Verified Web

நாட்டின் பதில் தலைமை பொறுப்பை சுமந்த தேச­மான்ய பாக்கிர் மாக்கார்

2017-08-07 15:02:39 Administrator

பீ.எம். முக்தார்

தேச­மான்ய எம்.ஏ. பாக்கிர் மாக்கார் 1917 ஆம் ஆண்டு, மே மாதம் 12 ஆம் திகதி பேரு­வளை, மரு­தா­னையில் பிறந்தார். ஹக்கீம் என்ற சிறப்புப் பெயர் கொண்ட வைத்­திய பரம்­ப­ரையைச் சேர்ந்த அலியா மரிக்கார் முகம்­மது லெப்பை மரிக்கார் –- றாஹிலா உம்மா தம்­ப­தியின் அருமைப் புதல்­வ­ராகப் பிறந்த பாக்கிர் மாக்கார், பேரு­வளை மரு­தா­னை­யி­லுள்ள முஸ்லிம் பெண்கள் பாட­சா­லையில் ஆரம்பக் கல்­வியைப் பெற்றார். 

பின்னர் கொழும்பு கோட்­ட­டி­யி­லுள்ள சென் செபஸ்­தியன் பாட­சா­லையில் கல்­வியைத் தொடர்ந்தார். அதன் பின்னர் உயர் கல்­வியைத் தொடர்­வ­தற்­காக கொழும்பு மரு­தானை ஸாஹிராக் கல்­லூ­ரியில் இணைந்து கற்றார். அங்­கி­ருந்து பாட­சாலைக் கல்­வியை முடித்துக் கொண்டார். 

கொழும்பு ஸாஹிராக் கல்­லூ­ரி­யிலே பயிலும் சந்­தர்ப்­பத்­தி­லேயே அர­சி­யல்­வா­தியும் கல்­வி­மா­னு­மா­கிய கலா­நிதி ரீ.பீ. ஜாயாவின் நெருக்­க­மான தொடர்பும் நட்பும் கிடைத்­தது. இந்த உறவே இளைஞர் பாக்கிர் மாக்­காரின் எதிர்­கால அர­சியல், கல்வி, சமூக உயர்­வுக்கும் அடித்­தா­ள­மிட்­டது எனலாம். 

1940 ஆம் ஆண்டு சட்டக் கல்­லூ­ரியில் சேர்ந்தார். அச்­சந்­தர்ப்­பத்தில் இரண்டாம் உலக மகா யுத்தம் கார­ண­மாக சட்டக் கல்­வியைத் தொடர்­வ­திலும் இடை­யூ­றாக அமைந்­தது. 1942 ஆம் ஆண்டு தேசிய பாது­காப்புச் சபையில் இணைந்து பணி­யாற்­றினார். 
இடை­யூ­று­க­ளுக்கும் மத்­தியில் இடை­­ய­ராது சட்டப் படிப்பைத் தொடர்ந்து 1950 ஆம் ஆண்டு சட்டத்தர­ணி­யாகப் பதவிப் பிர­மாணம் செய்து கொண்டார். 

களுத்­துறை மஜிஸ்­திரேட் நீதி மன்றம் அவரின் நீதித்­துறைக் கோட்­டை­யாக விளங்­கி­யது. அங்கும் தம் திறமை, ஆற்­றல்­களை வெளிக்­காட்டி உயர்வு கண்டார். களுத்­துறை சட்ட நிபு­ணர்கள் சங்­கத்தின் தலை­வ­ராகத் தெரி­வானார். 

