Verified Web

நல்லாட்சி அரசின் மீதுள்ள கடப்பாடு

2017-08-08 10:25:49 Administrator

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தற்போது உச்சக்கட்டத்தை  எட்டியுள்ளன. அவருக்கு எதிராக எதிரணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினுள்ளும் ரவிக்கு எதிராக போர்க் கொடி தூக்கப்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்கவை அமைச்சரவையில் இருந்தும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் நீக்க வேண்டும் என வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களும் அமைச்சர் ரவிக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.

ரவி கருணாநாயக்க சர்ச்சைக்குரிய திறைசேரி முறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த வாரம் ஆஜரானார். நிதியமைச்சராக இருந்த காலப்பகுதியில் மத்திய வங்கியின் திறைசேரி முறி தொடர்பில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆஜராகியிருந்தார். 

ரவி கருணாநாயக்க வசித்த வீட்டுக்கான வாடகைப் பணமான ரூபா 8.7 மில்லியனை, மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பேர்பச்சுவல் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் செலுத்தியிருந்தமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது. எனினும் இது தொடர்பில் தனக்கு எதுவுமே தெரியாது என்று ரவி கருணாநாயக்க வாக்குமூலமளித்திருந்தார். 

உண்மையில் ரவியின் இந்த பதில் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். ஊழலுக்கு எதிரான கோஷங்களுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தில் இவ்வாறான மோசடிகள் நடைபெற்றமை மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் அரசாங்கம் இது விடயத்தில் தனிப்பட்ட, அரசியல் நலன்களைப் புறந்தள்ளி நாட்டு நலனை மாத்திரமே முன்னிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். 

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.தே.க. தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.  ஐக்கிய தேசியக் கட்சி திருடர்களின் கட்சி அல்லவெனவும், அவ்வாறு இக்கட்சியில் திருடர்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தான் உட்பட நல்லாட்சியிலுள்ள எவரும் ஊழலுக்கு ஆதரவாக கை உயர்த்த மாட்டார்கள் என ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர்களுள் ஒருவரும் காணி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். திருடர்களுக்கு எதிராக தனது பதவிகளையும் விட்டுவிட்டு மக்களுடன் பாதையில் இறங்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் ரவியை பதவி விலகுமாறு கோருவார் என்றும் அரசாங்க மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியிருப்பினும் ஊழலுக்கு எதிரான கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் கடந்த காலத்தில் நடந்த ஊழல்கள் விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியிருந்த நிலையில் தற்போது இந்த அரசில் உள்ளவர்களே ஊழலில் ஈடுபடவும் துணிந்துள்ளனர். இது நல்லாட்சி ஒன்றுக்காக வாக்களித்த மக்களின் நம்பிக்கையை சிதறடிக்கச் செய்யும் செயலாகும். இது விடயத்தில் அரசாங்கம் மிகக் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தனது கை சுத்தம் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்.