Verified Web

சவால்களை பொறுமையோடு எதிர்கொண்ட ஆளுமை

2017-07-23 06:31:42 Administrator

சிங்­க­ளத்தில் : சகீப் ஷாம் (தன்வீரி)
தமிழில் : ஏ.எல்.எம்.சத்தார்


பிரதமர் ரணிலின் 40 வருட அரசியல் வாழ்க்கை தொடர்­பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்காருடன் நேர்காணல் 

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்தில் பிர­வே­சித்து நாளை 22 ஆம் திக­தி­யுடன் 40 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. தற்­போ­துள்ள அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மத்­தியில் பாரா­ளு­மன்ற வாழ்வில் தொடர்ச்சியாக நான்கு தசாப்­தங்­களை நிறைவு செய்­துள்ள ஒரே அர­சி­யல்­வா­தி­யாக இவர் திகழ்­கிறார். 

எனவே ஐக்­கிய தேசிய  கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான முன்னாள் ஊடக அமைச்­சரும் தற்­போ­தைய தேசிய ஊடக சபைத் தலை­வ­ரு­மான இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் ஊடாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சியல் பயணம் குறித்து சிங்­கள மொழியில் மேற்­கொள்­ளப்­பட்ட நேர்­கா­ணலின் தமி­ழாக்கம் இங்கு தரப்­ப­டு­கி­றது. 

பிர­த­ம­ர் ரணிலுக்கும் இம்­தியாஸ் பாக்கிர் மாக்­கா­ருக்குமிடையே கடந்த காலங்­களில் அர­சியல் ரீதி­யான முரண்­பா­டுகள் நில­விய போதிலும் இப்­போது இடம்­பெறும் உரை­யா­டலில் அது எத்­த­கைய பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை என்­ற­வாறு இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் நேர்­கா­ண­லுக்கு முகம் கொடுத்தார்.     

பிர­த­ம­ரு­ட­னான முத­லா­வது சந்­திப்பு எப்­போது நிகழ்ந்­தது-?
1973 ஆம் ஆண்டு, ஐக்­கிய தேசியக் கட்­சியின் பழைய தலை­மை­ய­க­மான ஸ்ரீகொத்தா மண்­ட­பத்தில் வைத்தே எமது தொடர்பு ஆரம்­ப­மா­னது. அப்­போது நான் பல்­க­லைக்­க­ழக மாண­வ­னாக இருந்தேன். அத்­துடன் ஐ.தே.க.மாணவர் முன்­ன­ணியின் மத்­திய செயற்­பாட்டு சபை உறுப்­பி­ன­ரா­கவும் பணி­யாற்றிக் கொண்­டி­ருந்தேன். தற்­போது தேசிய சேவைகள் சங்­கத்தின் பொதுச் செய­லா­ள­ராகக் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருக்கும் ஸ்ரீனால் டி மெல் என்­ப­வரே ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை எனக்கு முதன்­மு­த­லாக அறி­முகம் செய்து வைத்தார். 

பழைய ஸ்ரீகொத்தா மண்­ட­பத்தில் பல­கையால் அமைக்­கப்­பட்ட மாடிப்­ப­டிகள் மீது நான் ஸ்ரீனால் டி மெல்­லுடன் ஏறிக் கொண்­டி­ருந்தேன். அப்­போது அதே படி­களில் வந்து கொண்­டி­ருந்த ஓர் இளை­ஞரைச் சுட்­டிக்­காட்டி “வரு­கி­ற­வரைத் தெரி­யுமா?” என்று ஸ்ரீனால் என்­னிடம் வின­வினார். “தெரி­ய­வில்­லையே” என்று நான் பகர்ந்தேன். “இவர்தான் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எஸ்மண்ட் விக்­கி­ர­ம­சிங்­கவின் புதல்வர்” என்று ஸ்ரீனால் எனக்கு ரணிலை அறி­முகம் செய்து வைத்தார்.

உடனே நான் அவ­ருக்கு கைலாகு கொடுத்து “மிஸ்டர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவர்­களே” என்று கௌர­வ­மாக விளித்தேன். எனது பெய­ரையும் தெரிந்து கொண்ட அவர், இம்­தியாஸ் என்னை “விக்­கி­ர­ம­சிங்க அவர்கள்” என்று அழைக்கத் தேவை­யில்லை. வெறு­மனே “விக்­ர­ம­சிங்க என்று மாத்­திரம் சொன்னால் போதும்” என்று மிகவும் எளி­மை­யாக பகிர்ந்தார். இதுவே எங்கள் இரு­வ­ருக்கும் இடை­யி­லான முதல் சந்­திப்பும் முதல் உரை­யா­ட­லு­மாகும். 

