Verified Web

ஞானசார தேரர் அரசின் வீர புருஷனா?

2017-06-18 07:15:05 Administrator

சிங்­க­ளத்தில்: கே.டபிள்யூ. 
ஜன­ரஞ்­சன
தமிழில்: ஏ.எல்.எம். சத்தார்

கல­கொட அத்தே ஞான­சார தேரரைக் கைது செய்­வ­தற்­காக பல பொலிஸ் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலை­யிலும் இது­வ­ரையும் பொலி­ஸாரால் அவரைக் கைது செய்ய முடி­யாது போயுள்­ளது. நீதி­மன்­றத்தை அவ­ம­தித்தார் என்ற குற்றச் சாட்டில் மேல் நீதி­மன்­றத்தில் தொட­ரப்­பட்ட வழக்கு விசா­ர­ணையின் போது இரண்டு தவ­ணைகள் அவர் ஆஜ­ராகத் தவ­றி­யுள்ளார்.

இரண்­டா­வது விசா­ரணை இடம்­பெற்ற மே 31 ஆம் திகதி காலை 4.30 மணி­ய­ளவில் ஞான­சார தேரர் மஹ­ர­கம நாவின்­ன­யி­லுள்ள பிர­ப­ல­மற்ற தனியார் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். அதற்­கி­ணங்க அவர் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கிறார் என்­ப­தற்­கான வைத்­தியச் சான்று ஒன்று மேல் நீதி­மன்­றத்­திடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அன்­றைய தினம் வழக்கு விசா­ர­ணைகள் முடிந்த கையோடு ஞான­சா­ரவை குறித்த வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து டிக்கட் வெட்டி வெளி­யெ­டுத்­தி­ருக்­கி­றார்கள் என்று அறிய முடி­கி­றது.

அப்­ப­டி­யி­ருந்தும் அவர் எங்­கி­ருக்­கிறார் என்­பதை இது­வரை பொலி­ஸாரால் கண்­டு­கொள்ள முடி­யாது போயுள்­ளது. ஞான­சார தேரரால் நீதி­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள வைத்­திய சான்­றிதழ் கையால் எழு­தப்­பட்­டி­ருப்­ப­துடன் அது ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய நிலையில் இல்­லா­தி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். ஆச்­ச­ரியம் என்­ன­வென்றால் அப்­ப­டி­யி­ருந்தும் அச்­சான்­றிதழ் மேல் முறை­யீட்டு நீதி­மன்­றத்தால் ஏற்­கப்­பட்டு வழக்கு விசா­ர­ணை மீண்டும் ஜூன் 12 ஆம் திகதி வரை ஒத்தி வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இத்­த­கைய வைத்­தியச் சான்று ஒன்றை வழங்­கு­வது தொடர்­பாக குறித்த வைத்­தி­ய­ருக்கு எதி­ராக இலங்கை வைத்­திய சபை­யிடம் முறை­யீடு செய்­ய­வுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். எவ்­வா­றான போதிலும் ஞான­சா­ரவைக் கைது செய்யும் முயற்­சியை பொலிஸார் கைவி­ட­வில்­லை­யென்று பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் கூறு­கிறார்.

கைது செய்­யப்­ப­டு­வ­தி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக ஞான­சார தேரர் ஒளிந்­தி­ருக்­கிறார் என்­பது நன்கு தெளி­வா­கி­றது. அவ்­வாறு மறைந்­தி­ருக்கும் நிலை­யிலும் அவர் ஊட­கங்­க­ளுக்குப் பேட்­டி­ய­ளித்து வரு­கிறார். அத்­த­கைய பேட்­டி­யொன்றில் தேவைப்­படும் பட்­சத்தில் நாட்டைக் கலக்­கி­யெ­டுக்கத் தன்னால் இயலும் என்று வீறாப்பு வேறு விடுத்­தி­ருக்­கிறார்.

