Verified Web

முஸ்லிம் தனியார் சட்டமும் கைக்கூலியும்

Rauf Zain

அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் சர்வதேச பார்வை சஞ்சிகையின் ஆசிரியராக கடமையாற்றுகிறார். இதுவரை சுமார் 40 நூல்களை வெ ளியிட்டுள்ளதுடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளராகவும் பேச்சாளராகவும் செயற்பட்டு வருகிறார். 

 

2017-08-08 16:43:28 Rauf Zain

சம­கால இலங்கை முஸ்­லிம்கள் எதிர் கொள்ளும் சமூக நெருக்கடி­களில் குடும்ப அமைப்பின் சிதைவும் ஒன்­றாகும். முஸ்லிம் சமூகக் கட்­டு­மா­னத்தில் சீதனம் ஏற்­ப­டுத்தி வரும் தீய விளைவுகளில் ஒன்­றா­கவே இதனைக் கருத முடியும். இப்­பின்­ன­ணியில் சீதனம் எனும் சமூக நோய் ஷரீ­ஆவின் நிழ­லிலும் சமூ­கத்­தளத்திலும் கண்­டிப்­பாக ஒழிக்­கப்­பட வேண்­டிய ஒரு பெரும் சமூகத் தீமை­யாக மாறி­விட்­டது. முதற்­ப­டி­யாக அதன் தாக்­கங்­களைப் பற்­றிய சமூக விழிப்­பு­ணர்வு இன்­றி­ய­மை­யா­தது. 

ஓர் ஆண் தனது மனை­வி­யாக வரப்­போகும் பெண்ணைப் பெற அவ­ளது குடும்­பத்­தி­லி­ருந்து பெருந்­தொகைப் பணத்தை அல்­லது சொத்தை அல்­லது இவற்றில் ஏதேனும் ஒன்றை நிபந்­தனையிட்டுப் பெறு­வதை சீதனம் எனலாம். கைக்­கூலி எனும் இத்­த­கைய சமூகத் தீமை இரு கருத்­துக்­களைக் காட்­டு­கின்­றது. 

01.மார்க்க உணர்வு, உயர்ந்த பண்­பாடு என்­ப­வற்றை விட பணமே திரு­ம­ணத்தைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக உள்­ளது.

02.கைக்­கூலி வாங்­கு­பவன் சமூகப் பொறுப்­பற்ற சுய­ந­லமி எனும் கருத்து உரு­வா­கின்­றது.

இலங்கை முஸ்லிம் சமூ­கத்தில் புரை­யோ­டிப்­போ­யுள்ள சமூகப் பிரச்­சி­னை­களில் சீதனம் மிக முக்­கி­ய­மா­னது. இந்­துக்­க­ளி­ட­மி­ருந்து இக்­க­லா­சாரம் முஸ்­லிம்­க­ளி­டையே பர­வி­யி­ருக்க வேண்டும். 12ஆம் நூற்­றாண்­டுக்குப் பின்னர் இந்­திய முஸ்­லிம்­க­ளோடு இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்ட கலப்பும், நெருக்­க­மான உறவும் இக் கலா­சாரப் பர­வ­லுக்கு பிர­தான கார­ணங்­களாய் இருக்­கின்­றன.  இது தவிர உள்­ளூரில் குறிப்­பாகக் கிழக்கு மாகா­ணத்தில் வாழும் 40 வீத­மான முஸ்­லிம்கள் தமிழ் பேசும் இந்­துக்­க­ளோடும் சைவர்களோடும் இரண்­டறக் கலந்து வாழ்­வதும் வர­லாற்று ரீதியில் சீதனக் கலா­சாரம் முஸ்லிம் சமூ­கத்­திற்குள் பரவ ஏதுவாய் இருந்துள்­ளது. அதன் கார­ண­மா­கவே தென்­னி­லங்­கையை விட சீதனத்தின் தாக்கம் கிழக்­கி­லங்கை முஸ்­லிம்­க­ளி­டையே ஒப்­பீட்டு ரீதியில் அதி­க­மாக உள்­ளது. 