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வாலிப காலத்தில் தாங்கள் இளம் இளை­ஞ­னாக இருந்த போது ரணி­லுடன் பணி­யாற்­றி­யி­ருக்­கி­றீர்­களா?
1970 களில் ஐக்­கிய தேசிய கட்­சியின் மாணவர் பிரி­வையும் வாலிபர் பிரி­வையும் வழி­ந­டத்தும் பொறுப்பை ஜே.ஆர்.ஜய­வர்­தன, ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் ஒப்­ப­டைத்­தி­ருந்தார். அந்த சந்­தர்ப்­பத்­தி­லேதான் நான் மாணவர் பிரிவில் இணைந்து ரணி­லுடன் செயற்­பட்டேன். 1973 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் எங்­க­ளுக்­கென்று மாணவர் முன்­னணி ஒன்று இருக்­க­வில்லை.

எமது கட்­சிக்­கான முத­லா­வது மாணவர் முன்­ன­ணி­யொன்றை அமைப்­ப­தற்­காக நான் ரணி­லுடன் பேரா­தெ­னி­ய­வுக்குச் சென்றேன். மாணவர் முன்­ன­ணியின் கூட்டம் ஒன்றை நடத்­து­வ­தற்­கு­ரிய சூழல் ஒன்று அப்­போது பேரா­தெ­னிய வளாக வளவில் இருக்­க­வில்லை. அப்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த ஷெல்டன் நடராஜாவின் வீட்­டி­லேயே எமது மாணவர் முன்­ன­ணியின் அங்­கு­ரார்ப்­பணக் கூட்டம் நடத்­தப்­பட்­டது. எம்­முடன் நெருக்­க­மான மாண­வர்­களே இங்கு சமு­க­ம­ளித்­தி­ருந்­தனர்.

இவ்­வாறு தோற்றம் பெற்று 1977 ஆம் ஆண்டு பல்­க­லைக்­க­ழக தேர்­தலின் போது ஐ.தே.க. மாணவர் முன்­னணி இரண்டாம் இடத்­துக்கு வந்­தது. அதே ஆண்டு களனி பல்­க­லைக்­க­ழ­கத்தில் இடம்­பெற்ற தேர்­தலில் எமது மாணவர் முன்­னணி முத­லிடம் பெற்­றது. ஐ.தே.க. மாணவர் முன்­ன­ணியின் வர­லாற்றில் வெற்றி வாகை சூடி அதி­கா­ரத்­துக்கு வந்த முத­லா­வது சந்­தர்ப்பம் இது­வாகும்.

ஆனால், களனி பல்­க­லைக்­க­ழ­கத்தில் எமது மாணவர் முன்­ன­ணியைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதில் நாம் 1973 களில் அனு­ப­வித்த இன்­னல்கள் கொஞ்­ச­நஞ்­ச­மல்ல. பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­குள்ளே கூட்­டங்கள் நடத்த முடி­ய­வில்லை. ஜே.ஆர்.ஜய­வர்­தன களனி தொகு­தியில் போட்­டி­யிட்டபோது அவ­ருக்கு ஆத­ரவு வழங்­கிய ஒரு­வரின் வீடு மேற்­படி பல்­க­லை­க­ழ­கத்­திற்கு அருகே இருந்­தது. அது நிஹால் சம­ரக்­கொடி என்­ப­வரின் வீடாகும். அதனை நாம் ‘ஹம்­மடு கெதர’ என்றே அழைத்து வந்தோம்.

அங்கு தான் நான் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களைத் திரட்டி எமது மாணவர் முன்­னணிக் கூட்­டங்­களை நடத்தி வந்தோம். ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­ட­னான எனது பய­ணத்தின் ஆரம்பக்  கட்டம் இவ்­வாறு தான் அமைந்­தி­ருந்­தது. 

பிர­த­மரின் நீண்­ட­கால அர­சியல் பய­ணத்­திற்கு அவ­ரது குடும்பப் பின்­னணி எவ்­வாறு அமைந்­தது என்­பதை உங்­களால் குறிப்­பிட முடி­யுமா-?
ரணில் விக்­ர­ம­சிங்க தாய் வழி­யா­கவும் தகப்பன் வழி­யா­கவும் மிகவும் பலம்­வாய்ந்த அர­சியல் பின்­ன­ணி­யி­லி­ருந்தே அர­சி­யலில் பிர­வே­சித்­தவர் என்றே நான் அவரை நோக்­கு­கிறேன். அவ­ரது தந்­தை­யான எஸ்மண்ட் விக்­ர­ம­சிங்க, இந்­நாட்டின் இட­து­சாரிக் கொள்­கையில் மிகவும் சக்­தி­வாய்ந்த செயற்­பாட்­டா­ள­ராக விளங்­கி­யவர். அத்­துடன் ஊட­கத்­து­றையின் ஜாம்­பவான். ஊடக சுதந்­தி­ரத்­திற்­காற்­றிய மகத்­தான பங்­க­ளிப்­புக்­காக ‘தங்க எழு­துகோல்’ எனும் விருதைப் பெற்­றவர்.