பொலிஸ் மா அதி­பரை நிந்­திக்கும் வகையில் வீடியோ ஒன்­றையும் வெளி­யிட்­டி­ருக்­கிறார். இவை அனைத்தின் ஊடா­கவும் ஞான­சார தேரர், பொலிஸ், நீதி­மன்றம் மற்றும் சட்­டத்­துக்கு மட்­டு­மின்றி நாட்டில் மிகவும் அவ­சி­ய­மாக பேண­பட வேண்­டிய சட்டம் ஒழுங்குத் துறைக்கும் பாரிய அவ­மா­னத்­தையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். நாட்டில் சட்­டத்தை முறை­யாக நிலைநாட்­டு­வ­தாகக் கூறிக் கொண்டு பத­விக்கு வந்த அர­சாங்­கத்­துக்கும் இவ­ரது செயற்­பாடு அவ­மா­னத்­தையே கொடுத்­தி­ருக்­கி­றது.

அக்­கி­ர­மங்­க­ளுக்­கெல்லாம் கதா­பாத்­தி­ர­மேந்தி காவி­யுடை தரித்த கொலை வெறி­ய­னாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் இந்த தனி பிக்­கு­வுக்கு ஆச்­ச­ரி­யப்­ப­டத்­தக்க வாய்ப்­பொன்­றுதான் கிடைத்­தி­ருக்­கி­றது. அவர் சட்­டத்தின் முன் முகம் கொடுக்கத் தவறும் ஒவ்­வொரு நிமி­டமும் நாட்டில் சட்டம் எந்­த­ளவு தூரம் பாதா­ளத்தில் வீழ்ந்­து கொண்டி­ருக்­கி­றது என்­பதை உணர்த்திக் கொண்­டி­ருக்­கி­றது. அத்­துடன் அர­சுக்கும் இதன் மூலம் பலத்த அவ­மா­னம்தான் விளைந்து கொண்­டி­ருக்­கி­றது. 

பாதாள உலகக் கோஷ்­டி­யினர் ஒரு­வ­ரை­யொ­ருவர் கொன்று வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் சம்­ப­வங்கள் நடந்­தேறிக் கொண்­டி­ருக்­கின்­றன. இத்­த­கைய கொலை­யொன்­றுடன் தொடர்­பு­டைய கொலை­காரன் நாட்டை விட்டும் தப்பிச் சென்று இந்­தி­யாவில் தலை­ம­றை­வாக இருக்­கையில் அவரைக் கைது செய்­த­தாக தம்­பட்ட மடிக்கும் இலங்­கையின் அதி கெட்­டிக்­கார பொலி­ஸாரால் ஞான­சார தேரரைக் கைது செய்ய இய­லா­தி­ருப்­பதன் மர்மம் எதனை உணர்த்­து­கி­றது? பொலிஸார் வேண்­டு­மென்றே அவரைக் கைது செய்­வதில் நின்று தவிர்ந்து வரு­கி­றார்கள் என்­பதை உணர்த்­து­கி­ற­தல்­லவா?

தனி நபர் ஒரு­வரைக் கைது செய்­வ­தற்­காக பல விசேட குழுக்­களை நிறுத்­தியும் அது கைகூ­டா­துள்­ள­தென்றால் பொலிஸ் மா அதிபர் வெட்கித் தலை­கு­னிய வேண்டும். ஞான­சார தேரரை பொலிஸ்மா அதிபர் ஒரு வீர­னாகக் காண்­ப­தனா­லேதான் அவர் வெட்­கப்­ப­டு­வ­தில்லை.

தற்­போது ஞான­சார தேரர் நாட்டில் பெரும்­பா­லா­னோ­ருக்கு ஆத்ம ஞான வீர­னா­க­வுள்ளார். இன்னும் சில­ருக்கு அவர் பகி­ரங்க வீரன் மற்றும் சில­ரது மன­திலே அவர் இர­க­சிய வீரனாக வீற்றிருக்கிறார்.

