Verified Web

பல்லின சமூகங்களுக்கு மத்தியில் மதத்தின் வகிபாகம்

2017-06-07 11:05:31 Administrator

- ஏ.எல்.எம்.சித்தீக்  
காத்தான்குடி–06 -

இலங்கை, பல்­லின  மக்கள்  ஒன்­றாக வாழும் நாடாகும். இவர்கள் பல சம­யங்­களை  பின்­பற்­று­வ­துடன், தனித்­து­வ­மான கலா­சா­ரங்­க­ளையும்  பேணி வரு­கின்­றனர். பொது­வாக அனைத்­தின மக்­களும் ஒற்­று­மை­யாக வாழ்ந்த போதும், கடந்த மூன்று  தசாப்­தங்­க­ளாக இனப்­பி­ரச்­சினை தலை­வி­ரித்­தா­டு­கி­றது.இதனால்  பல அர­சியல் , சமூக பிரச்­சி­னைகள் தோன்­றி­யுள்­ளன. உண்­மையில் மதம் என்­பது மனி­தர்­களை  நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட நன்­னெ­றி­களே ஆகும். சுவாமி விவே­கா­னந்தர் மதங்கள் பற்றி பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கிறார். “கட­வுளை அறி­வ­தற்­கான  வழியில்  மனித ஆன்மா  கடந்து  செல்லும் வெவ்­வேறு  படி­க­ளாக ஒவ்­வொரு மதமும் உள்­ளன. எந்தச் சம­யமும் அபா­ய­க­ர­மா­னதோ, தீமை­யா­னதோ அல்ல. வளர்­வ­தற்கு  மறுத்து முன்­னே­றாமல் கட்­டுப்­பெட்­டி­யாக நின்­று­விடும் போதுதான் ஒரு மதம் அபா­ய­க­ர­மா­ன­தா­கின்­றது” எனவே சம­யங்கள் என்­பது மனித குலத்­துக்கு  அரு­ளே­யாகும்.

 ஆரம்­பத்தில் மதங்­க­ளுக்­கி­டை­யி­லான   முரண்­பாடு தோற்றம் பெற்­றி­ருக்­க­வில்லை. மதங்­களை பிழை­யாகப்  பின்­பற்­றி­யதன் விளைவே  சம­யங்­க­ளுக்­கி­டை­யி­லான  சர்ச்­சை­க­ளுக்கு  கார­ணமாய் அமைந்­தன. எல்லா சம­யங்­களும் மதங்­களும் மனிதன் உயர் நிலையை அடை­வ­தற்­கான வழி­யினை காட்­டிக்­கொ­டுத்­தன.

இறைவன், ஆண்­டவன், யோகிகள், ஞானிகள், மகான்கள் இவர்­களை பின்­பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறி­யதை “அனை­வரும் ஒன்றே” என்­பதை மறந்து மற்­ற­வர்­க­ளி­லி­ருந்து தங்­களை வேறு­ப­டுத்­திக்­காட்ட மதத்தைப் பயன்­ப­டுத்த ஆரம்­பித்­தனர். 

வித்­தி­யா­ச­மான கருத்­தி­யல்கள் ஒன்­றாக வாழ்­வ­துதான் பன்­மைத்­துவம். இஸ்லாம் பன்­மைத்­து­வத்தை ஒரு யதார்த்­த­மாக ஏற்­றுக்­கொள்­கின்­றது. அதனால் தான், அது மக்­களை விழித்து, உங்­களை  நாம் ஒரே ஆன்­மா­வி­லி­ருந்து படைத்து, கூட்­டங்­க­ளா­கவும் கோத்­தி­ரங்­க­ளா­கவும் ஆக்­கினோம் என்று சொல்­கின்­றது. நாம் ஒரு பூந்­தோட்­டத்­துக்குள்  நுழைந்தால், அங்கு வித்­தி­யா­ச­மான நிறங்­களில் வித்­தி­யா­ச­மான பூக்­களைக் காண்போம். எல்லாம் ஒரே மாதி­ரி­யாக  இருந்தால்  அதில் அழகு  இருக்­காது. இது எமக்கு  பன்­மைத்­து­வத்தின் அழகை  விளக்­கு­கின்­றது. என­வேதான் பல்­லின சமூகம் வாழும் நாடும் அழ­காக இருக்கும். 

