Verified Web

அபிவிருத்திப் பாதையில் கொழும்பு பெரிய பள்ளிவாசல்

2017-08-06 15:57:47 MBM.Fairooz

எம்.பி.எம்.பைறூஸ்

கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் என்ற பெயரைக் கேட்­டாலே நமக்கு ஞாபகம் வரு­வது பிறை விவ­காரம் தான். மாதாந்தம் தலைப்­பிறை பார்த்து அறி­விக்கும் போது அல்­லது அது பற்­றிய தீர்­மானம் எடுப்­பதில் சர்ச்­சைகள் கிளம்பும் போது மாத்­திரம் நாம் பெரிய பள்­ளி­வாசல் பற்றிப் பேசி­விட்டு மறந்து விடு­கிறோம். எனினும் முழு நாட்­டிற்­குமே தலை­மைத்­துவம் வழங்க வேண்­டிய இப் பள்­ளி­வா­சலின் வர­லாறு பற்­றியோ அதன் கடந்த கால, சம­கால நிலை­வ­ரங்கள் பற்­றியோ அல்­லது இப் பள்­ளி­வா­ச­லுக்­குள்ள வக்பு சொத்­துக்கள் பற்­றியோ இலங்கை முஸ்லிம் பிரஜை என்ற வகையில் அப் பள்­ளி­வா­ச­லுக்கு நாம் ஆற்ற வேண்­டிய பங்­க­ளிப்பு குறித்தோ யாரும் பெரி­தாக அலட்டிக் கொள்­வ­தில்லை.

இலங்­கையைப் பொறுத்­த­வரை பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் என்­றாலே பலத்த விமர்­ச­னங்­களும் சர்ச்­சை­களும் நீடிப்­ப­தையே வர­லாறு நெடு­கிலும் காண்­கிறோம். குறிப்­பாக கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வாக விட­யத்­திலும் இற்­றைக்கு இரு வரு­டங்­க­ளுக்கு முன்னர் வரை பாரிய இழு­ப­றிகள் நடந்­ததை நாம் அறிவோம்.

ஆனால் இன்று நிலைமை அப்­ப­டி­யல்ல. முழு நாட்­டிற்­கு­மான முன் மாதிரிப் பள்­ளி­வா­ச­லா­கவும் வரை­ய­றுக்­கப்­பட்ட மஹல்லா என்­பதைத் தாண்டி முழு நாட்­டிற்­குமே சொந்­த­மான பள்­ளி­வாசல் எனும் பெரு­மையை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கா­கவும் திட்­ட­மிட்ட பாதையில் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது கொழும்பு பெரிய பள்­ளி­வாசல்.

பெரிய பள்­ளி­வா­சலின் நிர்­வா­கத்தை திறம்­பட முன்­னெ­டுக்கும் நோக்கில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் வக்பு சபை என்­ப­வற்­றினால் விசேட நிர்­வாக சபை­யொன்று இரு வருடங்களுக்கு முன்னர் அதி­கா­ர­பூர்­வ­மாக நிய­மிக்­கப்­பட்­டது.

சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள்,  கல்­வி­மான்கள், ஓய்வு பெற்ற பொலிஸ் அதி­காரி ஒருவர், கட்­டிடக் கலை நிபு­ணர்கள், வர்த்­த­கர்கள், மஹல்­லா­வா­சிகள், முன்­னைய நிர்­வா­கத்தைச் சேர்ந்த 7 பேர் என பலரும் உள்­ள­டங்­க­லாக இந்த நிர்­வாக சபை அமையப் பெற்­றுள்­ளது.

கொழும்பு பெரிய பள்­ளி­வா­ச­லுக்கு ஒரு முறை சென்று வந்தால் அங்கு கடந்த இரு வருட காலத்­திற்குள் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­க­ளையும் அபி­வி­ருத்­தி­க­ளையும் மிக இல­கு­வாக கண்டு கொள்­ளலாம்.