இன்­றைய இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் சீதனம் ஒரு சமூக வழு­வ­மை­தி­யா­கவும் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் அங்­கீ­கரிப்புக்கு உள்­ளான ஒரு விவ­கா­ர­மா­க­வுமே பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் அதன் சமூக, குடும்ப, பொரு­ளா­தார, ஆன்­மீகத் தாக்கம் மிகவும் வலி­மை­யா­னது என்­பதை முஸ்­லிம்கள் இன்னும் தெளி­வாகப் புரிந்து கொள்­ள­வில்லை. சீதனம் தவிர்க்க முடி­யாத ஒரு தீமை போலவே பல­ராலும் பார்க்­கப்­ப­டு­கின்­றது. விளை­வாக இலங்கை முஸ்லிம் தனியார் சட்­டத்­தின்­படி முஸ்லிம் விவாகப் பதி­விலும் சீதனம் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளமை கவ­னிக்­கத்­தக்­கது. 

திரு­ம­ணத்­தின்­போது மண­ம­களின் பெற்­றோரால் மண­ம­க­னுக்கு அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­படும் தொகையே சீதனம் என சிலர் அச்சொல்­லுக்கு வலிந்து விளக்கம் தரு­கின்­றனர். முஸ்லிம் விவாகப் பதிவில் 1990 இல் கொண்­டு­வ­ரப்­பட்ட  திருத்­தத்­தின்­படி இது திரு­மண அன்­ப­ளிப்பு எனக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. ஆனால் முஸ்லிம் விவாகப் பதி­வா­ளர்கள் வச­முள்ள விண்­ணப்பப் படி­வத்தில் இன்னும் 'கைக்­கூலி' என்ற சொல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இடம்­பெற்­றுள்­ளது. தற்­போது பேசப்­ப­டு­கின்ற முஸ்லிம் தனியார் சட்ட மறு­சீ­ர­மைப்பில் காதி நீதி­மன்ற முறையும் உள்­ள­டங்குகின்­றது. அதில் திரு­ம­ணத்­தோடு தொடர்­பான கைக்­கூலி குறித்தும் மாற்றம் வேண்டும் என்ற பிரே­ர­ணைகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள முஸ்லிம் தனியார் சட்­டத்­தின்­படி திரு­மணம் விவா­க­ரத்தில் முடி­வ­டை­யும்­போது மணப்­பெண்ணால் மண­ம­க­னுக்கு வழங்­கப்­பட்ட கைக்­கூ­லியை மீளப் பெறு­வது சிக்கலானது. அதற்­கான சட்ட ஏற்­பா­டுகள் தற்­போ­தைய தனியார் சட் டத்தில் உள்­ள­டங்­க­வில்லை.

யதார்த்­தத்தில் கைக்­கூலி இஸ்­லா­மிய ஷரீ­ஆவில் தடுக்­கப்­பட்ட ஒன்று. மண­மகன் மஹர் கொடுத்தே பெண்ணைத் திரு­மணம் செய்ய வேண்டும் என இஸ்லாம் வலி­யு­றுத்­து­கின்­றது. இதற்கு மறு­த­லை­யாக பெண்­ணி­ட­மி­ருந்து பெரும் தொகைப் பணத்தை சீத­ன­மாகப் பெற்­றுக்­கொண்டு அதி­லி­ருந்து 101 ரூபாயை அல்­லது 1001 ரூபாவை மஹ­ராக வழங்கும் வழக்கம் ஷரீ­ஆவின் போதனை களுக்கு மாற்­ற­மா­ன­தாகும். இன்று ரொக்கப் பணம் மட்­டு­மன்றி அசையாச் சொத்­துக்­க­ளான வீடு, காணி, வயல், தோட்­டங்கள், தொழில் ஆலைகள், கடைத் தொகு­திகள் என கைக்­கூ­லியின் பரி­மா­ணங்கள் பல. இவை மண­ம­க­னுக்கு வழங்­கப்­பட்­டாலோ மண­மகன் அதனை நிபந்­த­னை­யாக விதித்­தாலோ அதை ஷரீஆ ஏற்­றுக்­கொள்­ளாது.