சமூக நீதி, நேர்­மையில் ஊறிப்­போன இவ­ரது அருங்­கு­ணங்கள் சிறு­வ­ய­தி­லி­ருந்தே ரணில் விக்­ர­ம­சிங்­கவின் உள்­ளத்­திலும் ஊடு­ரு­வி­யதில் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை. ரணிலின் தாத்தா ஆங்­கி­லேய ஆட்­சியின் போது நிர்­வாக சேவையில் உயர் பதவி வகித்­தவர். டீ.எஸ்.சேனா­நா­யக்­கவின் பரி­பா­லன காலத்தில் காணி ஆணை­யா­ள­ராக கட­மை­யாற்றி வர­லாற்றில் தடம் பதித்­துள்ளார்.

ரணிலின் தாய் வழியை உற்று நோக்­கினால் சுதந்­திர போராட்­டத்தின் வீரர்­களில் ஒரு­வ­ராக டீ.ஆர்.விஜே­வர்­தனா மிகவும் போற்­றப்­ப­டு­ப­வ­ராவார். ‘பேரே’ எனும் இல்­லத்தின் சொந்­தக்­காரர். இவரின் சகோ­த­ரிதான் ரணிலின் தாயார். மிகவும் பாரம்­ப­ரிய பௌத்த மதப் பரம்­ப­ரையில் வந்­தவர் ரணிலின் தாயார்.

ரணில் விக்­ர­ம­சிங்­கவின் பாரா­ளு­மன்ற பிர­வே­சத்தின் ஆரம்பம் எப்­போது நிகழ்ந்­தது? 
ரணில் விக்­ர­ம­சிங்க 1977 ஆம் ஆண்டு முதன்­மு­த­லாக பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரிவு செய்­யப்­பட்டார். அத்­துடன் வெளி­நாட்டு விவகாரங்களுக்கான பிரதி அமைச்­ச­ரா­கவும் நிய­மனம் பெற்றார். அப்­போது வெளி­நாட்டு அமைச்­ச­ராக ஏ.ஸீ.எஸ்.ஹமீத் பத­வி­யி­லி­ருந்தார். வெளி­வி­வ­கார அமைச்சர்  என்ற வகையில் சர்­வ­தேச நாடு­க­ளுடன் நெருங்­கிய உற­வு­களை வைத்துக் கொண்டு நாட்டை உயர்­நி­லைக்குக் கொண்டு வரும்  பாரிய பொறுப்பை ஜனா­தி­பதி ஜே.ஆர். அமைச்சர் ஹமீத் மீது சுமத்­தி­யி­ருந்தார்.

இதனால் ஏ.ஸீ.எஸ்.ஹமீத் பெரும்­பா­லான காலத்தை வெளி­நாட்டு விஜ­யங்­க­ளிலே கழித்து வந்தார். இதனால் மேற்­படி அமைச்சின் பிர­தி­ய­மைச்­ச­ரா­க­வி­ருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடிக்­கடி பதில் அமைச்சுப் பொறுப்­பை­யேற்று கட­மை­யாற்றும் வாய்ப்பைப் பெற்றார். இதனால் இளம்­வா­லிபப் பரு­வத்­தி­லேயே பொறுப்பு வாய்ந்த பத­வியைக் கையாளும் மிகவும் பாரி­ய­தொரு அனு­பவம் இவ­ருக்குக் கிடைத்­தது. 

ஜே.ஆரின் அர­சாங்­கத்தில் வாலிப அமைச்சர் என்ற வகையில் இளைஞர் விவ­கார அமைச்­சையும் ரணில் அலங்­க­ரித்­தா­ரல்­லவா? 
ஆம், அவர் இளைஞர் விவ­கார அமைச்சுப் பொறுப்­பையும் ஏற்று செவ்­வனே வழி­ந­டாத்தி வந்தார். அப்­போது புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட இளைஞர் விவ­கார அமைச்சின் முத­லா­வது அமைச்சர் என்ற பெரு­மையும் இவ­ரையே சாரும். அப்­போது உரு­வாக்­கப்­பட்ட வாலிபர் சேவைச் சபையின் பணிப்­பா­ள­ராக ரணில் என்னை நிய­மனம் செய்தார். இந்தப் பத­வியும் ரணி­லுடன் மிகவும் நெருங்கிப் பணி­யாற்­றக்­கூ­டிய நல்­ல­தொரு வாய்ப்­பாக அமைந்­தது.