பள்­ளி­வாசல் முகப்பு மற்றும் நுழை­வாயில் பகுதி விஸ்­த­ரிக்­கப்­பட்டு புதிய மினா­ராக்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­ச­லினுள் விசேட தேவை­யு­டை­யோரும் ஏனை­யோரும் இல­கு­வாக பிர­வே­சிக்கும் வகையில் பாதை அமைக்­கப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வா­சலின் கீழ் தளத்தில் மாநாட்டு மண்­டபம் நவீன முறையில் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டுள்­ளது. வெளிப் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து குடும்­ப­மாக கொழும்­புக்கு வருகை தரும்  பெண்கள் ஓய்­வெ­டுக்­கவும் தொழு­கையில் ஈடு­ப­டவும் உண­வ­ருந்­தவும் வச­தி­யாக பிரத்தியேக பெண்கள் தொழுகை அறை நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. அதன் பணிகள் முடி­வ­டையும் தறு­வாயில் உள்­ளன. மேலும் பள்­ளி­வா­சலின் வுழூ செய்யும் பகுதி நவீன முறையில் விரைவில் அபி­வி­ருத்தி செய்ய திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வாசல் கட்­டி­டத்­துக்கு முழு­மை­யாக வர்ணப் பூச்சு பூசவும் மின் விளக்­குகள் பொருத்­தவும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு புதிய நிர்­வா­கத்தின் வினைத்­தி­ற­னான நட­வ­டிக்­கைகள் தொடர்ந்த வண்­ண­முள்­ளன.  

புதிய நிர்­வாகம் பொறுப்­பெற்ற பிற்­பாடு பள்­ளி­வாசல் அபி­வி­ருத்திப் பாதையில் பய­ணிப்­ப­தா­கவும் மஹல்­லா­வா­சி­களின் அபிப்­பி­ரா­யங்­களைக் கேட்டு ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டு­வ­தா­கவும் கூறு­கிறார் நியூ மூர் வீதியில் வசிக்கும் எம்.என்.எம். இபாம். '' புதிய நிர்­வாகம் பொறுப்­பேற்ற பின்னர் பள்­ளி­வா­சலில் பல மாற்­றங்­களை அவ­தா­னிக்க முடி­கி­றது. பள்­ளி­வா­சலின் உள்­ளக மற்றும் வெளிப் பகு­திகள் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டுள்­ளன. இது எமக்கு மகிழ்ச்­சி­ய­ளிக்­கி­றது. மாதாந்தம் மஹல்­லா­வா­சி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி நிர்­வா­கத்­தினர் தீர்­மா­னங்­களை எடுக்­கின்­றனர். இந் நிலை தொடர வேண்டும்'' என்றும் அவர் குறிப்­பி­டு­கிறார்.

கொழும்பு பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தைப் பொறுத்­த­வரை அதன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள பணி­யா­னது ஏனைய பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களின் பணியை விடப் பாரி­யதும் பொறுப்­பு­வாய்ந்­த­து­மாகும். மாதாந்தம் பிறை தொடர்­பான தீர்­மா­னத்தை எடுத்து முழு நாடும் ஏற்றுக் கொள்­ளத்­தக்க வகையில் அறி­விப்­ப­தென்­பது இல­கு­வான காரி­ய­மல்ல. கடந்த காலங்­களில் பிறையைத் தீர்­மானிப்பதில் பல்­வேறு விமர்­ச­னங்கள் நிலவி வந்த நிலையில் அவற்­றுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பிறைக் குழு, அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­ப­வற்­றுடன் இணைந்து பெரிய பள்­ளி­வாசல் நிர்­வாகம் நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. 

மாதாந்தம் பிறை மாநாடு அதன் அங்­கத்­த­வர்கள் மாத்­திரம் பங்­கேற்று, அமை­தி­யான சூழலில் தீர்­மா­னங்­களை மேற்­கொள்ளக் கூடிய வகையில் மாநாட்டு மண்­டபம் பிரத்­தி­யே­க­மாக அமைக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் பெரிய பள்­ளி­வா­சலின் கீழேயே வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க இந்தப் பணியை முன்­னெ­டுத்துச் செல்­லவும் மேற்­கு­றிப்­பிட்ட சகல தரப்­பி­னரும் இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்­ளனர். இதற்­க­மை­யவே இந்த வரு­டமும் மிகவும் சுமு­க­மான முறையில் ரமழான் மற்றும் ஷவ்வால் தலைப்­பிறை தீர்­மா­னிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வாகம் மீதுள்ள மற்­று­மொரு பாரிய பொறுப்­புத்தான் முன்­னோர்கள் அதற்­கென சேர்த்து வைத்த வக்பு செய்­யப்­பட்ட சொத்­துக்­க­ளை பராமரிப்பதாகும். குறிப்­பாக மாளி­கா­வத்தை மைய­வாடி, புறக்­கோட்­டையில் உள்ள வர்த்­தக நிலை­யங்கள் என்­பன இந்த சொத்­துக்­களில் மிக முக்­கி­ய­மா­னவை.

