Verified Web

அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள்

SNM.Suhail

 ஊடகவியலாளர், 
விடிவெள்ளி

2017-07-26 08:15:36 SNM.Suhail

1978 ஆம் ஆண்டு இலங்கை சன­நா­யக சோச­லிச குடி­ய­ரசின் அர­சியல் யாப்­புக்­க­மைய விகி­தா­சார விருப்­பு­ வாக்­கு­முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த தேர்தல் சட்­டத்­தி­னூ­டான வெட்­டுப்­புள்ளி முறைமை சிறு­கட்­சி­க­ளுக்கு பெரும் வரப்­பி­ர­சா­த­மாக காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­தி­செய்­யக்­கூ­டிய காப்­பீ­டாக பார்க்­கலாம். எனினும் விருப்­பு­வாக்­கு­களை அள்­ளிக்­கொள்­வ­தற்கு இருக்­கின்ற போட்­டித்­தன்மை மற்றும் பணம் செல­வி­டுதல், இன­வா­தத்தை கிளப்­புதல் உள்­ளிட்ட தேசி­ய­ரீ­தி­யி­லான பாரிய விளை­வு­களை நாம் அண்­மைக்­கா­ல­மாக அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்­கிறோம்.

இதன்­வி­ளை­வாக இன்று தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும் என்­கிற கோரிக்கை மேலெ­ழுந்­துள்­ளது. அதற்­கான நியா­யங்கள் இருப்­பினும் சிறு­கட்­சி­க­ளும் சிறு­பான்மை சமூ­கமும் இதற்கு எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தா­ம­லில்லை.

இது இவ்­வா­றி­ருக்க விகி­தா­சார விருப்பு வாக்­கு­மு­றை­யின்கீழ் அர­சி­யல்­வா­தி­யொ­ருவர் இலட்­சக்­க­ணக்­கான வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­வ­தென்­பது தற்­போது சாதா­ரண விட­ய­மா­னாலும் சிறு­பான்மை சமூ­கத்­திற்கு அது முயற்­கொம்­பா­ன­தொன்று என்றே கூற வேண்டும். எனினும் பெரும்­பான்மை மக்­களின் வாக்­கு­களை பெற்றால் மாத்­தி­ரமே தனது விருப்பு வாக்கு வங்­கியை இலட்­சத்தை எட்­டச்­செய்­யலாம். அம்­பாறை மாவட்­டத்தில் ஓர் இலட்சத்­திற்கு அதி­க­மான முஸ்லிம் வாக்­கா­ளர்கள் இருந்த போதிலும் அங்கு போட்­டி­யிட்ட முஸ்லிம் தலை­மை­களால் இலட்­சக்­க­ணக்­கான விருப்பு வாக்­கு­களை இது­வரை அள்­ளிக்­கொள்ள முடி­ய­வில்லை. அது­போன்றே இது­வ­ரைக்கும் மூன்று தமிழ் அர­சி­யல்­வா­தி­களால் மாத்­திரமே இலட்­சத்தை எட்­ட­மு­டிந்­துள்­ளது. ஆனால் ஐந்து முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இலட்­சக்­க­ணக்­கான வாக்­கு­களை எட்­டி­யி­ருக்­கின்­றனர். இவர்­களின் வாக்­குகள் பெரும்­பான்­மை­யி­னரின் வாக்­கு­களின் உத­வி­யு­ட­னேயே இலட்­சத்தை எட்­டி­யி­ருக்­கி­றது.

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பி.திகாம்­பரம் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லிலும், கம்­பஹா மாவட்­டத்தில் ஜெயராஜ் பெர்னாண்டோ­பிள்ளை 2000 ஆம் ஆண்டு தேர்­த­லிலும் ஒரு இலட்­சத்­துக்கு மேற்­பட்ட வாக்­கு­களை பெற்­றனர். திகாம்­பரம் கணி­ச­மான மலை­யக தமி­ழர்­களின் வாக்­கு­களால் ‍இலட்­சத்தை எட்­டி­னாலும் ஜெயராஜ் பெர்னாண்டோ­பிள்ளை சிங்­க­ள­ வாக்­கு­க­ளா­லேயே வெற்­றி­பெற்றார்.

இவர்­களைத் தவிர தனித் தமிழ் வாக்­கு­களால் இலட்­சத்தை எட்­டி­யவர் வடக்­கு­ மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் ஆவார். 2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை தேர்­தலில் 1 இலட்­சத்து 32 ஆயி­ரத்து 255 வாக்­கு­களை பெற்­ற­மையே தமிழ் வேட்­பாளர் ஒருவர் பெற்ற அதி­க­ப்ப­டி­யான வாக்­கு­க­ளாகும். இதில் நூற்­றுக்கு 99 வீத தமிழ் வாக்­கு­களே அடங்கும். இந்­த­ள­வான வாக்கு வங்­கியை எந்­த­வொரு முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளாலும் இது­வரை நிரப்ப முடி­ய­வில்லை. 