சட்டக் கல்­லூரி மாண­வ­னாக இருக்கும் போதுதான் முஸ்லிம் லீக் அமைப்பின் அறி­முகம் கிடைத்து அதில் இணைந்து கொள்­கிறார். அங்கும் அதன் மேல் சபையின் சபா­நா­ய­க­ரா­கவும் பின்னர், அகில இலங்கை முஸ்லிம் லீக் மாணவர் சம்­மே­ள­னத்தின் தலை­வ­ரா­கவும் தெரிவு செய்­யப்­ப­டு­கிறார். அதே அமைப்பின் வாலிப முன்­ன­ணியை ஸ்தாபித்து சாதனை நிலை நாட்­டினார். 
நீதித்­துறை, சமூக சேவைத் துறை­களில் பிர­கா­சித்த பாக்கிர் மாக்கார், 1949 ஆம் ஆண்டு பேரு­வளை நகர சபை அங்­கத்­த­வ­ராகத் தெரி­வா­னதைத் தொடர்ந்து, அர­சியல் பய­ணத்­தையும் ஆரம்­பிக்­கிறார்.  அந்­தத்­து­றை­யிலும் பல மைல் கற்­க­ளையும் தாண்டி அமைச்சர், சபா­நா­யகர், ஆளுநர் என்று உயர் படித்­த­ரங்­களில் ஏறி சுடர் விட்டுப் பிர­கா­சிக்­கவே செய்தார். 

இங்­கி­லாந்தின் சார்ள்ஸ் இள­வ­ர­சரின் திரு­மண நிகழ்வில் கலந்து கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி ஜய­வர்­தன, பிர­தமர் பிரே­ம­தாஸ ஆகியோர் இலண்டன் செல்ல நாட்டின் பதில் தலைமை இவ­ரிடம் வந்து சேர்ந்­தது. சிறு­பான்மை இனம், அதுவும் முஸ்லிம் ஒரு­வ­ரிடம் நாட்டுப் பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்ட முதல் சந்­தர்ப்பம் அது­வாகும். இனி இத்­த­கை­ய­தொரு வாய்ப்புக் கிடைக்­குமோ என்­பதும் சந்­தே­கமே. பாக்கிர் மாக்கார் மூலமே முஸ்லிம் சமூ­கத்­துக்கு இத்­த­கை­ய­தொரு கௌரவம் கிடைத்­தமை வர­லாற்றில் பொன் எழுத்­துக்­களால் பதிய வேண்­டி­ய­தொன்­றாகும். 

பேரு­வளை நகரசபை அங்­கத்­த­வ­ராக இருந்து, அதன் தலை­வ­ராக உயர்வு கண்ட அவர் 1960 இல் பேரு­வளை தேர்தல் தொகு­தியில் போட்­டி­யிட்டு முதன் முத­லாக பாரா­ளு­மன்றம் சென்றார். 1977 இல் மீண்டும் அமோக வாக்­கு­களைப் பெற்று பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வ­ரானார். அப்­போது பிரதி சபா­நா­ய­க­ராக இருந்து 1978 இல் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தியின் கீழ் அமைந்த பாரா­ளு­மன்றின் சபா­நா­ய­க­ரானார். அதன் போதே முன்பு குறிப்­பிட்ட வர­லாற்று முக்­கி­யத்­துவ நிகழ்வு இடம்பெற்று வர­லாறு படைத்தார். 

1983 இல் பல்­வேறு கார­ணி­களால் சபாநாயகர் பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமாச் செய்து, 1988 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்ற அர­சி­ய­லி­லி­ருந்து விடை பெற்றார். 

அவ­ரது இடம் அவ­ரது ஏக புதல்வர் இம்­தியாஸ் பாக்கிர் மாக்­காரால் ஈடு செய்­யப்­பட்­டது. அவரும் தந்­தையின் வழியில் கனவான் அர­சியல் செய்து முழு நாட்டு மக்­களின் நல்­ல­பி­மானம் பெற்றுத் திகழ்ந்து கொண்­டி­ருக்­கிறார். 

தேச­மான்ய பாக்கிர் மாக்கார் தென் மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்டு மேலும் கௌர­விக்­கப்­பட்டார். அர­சியல் வானில் பிர­கா­சித்து கனவான் அர­சியல் செய்தோர் பட்­டி­ய­லிலும் இவர் சிறப்­பிடம் பெறு­கிறார். 

அவர் ஆழ்ந்த மத பக்தி நிறைந்­த­வ­ராக காணப்­பட்­ட­மையும் அவ­ரது அர­சியல், சமூகப் பணிகள் தூய்மை பெற வழி­வ­குத்­த­தென்றால் மிகை­யா­காது. 