இந்தக் கால ­எல்­லையில் இளைஞர் விவ­காரம் தொடர்­பாக மாபெரும் புரட்­சி­யொன்றை ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவால் சாதிக்க முடிந்­தது. இந்­நாட்டில் வாலிப சமூ­கத்­துக்­கான திட்­டங்கள் பல அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. இளைஞர் சேவை மன்றம் உரு­வாக்­கப்­பட்­டது. மஹ­ர­கம வாலிபர் மத்­திய நிலையம் போன்­ற­வையும் வாலிபர் கூட்­டு­ற­வுத்­துறை போன்­ற­வையும் ரணில் இளைஞர் விவ­கார அமைச்­ச­ரா­க­வி­ருந்த காலத்­தி­லேதான் உரு­வாக்கம் பெற்­றன. இவ்­வாறு வாலி­பர்­க­ளுக்­கான பரந்­த­ள­வி­லான வேலைத் திட்­டங்கள் பலவும் ரணிலின் அந்த யுகத்­தில்தான் முடுக்­கி­வி­டப்­பட்­டன. 

ஜே.ஆரின் ஆட்­சியில் தானே ரணில் கல்வி அமைச்­ச­ரா­கவும் உயர் அந்­தஸ்தைப் பெற்றார்?
ஆம், அது இந்­நாட்டு வர­லாற்றில் ஓர் அங்கம். நாட்டின் கல்வி உயர்­வுக்­காக அரும்­பா­டு­பட்டார். பல்­வேறு உத்­தி­க­ளையும் கையாண்டு ஆசி­ரியர் நிய­ம­னங்­களை வழங்­கினார். அதற்­காக கல்வி விஞ்­ஞான பீடத்தை உரு­வாக்­கினார்.

இந்­நாட்டில் பெரும் பர­ப­ரப்­புக்கு இலக்­கான வெள்ளை வினாப்­பத்­திரம் இவ­ருக்கு புதி­ய­தொரு அனு­ப­வத்தைக் கொடுத்­தது. அனைத்து பிரச்­சி­னை­க­ளையும் சாது­ரி­ய­மாக அணுகி வெற்றி கண்டார். கல்வி அமைச்சர் என்ற வகையில் புதி­யதோர் அத்­தி­யா­யத்­திற்கு வழி­கோ­லினார். 

ஜனா­தி­பதி ஆர்.பிரே­ம­தா­ஸவின் நம்­பிக்­கையை வென்­றெ­டுத்த ஓர் அமைச்­ச­ராக இவரை இனம் காண­மு­டி­யு­மல்­லவா? 
பிய­கம தேர்தல் தொகுதி அங்­கத்­த­வ­ராக ரணில் அங்கம் வகித்த கால­கட்­டத்­தில்தான் பாரிய சுதந்­திர வர்த்­தக வல­ய­மாக பிய­கம பிர­தே­சத்தை அங்­கீ­க­ரித்து அப்­ப­கு­தியை வர்த்­தக வல­ய­மாக மிளிரச் செய்தார். காடாக காட்சி தந்த பிய­க­மையை ஒளிரும் நக­ராக மாற்­றி­ய­மைத்தார். மின்­சார வச­தி­களைச் செய்து ஒளி­யேற்­றினார். சாலைகள் அமைத்து தொழிற்­சா­லை­களைத் தோற்­று­வித்தார். இதன்­மூலம் வாலிபர், யுவ­தி­க­ளுக்கு தொழில்­வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்து தொழிற்­பு­ரட்­சி­யொன்­றுக்கே வழி வகுத்தார். இவ­ரது அய­ராத பணி­களை அப்­போ­தைய பிர­தமர் பிரே­ம­தாஸ கண்டு கொண்டார்.

பின்னர் 1988 ஆம் ஆண்டு பிரே­ம­தாஸ ஜனா­தி­ப­தி­யா­ன­வுடன் ரணில் விக்­ர­ம­சிங்­கவை கைத்­தொழில் அமைச்­ச­ராக நிய­மித்துக் கொண்டார். இதற்கு முன்னர் மேற்­படி அமைச்சு  வெறும் பெயர்ப்­ப­ல­கை­யு­டனே அநா­தை­யாக காட்சி தந்­தது.1988/1989 ஆம் ஆண்­டு­காலப் பகு­தியில் நாட்டில் கொந்­த­ளிப்­புகள் நிலவிக் கொண்­டி­ருந்த நிலையில் ரணில் பாரி­ய­தொரு சவாலை எதிர் கொண்டார்.வெளி­நாட்டு முத­லீ­டு­களை இங்கு கொண்­டு­வ­ரு­வதில் சிர­மங்­க­ளுக்கு முகம் கொடுத்தார்.