அதி­க­ப்ப­டி­யான வாக்­கு­களை பெற்ற முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் பெரும்­பான்மை மக்­களின் பேரா­த­ர­வு­ட­னேயே இலட்­சக்­க­ணக்­கான வாக்­கு­களை பெற்­றி­ருக்­கின்­றனர். அவர்கள் சிறு கட்­சிகள் அல்­லது முஸ்லிம் கட்­சி­களில் போட்­டி­யிட்டு அவ்­வாறு இலட்­சத்தை எட்­ட­வில்லை. பெருந் தேசியக் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னூ­டா­கவே இவ்­வாறு வாக்­கு­களை அள்­ளிக்­கொண்­டனர். 

இதில் மற்­று­மொரு விட­யத்தை நினை­வு­ப­டுத்த வேண்டும். 2004 ஆண்டு பொதுத் தேர்­தலில் ஐ.தே.க. அரசை வீழ்த்தி சுதந்­தி­ரக்­கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு ஆட்­சிக்கு வந்­த­போது இரு முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இலட்­சக்­க­ணக்­கான வாக்­கு­களை எட்­டினர். அதே­போன்று 2015 ஆம் ஆண்டு ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் ஆட்­சியை கவிழ்த்து ஐக்­கிய தேசியக் கட்சி வெற்­றி­பெற்ற சந்­தர்ப்­பத்தில் யானை சின்­னத்தில் போட்­டி­யிட்ட மூன்று வேட்­பா­ளர்கள் இலட்­சக்­க­ணக்­கான வாக்­கு­களை பெற்­றனர்.

இனி விட­யத்­திற்கு வருவோம், இலங்கை அர­சியல் வர­லாற்றில் தேர்தல் ஒன்றில் அதி­கூ­டிய விருப்பு வாக்குகளை பெற்­ற முஸ்லிம் அரசியல்வாதி ஒரு பெண்­ணாவார். அவர் வேறு­யா­ரு­மல்ல மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யூ­டாக அர­சி­யலில் பிர­வே­சித்த அப்துர் ரஹ்மான் அஞ்சான் உம்மா ஆவார். இவர் 2004 இல் இடம்­பெற்ற தேர்­த­லின்­போது கம்­பஹா மாவட்­டத்தில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­தி­நி­தி­யாக ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் வெற்­றிலை சின்­னத்தில் போட்­டி­யிட்டு 111,755 வாக்­கு­களைப் பெற்றார். இது 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் கண்டி மாவட்­டத்தில் அமைச்சர் ஹலீம் பெற்­றுக்­கொண்ட (111,011) வாக்­கு­களை விட 744 வாக்­குகள் அதி­க­மா­ன­தாகும். 

எனவே, அதி­கூ­டிய விருப்பு வாக்கை பெற்­றவர் அஞ்சான் உம்மா ஆவார். 2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லின்­போது மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு கிடைத்த தேசி­யப்­பட்­டியல் ஆசனம் அஞ்சான் உம்­மா­வுக்கு வழங்­கப்­பட்­டது. பின்னர் 2001 ஆம் ஆண்டு தேர்­தலில் கம்­பஹா மாவட்­டத்தில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் மணி சின்­னத்தில் போட்­டி­யிட்டு 10,834 வாக்­கு­களை பெற்று மீண்டும் பாரா­ளு­மன்றம் பிர­வே­சித்தார். 2004 ஆம் ஆண்டு 13 ஆவது பொதுத் தேர்­தலில் 111,755 வாக்­கு­களை பெற்று அஞ்சான் உம்மா சாதனை படைத்தார்.

இவர் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாத­ம­ளவில் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யி­லி­ருந்து பிரிந்து விமல் வீர­வன்ச அணி­யில் இணைந்து மஹிந்­த­வுடன் சேர்ந்­து ­கொண்டார். அத்­துடன், விமல் வீர­வன்ச தலை­மை­யி­லான தேசிய சுதந்­திர முன்­ன­ணியில் முக்­கி­யஸ்­த­ராகத் திகழ்ந்தார். மணி­யி­லி­ருந்து விலக தனது அர­சியல் வாழ்­வுக்கு சாவுமணி அடித்­துக்­கொண்டார் என்­றுதான் இந்த சந்­தர்ப்­பத்தில் கூறி­யா­க­வேண்டும். பின்னர் 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் பிர­தி­நி­தித்­து­வத்தை இழந்தார்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் நாட்டில் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் மஹிந்த அர­சாங்­கத்தில் ஒட்­டிக்­கொண்­டி­ருந்த விமலின் தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து வெளி­யே­றினார். 2012 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 31 ஆம் திகதி ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்­து­கொண்டார். 2014 மார்ச்சில் இடம்­பெற்ற மாகாண சபை தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் யானைச்­ சின்­னத்தில் போட்­டி­யிட்ட அஞ்சான் உம்­மாவால் போதி­ய­ளவு விருப்பு வாக்­கு­களைப் பெற­மு­டி­யா­மல்­போ­னது. கள்­எ­லிய பகு­தியைச் சேர்ந்த அந்த ஆளுமை மிக்க பெண்­மணியின் அர­சியல் நிலைப்­பாடு எவ்­வாறு இருக்­கி­றது என்­பது தெரி­ய­வில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்தும் அர­சியல் செயற்­பாட்டில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