மாளி­கா­வத்தை காணி விவ­காரம்

மாளி­கா­வத்தை மைய­வா­டியை பாது­காக்கும் விட­யத்தில் பெரிய பள்­ளி­வாசல் நிர்­வாகம் அச­மந்­த­மாக இருக்­கி­றது என சிலர் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வந்­தாலும் அதனை முற்­றாக மறுக்­கி­றது புதிய நிர்­வாகம். தாம் மைய­வா­டிக்குச் சொந்­த­மான காணியை மீட்­டெ­டுப்­ப­தற்கு சட்ட ரீதி­யா­கவும் அதற்கு அப்­பாலும் எவ்­வா­றான  முயற்­சி­களை ஆர­வா­ர­மின்றி முன்­னெ­டுத்து வரு­கிறோம் என்­ப­தற்­கான ஆதா­ரங்­களை அடுக்­கு­கி­றார்கள் பள்ளி நிர்­வா­கிகள். 

மாளி­கா­வத்தை மைய­வாடிக் காணியின் வர­லாற்றை இந்த இடத்தில் மீட்டிப் பார்ப்­பது பொருத்­த­மா­ன­தாகும். 1830 இல் இக் காணி மூன்று தனி நபர்­க­ளுக்குச் சொந்­த­மா­ன­தாக இருந்­த­தாக ஆவ­ணங்கள் குறிப்­பி­டு­கின்­றன. பெரிய பள்­ளி­வாசல் அமைந்­துள்ள காணியில் சட­லங்­களை அடக்க வேண்டாம் என அப்­போ­தைய பிரிட்டிஷ் ஆட்­சி­யா­ளர்கள் அறி­வு­றுத்­தி­யதன் கார­ண­மாக நியூ மூர் வீதியில் வாழ்ந்த வர்த்­த­கர்கள் நிதி திரட்டி 1874 இல் சுமார் 38 ஏக்கர் பரப்­ப­ளவு கொண்ட காணியை மாளி­கா­வத்தை மைய­வா­டிக்­காக கொள்­வ­னவு செய்­துள்­ளனர். இருப்­பினும் 1950 ஆம் ஆண்டு அர­சாங்கம் இரு விசேட வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் மூலம் மைய­வா­டிக்குச் சொந்­த­மான 28 ஏக்கர் காணியை தனக்­கு­ரித்­தாக்­கி­யது.

அந்த வகையில் தற்­போ­துள்ள ஆவ­ணங்­க­ளுக்­க­மைய மாளி­கா­வத்தை மைய­வா­டிக்கு 10க்கும் குறை­வான ஏக்கர் காணியே சொந்­த­மா­க­வுள்­ளது. இந்தக் காணியின் குறிப்­பிட்ட ஒரு பகு­தியில் மாத்­தி­ரமே ஜனா­ஸாக்கள் அடக்­கப்­ப­டு­கின்­றன. மிகுதிப் பகுதி பல­ராலும் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளது. இந்தக் காணி­களை மீட்­டெ­டுப்­பதும் அவற்­றினால் பள்­ளி­வா­ச­லுக்கு மாதாந்தம் வர வேண்­டிய வரு­மா­னத்தை படிப்­ப­டி­யாகத் திரட்­டு­வ­துமே புதிய நிர்­வா­கத்தின் முன்­னுள்ள பாரிய சவா­லாகும். 

மாளி­கா­வத்தை மைய­வாடிக் காணியின் ஒரு பகு­தியில் மக்கள் குடி­யி­ருப்­பொன்று உள்­ளது. இதில் சுமார் 168 வீடுகள் உள்­ளன. இவற்றில் 70 வீத­மா­னவை முஸ்லிம் குடும்­பங்­க­ளாகும். ஆனால் இவர்­களில் 10 குடும்­பங்­க­ளுக்கும் குறை­வா­ன­வர்­களே பள்­ளி­வாசல் காணிக்­கு­ரிய வாட­கையை மாதாந்தம் செலுத்தி வரு­கி­றார்கள். ஆக இவர்­க­ளி­ட­மி­ருந்து முழு­மை­யான வாடகைத் தொகையைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை புதிய நிர்­வாகம் மேற்­கொண்டு வரு­கி­றது. 