இஸ்­லாத்தில் எது­வித நிர்ப்­பந்­தமும் இல்லை. மதீனா சமூ­கத்தில் அர­புகள், கிறிஸ்­த­வர்கள், யூதர்கள் என அனை­வரும்  ஒன்­றி­ணைந்து வாழ்ந்­தனர். உஸ்­மா­னிய ஆட்­சி­யின்­போதும்  ஆர்­மேனியப் பகுதி ஓதடொக்ஸ் கிறிஸ்­த­வர்கள் தமது மதத்தை சுதந்­தி­ர­மாகப் பின்­பற்­றினர். எகிப்தின் கிப்தி கிறிஸ்­த­வர்­களும் தமது நீண்­ட­கால வர­லாற்றில் எது­வித சிக்­கல்­க­ளையும் சந்­திக்­க­வில்லை. எனவே பல்­லின சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் மதத்தின் வகி­பாகம் அலா­தி­யா­ன­தாக இருக்­கி­றது. 

ஒரு நாட்டில் பல்­லின சமூ­கங்கள் வாழ்கின்ற போது அது அந்­நாட்­டுக்கு பெரும் வரப்­பி­ர­சா­த­மே­யாகும். பல மொழி,  பல கலா­சாரம், பல சமய  சடங்­குகள் என்­பன  ஒரு நாட்­டுக்கு அழகு சேர்க்கும் அம்­சங்­க­ளாகும். பல்­லின சமூ­கங்கள்  வாழும்  நாடு­களில்  இரு பாரிய  சவால்­களை அவர்கள் எதிர்­நோக்­கு­கின்­றனர். அந்­நிய மதங்­க­ளுக்கு மத்­தியில் தனித்­து­வத்தை பேணல் முத­லா­வது சவால்.

தனித்­துவம்  சிதை­யாமல் பிற சமூ­கங்­க­ளுடன்  இணைந்து வாழல் அல்­லது  கலந்து வாழல் அடுத்த  சவால். அத்­த­கைய  சவாலை மிகச் சரி­யாக எதிர்­கொண்டு, இவ்­விரு  நோக்­கங்­க­ளையும் நிறை­வேற்ற வேண்­டு­மாயின், சமூ­கங்கள் கடைப்­பி­டிக்க வேண்­டிய வாழ்­வியல்  சமன்­பா­டொன்றை  சம­கால அறி­ஞர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.

கரைந்து போகாமல் கலந்து வாழ்தல், திறந்த நிலையில் தனித்­துவம் பேணல்  (Open Conservation and Positive Integration)  என்­பது முக்­கி­ய­மா­ன­தாகும். ஐரோப்­பிய  நாடு­க­ளிலும்  வட அமெ­ரிக்­கா­விலும் வாழ்­கின்ற பல்­லின சமூ­கங்கள் இத்­த­கைய வாழ்­வியல் சமன்­பாட்டை நன்கு பேணும் வகையில்,  தமது சமூக, கலா­சார, ஆன்­மீக  வாழ்வை ஒழுங்­கு­ப­டுத்­தி­யுள்­ளனர். இத­னால்தான் அங்கு மத ரீதி­யான பிரச்­சி­னைகள் இல்­லாமல் சுமு­க­மாக அந்­நா­டுகள் அபி­வி­ருத்­தி­ய­டைய முடி­யு­மாக இருந்­தது. 