முஸ்­லிம்கள் மீதான குரோ­தத்தை வளர்த்து வரும் அடிப்­ப­டை­வாத சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு பகி­ரங்க வீர­னாக ஞான­சார விளங்­கு­கிறார். வில்­பத்து வனங்கள் அழிப்பு, மன்­னாரில் காணிகள் கைப்­பற்றிக் கொள்ளல், பௌத்த சின்­னங்கள் அழித்தல், சிங்­கள இனம் பெரு­குவதை கட்­டுப்­ப­டுத்த முயற்­சித்தல், வர்த்­தகத் துறையில் மேலா­திக்கம் செலுத்­துதல் போன்ற சொல்ல முடி­யாத போலிக் கார­ணங்­க­ளை­யெல்லாம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்துக் கொண்­டி­ருக்கும் சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு இன்­றி­ருக்கும் மாவீரன் ஞான­சார தேரர்தான்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல­வா­றான கட்­டுக்­க­தை­க­ளையும் பரப்­பியும் பல்­வேறு  உரு­விலும் பல்­வேறு அமைப்­புக்­க­ளா­கவும் திரண்டு அடிப்­ப­டை­வா­திகள் களத்தில் குதித்­தி­ருக்­கி­றார்கள். இவை அனைத்­துக்கும் ஞான­சார தேரரே தலை­மைத்­துவம் வழங்கி முன்­ன­ணியில் திகழ்­கிறார். தன்னை வீர­னாகக் காட்டிக் கொள்ளும் போர்­வை­யி­லேயே ஞான­சார இவ்­வாறு துடித்துக் கொண்­டி­ருக்­கிறார். இன்னும் அடிப்­படைவாதத்­திற்கு பகி­ரங்­க­மாக ஆத­ர­வ­ளிக்­காத இலங்கை மக்கள் மத்­தியில் தன்னைத் தொடரும் பௌத்த அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு எத்­த­கைய பீதி­யு­மின்றி செய­லாற்­று­வ­தற்கு ஆக்­கமும் ஊக்­கமும் ஊட்டிக் கொண்­டி­ருப்­பது ஞான­சார தேரர்தான். அது அவ­ரது காவி­யு­டை­த­ரித்த பிக்கு என்ற பலத்தைப் பயன்­ப­டுத்­தியே சாதித்துக் கொண்­டி­ருக்­கிறார்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இலக்கு வைத்து செயற்­படும் நட­வ­டிக்­கை­களும் இவர்­க­ளது நோக்­கமும் என்­ன­வென்று நன்கு தெளி­வா­கவே புலப்­ப­டு­கின்­றன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக எல்லாப் புறங்­க­ளில் இருந்தும் இயன்ற வரை­யான எதிர் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது, தாக்­கு­தல்­களை மேற்­கொள்­வது, தமது தலை­வ­ரான ஞான­சார தேர­ருக்கு போதிய பாது­காப்பு வழங்­கு­வது போன்ற காரி­யங்­க­ளிலும் இது­வரை ஈடு­பாடு காட்டி வரு­கி­றார்கள். இத்­த­கை­யோரை இல­கு­வாக இனங்­கண்டு கொள்ள முடியும்.

ஆனால் இனம் கண்­டு­கொள்ள முடி­யாத, இன்­னொரு கூட்­டமும் இருக்­கவே செய்­கி­றது. இத்­த­கை­யோரை இனங்­காண்­பது சிக்­க­லா­கவும் விரைவில் இனங்­கண்டு கொள்ள முடி­யா­மலும் இருக்­கிற இக்கூட்­டத்­தினர் குறித்து தான் நாம் சிந்­திக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. சிங்­கள மக்கள், சிறு­பான்­மை­யி­ன­ரான தமிழ், முஸ்லிம் மக்­க­ளுடன் ஒருதாய் மக்கள் போல் இருக்க வேண்டும்; சமா­தானம், சக­வாழ்வு போன்ற பண்­பு­களை நாடு முழு­வதும் விதைக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே மறு­த­லை­யாக கரண மடிக்கும் சிலரே மேலே சுட்­டிக்­காட்­டி­யுள்ள அடுத்த கூட்­டத்­தி­ன­ரா­வர்.

ஒரு­பு­றத்தில் நாட்டில் இனம், மதங்­க­ளுக்கு இடையே நல்­லி­ணக்கம் நிலவ வேண்டும் என்று தன்­னைக்­காட்டிக் கொள்ளும் இக்­கூட்­டத்­தினர் உள் மனதால் ஞான­சார தேரரின் நட­வ­டிக்­கை­களை ஆத­ரித்தும் அவரைத் தட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கும் பிரி­வி­ன­ரா­வார்கள். தன்னால் செய்ய இய­லா­ததை ஞான­சாரர் மூலம் சாதிக்­கப்­ப­டு­கி­றதே என்ற நிலைப்­பாட்டில் இருப்­ப­வர்­கள்தான் இவர்கள்.

