சிறு­வர்­க­ளைப்­போல பாட­சாலை செல்ல ஆசைதான்.... சூழ்­நிலை அதற்குத் தயா­ராக இல்லை.... நான் சம்­பா­தித்தே ஆக வேண்டும் எனும் கட்­டாய நிலை.... எனது கடைச் சொந்­தக்­காரர் மிகவும் நல்­லவர்... கடின வேலை எதுவும் எனக்குத் தர மாட்டார்.... அதனால் எனது வேலை இல­கு­வா­கவே உள்­ளது.” உதட்­டோரம் ஏந்­திய புன்­னகை அவ­னது தாழ்வு மனப்­பான்­மையை முற்­றிலும் மறைக்கப் போது­மா­ன­தாக இல்லை. 

“லெப­னானை விட சிரி­யாதான் எனக்கு மிகவும் பிடித்­துள்­ளது... அங்கே எனக்கு நிறைய நண்­பர்கள் இருக்­கின்­றனர்... திரும்பிச் செல்ல ஆசை­யாக இருக்­கின்­றது..... போர்ச் சூழல் விடு­வ­தா­யில்லை...”

சிறுவன் சதாம் மற்றும் அவ­னது குடும்ப உறுப்­பி­னர்கள் என மொத்தம் 11 பேர் தங்­கி­யி­ருப்­ப­தென்­னவோ ஒரு சில சதுர அடி­க­ளி­னுள்­ளேதான்.  

குண்­டுகள் பொழிந்து உயிரைப் போக்­கிய யுத்த களத்தை வெற்றுக் கண்­களால் பார்த்த அனு­பவம் இச்­சி­று­வனின் இதயக் கூட்­டுக்­குள்ளே செல்­ல­ரித்த நூல்­களாய் இன்னும் இருந்து கொண்­டுதான் இருக்­கின்­றது. 

“இங்கும் அமை­தி­யில்லை.... அகதி முகாம்­க­ளி­னுள்ளும் மக்கள் சண்­டை­யிட்டு இரத்தம் சிந்திக் கொண்­டுதான் இருக்­கின்­றனர்....” சிறு­வனின் ஆதங்கம் தொடர்­கி­றது......

முஹம்மத் 

ஷட்­டிலா அகதி முகாம் வளா­கத்தில் குட்­டை­களை தாண்டி, மின்­சாரக் கம்­பி­களில் உர­சா­த­வாறு வெகு இலாவ­க­மாக துள்ளிக் குதித்­தோடிக் கொண்­டி­ருக்கும் குறும்பு நிறைந்த சிறுவன் 12 வயது நிரம்­பிய முஹம்மத். 

“நான் இன்னும் “புக்ரா அஹ்லா” (நாளை இன்னும் அழ­கா­னது) பாட­சா­லையில் படித்துக் கொண்­டுதான் இருக்­கிறேன்.... வேலைக்கு செல்­லாத நேரங்­களில் பாட­சாலை செல்வேன்......”

குறு­கிய படி­களில் ஏறி சிறிது தூரம் தாண்­டி­யதும் அவ­னது குடும்­பத்­தினர் வசிக்கும் அடுக்கு வீட்டுத் தொகுதி வந்­தது. குடும்ப உறுப்­பினர் அறுவர் இரு அறை­களில் வசிக்­கின்­றனர். படுக்­கை­ய­றையே வர­வேற்பு அறை­யா­கவும் சமை­ய­ல­றையே படுக்­கை­ய­றை­யா­கவும் அவ்­வப்­போது இங்கு மாறிக்­கொண்­டி­ருப்­பதில் ஆச்­ச­ரி­ய­மில்லை தான். இரு அறைகள் மாத்­தி­ரமே கொண்ட வீட்டில் நிர்ப்­பந்தம் அதுவே. 

“எனக்கு சிரியா இன்னும் ஞாப­கத்தில் இருக்­கி­றது.... இயல்பு நிலை திரும்பி உடைந்து சிதைந்து போன பாட­சாலை மீள்­நிர்­மாணம் செய்­யப்­பட்டால் நான் திரும்­பவும் செல்வேன்....  போர் நிகழ்­வு­களை நேரில் கண்டேன்.... இப்­போது நினைத்­தாலும் மேனி நடுங்­கு­கி­றது... சரே­லெனச் செல்லும் யுத்த விமா­னங்­களில் சத்தம் இன்னும் செவிப்­ப­றை­களில் ஒலித்துக் கொண்­டுதான் இருக்­கின்­றன... இங்கே முகாமில் நான் பாது­காப்­பாக உணர்­கிறேன்....”

“இவன் இங்கே மிகவும் பாது­காப்­பாக இருக்­கின்றான்.... சிரி­யாவில் இருக்­கும்­போது சிறு சத்தத்திற்கே அச்சத்தால் நடுங்குவான்... மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தான்.... இங்கே மிகவும் சந்தோஷமாக இருக்கின்றான்.... வேலைக்குச் செல்வதுதான் அவனைக் களைப்பூட்டும் விடயமாக உள்ளது... வீட்டு உபகரணப் பொருட்கள் விற்கும் நிறுவனமொன்றில் வேலை செய்கிறான். வாரத்திற்கு 23 டொலர்கள் சம்பாதிக்கின்றான்......” தாயின் வருத்தம் தோய்ந்த குரல்கள் இதயத்தை கனக்கச் செய்கின்றன. 
முறையான கல்வி, வாழிடம் இன்றிய முஹம்மதின் எதிர்காலக் கனவு வெறும் கனவாகத்தான் இருந்து விடுமோ?