Verified Web

முஸ்லிம் சேவையில் அடிப்படைவாதமா?

SNM.Suhail

 ஊடகவியலாளர், 
விடிவெள்ளி

2017-07-16 09:00:37 SNM.Suhail

கண்ணாடி கூண்டுக்குள்ளிருந்து கல்லெறியாதீர்
ஊரில் ஒரு பணக்­கார வீட்­டில்தான் வானொலி பெட்டி இருக்கும். நாளை நோன்பா அல்­லது பெரு­நாளா என்று தெரிந்­து­கொள்ள மஃரிப் நேரத்­திற்கு அந்த வீட்டில் ஊரே ஒன்று கூடி­யி­ருக்கும். அன்று அறி­விப்­புக்­காக காத்­தி­ருந்த அந்த நினை­வு­களை பல முதி­ய­வர்கள் இன்றும் கூறு­வதை நான் கேட்­டி­ருக்­கின்றேன்.இன்று எல்­லோ­ரது வீட்­டிலும் வானொலி பெட்டி இருக்­கின்­றது. ஒன்­றுக்கும் மேல­தி­க­மா­கவும் இருக்­கலாம். இதற்­கப்பால் கைக்­குள்ளும் கைக்­க­டக்­க­மான வானொ­லிப்­பெட்டி கைய­டக்கத் தொலை­பே­சியில் இருக்­கின்றது. அதி­கமாக மலி­வா­கி­விட்­ட­மை­யி­னாலோ என்­னவே, வானொலி மீதான ஈர்ப்பு குறைந்­தி­ருக்­கி­றது என்றே கூற வேண்டும். ஆனாலும் அன்று தொட்டு இன்­று­வரை இலங்­கை­யிலும் சரி தென்­னிந்­தி­யா­விலும் சரி இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்­சிக்கு தனி மதிப்பு இருக்­கி­றது.

முஸ்­லிம்­க­ளையும் தாண்டி பிற மதத்­த­வர்­களும் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்­சியை கேட்டு இஸ்லாம் குறித்து விளங்­கிக்­கொள்ள சந்­தர்ப்பம் கிட்­டி­யது என்று கூறு­வ­திலும் பிழை­யில்லை.

மூத்த தமிழ் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் இரவு 9 மணி செய்­திக்­காக வானொ­லியை போடும்­போது முஸ்லிம் நிகழ்ச்­சியின் இறுதி நிமிட வர­லாற்றில் ஓர் ஏடு, குறிப்பும் ஸல­வாத்தும் என்­ப­வற்றைக் கேட்டு அவற்றை மன­ன­மிட்டு அடிக்­கடி அதனை உச்­ச­ரிப்­பதை நான் கேட்­டி­ருக்­கிறேன். இப்­படி ஜன­ரஞ்­ச­கமாக முஸ்லிம் சேவையின் நிகழ்ச்­சிகள் மக்கள் மத்­தியில் ஆழ­மாகப் பதிந்­துள்­ளன.
இதன் தாற்­ப­ரியம் இன்று ஒரு­சி­ல­ருக்கு தெரி­யாமல் போயி­ருக்­கி­றது என்றுதான் கூற வேண்டும்.

நய­வஞ்­சக உள்­ளம்­ப­டைத்தோர் சுய இலா­பங்­க­ளுக்­காக பிறரை பழி­வாங்­கு­வ­தற்­கா­கவும் செய்­வினை எனும் பாவ காரி­யத்தை சூனியக் காரர்­க­ளைக்­கொண்டு சாதா­ர­ண­மாக செய்வர். சில­வேளை அது அவர்­க­ளையே வாட்டி வதைக்கும். அப்­ப­டித்தான் சில முரண்­பா­டு­களை முன்­னி­றுத்தி முஸ்லிம் சமூ­கத்­திற்குள் இருக்­கின்ற ஒரு சிலரே நமது சமூ­கத்­திற்கு அண்­மைக்­கா­லமாக செய்­வினை செய்­துள்­ளனர். இது இன்று இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவை நிகழ்ச்சி தொடர்­பிலும் நடந்­து­விட்­டதோ எனத் தோன்­று­கின்­றது.
முஸ்லிம் நிகழ்ச்­சியில் அடிப்­படை வாதம் பரப்­பு­வ­தாக சிங்­கள ஊடகம் ஒன்று முன்­பக்­கத்தில் பிர­தான செய்­தி­யாக பிர­சு­ரித்­தி­ருந்­தது. நிதி மற்றும் ஊடக அமைச்­சரை சுட்­டிக்­காட்டி அந்த செய்தி குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்த விவ­கா­ரத்தை பல கோணங்­களில் ஆராய்ந்து பார்த்த பிறகு இரு முடி­வுக்களுக்கும் வரக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