அத்­துடன் வாலி­பர்­களின் வேலை­யில்லாப் பிரச்­சி­னையைத் தீர்க்க வேலை வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்த வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருந்தார். கைத்­தொழில் துறையில் நாட்டைப் புத்­து­யி­ரூட்­டு­வதில் பகீ­ரதப் பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்டார். தனது அமைச்சில் உச்­ச­பட்ச பங்­க­ளிப்பை வழங்கி வந்த அதே நேரத்தில் சபை முதல்வர் பணி­யையும் நிறை­வேற்றும் பொறுப்பும் இவரை வந்­த­டைந்து அத­னையும் சிறப்­பாகச் செய்து சாதித்தார்.

படித்த அர­சியல் விவேகி என்ற வகையில் அவ­ரது வகி­பங்கு எவ்­வாறு இருந்­தது?
சட்­டத்­த­ரணி என்ற வகையில் பாரா­ளு­மன்ற சட்ட­திட்­டங்­களில் ஆழ­மான சிந்­த­னை­யுடன் காணப்­பட்டார்.
அந்த தேர்ச்சி பாரா­ளு­மன்ற விவா­தங்­க­ளிலும் பிர­தி­ப­லித்­தன.

அர­சியல் பரம்­ப­ரையில் வந்த ஓர் அர­சியல் ஞானி. இவர் சட்­டத்­து­றையில் சிறந்து விளங்­கி­னாலும் கூட வெளி­நாட்டு சர்­வ­கலா சாலை­களை நாடிச்­செல்­லாது இலங்­கை­யி­லேயே கற்றுத் தேர்ந்­தவர் என்ற சிறப்­புக்­கு­ரி­யவர். அதனால் இவர் இந்­நாட்­டி­லுள்ள வாலி­பர்­களின் நாடித்­து­டிப்பை நன்­கு­ணர்ந்­த­வ­ரா­கவும் அவர்­க­ளது உள்­ளக்­கி­டக்­கையை தெளி­வாகத் தெரிந்து வைத்­தி­ருப்­ப­வ­ரா­க­வுமே காணப்­ப­டு­கிறார்.

கடல் கடந்து சென்று பட்டம் பெற்­ற­வர்­க­ளிடம் இத்­த­கைய பண்­பு­களைக் காண்­பதும் அரிது எனறே கூறலாம். உள்­நாட்டு விவ­கா­ரங்கள் குறித்தோ சர்­வ­தேச விட­யங்கள் பற்­றியோ பிரச்­சி­னைகள், கருத்­து­களை முன் வைக்­கும்­போது எழுதி வைத்­துள்ள குறிப்­புக்கள் எத­னையும் பாராது வர­லாற்று நிகழ்­வு­களை அப்­ப­டியே எடுத்து வைக்கும் ஆழ­மான ஞாபக சிந்­தனை இவ­ருக்­குண்டு.

பெரும்­பா­லான இவ­ரது உரைகள் எழுதி வைத்து தாள்­களைப் பாரா­மலே இடம் பெறு­வதைக் காண்­கிறோம். நாட்டின் எதிர்­காலம் குறித்தும் தெளி­வான சிந்­தனை இவ­ரிடம் காணப்­ப­டு­கி­றது. அது பிரி­வி­னைக்­கெ­தி­ரான சிந்­த­னை­யாகும். சகல இன மதங்­க­ளையும் ஒரே கண்­ணோட்­டத்­து­டனே நோக்­குவார். எவ­ருக்கும் அநீதி இழைக்­கப்­ப­டு­வதைச் சகிக்க மாட்டார். இது ஐக்­கிய தேசிய கட்சி பாச­றையில் ஊறிய சிந்­த­னைத்­தெ­ளி­வாகும். அதன் நிழலில் வளர்ந்த பண்­பாகும்.