அஞ்சான் உம்­மா­வுக்கு முன்­ன­தாக தேர்தல் ஒன்றில் ஒரு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட வாக்­கு­களை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி பெற்­றி­ருக்­கிறார். இவர் 2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் 100,200 வாக்­கு­களை பெற்றார். அத­னை­விட  2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் 103,817 விருப்பு வாக்­கு­களை பெற்றார். இவரை விட 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் கண்டி மாவட்­டத்தில் போட்­டி­யிட்ட அமைச்சர் அப்துல் ஹலீம் 111,011 வாக்­கு­க­ளையும் கேகாலை மாவட்­டத்தில் போட்­டி­யிட்ட கபீர் ஹாசிம் 109,030 வாக்­கு­க­ளையும் பெற்­றனர். முத­லா­மி­டத்தில் அஞ்சான் உம்­மாவும் இரண்டாம் இடத்தில் அப்துல் ஹலீமும் மூன்­றா­மி­டத்தில் கபீர் ஹாசிமும் இருக்­கின்­றனர். இவர்­களை தவிர ஒரு இலட்­சத்தை தாண்­டிய விருப்பு வாக்­கு­களை முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் கண்டி மாவட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் யானைச் சின்­னத்தில் போட்­டி­யிட்டு 102,186 வாக்­கு­களை பெற்று ஐந்­தா­மி­டத்தில் இருக்­கின்றார்.

அஞ்சான் உம்மா கம்­பஹா மாவட்­டத்தில் சிங்­கள மக்­களின் ஆத­ர­வு­ட­னேயே இவ்­வாறு அதி­கப்­ப­டி­யான வாக்­கு­களை பெற­மு­டிந்­தது. அது மாத்­தி­ர­மன்றி அவர் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய மக்கள் விடு­தலை முன்­ன­ணியே அவரின் வாக்­கு ­வங்­கியை அப்­போது உயர்த்­தி­யது. அக்­கட்­சி­யி­லி­ருந்து வில­கி­ய­தை­ய­டுத்து பிர­தி­நி­தித்­து­வத்தை இழந்­த­மையை இங்கு சுட்­டிக்­காட்­டலாம். 

கண்டி மாவட்­டத்தில் விகி­தா­சார தேர்தல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் முஸ்லிம் வாக்­குகள் ஒன்று குவிந்து இரண்டு தொடக்கும் நான்கு எம்.பி.க்களை பெறக்­கூ­டி­ய­தாக இருந்­துள்­ளது. எனினும் எம்.எச்.ஏ. ஹலீம் ஹாரிஸ்­பத்­துவ தொகு­தி­யி­லுள்ள சிங்­கள மக்­களின் பேரா­த­ர­வு­டனும் முஸ்லிம் மக்­களின் தெரிவின் கார­ண­மாவே அதி­கூ­டிய வாக்­கு­களை பெற முடிந்­தது. அத்­துடன் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ஹக்­கீமின் வெற்­றிக்கு இரு விட­யங்கள் கார­ண­மாக அமைந்­தி­ருந்­தன. முஸ்லிம் மக்­களின் ஆத­ர­வுக்கு மேல­தி­க­மாக கண்­டியில் ஓர­ளவு தமிழ் வாக்­கு­களும் சிங்­கள வாக்­கு­களும் அவ­ருக்கு கிடைத்­தன. கண்­டியில் கள­மி­றங்­கிய வேலு­கு­மா­ருக்கு அதி­க­ப்ப­டி­யான தனி விருப்பு வாக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது உண்­மையே. எனினும் வேலு­கு­மா­ருக்கு அடுத்­த­ப­டி­யாக தமிழ் மக்­களின் தெரிவு ஹக்­கீ­மா­கவே இருந்­தது. இது தவிர கண்டியில் பல சிங்கள இணைப்பாளர்களை ஹக்கீம் கொண்டுள்ளார். இதனடிப்படையிலேயே அவரால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற முடிந்தது.

கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட கபீர் ஹாசிம் 60 வீதத்திற்கும் மேற்பட்ட சிங்கள வாக்குகளினாலேயே 2015 ஆம் ஆண்டு 1 இலட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். அமைச்சர் பெளஸி மாத்திரம் இரண்டு தடவைகள் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றார். கொழும்பில் முஸ்லிம்கள் ஐ.தே.க.வுக்கு தொடர்ந்து அதிகப்படியான ஆதரவை வழங்கும் நிலையில் சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெளசி ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றமை சாதனையே. 

இனிவரும் காலங்களில் தொகுதிவாரி தேர்தல் முறைமை அமுலுக்கு வருமாயின் இவ்வாறு விருப்பு வாக்குகளுக்கு முண்டியடித்துக் கொள்ளும் தேவை இராது. எனினும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை மத்திய கொழும்பு மற்றும் ஹாரிஸ்பத்துவ தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களால் பெற்றுக்கொள்ள முடியும் என ஊகிக்கலாம்.