Verified Web

அனர்த்தங்களை எதிர்கொள்ள நாடு தயாரா?

2017-06-13 10:42:50 Administrator

இலங்­கையின் வர­லாற்றில் கடந்த 15 வரு­டங்­களில் ஏற்­பட்ட சுனா­மிக்கு அடுத்­த­தான பாரிய அனர்த்­த­மாக அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் கரு­தப்­ப­டு­கி­ன்றன. 

இவ்­வா­றான அனர்த்­தங்கள் ஏற்­படக் கூடிய அறி­கு­றிகள் ஏலவே தென்­பட்­டி­ருந்த போதிலும் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் தமது கட­மையை சரி­வரச் செய்­ய­வில்லை எனும் குற்­றச்­சாட்­டுக்கள் தற்­போது முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அனர்த்தம் ஒன்றின் போது ஏற்­படும் அவ­ச­ர­கால நிலையை எதிர்­கொள்­வ­தற்­கான பயிற்­சி­களோ வளங்­களோ இலங்­கையின் அரச கட்­ட­மைப்­பு­க­ளி­டமோ அல்­லது அதி­கா­ரி­க­ளி­டமோ இல்லை என்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

வெள்ளம் ஒன்று ஏற்­படும் பட்­சத்தில் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளி­லி­ருந்து மக்­களை உட­ன­டி­யாக வெளி­யேற்­று­வ­தற்­கான பட­குகள் நாட்டின் எந்தப் பகு­தி­க­ளிலும் தயார் நிலையில் இல்லை என்­பது துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும்.

மீன­வர்கள் தன்­னார்­வ­மாக கொண்டு வரும் பட­குகள் மூலமே மக்கள் மீட்­கப்­பட்­டனர். கடற்­ப­டை­யினர் அனர்த்த பகு­தி­க­ளுக்கு காலம் தாம­தித்தே வரு­கின்­றனர். அவ்­வாறு வரு­கின்ற போதிலும் அவர்­க­ளிடம் போது­மான எரி­பொ­ருளோ ஏனைய அவ­சி­ய­மான உப­க­ர­ணங்­களோ இருப்­ப­தில்லை. இவை நாம் 2016 மற்றும் 2017 அனர்த்­தங்­க­ளின்­போது களத்தில் கண்ட யதார்த்­தங்­க­ளாகும்.

அதே­போன்­றுதான் வீடு­களை விட்டும் வெளி­யேறும் மக்கள் தமது உற­வினர் வீடு­க­ளிலோ அரு­கி­லுள்ள பொதுக் கட்­டி­டங்­க­ளி­லோதான் தங்க வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கி­றது. அப் பகு­தி­க­ளி­லுள்ள  விகா­ரைகள், பள்­ளி­வா­சல்கள், கோயில்­கள்தான் இம் மக்­க­ளுக்குத் தேவை­யான உட­னடி உத­வி­களை முன்­னின்று வழங்க வேண்­டி­யுள்­ளது.

மாறாக இம் மக்­களைத் தங்க வைக்­கவோ அவர்­க­ளுக்­கான அத்­தி­யா­வ­சிய உத­வி­களை வழங்­கவோ அர­சாங்க உத­விகள் உடன் கிடைப்­ப­தில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­களின் விப­ரங்­களைத் திரட்டி அவர்­க­ளுக்­காக ஒதுக்­கப்­படும் தொகையை பிர­தேச செய­ல­கங்கள் மூலம் பெறு­வ­தற்கு பல வாரங்கள் காத்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது.

மேலும் சர்­வதே உத­விகள் வந்து குவி­கின்ற போதிலும் அவை மக்­க­ளுக்கு உரிய முறையில் போய்ச் சேர்­கின்­ற­னவா என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது. இவற்றை கையாள்­கின்ற அரச இயந்­தி­ரங்கள் மந்த கதியில் இயங்­கு­வ­தா­னது பாதிக்­கப்­பட்ட மக்­களை பெரிதும் அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.

அர­சாங்­கத்­திடம் 2014 -முதல் 2018 வரை­யான காலப்­ப­கு­தியில் ஏற்­படும் அனர்த்­தங்­களை எதிர்­கொள்­வ­தற்­கான முழு­மை­யான அனர்த்த முகா­மைத்­துவ நிகழ்ச்சித் திட்டம் இருக்­கின்ற போதிலும் அது சரி­வர அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றதா என்­பதும் இங்கு எழும் அடுத்த கேள்­வி­யாகும்.

2016 இல் வௌ்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2017 இலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறெனில் இப் பகுதிகளை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தின் கொள்கைகள் என்ன? திட்ட வரைபுகள் எங்கே? 

எனவேதான் 'வருமுன் காப்போம்' எனும் அடிப்படையில் அரசாங்கம் அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கான முறையான வேலைத்திட்டங்களை உடன் ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.