இந்த வரி­சையில் ஒரு சில மகா­நா­யக்க தேரர்கள் முதல் ஏனைய பெரிய சிறிய பிக்­கு­மார்கள் பலரும் இருக்­கி­றார்கள். அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் அர­சி­யல்­வா­தி­களும் உள்­ளார்கள். ஒரு சில நீதி­வான்­களும் இந்தக் கூட்­டத்­துடன் கைகோர்த்­தி­ருக்­கி­றார்கள். உதா­ர­ணத்­திற்கு நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷவும் ஞான­சார பக்கம் சார்ந்­தி­ருப்­ப­தா­கவே எம்மால் எடை போடக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

எனவே மேற்­கண்ட நேரடி, மறை­முகம் ஆகிய இரண்டு கூட்­டத்­தி­னரும் ஞான­சா­ர­வுக்குப் பரிந்து பேசு­வோ­ரா­கவே உள்­ளனர். ஞான­சார தேரர் சட்­டத்தின் பிடியில் சிக்­காது அவரைக் கப்­பாற்­று­வதில் உள்ளே இருந்து கொண்டு தடை­களைப் போட்டு நடந்து கொள்­வது இரண்­டா­வது கூட்­டத்­தி­ன­ரே­யாவர். அண்­மையில் அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களை வெளி­யிடும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறு­கையில்;
இந்த சின்­னஞ்­சிறு நாட்டில் ஞான­சார தேரர் இவ்­வ­ளவு காலமும் மறைந்­தி­ருக்­கிறார் என்றால் அர­சாங்­கத்­தி­லுள்ள மிகவும் முக்­கி­ய­மான ஒரு­வரின் பாது­காப்பு அவ­ருக்கு வழங்­கப்­ப­டு­வதே கார­ண­மென ஊகிக்க முடி­கி­றது என்ற கருத்தை வெளி­யிட்­டி­ருந்தார்.
இவ்­வாறு ஞான­சார தேர­ருக்கு இரு வழி­களில் பாது­காப்பு வழங்­கப்­ப­டு­வ­தாகக் கொள்­ளலாம். சில சில விட­யங்­களைச் செய்­வது மூலம் சாதிப்­பது ஒரு வழி­யாகும். மற்­றது சில சில விட­யங்­களைச் செய்­யா­தி­ருந்து சாதித்­துக்­கொள்­வது அடுத்த வழி­யாகும்.
சில சில விட­யங்­களைச் செய்­வதன் மூலம் ஞான­சார தேரரைக் காப்­பாற்ற முயல்வோர் முன்பு குறிப்­பிட்ட இரண்டாம் கூட்­டத்தைச் சேர்ந்­தோ­ராவர். 

பொலி­ஸா­ருக்கும் அர­சாங்­கத்­துக்கும் இயன்ற வரையில் உள்­ளி­ருந்து மறை­மு­க­மாக அழுத்­தங்­களைக் கொடுத்து ஞான­சா­ரவைக் கைது செய்­வதில் நின்றும் தடுத்துக் கொண்­டி­ருப்போர் இவர்­க­ளாவர். மேல் மட்­டத்­தி­லுள்ள பொலிஸ் அதி­கா­ரிகள், அமைச்­சர்கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், முன்னாள் அர­சாங்­கத்தில் ஒட்டிக் கொண்­டி­ருந்­து­விட்டு இப்­போது இந்த அரசின் அபி­மா­னி­க­ளாக இருக்கும் அர­சி­யல்­வா­திகள், உயர்­நி­லை­யி­லுள்ள பிக்­கு­மார்கள் என்று ஒரு பெருங்­கூட்­டமே இந்த இரண்டாம் நிலைக் கூட்­டத்தில் அடங்­கு­கின்­றனர்.
எந்­த­வொரு விட­யங்­க­ளையும் செய்­யாது ஞான­சார தேரரை சட்­டத்தின் முன்­கொண்­டு­வ­ராது தடுக்கும் கூட­டத்தில் ஜனா­தி­பதி, பிர­தமர், பொலிஸ்மா அதிபர் உட்­பட அரச அதி­யுயர் மட்டத் தலை­வர்கள் காணப்­ப­டு­கி­றார்கள்.