ஒரு ஆண் தனது மண­வாழ்வில் பெண் தரப்­பிடம் சீத­னத்தை நிபந்­த­னைப்­ப­டுத்தும் போது ரொக்­கப்­பணம் ஏனை­ய­வற்றை விட மிகுந்த முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. விளை­வாக அவன் வசதியுள்ள குடும்­பத்தைத் தேடு­கின்றான். மார்க்க உணர்வு இரண்டாம் பட்­ச­மா­கின்­றது. பெரும்­பாலும் பணமும் ஆடம்­பர வாழ்வும் இருக்­கு­மி­டத்தில் உயர்ந்த பண்­பா­டுகள் வாழ்­வ­தில்லை. போலியும், பகட்டும் பிறரை மதிக்­காத பண்­புமே அங்கு நிலவும். இவ்­வாறு தனி­ம­னித வாழ்­விலும் சமூக வாழ்­விலும் சீதனம் மிக மோச­மான எதிர் விளை­வு­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது. 

இன்று கைக்­கூலி எனும் இத்­த­கைய சமூகத் தீமை­யினால் வீடு வழங்­குதல் என்­பது திரு­ம­ணத்தின் ஓர் அடிப்­படை ஷரத்­தா­கவே ஆக்­கப்­பட்­டுள்­ளது. திரு­ம­ண­மா­காத பெண்கள் கணி­ச­மான அளவு வெளி­நா­டு­க­ளுக்கு வீட்டுப் பணிப்­பெண்­க­ளாகச் சென்று தமக்­கான வாழ்­வா­தார வச­தி­களை உரு­வாக்கிக் கொள்ள வேண்­டிய நிர்ப்பந்­தத்தை சீதனப் பிரச்­சினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. வடக்­கிலும் கிழக்­கிலும் தற்­போது தெற்கின் சில பாகங்­க­ளிலும் தீவிர வடிவங்களை எடுத்­துள்ள சீதனப் பிரச்­சி­னையும் இளம் பெண்கள் வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­வ­தற்­கான கார­ணங்­களில் ஒன்­றாகும்.

சீதனம் என்ற கொடு­மைதான் திரு­மணமாகாத பெண்கள் வெளி­நாடு செல்லத் தனிக்­கா­ரணம் எனக் கொள்ள முடி­யா­விட்­டாலும் அது குறிப்­பி­டத்­தக்க அளவு இப்­பி­ரச்­சி­னையில் பங்­க­ளிப்­பதை நாம் மறுக்க முடி­யாது. ஏனெனில் பணம், சொத்து என்­ப­வற்றை விட மாப்­பிள்­ளைக்கு வீடு வழங்­குதல் என்­பது திரு­ம­ணத்தின் அடிப்­படை ஷரத்­து­களில் (றுக்ன்) ஒன்­றா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது. இதனால் வீடு கட்ட வச­தி­யில்­லாத குமர்ப்­பெண்கள் வெளி­நாடு சென்று உழைத்து அனுப்பும் பணத்­தி­லேயே அவர்­க­ளுக்­கான வீடு­களைக் கட்­டிக்­கொள்­கின்­றனர். இவ்­வாறு கஷ்­டப்­பட்டு உழைத்து திரு­மண வயதைத் தாண்­டிய நிலையில் நாடு திரும்பும் அத்­த­கைய இளம் பெண்கள் மாப்­பிள்ளை தேடுதல் என்ற பாரிய நெருக்­க­டிக்கும் சில­போது ஆளா­கின்­றனர். 

வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்குச் செல்லும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திரு­ம­ண­மாகாப் பெண்கள் சீதனத் தொகையைத் தயார் செய்­யவே அல்­லது வீடொன்றைக் கட்­டிக்­கொள்­ளவே இவ்­வாறு செல்­கின்­றனர். அதன் பொரு­ளா­தார, சமூக, ஆன்­மீக விளை­வுகள் பாரி­யவை. கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் சமூ­க­வி­யலில் சீதனம் செறிந்த செல்­வாக்கைக் கொண்­டுள்­ளது. அவர்­களின் ஆன்­மீக வாழ்வைக் கூட ஏதோ­வொரு வித­தத்தில் அது பாதித்து வரு­கின்­றது. 

தற்­போது கிழக்கு மாகா­ணத்தில் மட்­டு­மன்றி தென்­னி­லங்கையின் சில பிர­தே­சங்­க­ளிலும் சீதனம் முஸ்­லிம்கள் மத்­தியில் நடை­மு­றையில் உள்­ளதைக் கவ­னத்திற் கொள்ள வேண்டும். சீதனம் ஏற்­ப­டுத்தும் எதிர்­ம­றை­யான விளை­வு­களை பின்­வ­ரு­மாறு அடை­யா­ளப்­ப­டுத்­தலாம்.

01.வெளி­நாட்டுப் பய­ணத்தால் குடும்ப வாழ்வு சிதை வடை­கி­றது.

02.கைக்­கூலி பெறு­பவன் தனது சொந்த குடும்ப வாழ்வை மட்டும் குறிக்­கோ­ளாகக் கொண்டு வாழ முற்­ப­டும்­போது சமூக நலன்­களில் அக்­க­றை­யற்றுப் போகின்றான்.

03.ஹராம்,- ஹலால் பாராது பொருள் தேடும் மனப்­பாங்கை உரு­வாக்­கு­கின்­றது. 

04.சமூக சீர்­தி­ருத்தம், சமூக நலன்­க­ளுக்­காக உழைத்தல் என் பவை பின்­தள்­ளப்­ப­டு­கின்­றன. 

05.பெண் பிள்ளை பிறப்­பதை ஒரு சமூக சாபக்கேடு எனக் கருதும் மன­நிலை வளர்­கி­றது. 

06.திரு­ம­ண­ வ­யது பிற்­போ­டப்­ப­டு­வதால் விப­சாரம் போன்ற பெரும் பாவங்­களும் ஒழுக்கப் பிரச்­சி­னை­களும் எழு­கின்­றன. 

07.வீடு கட்ட உழைக்கும் போராட்­டத்தில் முழு மூச்­சாக ஈடு­படும்போது அடிப்­ப­டை­யான ஆன்­மீக வணக்­கங்கள் (தொழுகை, நோன்பு) பாதிக்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வாறு கைக்­கூலி அல்­லது சீத­னத்தின் சமூக, பொரு­ளா­தார, ஆன்­மீக ரீதி­யான எதிர் விளை­வுகள் வியா­பித்துச் செல்­கின்­றன.

காதி நீதிமன்­றங்­களில் ஏறி இறங்கும் பெண்கள் தமது பெற்­றோரால் கண­வன்­மா­ருக்கு வழங்­கப்­பட்ட கைக்­கூலித் தொகை­யையும் சொத்­துக்­க­ளையும் மீட்டித் தரு­மாறு போராடுகின்­றனர். விவா­க­ரத்தின் போது காதி நீதி­மன்­றத்தில் முன்வைக்­கப்­படும் இந்தக் கோரிக்­கைக்கு சாத­க­மாகப் பதி­ல­ளிக்க முடி­யாத வகையில் தனியார் சட்டம் அமைந்­துள்­ளது. 