 இஸ்லாம் பல்­லின  சமூ­கங்­களை ஆக்­கி­யது அல்­லாஹ்வின் செயல் என்றும் பரஸ்­பர அறி­மு­கத்­துக்­கா­கவே இவ்­வா­றான ஒழுங்­கு­களை படைத்­தி­ருப்­ப­தா­கி­றது. “நிச்­ச­ய­மாக நாங்கள் உங்­களை ஓர் ஆணி­லி­ருந்தும், ஒரு பெண்­ணி­லி­ருந்தும் படைத்தோம். நீங்கள்  பரஸ்­பரம்  அறிந்து கொள்ள வேண்டும் என்­ப­தற்­கா­கவே உங்­களை குலங்­க­ளா­கவும் கோத்­தி­ரங்­க­ளா­கவும்  ஆக்­கினோம்” (ஸுறதுல் ஹுஜுராத் –13) “லித­ஆ­ரபூ” பரஸ்­பர அறி­மு­க­மா­வ­தற்­காக என்ற இந்த  அறபுச் சொல் எல்லா சமூ­கங்­களும் சம தரத்தில் நின்று (Equal Footing) தங்­களை  மற்­ற­வர்­க­ளுக்கு அறி­முகம்  செய்ய வேண்டும் என்ற கருத்தை கொடுக்­கி­றது. அதா­வது ஒரு சமூகம் தங்­க­ளது கலா­சார மர­பு­ரி­மை­களை, வர­லாற்றை, மொழியை, கலையை பிறி­தொரு  சமூ­கத்­திற்கு அறி­முகம்  செய்யும்  போது மேலா­திக்க தோர­ணையைத் தவிர்த்து மற்ற மதத்தை, கலா­சா­ரத்தை, கலையை, மர­பு­ரி­மையை மதித்து, பகிர்ந்து   கொள்ள வேண்டும் என்­பதே அல்­குர்ஆன் ‘லித­ஆ­ரபூ’ என்ற சொல்­லாட்­சியை கையாண்­டதன் பின்­புலம்  என்­கிறார்  உஸ்தாத் தாரிக் ரமழான். எனவே பல்­லின சமூ­கத்தில் மதம் என்­பது பரஸ்­பர அறி­மு­கத்­துக்­கான ஊட­க­மே­யாகும். 

இஸ்லாம் பல்­லின சமூ­கத்தில் மத நல்­லி­ணக்கம், சகிப்­புத்­தன்மை குறித்து சில அடிப்­ப­டை­களை முன்­வைக்­கின்­றது. ஒன்று பன்­மைத்­துவம் உலகின்  யதார்த்­த­மாகும். ஏனெனில் உலகில் பல்­வே­று­பட்ட இனங்­களை, சமூ­கங்­களை அல்­லாஹ்வே ஏற்­பாடு செய்­தி­ருக்­கின்றான்.  “மனி­தர்­களே நாங்கள் உங்­களை ஒரு ஆணி­லி­ருந்தும் , பெண்­ணி­லி­ருந்தும்  படைத்தோம்” இன சமூக ரீதியில்  மட்­டு­மல்­லாது கோட்­பாட்டு ரீதி­யிலும் இந்தப் பன்­மைத்­துவம் ஒரு யதார்த்­த­மா­கவே இருக்கும் என்­பதை அல்­குர்ஆன் சுட்­டிக்­காட்­டு­கி­றது. எனவே அனை­வரும்   இந்த யதார்த்­தத்தை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். பன்­மைத்­துவம் இறை­வனின் ஏற்­பாடு. அந்த ஏற்­பாட்டில் தன் பொறுப்புப்  பற்றி சிந்­திப்­பதைத் தவிர  பன்­மைத்­து­வத்தை  நிரா­க­ரிக்க  முடி­யாது.  இரண்­டா­வது  கோட்­பா­டு­களில்  காணப்­படும் வேறு­பா­டு­களை தீர்த்து வைக்கும் பொறுப்பு அல்­லாஹ்­வுக்­கு­ரி­யது. அத்­த­கைய  தீர்ப்­புக்­கென அவன் ஒரு நாளை ஏற்­பாடு  செய்­துள்ளான் என (அல்ஹஜ் 17) அல்குர் ஆன் குறிப்­பி­டு­கி­றது. அது மறுமை நாளாகும்.  

எனவே இவ்­வு­லகில் மதங்­க­ளுக்­கி­டை­யி­லான வேறு­பாட்டை முரண்­பா­டாக பார்க்­க­வேண்­டிய அவ­சியம் கிடை­யாது. எனவே   ஒவ்­வொரு  மதத்­த­வரும் மனி­த­னு­டைய  அறிவு ஏற்கும் வித­மாக தத்­த­மது இறை நெறியை முன்­வைக்­க­லாமே தவிர தூற்­றவோ சாடவோ முடி­யாது.  ஏனைய மனி­தர்கள் அல்லாஹ் அல்­லாத  தெய்­வங்­களை அழைக்­கலாம். அவற்­றையும் நீங்கள் சாடா­தீர்கள். எனத் திட்­ட­வட்­ட­மாக அல்­குர்ஆன்  கூறு­கி­றது. மூன்­றா­வ­தாக  எல்லா சம­யங்­களும் மனி­தர்­களை கண்­ணி­யப்­ப­டுத்­தி­யுள்­ளன.