அண்­மைக்­கா­ல­மாக முஸ்­லிம்­களை பயங்­க­ர­வா­தி­க­ளா­கவும் மோச­மா­கவும் சித்­தி­ரித்து போலிப்­பி­ரச்­சா­ரங்­களை முன்­னெ­டுக்கும் இன­வாத சக்­தி­களின் நிகழ்ச்­சித்­திட்­டத்தின் ஓர் அங்­க­மாக இதனைப் பார்க்க வேண்­டி­யிருக்­கி­றது. அத்­துடன் ஊட­கங்­களை பயன்­ப­டுத்தி சிலர் திட்­ட­மிட்டு செய்­தி­களை பரப்­பி­விட்டு இதன்­மூலம் நாட்டில் முஸ்­லிம்கள் மீது பழி சுமத்­து­வதைப் பார்க்­கலாம்.

குறிப்­பாக ஐ.எஸ். இயக்கம் இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்க தூதரகத்தை தாக்கத் திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக ஆதா­ர­மற்ற செய்­தி­யொன்று கடந்த மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர் புனை­யப்­பட்­டி­ருந்­தது. இந்த செய்­திக்கு அமெ­ரிக்க தூத­ர­கமும் மறுப்பு வெளியிட்­டி­ருந்­தது.

குறித்த செய்தி பற்­றியும் அதன் உண்மைத் தன்மை பற்­றியும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் பாரா­ளு­மன்றில் பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­க­விடம் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தார். இதற்கு பதி­லளித்த பிர­தமர் குறித்த செய்தி அறிக்­கை­யிடல் சம்­பந்­த­மாக பொலிஸ் விசா­ரணை இடம்­பெ­று­வ­தாக சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். 

முஸ்­லிம்­களை பயங்­க­ர­வா­தி­க­ளான ஐ.எஸ். உடன் முடிச்­சுப்­போட்டு வெளி­யான செய்தி சூடு தணிய முன் முஸ்­லிம்­களை அடிப்­ப­டை­வா­தத்துடன் தொடர்­பு­ப­டுத்தி  ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவை குறித்த செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது.

இது ஊடக மாபி­யாவா என தோன்றும் அள­வுக்கு முஸ்­லிம்­களை இலக்­கு­வைத்து தாக்­குதல் நடத்­தப்­ப­­டு­கின்­றது. இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் நிகழ்ச்­சியில் அடிப்­ப­டை­வாதம் பரப்­பப்­ப­டு­கின்­றது எனும் குற்­றச்­சாட்டும் இதன் ஓர் அங்­க­மாக இருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. இது முத­லா­வது விட­ய­மாக நாம் உற்­று­நோக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது.

அடுத்த விட­ய­மாக, முஸ்லிம் சேவை பற்றி எமது முஸ்லிம் சமூ­கத்தை சார்ந்த ஒரு சில் புல்லுரு­வி­களின் முறைப்­பா­டாகும்.
எமது சமூ­கத்தின் மீதுள்ள ஊடக மாபி­ய­விற்கு இரண்டாம் விடயம் தீனி­போட்­டுள்­ளது எனலாம்.

கடந்த இரு வாரங்­க­ளுக்குள் முகநூல் சமூக வலைத்­த­ளத்­தி­னூடாக எமது சகோ­தரர் ஒருவர் குறிப்­பிட்­டி­ருந்­த­தொரு விட­யத்தை இங்கு நோக்­கு­வது முக்­கி­ய­மா­ன­தாகும். அதா­வது, முஸ்லிம் சேவை வஹா­பி­களின் கட்­டுப்­பாட்­டுக்குள் இருப்­ப­தா­கவும் இத­னூ­டாக அடிப்­ப­டை­வாதம் பரப்­பப்­ப­டு­வ­தா­கவும் குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்­தது.

