Verified Web

முன்மாதிரிமிக்க ஆளுமை பேராசிரியர் தாவுதொக்லு

2017-08-13 07:26:57 Administrator

துருக்கியின் முன்னாள் பிரதமரும் பேராசிரியருமான அஹ்மத் தாவுதொக்லு இலங்கைக்கு மேற்கொண்டுள்ள விஜயமானது இந்நாட்டு முஸ்லிம்களினது கவனத்தை மாத்திரமன்றி சகல இன மக்களினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

துருக்கியின் வெளிவிவகார அமைச்சராக, பிரதமராக மாத்திரமன்றி உலகமே மதிக்கின்ற மிகச் சிறந்த கல்விமானாகவும் பேராசிரியராகவும் அவர் விளங்குகிறார். குறிப்பாக தனது பதவிக் காலத்தில் மனிதாபிமானத்தின் முகவராகவே அவர் ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டார்.

உலகின் எந்தவொரு மூலையில் இயற்கை அனர்த்தமோ அல்லது செயற்கை அனர்த்தமோ நிகழ்ந்தால் முதன் முதலாக அங்கு துருக்கி விமானத்தில் நிவாரண உதவிகளுடன் போய் இறங்குகின்ற தலைவராக இவர் தனது பதவிக் காலத்தில் திகழ்ந்தார்.
காஸாவில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த போதே அச்சமின்றி அங்கு சென்று அந்த மக்களின் துயரத்தில் பங்கெடுத்தார். தனது கண் முன்னே உயிர் துறந்த குழந்தையின் தந்தையைக் கட்டிப் பிடித்து அவர் அழுத காட்சி இன்றுவரை ஊடகங்களில் அவரது மனிதாபிமானத்துக்கான சாட்சியாக இருக்கிறது.

மியன்மாரில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் கடும் அடக்குமுறைகளை எதிர்கொண்ட போது ரோஹிங்யா பிராந்தியத்துக்குச் சென்று அம் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். ரோஹிங்யாவுக்குச் சென்ற முதலாவது வெளிநாட்டு அரச தலைவராக பேராசிரியர் தாவுதொக்லுவே கருதப்படுகிறார்.

பேராசிரியர் தாவுதொக்லு துருக்கியின் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்தபோது சோமாலிய மக்கள் வறுமையாலும் வரட்சியாலும் பட்டினிச்சாவை எதிர்கொண்டிருந்ததைக் கண்டு மனம் வருந்தினார். உடனடியாகவே அங்கு சென்று அவர்களுக்கு உதவியதுடன் அங்கு துருக்கியின் முழு அனுசரணையில் வைத்தியசாலைகளையும் அமைத்துக் கொடுத்தார்.

ஹெயிட்டியில் பாரிய பூகம்பம் நிகழ்ந்தபோது உடடியாக துருக்கியிலிருந்து நிவாரண உதவிகளை விமானங்களில் அனுப்பி வைத்தார். இப்படி அவரது மனிதாபிமான நடவடிக்கைகளை வரலாற்றிலிருந்து பதிவு செய்ய முடியும்.

சிரியா உட்பட மத்திய கிழக்கில் வன்முறைகள் வெடித்த போது மில்லியன் கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைய முற்பட்டனர். அப்போதெல்லாம் பல ஐரோப்பிய நாடுகள் அகதிகளுக்கு தமது கதவுகளை அடைத்தன. ஆனால் துருக்கி அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தது. இன்று துருக்கியில் மாத்திரம்  34 இலட்சம் அகதிகள் வாழ்கிறார்கள். 

அதேபோன்றுதான் தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கின்ற தலைவராக அவர் விளங்குகிறார். ஐ.எஸ். இயக்கத்தை முற்றாக மறுதலித்த அவர் அவ்வியக்கத்துக்கு எதிரான துருக்கியின் நிலைப்பாட்டையும் பகிரங்கமாக அறிவித்தார். 

தனது இலங்கை விஜயத்தின் போது அவர் இலங்கையின் பல் கலாசாரத் தன்மையை பெரிதும் வரவேற்றுப் பேசியதுடன் அதனை இந்த நாட்டு மக்கள் தொடர்ந்தும் கட்டிக்காக்க வேண்டும் என்பதையே தான் பங்கேற்ற சகல கூட்டங்களிலும் வலியுறுத்திப் பேசினார். குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் தம்மைத்தாமே தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது என ஆலோசனை வழங்கிய அவர், ஏனைய இன மக்களுடன் பின்னிப் பிணைந்து இலங்கையர் என்ற அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என்றார்.

கல்வியில் இலங்கை முஸ்லிம்கள் கவனம் செலுத்துவதுடன் மிகச் சிறந்த ஆளுமைகளை உருவாக்க வேண்டும் எனவும் அவர்கள் முழு உலகிலும் இலங்கைக்கு பெருமை சேர்த்துக் கொடுப்பவர்களாக வளர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை முஸ்லிம்கள் கடந்த 1100 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் கட்டிக் காத்துவரும் இஸ்லாமிய பாரம்பரியத்தை எக்காரணங்களுக்காகவும் கைவிட்டுவிடக் கூடாதெனவும் அவர் ஜாமிஆ நளீமியாவில் இடம்பெற்ற சிறப்புரையில் குறிப்பிட்டார்.

அந்த வகையில் பேராசிரியர் தாவுதொக்லுவின் வாழ்க்கை வரலாறும் அவர் துருக்கியில் தலைமைத்துவம் வகித்தபோது அந்நாட்டில் ஏற்பட்ட அபிவிருத்திகளையும் நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். அவர் இலங்கை விஜயத்தின்போது நமக்குச் சொன்ன செய்திகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அவரது வருகையும் அவரது சிந்தனைகளும் நிச்சயம் நமது மக்களில் தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கும் என நம்புகிறோம்.