அந்த கண்­ணியம் மனி­தர்கள் என்­ப­தற்­கா­கவே என்­பதும் பன்­மைத்­து­வத்தின் மற்­று­மொரு அடிப்­ப­டை­யாகும். இதையே அல்­குர்ஆன் (அல்–­இஸ்ரா:75) தெளி­வாக குறிப்­பி­டு­கி­றது. அதே­நேரம் மத வேறு­பா­டுகள் பக்­கச்­சார்பை நோக்­கியோ அநீ­தியை நோக்­கியோ இட்டுச் செல்லக் கூடாது எனவும் அல்­குர்ஆன் குறிப்­பி­டு­கி­றது. “விசு­வா­சி­களே!  நீங்கள்  அல்­லாஹ்வின் நிரு­வா­கி­க­ளாக தொழிற்­பட்டு நீதிக்கு  எடுத்­துக்­காட்­டாக திக­ழுங்கள். ஒரு சமூ­கத்தின் மீதான பகை (அவர்கள் விட­யத்தில்) நீதி செலுத்­தா­ம­லி­ருக்க உங்­களை தூண்ட வேண்டாம். நீதியே செலுத்­துங்கள். அது இறை­யச்­சத்­திற்கு மிக நெருக்­க­மா­ன­தாகும்”. (5:28)

எல்லா மதங்­களும் பல்­லின சமூ­கத்­துக்குள் மகிழ்ச்­சி­யாக வாழ்­வ­தற்­கான வழி­காட்­டல்­களை வழங்­கியே உள்­ளன.  இஸ்லாம் மாத்­தி­ர­மன்றி மற்ற சம­யங்­களும் சக வாழ்வை  போதிக்­கின்­றன.

அவை குறித்தும் அடுத்த சமூ­கத்­தவர் மத்­தியில் கலந்­து­ரை­யா­டப்­பட வேண்டும். பௌத்த இதி­கா­சத்தில் “வாசட்ட என்ற தேர­ருக்கு  இனங்கள் தொடர்­பாக கொடுக்­கப்­படும் விளக்கம்  இப்­படி அமைந்­தி­ருக்­கி­றது” வாசட்ட! இனங்கள் பல்­வ­கைப்­பட்­டவை. சரீ­ரத்­து­ட­னான படைப்­புக்­க­ளுக்­கி­டையில்  பல்­வேறு வேறு­பா­டு­களும்  இருக்­கின்­றன.  மனி­தர்­க­ளுக்­கி­டை­யி­லான வேறு­பாடு பெயர்­களால் மாத்­தி­ரமே! “ (வாசட்ட சூத்­திரம் ம.தி.2 – 48)” இந்து மதமும் சக வாழ்வு குறித்து பேசி இருக்­கி­றது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற போத­னை­களும்  மனித வர்க்கம் என்­பது ஒரே இன­மாகும் என்று  அதர்­வன வேதம்  குறிப்­பி­டு­வதும் அதற்கு நல்ல சான்­றாகும்.

 கிறிஸ்­தவ  சம­யமும் சக­வாழ்வு குறித்து போதித்திருக்­கி­றது. ஒரு கன்­னத்தில் அறைந்தால் மறு கன்­னத்­தையும் கொடுத்து சகிப்புத் தன்­மை­யுடன்  சக வாழ்வை பேணும்­படி  கிறிஸ்­தவ சமயம் போதித்திருக்­கி­றது. பகை­வர்­களை மன்­னித்து, அவர்­க­ளோடு  சமா­தானம்  செய்­து­கொள்ள இயேசு போதித்தார். (மத்­தேயு 5:43–48) என்­கி­றது  பைபிள். எனவே இலங்­கையில் வாழும்  எல்லா சம­யத்­த­வர்­களும் தத்­த­மது  மத போத­னை­களை பின்­பற்­றி­னாலே பல்­லின சமூ­கத்தில் அமை­தியை நிலை­நாட்டி விட முடியும். 