ஐ.தே.க பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கும் முகம் கொடுத்து வந்த பல சந்­தர்ப்­பங்­க­ளிலும் ரணில் விக்­ரம சிங்­கவின் நிலைப்­பாடு எப்­படி அமைந்­தது?
ரணில் விக்­ர­ம­சிங்­கவின் அர­சியல் வாழ்வில் அவர் பல­த­ரப்­பட்ட சிக்­கல்­க­ளுக்கும் முகம் கொடுத்து வந்­துள்ளார். கட்சி தலை­மைத்­துவம் தொடர்­பாக காமினி திஸா நாயக்­க­வுடன் முரண்­பட்ட சந்­தர்ப்பம் இருந்­தது. ஆனாலும் கட்­சிக்குள் சில சில சிக்­கல்கள் தலை­தூக்­கிய போதிலும் இவர் கட்­சியை உத­றித்­தள்­ள­வில்லை. காமினி திசா­நா­யக்க கட்­சியை விட்டு வெளி­யேறி பின்னர் மீண்டும் கட்­சிக்குள் வந்து தலைமைப் பொறுப்பை ஏற்ற சந்­தர்ப்­பத்­திலும் ரணில் கட்­சியின் கட்­டுக்­கோப்பை மதித்து நடந்தார். அதுதான் முக்­கி­ய­மான பண்­பாகும்.

ஜனா­தி­பதி பிரே­ம­தாஸ கொலை செய்­யப்­பட்­டதன் பின்னர் உரு­வான அரா­ஜக சூழ்­நி­லை சமா­ளிக்கப்பட்டதில் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு பங்குண்டா?
1993 ஆம் ஆண்டு மேதி­னத்­தன்று ஜனா­தி­பதி பிரே­ம­தாஸ கொல்­லப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் அந்த இடத்­தி­லி­ருந்து லங்­கா­தீப நிறு­வன வாக­னத்தில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த ரணில் அதில் என்­னையும் ஏற்­றிக்­கொண்டு வந்தார். அவர் பாது­காப்பு அமைச்­சுக்குப் போவ­தா­கவும் என்னை மேதினக் கூட்டம் இடம் பெறும் இடத்­திற்குச் சென்று அங்­குள்ள எரா­னந்­த­விடம் வைப­வத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டாம் என்று கூறும் படியும் என்னைப் பணித்தார்.

நானும் அவ்­வாறு செய்தேன். பாது­காப்பு அமைச்­சுக்குச் சென்று உரிய நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக மேற்­கொண்ட ரணில், அங்கு பிர­தமர், பிர­தம நீதி­ய­ரசர், சட்­டமா அதிபர், சபா­நா­யகர் ஆகி­யோரை உட­ன­டி­யாக வர­வ­ழைத்து, பதில் ஜனா­தி­ப­தி­யாக பிர­த­மரை சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்ய வைத்து நாட்டு நிர்வாகம் தொடர வழி சமைத்தார்.

ரணிலின் சட்­டத்­துறை அர­சியல், பின்­னணி மற்றும் அதி­கார அனு­ப­வங்கள் போன்­ற­வற்றை உர­சிப்­பார்க்கும் அரிய சந்­தர்ப்­ப­மாக இது அமைந்­தது. ஒரு சில மணி நேரத்­திற்­குள்ளே நாட்டு நிர்வா­கத்தைச் சீராக்கி நாட்டில் உரு­வாகி வந்த அரா­ஜக நிலை தொட­ரா­தி­ருக்க ரணில் சம­யோ­சி­த­மாக செயற்­பட்­டமை பொன்­னெ­ழுத்­து­களால் பொறிக்­கப்­ப­ட­வேண்­டிய வர­லா­றாகும்.

இந்­நாட்டில் ஜன­நா­ய­கத்தை நிலை நாட்­டு­வதில் பிரதமர் ரணிலின் பங்கு என்ன?
யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த போர்­வையில் நாட்டில் ஜன­நா­யகம் புதைக்­கப்­பட்டு சர்­வா­தி­காரம் தலை­தூக்கி அரா­ஜகம் தலை­வி­ரித்­தாடிக் கொண்­டி­ருந்­தது.

இந்த அரா­ஜ­கத்தை முறி­ய­டிக்க ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­மையில் ஏனைய சக்­தி­க­ளையும் ஒன்று திரட்டி செயலில் இறங்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அப்­போது ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்த வேண்­டிய தேவை ஏற்­பட்­டது. பொதுவேட்பாளரை வெற்­றி­பெறச் செய்­வதில் ஐ.தே.க.வுக்கே பிர­தான பங்­கி­ருந்­தது.