இப்­போது சீத­னத்தை ஒழித்தல் எவ்­வாறு போயினும் மண­மகள் தரப்பால் வழங்­கப்­படும் இச்­சொத்தை மண­மு­றிவின் போது மீளப் பெறு­வ­தற்­கான பொறி­மு­றை­யேனும் தனியார் சட்­டத்தில் இடம்பெற­வில்லை என்று கவலை வெளி­யி­டப்­ப­டு­கின்­றது. கைக்கூலி­யாக வழங்­கப்­படும் சொத்து மண­ம­களின் பெய­ரி­லேயே பதி­வு­செய்­யப்­பட வேண்டும் எனவும் மண­ம­கனின் பெய­ருக்கு அவை மாற்­றப்­பட்டால் அவற்றை மீளப் பெறு­வ­தற்­கான (விவாகரத்­தின்­போது) வாய்ப்பு பெண்­ணுக்கு இல்­லாமல் போகின்­றது எனவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. ஏனெனில் கணவன், தான் விரும்பும் நேரத்தில் கார­ணங்கள் எதுவும் முன்­வைக்­காமல் மனை­வி­யி­ட­மி­ருந்து விவாக விடு­தலை பெற்றுக் கொண்டு அவ­ளது பெற்றோர் வழங்­கிய அத்­தனை சொத்­துக்­க­ளையும் சுருட்டி அள்­ளிக்­கொண்டு ஓடு­வ­தற்கு வாய்ப்­ப­ளிப்­ப­தா­கவே தற்­போ­தைய தனியார் சட்டம் உள்­ளது. 

எனவே, இதில் மாற்றம் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். இலங்கையின் பொதுச்­சட்­டத்தின் பிர­காரம் கண­வ­னுக்கு மனைவி தரப்பால் வழங்­கப்­பட்ட சொத்­துக்­களை மாவட்ட நீதி­மன்­றத்தின் ஊடாக மீளப் பெறலாம். ஆனால் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் இந்த ஏற்­பாடு இல்லை. இன்று வெவ்­வேறு வடி­வங்­களில் கைக்­கூலி பரி­மா­றப்­ப­டு­கின்­றது. அதற்கு பல்­வேறு நியா­யங்­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. கைக்­கூ­லியின் சமூக செல்­வாக்­கையே இன்­றுள்ள முஸ்லிம் தனியார் சட்­டத்தில் காண முடி­கி­றது. உண்­மையில் கைக்­கூலி தொடர்­பான அம்­சங்­களை தனியார்  சட்­டத்­தி­லி­ருந்து மொத்­த­மாக நீக்­கு­வதே பொருத்தம். எனினும் நடை­மு­றையில் அதைத் தடுப்­ப­தற்­கான பொறி­மு­றையும் சட்ட வரை­ய­றை­களும் அவ­சியம்.

கைக்­கூலி அல்­லது சீதனம் அல்­லது திரு­மண அன்­ப­ளிப்பு என்ற பெயரில் மண­ம­கனால் பெறப்­படும் எந்த வகைச் சொத்­தா­யினும் அது ஷரீ­அத்தில் தடுக்­கப்­பட்­டதே. ரொக்­கப்­ப­ண­மாக மட்­டு­மன்றி எந்த வடி­வத்தில் அது இருந்­தாலும் கண்­டிப்­பாக அது தவிர்க்கப்பட வேண்டும். இதுவே ஷரீ­ஆவின் நிலைப்­பா­டாகும்.

ஒரு­வ­ரி­ட­மி­ருந்து இன்­னொ­ரு­வ­ருக்கு சொத்து கிடைப்­ப­தாயின் வாரி­சு­ரி­மை­யாக அல்­லது வஸிய்யத் மூலம் அல்­லது பரி­சாக அல்­லது இம்­மூன்று வழிகள் தவிர்ந்த இஸ்லாம் அனு­ம­தித்த முறையில் ஏதேனும் கொடுக்கல் வாங்­கல்­களின் மூலம் கிடைக்க வேண்டும். சீதனம் இதில் எவ்­வ­கை­யிலும் சேராத ஷரீஆ கூறும் “அநி­யா­ய­மாகச் சாப்­பி­டுதல்" என்ற பகு­தி­யையே சேரும்.