இந்த விடயம், வட்ஸ்அப் ஊட­ாகவும் மீண்டும் பகிரங்கப்பட்டு வந்­ததை கவ­னிக்க முடிந்­தது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் இச்­செய்தி பரப்­பப்­பட்டு ஓரிரு தினங்கள் கடந்து சிங்­கள பத்­தி­ரி­கை­யொன்று அமைச்சர் மங்­க­ளவை மேற்­கோள்­காட்டி உறு­தி­யான ஆதா­ர­மின்றி வெளி­வந்த செய்­தியும் பொருந்­தக்­கூ­டி­ய­தாக இருந்­தது. எனவே, இவ்­வாறு ஒன்­றோ­டொன்று பின்­னிப்­பி­ணையும் இந்தப் பிர­சா­ரங்­க­ளுக்கு ஏதோ ஒரு­வ­கையில் தொடர்பு இருக்­கலாம் என சந்­தேகம் எழு­கின்­றது.

இந்தக் குற்­றச்­சாட்­டுகள் குறித்து இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவையின் பணிப்­பாளர் எஸ்.எம்.ஹனீ­பாவை தொடர்­பு­கொண்டு வின­வினோம். அவர் இந்த குற்­றச்­சாட்­டு­களை முற்­றாக மறுத்தார். அத்­தோடு இலங்கை வானொலி முஸ்லிம் சேவை தனது பாரம்­ப­ரி­யத்தைப் பேணிப்­பா­து­காப்­ப­தோடு இஸ்­லா­மிய வரை­ய­றைக­ளையும் மீறாது தமது பணி­களை தொடர்­கின்­றதே தவிர எவ்­வி­த­மான அடிப்­ப­டை­வாதக் கருத்­துக்­க­ளுக்கும் எமது நிகழ்ச்­சி­களில் இட­ம­ளிக்­கப்­ப­டு­வ­தில்லை என்றார்.

1954 களில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நிகழ்ச்­சிகள் ஆரம்­பிப்­ப­தற்­கான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. 1955 முதல் முஸ்லிம் சேவையின் பணி தொடர்­கி­றது. அப்­போது முதல் இன்று வரை முஸ்லிம் சேவை தனது பாரம்­ப­ரி­யத்தைப் பேணி வரு­கின்­றது.

கடந்த 20 வரு­டங்­க­ளாக முஸ்லிம் சேவை மீது சில குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­வ­தாக பணிப்­பாளர் ஹனீபா மேலும் தெரி­விக்­கிறார். "ஒரு பிரி­வி­னரி­டத்­தி­லி­ருந்து கடந்த 20 வரு­டங்­க­ளாக முஸ்லிம் சேவை மீது தொடர் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. தமது இயக்கம் சார்ந்த விட­யங்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளிப்­ப­தில்லை என சாடு­கின்­றனர். நாம் யாரையும் புறந்­தள்ளி பார்ப்­ப­தில்லை. எமது சமூகம் என்ற நோக்கில் அனைத்து தஃவா மற்றும் சமூக இய­க்கங்­க­ளு­டனும் எமது நிகழ்ச்­சி­களை வடி­வ­மைக்­கிறோம். ஆனால் இயக்க பிர­சா­ரங்­க­ளுக்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிப்­ப­தில்லை. சன்­மார்க்க விட­யங்­களை புறந்­தள்­ளு­வ­து­மில்லை" என்றார்.

இலங்கை வானொ­லியின் பழைய அறி­விப்­பா­ளர்­களின் தமிழ் மொழி ஆற்றல் உல­கெங்கும் போற்­றப்­ப­டு­கின்­றது. அந்­த­ள­வுக்கு அவர்­க­ளுக்கு தனி இடம் இருக்­கி­றது. நேரடி நிகழ்ச்­சி­க­ளாக இருப்­பினும் சரி ஒலிப்­ப­திவு நிகழ்ச்­சி­யாக இருந்­தாலும் சரி இலங்கை வானொ­லியும் முஸ்லிம் சேவையும் தமது தனித்­து­வத்தைப் பேணி வரு­கின்­றது.

இன்று தனியார் வானொ­லி­களின் ஆதிக்­கத்தால் அது சிதைந்து போனாலும் முஸ்லிம் சமூகம் முஸ்லிம் சேவைக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளித்து வரு­கின்­றது. அதுவே அச்­சே­வையின் வளர்ச்­சிக்கு பெரும் பங்களிப்பு எனலாம். இரவு நிகழ்ச்­சிகள் 8 மணி முதல் 9 மணி வரை ஒலி­ப­ரப்­பாகும்.