பல்­லின சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் மதத்தின் வகி­பா­கத்தில் ஒன்­றுதான் மத ரீதி­யான  போத­னைகள் ஊடாக நாட்­டுக்கு விசு­வா­ச­முள்ள நல்ல பிர­ஜை­களை உரு­வாக்­கு­வ­தாகும். இத­னால்தான் சம­யக்­கல்வி பல நாடு­களில் கட்­டாயக் கல்­வி­யாக போதிக்­கப்­ப­டு­கி­றது. உலக நாடுகள் பல­வற்றில் இளை­ஞர்கள் மத்­தியில் காணப்­ப­டு­கின்ற வன்­மு­றை­க­ளுக்கும் அமை­தி­யின்­மைக்கும் கார­ண­மாக அமை­வது பாட­சாலை சமயக்  கல்­வியில் காணப்­படும்  குறை­பாடு என கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அதனால், அந்­நா­டு­களின் பாட­சா­லை­களில் சம­யக்­கல்­வியை வினைத்­திறன்  மிக்­க­தாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இன்று  போதைப்­பொருள்  பாவனை,  பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள், கொலை, கொள்ளை, வன்­மு­றைகள் என உல­க­ளா­விய ரீதி­யிலும் நம்­நாட்­டிலும் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­ற­மைக்கு முக்­கிய கார­ண­மாக அமை­வது சமய விழு­மி­யங்­க­ளோடு வாழ்­வ­தற்­கான  ஆன்­மீக வழி­காட்­டல்கள் முறை­யாக மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பதைப்   புடம்­போட்­டுக்­காட்­டு­கி­றது. அதிலும்  இத்­த­கைய  நட­வ­டிக்­கை­களில் மாண­வர்­களும் ஈடு­ப­டு­கி­றார்கள் என்றால் அவை  பாரிய  பின்­வி­ளை­வு­களை சமூக மட்­டத்தில்  ஏற்­ப­டுத்தும் என்­பது நிச்­சயம்.

 இலங்­கையில் எயிட்ஸ், எச்.ஐ.வி. தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­களில் மாண­வர்­களும் உள்­ளனர் என்ற  அதிர்ச்சித் தக­வல்கள் எதிர்­கால  சந்­த­தி­யி­னரின் விழு­மிய  வாழ்க்­கையை  கேள்­விக்­கு­ரி­யாக்­கி­யுள்­ளது. சமூ­கத்தை  மாசுபடுத்தக்கூடிய  செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு சீர்மிய சமுதாயமொன்றை உருவாக்க வேண்டுமானால்  பாடசாலை மட்டத்தில் சமயக் கல்விக்கான  முக்கியத்துவம் அளிக்கப்படுவது  அவசியம். 

பல்லின சமூகங்களுக்கு மத்தியில்  மதத்தினூடாக  சிறந்த  ஆன்மீக வழிகாட்டல்கள் ஊடாக  விழுமியங்கள் பாதுகாக்கப்பட வழிசமைக்கப்படுகிறது. அந்தப் பொறுப்பைச் சுமந்த சமயப் பாட ஆசிரியர்கள், சமயப் போதகர்கள் எந்தச் சமூகத்தைச்  சார்ந்தவர்களாக  இருந்தாலும், அவரவர் சமய ஆன்மீக  விழுமியங்களோடு   எதிர்கால சமூகம் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகாட்டல்களையும் போதனைகளையும் வழங்கும் பொறுப்பிலிருந்து  விடுபடுதல் தர்மமாகாது.

சமூக மட்டத்தில் ஆரோக்கியமான  மாற்றத்தை ஏற்படுத்த  வேண்டுமாயின்  பாடசாலை  மட்டத்தில் சமயக் கல்விக்கான முக்கியத்துவம் வழங்கப்படுவது அவசியம் என்பதை சமகாலத்தில்  நடந்தேறும்  நிகழ்வுகளை  ஆதாரமாகக் கொண்டு வினைத்திறனுடன் செயற்படுவதற்கு பொறுப்பைச் சுமந்தவர்கள் முன்வருவது காலத்தின் தேவையாகும். எனவே எல்லா வகையிலும் பல்லின சமூகங்களுக்கு மத்தியில் மதத்தின்  வகிபாகம் மெச்சத்தக்கதேயாகும்.