இஸ்லாம் மணப்­பெண்­ணுக்கு மஹர் கொடுக்­கும்­ப­டியே வேண்­டு­கி­றது. ஆனால், இன்று பெருந்­தொகைப் பணத்தை சீத­ன­மாகப் பெற்­றுக்­கொண்டு அதி­லி­ருந்து ஒரு சிறிய தொகையை மஹ­ராகக் கொடுப்­பது சாதா­ர­ண­மாக நிகழ்ந்து வரு­கின்­றது. இது ஹரா­மா­னது. ஹராத்­தி­லி­ருந்து ஒரு கட­மையை (வாஜிபை) நிறை வேற்ற முனையும் ஒரு மோச­மான தந்­தி­ரமே (ஹீலா) இது.

அல்குர்ஆன் மனை­விக்­காக செல­வழிப்­ப­தையே கட­மை­யாக்கியுள்­ளது. பரா­ம­ரிப்­புச்­செ­லவு ஆண்கள் மீதான கடமை. இந்நிலையில் கண­வனைப் பெற பெண் பெருந்­தொகை சீத­னத்தைக் கொடுப்­பது எவ்­வ­கை­யிலும் ஏற்­பு­டை­ய­தல்ல. “உங்கள் செல்வங்­களை உங்­க­ளி­டையே அசத்­தி­ய­மான வழியில் சாப்­பிட வேண்டாம்" என்று அல்­குர்ஆன் எச்­ச­ரிக்­கின்­றது. ஒரு பெண்  செல்வம், அழகு, குலம், மார்க்க உணர்வு என்ற 04 கார­ணி­களுக்காக திரு­மணம் முடிக்­கப்­ப­டு­கின்றாள். மார்க்க உணர்­வுள்ள    பெண்­ணையே நீ பெற்­றுக்கொள் இல்­லா­விட்டால் நீ நாச­மடைவாய் என இறைத்­தூதர் அவர்கள் கூறி­யுள்­ளார்கள்.

மக்­காவை தலை­மை­ய­க­மாகக் கொண்­டுள்ள ராபி­ததுல் ஆலமியில் இஸ்­லா­மியின் கீழ் இயங்கும் இஸ்­லா­மிய சட்ட மன்றம் (மஜ்­மஉல் பிக்ஹில் இஸ்­லாமி) மேற்­படி சீதனம் எனும் வழக்கம் குர்ஆன், ஸுன்னா, இஜ்மா என்­ப­வற்­றுக்கு முர­ணா­னதும் காலா கால­மாக இருந்து வரும் முஸ்­லிம்­களின் வழி­மு­றை­க­ளுக்கு மாறா­னதும் மோச­மான ஒரு பாவமும் பித்­அத்துமாகும் என தீர்ப்பு வெளி­யிட்­டுள்­ளது. மேற்­படி வழக்­கத்தை ஒழிப்­ப­தற்­காக உல­மாக்கள் உட்­பட அனை­வரும் போராட வேண்டும் என இம்­மன்றம் வேண்டிக் கொண்­டுள்­ளது. 

உண்­மையில் சீதனம் வாங்கும் மனோ­நிலை செல்­வத்தை வைத்து பெண்­களைத் தேர்ந்­தெ­டுக்கும் நிலைக்கே எமது இளைஞர்களைத் தள்ளும். இதனால் ஹராத்தின் மீது அமைந்த வாழ்­வோடு பொருத்­த­மற்ற வாழ்க்கைத் துணையும் வந்து சேரும். விளைவு  ஒரு தீமை­யோடு இன்­னொரு தீமை இணையும். அதனால் முழு வாழ்வும் சாபக் டோன­தாக மாற இட­முண்டு.