காலை நிகழ்ச்­சிகள் வர்த்­தக நிகழ்ச்­சி­க­ளோடு இணையும் எனினும் 2010 ஆம் ஆண்­டிற்கு பின்னர் பெரும்­பாலும் பதிவு செய்­யப்பட் நிகழ்ச்­சி­களே ஒலி­ப­ரப்­பப்­ப­டு­வ­தாக கூறு­கின்றார் பணிப்­பாளர், "முஸ்லிம் சேவையின் அனைத்து நிகழ்ச்­சி­களும் ஒலிப்­ப­திவு செய்து நாம் சரி­பார்த்து எடிட் செய்தே ஒலி­ப­ரப்­புவோம். 2015 ஆம் ஆண்­டுக்கு பின்னர் முழு­மை­யாக சகல நிகழ்ச்­சி­களையும் கண்­கா­ணித்தே ஒலி­ப­ரப்­பு­கிறோம்.

வாரா­வாரம் கொள்­ளுப்­பிட்டி ஜும்ஆப் பள்­ளியில் இடம்­பெறும் ஜும்ஆப் பிரசங்­கத்தை நேர­டி­யாக ஒலி­ப­ரப்­பு­கிறோம். இது தவிர, விஷே­ட­மாக கெச்­சி­மலை புஹாரி கந்­தூரி, காலி கந்­தே­வல கந்­தூரி உள்­ளிட்ட ஓரிரு நிகழ்ச்­சிகள் நேரடி ஒலி­ப­ரப்பு செய்­யப்­ப­டு­கின்­றன. அடிப்­ப­டை­வாதம் பரப்­பப்­ப­டு­வ­தாக குற்றம் சுமத்­து­ப­வர்­க­ளுக்கு எங்­களால் சவால் விட முடியும். ஏனெனில் எமது நிகழ்ச்­சிகள் அனைத்தும் ஒலிப்­ப­தி­வா­கின்­றன. எனவே, சந்­தே­க­மி­ருப்பின் பதி­வு­களை மீள கேட்டு அதனை தீர்த்­துக்­கொள்­ளலாம்" என்றார்.

முஸ்லிம் சேவை குறித்து எமது சமூ­கத்தை சேர்ந்த ஒரு சிலரின் தொட­ரான குற்­றச்­சாட்­டுகள் ஒரு வழி­யாக ஊடகத் துறைக்கு பொறுப்­பான அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு சென்­றி­ருக்­கி­றது. 

அண்­மையில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யாடல் ஒன்­றின்­போது பெளத்த சேவை, முஸ்லிம் சேவை உள்­ளிட்ட பல நிகழ்ச்­சிகள் பற்றி பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஊட­கங்­களை கண்­கா­ணிக்கும் அரச ஊடக மையத்­திடம் இது குறித்து அவ­தானம் செலுத்­து­மாறு அமைச்சர் ஆலோ­சனை வழங்­கி­யி­ருக்­கின்றார். இந்த விடயத்தை மையப்படுத்தியே சிங்கள ஊடகம் முஸ்லிம் சேவையை மட்டும் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது. இது பக்கசார்பான அறிக்கையிடலென்றே குறிப்பிட வேண்டும்.

எனினும், இந்த செய்திக்கான தூண்டுதல் எமது சமூகத்திடமிருந்தே சென்றிருக்கின்றது என்பது கவலைக்குரியதாகும். 
தற்போது அமைச்சர் மங்கள சமரவீரவின் பணிப்புரைக்கு அமைய இலங்கை தகவல் திணைக்களத்தினால்  ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் கண்காணிக்கப்படுகின்றது.

அரச தகவல் திணைக்கள செய்திகளின் படி, கடந்த இரண்டுவாரகாலமாக கண்காணிக்கப்படும் நிலையில், இதுவரை எந்த முறைப்பாடுகளும் பதிவாகவில்லை. இந்நிலையில் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு சாட்டையடி கிடைக்கும் என்றே எம்மால் எதிர்பார்க்கலாம்.

எனினும், எமது சமூகத்துக்குள் இருக்கும் சில கறுப்பாடுகள் வைத்த செய்வினைக்கு எமது சமூகம் முழுமையாக பலியாகாவிடினும் ஓரளவு புகைந்தது என்றே கூற வேண்டும். இது இனவாதிகளுக்கும் பேரினவாத ஊடகங்களுக்கும் தீனி போட்டதாகவே அமைந்து விட்டது எனலாம்.

நாம் இவர்களுக்குச் சொல்ல விரும்புவது, தயவுசெய்து கண்ணாடிக் கூட்டுக்குள்ளிருந்து கல்லெறியாதீர் என்பதைத்தான்!