அர­சாங்­கத்தின் ஏனைய சகல விட­யங்­க­ளி­லும்­போல மேற்­படி முதல்­தர வரி­சை­யினர் ஞான­சார தேரரின் குறிக்­கோ­ளான இன­வாத, மத­வாத போக்­கு­க­ளுக்கு அர­சியல் ரீதியில் எதிர்ப்­பு­க­ளையும் காட்­டாது ஒதுங்­கியே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சில சந்­தர்ப்­பங்­களில் இன­வா­தத்­திற்கு எதி­ராக பல்­வேறு அறிக்­கை­க­ளையும் விடுத்­து­வ­ரு­வதும் மறுப்­ப­தற்­கில்லை. இவை எல்லாம் வெறும் கண் துடைப்­பு­க­ளா­கத்தான் இருக்­கின்­ற­ன­வே­யன்றி இன­வா­தத்தை இல்­லாமல் ஆக்கக் கூடி­ய­ன­வா­க­வில்லை. ஆனால் இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்த விதத்தை உற்று நோக்­கு­கையில் இன­வா­தத்­திற்கும் மத­வா­தத்­திற்கும் எதி­ராக நாட்டை வழி நடத்திச் சென்­றி­ருக்க வேண்டும். ஆனால் மஹிந்த ராஜபக் ஷவின் பரி­பா­ல­னத்­துடன் ஒப்­பி­டு­கையில் இவர்கள் இன்னும் அந்த இடத்­திற்குச் செல்­ல­வில்லை. மஹிந்­தவின் ஆட்­சியில் முழு சக்­தியும் இன­வாதம் மத­வா­தத்­துக்கு தூப­மி­டு­வ­தா­கவே செயற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இந்த ஆட்­சி­ய­மைப்­பதில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் மஹிந்த சிந்­த­னையின் ஒரு பகு­தி­யாக விளங்­கிய இன, மத­வா­தத்தால் நாடு எதிர்­கொண்ட நாச­கார அழி­வு­களை முன்­வைத்தே பத­விக்கு வந்­தனர் என்­பதே யதார்த்­த­மாகும்.

இன, மத வதத்தால் எழுந்த அழிந்து நலிந்து போன நாட்டை மீட்­ப­தாகக் கூறியே, இவர்கள் பத­விக்கு வந்­தனர். எனவே இப்­போது இன, மத வாதங்கள் தலை­தூக்­கு­மே­யானால் அது ஜனா­தி­பதி பிர­த­ம­ருக்கு மட்­ட­மின்றி நாட்­டுக்கும் பேர­வ­மா­ன­மே­யாகும். இந்த அரசு வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்ட கொள்­கை­ய­ளவில் கடைப்­பி­டிக்க வேண்­டிய இன, மத, வாதத்­திற்கு எதி­ராக எத­னைத்தான் கையாண்­டி­ருக்­கி­றது? அந்­தந்த பிர­தே­சங்­க­ளுக்குப் பொறுப்­பான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளிடம் குறித்த பிரதேசத்தில் நிகழும் இன, மதவாதத் தாக்குதல்களைக் கவனிக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு இவர்கள் பாராமுகமாக இருப்பதைத்தான் இந்த அரசு செய்திருக்கிறது.

முஸ்லிம் பள்ளிவாசல்கள், வியாபார நிலையங்கள் தாக்கப்பட்ட குறித்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்கள் மேற்படி தாக்குதல் சம்பவங்கள் குறித்து விரிவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அறிய முடியவில்லை. குற்றமிழைத்தோர் பரந்தளவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவுமில்லை. மேற்படி பொறுப்பான பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு பொலிஸார் அவர்கள் கடமையைச் செய்யட்டும் என்று விட்டு விட்டு தன்பாட்டில் இருப்பதைத் தான் அரசு கண் துடைப்பாக செய்து கொண்டிருக்கிறது. முஸ்லிம் பள்ளிகள், வர்த்தக நிலையங்கள் தாக்கப்படுவது குறித்து பொலிஸார் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது, இருப்பது குறித்தும் ஞானசார தேரர் கைது செய்யப்படாமை குறித்தும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து கதைப்பதற்காக பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.

அதுவும் மிகவும் காலங் கடந்தே சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது.
அரசின் இத்தகைய செயற்பாடு எதனை உணர்த்துகிறது? ஞானசார தேரரை தம் மானசீக வீரனாக அரசு அங்கீகரித்திருப்பதை உணர்த்துவதாகத்தானே உள்ளது. 

நன்றி: ராவய