புரை­யோ­டிப்­போன ஒரு சமூகத் தீமை என்ற வகையில் இதை ஒழிப்­பது கட­மை­யாகும். இது தனி நபர்­க­ளோடு மட்டும் தொடர்பானதன்று. ஒட்டுமொத்த சமூ­கமும் அதைக் களை­வதில் பொறுப்­புள்­ளது என்­பதை உண­ர­வேண்டும். இதற்கு இரு­வகை வேலைத்­திட்­டங்­களில் கவனம் செலுத்த வேண்டும்.

1. ஆன்­மீக ரீதி­யா­னவை

ஆன்­மீக வாழ்வும் சமூக வாழ்வும் பிரிக்க முடி­யாத இரு அம்­சங்கள். ஒரு பகு­தியில் விடப்­படும் ஒரு தவறு நிச்­சயம் அடுத்த பகு­தியைப் பாதிக்கும். இந்த வகையில் வணக்க வழி­பா­டு­களில் விடப்­படும் தவறு பார­தூ­ர­மான குற்றம் என வலி­யு­றுத்­தப்­ப­டு­வது போன்றே சமூக நடத்தை மற்றும் கொடுக்கல் வாங்­கல்­களில் விடப்­படும் தவறும் பார­தூ­ர­மா­னது எனவும் வலி­யு­றுத்­தப்­பட வேண்டும். சில­வேளை வணக்க வழி­பா­டு­களை விட சமூக நடத்­தையில் விடப்­படும் தவறு மிகப் பார­தூ­ர­மா­ன­தா­கவும் அமைய முடியும். ஏனெனில் அடியார்களுக்கும் அல்­லாஹ்­வுக்கும் இடை­யி­லான குற்­றத்தை விட அடி­யார்­க­ளுக்கும் அடி­யார்­களுக்கும் இடை­யி­லான குற்­றத்­தையே இஸ்லாம் பார­தூ­ர­மா­ன­தாகக் கரு­து­கின்­றது.  முன்­னைய குற்­றத்தை அல்லாஹ் தனது கருணையினால் மன்­னித்து விட முடியும். ஆனால், இரண்­டா­வது குற்றத்தை அதனால் பாதிக்­கப்­பட்­டவர் மன்­னிக்­கா­த­வரை அல்லாஹ் மன்­னிப்­ப­தில்லை. இக்­க­ருத்து இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தியில் ஆழ­மாக விளக்­கப்­பட வேண்டும்.

1. சமூக ரீதி­யா­னவை

2. பிரச்­சாரம் 

சீதனம் ஏற்­ப­டுத்தும் தீமைகள் படம்­பி­டித்துக் காட்­டப்­பட வேண்டும். அது இஸ்­லாத்­திற்கு எவ்­வ­ளவு தூரம் புறம்­பா­னது என்­பதும் விளக்­கப்­பட வேண்டும். இப்­பி­ர­சாரம் பெண்­க­ளுக்கு மத்­தி­யிலும் மேற்­கொள்­ளப்பட் வேண்டும். ஏனெனில் தாய்மார்கள்தான் தம் ஆண் மக்­க­ளுக்கு சீதனம் கேட்டுப் பெறு­வதில் மிகத் தீவி­ர­மாக இயங்­கு­கின்­றனர். ஓர் உண்மை முஸ்லிம் ஒரு பெண்ணிடத்தில் அவ­ளது மார்க்க உணர்வை, அறிவை, பண்­பாட்டை கவ­னத்திற் கொண்ட பின்­னரே அடுத்த அம்­சங்­க­ளுக்கு முக்கியத்­துவம் கொடுப்பான். இந்தக்கருத்தைத் திட்­ட­மிட்டு இளைஞர்களி­டையே வளர்ப்­ப­துடன் சீதனம் வாங்­கு­வது ஹரா­மா­னது என்­பதும் உணர்த்­தப்­பட வேண்டும்.