அதே­போன்று மற்­றொரு பகு­தியில் பாரிய வர்த்­தக நிறு­வ­னங்கள் உள்­ளன. இந்தக் காணியைப் பயன்­ப­டுத்தி குறித்த நிர்­வா­கங்கள் மாதாந்தம் கோடிக் கணக்­கான பணத்தைச் சம்­பா­திக்­கின்­றன. ஆனால் பள்­ளி­வா­ச­லுக்கு ஒரு ரூபா கூட கொடுப்­ப­தில்லை. இந்த வர்த்­தக நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­யவும் அதன் மூலம் வரு­மா­னத்தைப் பெறவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. மேற்­படி குடி­யி­ருப்­புகள் மற்றும் வர்த்­தக நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து சரி­யான முறையில் வரு­மானம் திரட்­டப்­ப­டு­மா­க­வி­ருந்தால் அதன் மூலம் மாதாந்தம் 30 இலட்சம் ரூபாவைத் திரட்­டலாம் என நம்­பிக்கை வெளி­யி­டு­கின்­றனர் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள். 

 இதற்கு மேல­தி­க­மாக இடப்­பக்க மூலையில் பேஸ் லைன் வீதி­யோ­ர­மாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள ஜய­சிங்க என்­ப­வ­ருக்குச் சொந்­த­மான கட்­டி­டத்­திற்­காக மைய­வாடிக் காணிக்­கு­ரிய 9 பேர்ச் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளது. பலரும் மாளி­கா­வத்தை மையவாடிக் காணி ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக பேசு­வது இந்த விட­யத்தைப் பற்றி மாத்­தி­ரம்தான். ஆனால் மேற்­சொன்­ன­வாறு மறு­பு­ற­மாக பெருந் தொகை காணி ஏக்கர் கணக்கில் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளமை பற்றி யாரும் பேசு­வ­தில்லை. ஆக நாம் எமக்குச் சொந்­த­மான சகல காணி­க­ளையும் மீட்­டெ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை திட்­ட­மிட்டு மேற்­கொண்டு வரு­கிறோம் என்­கின்­றனர் நிர்­வா­கிகள். 

எனினும் இந்தக் காணி­களை சட்ட ரீதி­யாக மீட்­ப­தற்­கான போது­மான ஆவ­ணங்கள் இல்­லாமை கார­ண­மாக அவற்றைத் திரட்­டு­வ­தற்­கான முயற்­சி­களை பள்­ளி­வாசல் நிர்­வாகம் மேற்­கொண்டு வரு­கி­றது. ஜய­சிங்க காணி விட­யத்தில் உரிய ஆவ­ணங்­க­ளின்றி வழக்குத் தாக்கல் செய்­ததால் ஏற்­க­னவே இரு முறை முஸ்­லிம்கள் தோல்­வியைச் சந்­தித்­துள்­ளனர். மூன்­றா­வது வழக்கும் தோல்­வி­ய­டையும் அபா­யத்தை எதிர்­கொண்­டுள்­ளது. இதனால் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­களின் ஆலோ­ச­னை­க­ளுக்­க­மைய உரிய ஆவ­ணங்­களைத் திரட்டி வழக்குத் தாக்கல் செய்ய தயா­ராகி வரு­கிறோம். இது­வி­ட­யத்தில் நாம் எந்த விட்டுக் கொடுப்­புக்கும் தயா­ரில்லை என்றும் பள்ளி நிர்­வாகம் கூறு­கி­றது. 

புறக்­கோட்டை கடைத் தொகுதி

அர­சாங்கம் 1950 இல் மாளி­கா­வத்தை மைய­வாடிக் காணியில் 28 ஏக்­கரைப் பெற்றுக் கொண்ட போதிலும் அதற்­கான பெறு­ம­தியை பள்­ளி­வா­ச­லுக்கு பண­மா­கவும் வழங்­கி­யது.  இந்தப் பணத்தைக் கொண்­டுதான் கொழும்பு கெய்ஸர் வீதியில் 34 பேர்ச் காணியில் கடைத் தொகுதி ஒன்று கொள்­வ­னவு செய்­யப்­பட்­டது. எனினும் 1983 இல் இந்தக் கட்­டிடம் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டது. இதன் பிற்­பாடு தனி நபர் ஒரு­வ­ருக்கு 25 வருட குத்­தகை அடிப்­ப­டையில் இக் கடைத் தொகு­தியை மீள நிர்­மா­ணித்து வாட­கைக்கு விட ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்­ளது. இதில் இப்­போது மொத்­த­மாக 256 கடைகள் உள்­ளன.  இக் கடைகள் மூல­மாக பள்­ளி­வா­ச­லுக்கு மாதாந்தம் கிடைக்க வேண்­டிய சரா­சரி வரு­மானம் கிட்­டத்­தட்ட 50 இலட்சம் ரூபா­வாகும்.  