இந்த நிலையில் ஐ.தே.க. அல்­லாத ஒரு­வரே பொது வேட்­பா­ள­ராக வர­வேண்டும் என்று இக்­கூட்டின் முக்­கி­யஸ்­தர்­க­ளான மாது­லு­வாவேசோபித தேரர், சந்­தி­ரிக்கா அம்­மையார் உள்­ளிட்ட பல­ரதும் கோரிக்­கை­யாக இருந்­தது. இந்த சந்­தர்ப்­பத்­திலும் ரணில் விக்­ர­ம­சிங்க தாராள மன­துடன் விட்­டுக்­கொ­டுத்தார். இந்­நாட்டில் ஜன­நா­ய­கத்தை நிலை நிறுத்­து­வதில் ரணிலின் இந்த அர்ப்­ப­ணிப்பும் மேலா­ன­தாகும்.

நாட்டில் யுத்தம் தொடர்ந்து கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்­திலும் ரணில் பிர­த­ம­ரானார். அப்­போது யுத்­தத்தைத் தீர்த்து வைக்­கக்­கூ­டிய திட்­டங்கள் ஏதும் அவ­ரிடம் இருந்­ததா?

2001 ஆம் ஆண்டு அவர் பிர­த­ம­ராக இருந்த போதே அரசு – புலிகள் சமா­தான உடன்­ப­டிக்­கை­யொன்று மேற்­கொள்­ளப்­பட்­டது. அவர் பிர­தமர் பொறுப்பை ஏற்கும் போது நாட்டின் பொரு­ளா­தாரம் வர­லாற்றில் என்றும் இல்­லா­த­வாறு அடி­மட்­டத்­திலே இருந்­தது.

எனவே பிர­தமர் பெரும் சவாலை எதிர்­நோக்­கினார். வறுமை பட்­டினி, வேலை­யில்லாத் திண்­டாட்டம் நாட்டை ஆட்­டிப்­ப­டைத்துக் கொண்­டி­ருந்­தது. யுத்­தத்­திலும் ஈடு­பட்­டுக்­கொண்டு இந்த நெருக்­க­டி­க­ளுக்கும் ஈடு கொடுப்­பது என்­பது லேசு­மா­சான வேலை­யல்ல.

அத­னா­லேயே சமா­தான இணக்­கப்­பாட்­டுக்கு வந்து யுத்த நிறுத்த ஒப்­பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். அத்­துடன் சும்மா இருக்­க­வில்லை.

கூடவே இரா­ணு­வத்தை பலப்­ப­டுத்­து­வ­திலும் கண்ணும் கருத்­து­மாக இருந்தார். இதர தலைவர் மேற்­கொண்­டதை விடவும் பல­முள்ள ஆயு­தப்­ப­டை­யொன்றை உரு­வாக்­கு­வ­திலும் ஈடு­பட்டார் .பின்னர் 2009 இல் யுத்­தத்தில் வெற்றி கொள்­ளவும் இவ­ரது திட்­டங்கள் வழி­கோ­லி­யமை யதார்த்­த­மாகும். மேற்­படி யுத்த நிறுத்தம் சமா­தான உடன்­ப­டிக்­கை­களின் விளை­வாக வெளி­நாட்டு முத­லீ­டுகள் இடம்­பெ­றவும் கால்­கோ­ளா­கின. அத்­துடன் சர்­வ­தே­சத்தின் நல்­ல­பி­மா­னத்­தையும் நம்­பிக்­கை­யையும் பெற்­றுக்­கொள்­ளவும் முடிந்­தது. இதனால் பாதா­ளத்தில் வீழ்ந்­தி­ருத்த பொரு­ளா­தா­ரத்தை மீள் எழச் செய்­வதில் இவ­ரது தீர்க்­க­சிந்­தனை நாட்­டுக்கு நன்­மை­யாக அமைந்­ததை மறுக்க முடி­யாது.

நீண்­ட­கா­ல­மாக ஐ.தே.க தேர்தல் தோல்­வி­களைச் சந்­தித்து வந்­தது. இந்தக் காலங்­களில் ரணில் எப்­படி கட்­சி­யைப்­ப­லப்­ப­டுத்தி வந்தார்?
ஐ.தே.க. தோல்­வி­யிலே உழன்று கொண்­டி­ருந்த  சந்­தர்ப்­பத்­திலே நானும் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் கட்­சிக்­குள்ளே சண்­டையும் – நட்பும் என்ற ஊடல் கூடல் நிலையில் தான் இருந்தோம். எமக்குள் ஒரு சில விட­யங்­களில் நில­விய கருத்து முரண்­பா­டு­களின் பிர­தி­ப­லிப்­புத்தான் இப்­படி ஒரு நிலையைத் தோற்றுவித்­தது. அது எப்­போதும் தனிப்­பட்ட குரோ­த­மாக வெடிக்­கச்­செய்யவில்லை.