2. வாரி­சு­ரிமைச் சட்­டத்தை முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தல்

ஒருவர் இறக்­கும்­போது கணவன், மனைவி, சகோ­தர சகோதரிகள், தாய், தந்தை, பாட்டன் பாட்டி ஆகியோர் சொத்­துக்கு வாரி­சு­ரிமை பெறுவர். இவ்­வ­கையில் குடும்­பத்தில் முழுச்சொத்தும் பங்­கி­டப்­ப­டும்­போது ஒரு கூட்டுப் பரா­ம­ரிப்பு இயல்­பா­கவே உரு­வாகத் தொடங்கும். இலங்­கையின் சில பாகங்­களில் சொத்துப் பங்­கீடு என்­பது பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும் உரி­ய­தா­கவே கரு­தப்­பட்டு வரு­வது இப்­பி­ரச்­சி­னையை மேலும் சிக்­க­லாக்குகின்றது. எனவே, ஆண் பிள்­ளை­க­ளுக்கும் அல் குர்ஆன் பரிந்துரைக்கும் விதத்தில் சொத்து சரி­யாகப் பங்­கி­டப்­ப­டும்­போது சீதனப் பிரச்சி­னையை கணி­ச­மாகக் குறைக்­கலாம்.

3. திரு­மண ஏற்­பா­டு­களின் போது தந்தை தனது மக­ளுக்­காக வாழ்­வ­தற்­கான சில வச­தி­களை செய்து கொடுக்க வேண்டும். 
இது இஸ்லாத்தின் எதிர்பார்ப்பு

 இஸ்லாமிய சட்ட மரபில் இது தஜ்ஹீஸ் எனப்படுகிறது. உதாரணம். தளபாட வசதிகள், வீட்டுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கல். இவை சொந்தமாகவோ அல்லது கைமாறாகவோ கொடுக்கப்படலாம்.

4. இஸ்லாமியப் பொருளாதார சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தல்

ஸகாத் சட்டம் இதில் முக்கியமானது. இதை மிகச் சரியாக விளங்கி அதன் விரிந்த கருத்தில் அதனை நடைமுறைப்படுத்தல் வேண்டும். மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் வீடு முக்கியமானது. வீட்டைக் கட்டிக்கொள்ள வசதியற்றோருக்கு ஸகாத் மூலம் உதவ ஷரீஆ அங்கீகாரம் அளிக்கின்றது. அதில் இஸ்லாமிய வங்கியமைப்பு, நிதி நிறுவனங்கள் என்பனவும் கவனம் செலுத்தல் வேண்டும். 

5. வக்ஃபு சொத்துக்களைப் பயன்படுத்தல்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவ விடுதிகள் போன்றவற்றுக்கு மட்டுமன்றி ஸஹாபாக்களின் காலத்தில் திரு மணம்முடிக்க வழியில்லாதோருக்குக் கூட வக்ஃபு சொத்துக்கள் பயன்பட்டுள்ளன. எனவே இவற்றிலும் கவனம் செலுத்தலாம்.
சீதனம் எனும் சமூகத் தீமை ஹராமானது என்பதே ஷரீஆவின் நிலைப்பாடு. எனவே அதை ஒழிப்பது தனிநபர் பொறுப்புக்கும் மேலாக ஒரு சமூகக் கடமையாகும். இது நடைமுறைச் சாத்திய மற்ற ஒரு பணி எனக் கருதப்படுமானால் பாரதூரமான எதிர் விளைவுகளுக்கே சமூகம் முகம்கொடுக்க வேண்டி இருக்கும். சீதனத்தை ஒழிப்பது உடனடியாக சிரம சாத்தியமானதாகத் தோன்றினாலும் படிமுறை வழிமுறைகளின் ஊடாக அதைக் களைந்தாக வேண்டும். சமூகத்திலுள்ள பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து அதற்கான வேலைத்திட்டங்களில் உடனடியாக இறங்குவது காலத்தின் கட்டாயமாகும்.