இவ்­வாறு மேற்­படி மையா­வடிக் காணி மூல­மா­கவும் புறக்­கோட்டை கடைத் தொகுதி மூல­மா­கவும் பள்­ளி­வா­ச­லுக்கு மாதாந்தம் 80 இலட்சம் ரூபா வரு­மானம் கிடைக்கப் பெற வேண்டும்.  ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக இப்­போது மிகச் சொற்ப தொகையே இதன் மூலம் பள்­ளிக்கு கிடைக்­கி­றது. இப்­போதும் கூட பள்­ளி­வா­சலின் மாதாந்த நிர்­வாக செல­வு­களை முன்­கொண்டு செல்­வ­தற்கு ஜும்­ஆவின் பின்னர் வாளி­களை ஏந்த வேண்­டிய நிலை­யில்தான் நிர்­வாகம் உள்­ளது.  அத­னால்தான் முழு­மை­யான வரு­மா­னத்தை சட்ட ரீதி­யாகப் பெற்றுக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை புதிய நிர்­வாகம் மேற்­கொண்டு வரு­கி­றது.

இவ்­வாறு மாதாந்தம் 80 இலட்சம் ரூபாவை எங்­களால் சரி­யாக திரட்ட முடி­யு­மாயின் அதில் 10 இல் ஒரு பங்கு பள்­ளி­வாசல் நிர்­வாக செல­வுக்குப் போனால் மீதிப் பணத்தை முழு இலங்கை முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் வறுமை ஒழிப்­புக்­கா­கவும் கல்வி அபி­வி­ருத்­திக்­கா­கவும் சுக­வீ­ன­முற்­ற­வர்­களின் சிகிச்­சை­க­ளுக்­கா­கவும் இன்னும் தேவை­யான சகல விட­யங்­க­ளுக்­கா­கவும் எம்மால் பயன்­ப­டுத்த முடியும் என்றும் நிர்­வா­கிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். இந்த தூர நோக்­கான திட்­டத்­தில்தான் நாம் படிப்­ப­டி­யாக செயற்­பட்டு வரு­கிறோம். எடுத்த எடுப்பில் ஒரே இரவில் இந்த மாற்­றங்­களைக் கொண்­டு­வர முடி­யாது. 

இந்த இலக்கை எட்­டவும் பள்­ளி­வா­ச­லுக்­கு­ரிய சொத்­துக்­களை மீட்­கவும் பாடு­பட வேண்­டி­யது பள்ளி நிர்­வா­கத்­திற்கு மாத்­திரம் உரிய பணி­யல்ல. முழு இலங்கை முஸ்­லிம்­களும் இதற்கு ஒத்­து­ழைப்பு நல்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலின் தற்­போ­தைய நிர்­வாகம் தனது கடமைகளைச் சிறப்பாக முன்னெடுத்து வருகிறது. நிர்வாக சபைக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் சேவைகளை எவரும் குழப்பிவிடக் கூடாது என்கிறார் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாசீன்.

'' பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாக சபைக்கு எதிராக இதுவரை வக்பு சபைக்கு எவ்வித முறைப்பாடுகளும் சமர்ப்பிக்கப்படவில்லை. புதிய நிர்வாக சபை பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்டு இதுவரை காலம் கண்டுபிடிக்கப்படாமலிருந்த பல காணிகளின் உறுதிகளை தேடிக் கண்டுபிடித்துள்ளது. பல வருடகாலம் பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டடங்களிலிருந்து பெற முடியாதிருந்த வாடகை நிலுவைகளைத் திரட்டியுள்ளது. 

புதிய நிர்வாகத்தின் செயற்பாடுகளை வக்பு சபை பாராட்டுகிறது. பெரிய பள்ளிவாசலுக்கு புத்தி ஜீவிகளை நிர்வாகிகளாக நியமிப்பதற்கு முஸ்லிம் சமூக சட்டத்தரணிகள் பாடுபட்டனர். அவர்களை நான் பாராட்டுகிறேன்'' என்றும் வக்பு சபைத் தலைவர் குறிப்பிடுகிறார். 

அந்த வகையில் இலங்கையில் பெரிய பள்ளிவாசல் என அழைக்கப்படும் ஒரே வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட கொழும்பு பெரிய பள்ளிவாசலின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் அதன் அந்தஸ் தையும் மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் பாடுபட வேண்டியது நம் அனை வரதும் கடமையாகும். அந்தப் பணியை முன்னெடுக்கும் புதிய நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டியதும் எமது பொறுப்பாகும்.