இலங்கை முஸ்­லிம்­களின் ஆரம்பக் குடி­யேற்றப் பகு­தி­களில் ஒன்­றாக விளங்கும் பேரு­வளை மரு­தா­னையில் அமைந்­துள்ள இலங்­கையின் முத­லா­வது பள்­ளி­வாசல் என்ற புக­ழுடன் திகழும் மஸ்­ஜிதுல் அப்ரார் பள்­ளியின் நம்­பிக்கைப் பொறுப்­பா­ள­ரா­கவும் பணி­பு­ரிந்­துள்ளார். 

ஆன்­மீகத் துறையை வளர்த்து வரும் ஷாது­லிய்யா தரீக்­காவின் வளர்ச்­சி­யிலும் கணி­ச­மான பங்­க­ளிப்புச் செய்­தி­ருக்­கிறார். ஷாது­லிய்யா தரீக்­காவின் செயற்­பா­டு­களை விரிவுபடுத்­து­வ­தற்­காக அகில உலக ஷாது­லிய்யா தரீக்­காவின் ஆன்­மீகத் தலைவர் கலா­நிதி செய்­யது அல் பாஸி அவர்­களால், பாக்கிர் மாக்கார் முகத்­தமுஷ் ஷாது­லி­யாக நிய­மிக்­கப்­பட்­ட­மையும் இங்கு குறிப்­பி­டத்­தக்­கது. 

இன ஐக்­கியம், தேசிய ஒற்­றுமை என்­ப­ன­வற்­றுக்­கா­கவும் அர்ப்­ப­ணிப்புச் செய்த முஸ்லிம் தலை­வர்­களில் ஒரு­வ­ரா­கவும் பாக்கிர் மாக்கார் திகழ்ந்­தார். சேர் ராஸிக் பரீத், கலா­நிதி பதி­யுதீன் மஹ்மூத், ஏ.ஸீ.எஸ். ஹமீத் ஆகிய தலை­வர்­க­ளுடன் இணைந்து சிங்­களம், தமிழ் மொழியை அர­ச­க­ரும மொழி­யாக்கும் இயக்­கத்­திலும் இணைந்து செயல்­பட்­டி­ருக்­கிறார். 

இவ­ரது அரும் பணி­களை, நாட்­டுக்­கான பங்­க­ளிப்­புக்­களை கௌர­விக்கும் முக­மா­கவே இவ­ருக்கு தேச­மான்ய பட்டம் வழங்கி கௌர­விக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. 

இவர் ஸ்தாபித்த முஸ்லிம் லீக் வாளிபர் சங்க அனு­ச­ர­ணையில் உதயம், என்ற மாதம் இரு முறை வெளி­வரும் தமிழ் பத்­தி­ரி­கையும் டோன் என்ற ஆங்­கிலப் பத்­தி­ரி­கையும் வெளி­யி­டப்­பட்­டது. அப்­பத்­தி­ரி­கைக்கு வழங்­கப்­படும் உதவி நிதியில் பற்­றாக்­குறை நிகழ்ந்து அங்கு பணி புரியும் ஊழி­யர்­க­ளுக்கு ஊதியம் வழங்­கு­வதில் ஏற்­படும் சிக்­கல்­களின் போது பாக்கீர் மாக்கார் தனது சொந்த நிதி­யி­லி­ருந்து அதனை ஈடு செய்த சந்­தர்ப்­பங்கள் பலவுள்ளதாக உதயம் அச்சகத்தில் பொறுப்பாளராக கடமையாற்றிய ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சத்தார் ஊடாக அறியக் கிடைத்தது. உதயம் பத்திரிகைக்கு ஏ.எல்.எம். சத்தார் உதவியாளராக இருந்தபோது மர்ஹூம் மன்னார் ஷரீப், மற்றும் மானா மக்கீன், என்.எம். அமீன், மர்ஹூம் எம்.பி.எம். அஸ்ஹர் போன்றோர் கணிசமான பங்களிப்புச் செய்து உதயம் உதயமாக வழி செய்தமையும் அறிய முடிகிறது. 

இவ்வாறு சமூக விழிப்புணர்வுக்காகவும் சமூக எழுச்சிக்காகவும் தேசமான்ய பாக்கிர் மாக்கார் அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தன்னை அர்ப்பணித்திருப்பதை சமூகமும் நாடும் என்றும் மறக்காது.