ஜே.ஆர்.ஜய­வர்­த­னவும் அப்­ப­டித்தான் நடந்து கொள்வார். அவரைக் கட்­சி­யி­லி­ருந்து நீக்க வேண்டும் என்ற தீர்­மா­னத்தை வழி­மொ­ழிந்த என்னை அவர்தான் கட்­சியின் வாலிபர் முன்­ன­ணியின் செய­லா­ள­ராக பிரே­ரித்தார். வைராக்­கியம், குரோதம் பாராட்டிக் கொண்டு அர­சி­யலில் பய­ணிக்க முடி­யாது.

கருத்து வேற்­று­மை­க­ளோடு காலம் தள்­ளலாம். ஆனால் அதனைத் தனிப்­பட்ட வைராக்­கி­ய­மாக்கிக் கொள்­ளக்­கூ­டாது. நாம் கட்­சியின் வளர்ச்சி நன்மை கரு­தியே மாற்றுக் கருத்­து­களை முன் வைத்தோம். கட்­சியை வெற்­றி­ய­டையச் செய்­யவே மோதிக்­கொண்டோம். இத்­த­கைய சிக்கல் நிலை­க­ளிலும் பொறுமை காப்­பதில் ரணில் மிகவும் வல்­ல­வர்தான்.

நீங்கள் ரணில் விக்­ர­ம­சிங்­கவை விமர்­சித்த சந்­தர்ப்­பங்கள் குறித்து….. ?
ரணில் விக்­ர­ம­சிங்­கவை நான் கட்­சிக்­குள்ளே ஒரு சில விடயங்கள் குறித்து விமர்சித்ததுண்டு. அரசியல் செயற்பாடுகளின் போதும் எங்களுக்குள் கருத்து வேற்றுமைகள் நிலவிய சந்தர்ப்பங்களும் இருந்துள்ளன. இவை யாவும் தனிப்பட்ட ரீதியில் எழுந்த பிரச்சினைகள் அல்ல.

கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லவும் கட்சியின் பலத்திற்கு உரம் சேர்க்கவுமே விமர்சனங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டனவேயன்றி கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்திற்கல்ல. கட்சியிலிருந்து நாம் தூரமாகாதிருந்ததொன்றே இதற்குச் சான்றாகும். கட்சியின் அடிப்படைக் குறிக்கோளில் எங்களுக்கிடையே கருத்து வேற்றுமை கிடையாது.

அன்னார் கடந்த காலங்களில் எனக்கு பல்வேறு பொறுப்புக்களை ஒப்படைக்க முனைந்த போதும் அவர் என்னை விமர்சித்திருந்த தாக்கத்தினாலே அப்பொறுப்புக்களை நான் ஏற்க மறுத்ததும் மறுப்பதற்கில்லை. இவ்வாறிருந்த போதிலும் கட்சியை முன்நகர்த்திச் செல்வதில் அவை தடைக்கற்களாக அமையவில்லை.

கட்சித்தலைவர் என்ற வகையில் அவருக்குக் கொடுக்க வேண்டிய இடத்தைப் பாதுகாத்துக் கொள்வதிலும் என்னால் தொடுக்கப்பட்ட விமர்சனங்கள் ஒரு போதும் தடையாக அமைந்ததில்லை. அவரது பெயரும் செல்வாக்கும்கூட எனக்கு எத்தகைய இடர்பாட்டையும் தரவில்லை. எப்படியிருந்த போதிலும் கட்சியின் தலைவர் அவர். எனவே விமர்சனங்கள் இருந்த போதிலும் அடிப்படைக்கோட்பாடுகளுடன் எங்களுக்குள் ஒற்றுமையே காணப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சி என்ற ஐக்கியத்திற்குள் எங்கள் இருவர்களுக்கிடையே வேற்றுமை என்ற பேச்சுக்கு இடமே இல்லை.

 

ரணில் விக்ரமசிங்கவிடம் எத்தகைய அரசியல் நோக்கம் காணப்படுகிறது? 
ஐ.தே கட்சிக்குள்ள குறிக்கோளே அவரிடமும் காணப்படுகிறது. அதாவது இந்நாட்டிலுள்ள சகல இனங்களையும் அரவணைத்துச் செல்லும் நோக்கமே. பிரிவினைவாத நோக்கமல்ல. பிரிவினை வாதத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்திலேயே பிரிவினைச் சிந்தனைக்கு சமாதிகட்டி நாட்டை ஒரே கொடியின் கீழ் கொண்டு வரக்கூடிய சக்தி ஐக்கிய தேசியக் கட்சியிடமும் அதன் தலைவரான ரணில் விக்ரமசிங்கவிடமுமே உண்டு என்று துணிந்து கூறலாம்.