Verified Web

கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நாடு

2017-08-07 15:06:37 Administrator

நாடு மிக மோசமான வரட்சிக்கு முகங்கொடுத்துள்ளது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இலங்கை தொடர்ச்சியாக கடும் வெள்ளம் மற்றும் வரட்சி ஆகிய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த சனிக்கிழமை வரையான தரவுகளுக்கமைய 15 மாவட்டங்களிலுள்ள 137 பிரதேச செயலாளர் பிரிவுகள் வரட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய மொத்தமாக 341000 குடும்பங்களைச் சேர்ந்த 1.1 மில்லியன் மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப் பகுதிகளில் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதுடன் விவசாய நிலங்களும் அழிவடைந்து வருகின்றன. மிருகங்கள் கூட நீரின்றி செத்து மடிந்த வண்ணமுள்ளன. அநுராதபுரம் மாவட்டத்தில்  மாத்திரம் இம்முறை யால பருவத்திற்காக செய்கை பண்ணப்பட்ட 28 ஆயிரம் ஏக்கரில் அரை வாசி , நீர் பற்றாக்குறை காரணமாக அழிவடையும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வரட்சி நிலை தொடருமானால் நாட்டில் இம் முறை தேங்காய் உற்பத்தியும் வீழ்ச்சியடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந் நிலையில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை வழங்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் ரூபா நிதியும் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்களும் வழங்கப்படவுள்ளன.

இதற்கிடையில் வௌ்ளம் மண்சரிவு மற்றும் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 10 வீதத்தை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக திறைசேரி அறிவித்துள்ளது. நிவாரணங்களுக்காக மொத்தமாக 65 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் திறைசேரி சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கம் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட போதிலும் அவை எந்தளவுதூரம் மக்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்பது கேள்விக்குறியாகும். 

குறிப்பாக மக்களுக்கு தேவையான பொருத்தமான நேரங்களில் அரசாங்கத்தின் உதவிகள் சென்றடைவதில்லை. மாறாக நிலைமை சீரடைந்த பிற்பாடுதான் அரசாங்க அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உதவிகளை வழங்க முற்படுகின்றனர். சில பகுதிகளில் முற்றாக எந்தவித உதவிகளும் மக்களைச் சென்றடைவதில்லை. கடந்த வருடமும் இவ்வருடமும் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களின் போது நாம் இதனைக் கண்டோம்.

எனவேதான் அரசாங்கத்தின் அனர்த்த நிவாரண அமைச்சின் மூலமாக வினைத்திறனான நிவாரண விநியோகத்தை முன்னெடுக்க வேண்டும். அல்லாத பட்சத்தில் இவ்வளவு பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கியும் அவை விழலுக்கிறைத்த நீர் போன்றாகிவிடும்.