Verified Web

தூய்மை : புரிந்துக்கொள்ளாத ஹோட்டல் உரிமையாளர்கள்

2017-06-07 10:55:54 Administrator

- றிசாத் ஏ காதர்  -
உன் ஆடையை தூய்­மைப்­ப­டுத்­து­வீ­ராக, அசுத்­தத்தை வெறுப்­பீ­ராக (அல்­குர்ஆன் 74:-3,4) 
தூய்மை இறை­நம்­பிக்­கையின் பாதி­யாகும் (நபி­மொழி, முஸ்லிம் -381) 
ஒரு முறை நபி­களார் தனது தோழர்­க­ளுக்கு சொன்­னார்கள் “உங்­களில் யாரா­வது தூங்கி எழுந்தால் மூன்று முறை தன் கைகளை கழுவும் வரை பாத்­தி­ரத்தில் கையை நுழைக்க வேண்டாம்” என்­றார்கள்.  எந்த அறி­வியல் வளர்ச்­சியும் அடை­யாத 1400 வரு­டங்­க­ளுக்கு முற்­பட்ட கால­கட்டம் அது.  கண்­ணுக்குத் தெரி­யாத பொருட்­களை பன்­ம­டங்கு பெரி­து­ப­டுத்தி பார்க்­கக்­கூ­டிய நுண்­ணோக்­கிகள் இல்­லாத காலத்­திலே நபி­(ஸல்) அவர்கள் சுத்தம் தொடர்பில் வைத்த கருத்­துக்­களால் இன்­றைய விஞ்­ஞானம் மூக்கில் விரல் வைக்­கின்­றது

சுத்தம் தொடர்பில் இஸ்லாம் முன்­வைத்­தி­ருக்­கின்ற அடிப்­படைக்  கருத்­துக்­க­ளாக மேற்­சொன்­ன­வற்றை கண்­டு­கொள்ள முடி­கின்­றது. 
இஸ்லாம் சுத்­தத்தை இறை­நம்­பிக்­கை­யுடன் தொடர்­பு­ப­டுத்­தி­யி­ருப்­ப­தனை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இத­னூ­டாக ஒன்­றினை மட்டும் தெளி­வாகப் புரிந்­து­கொள்ள முடியும். முஸ்­லி­மாக இருப்­பவர் சுத்­தத்தை தவிர்த்து ஒரு­கா­லமும் வாழ­மு­டி­யாது என்­ப­துவே அது. 
இவ்­வா­றான இஸ்­லா­மிய போத­னை­களை அடிக்­கடி தங்கள் காது­களில் வாங்கிக் கொள்­ப­வர்­க­ளாக முஸ்­லிம்கள் காணப்­ப­டு­கின்­றனர். எச்சில் துப்­பு­வ­தி­லி­ருந்து பாதணி அணி­வது வரை இஸ்லாம் சுத்தம் தொடர்பில் கவனம் செலுத்­தி­யி­ருப்­ப­த­னையும் கண்­டு­கொள்­ள­மு­டி­கின்­றது. 

இப்­போ­த­னை­களை உள்­வாங்­கு­கின்ற முஸ்­லிம்கள், சுத்தம் தொடர்பில் தொடர்பே இல்­லா­த­வர்கள் போல் நடந்­து­கொள்­வது, அவ்­வா­றான விட­யங்கள் பொதுத்­த­ளத்தில் விமர்­ச­னத்­துக்கு வரு­வது என்­ப­து­வெல்லாம் நம்மை கவ­லை­கொள்ளச் செய்­கின்­றது. 
அண்­மையில் ஊட­கங்­களில் மிக வேக­மாக பர­விய, விமர்­சிக்­கப்­பட்ட விடயம் இலங்­கை­யி­லுள்ள அதுவும் குறிப்­பாக கிழக்கு மாகாண முஸ்­லிம்­களை ஒரு கணம் தூக்­கி­வா­ரிப்­போட்­டுள்­ளது. 

மட்­டக்­க­ளப்பு மாந­கரில் அமைந்­துள்ள ஹோட்டல் ஒன்று “சீல்”  வைக்­கப்­பட்ட விவ­கா­ரமே அது. நீதி­மன்ற உத்­த­ரவின் மூலமே இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் 15 ஆம் திக­தி­வரை குறிப்­பிட்ட ஹோட்­டலை மூடு­மாறு மட்­டக்­க­ளப்பு நீதவான் நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. 

இதேபோன்று சுகா­தா­ர­மற்ற ஹோட்­டல்கள் இன்னும் எத்­த­னையோ. பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்கள் ஹோட்­டல்­களை அடிக்­கடி பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்தல் வேண்டும். அப்­போ­துதான் ஹோட்­டல்­களின் தரங்கள் பேணப்­படும். சில உண­வ­கங்­களை பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்கள் முறை­யாக பரி­சீ­லிப்­ப­தில்லை அல்­லது சோத­னை­யி­டு­வ­தில்லை என்­கின்ற குற்­றச்­சாட்­டி­னையும் மக்கள் முன்­வைக்­கின்­றனர். அவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றி­ருந்தால் இந்த நிலை­மைக்கு குறிப்­பிட்ட ஹோட்டல்கள் வந்­தி­ருப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் மிகக் குறைவு என்றும் கூறிக்­கொள்­கின்­றனர் மக்கள்.  
 
சுகா­தாரம் பற்றி உரக்க பேசு­கின்ற இஸ்­லா­மிய வாழ்க்­கைக்குள் தங்­களை இணைத்­துக்­கொண்­ட­வர்­களே இந்த ஹோட்­டலின் உரி­மை­யா­ளர்கள். இதுவே வேத­னை­யான விடயம். இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முஸ்­லிம்­களின் பெயரால் அரங்­கேற்­று­வது அடுத்த சமூ­கத்­தா­ரிடம் முஸ்­லிம்கள் வெட்கித் தலை­கு­னி­வதை தவிர வேறில்லை. 

இந்த விவ­காரம் தொடர்பில் பத்தி எழு­து­வ­துக்கு தக­வல்­களை சேக­ரிக்கும் போது இன்னும் பல விட­யங்கள் சமூக நலன் சார்ந்­த­வர்­களால் முன்­வைக்­கப்­பட்­டன. அந்த விட­யங்­களும் மிகவும் கவலை தரக்­கூ­டி­ய­தா­கவே இருக்­கின்­றது. 

பொது­வாக முஸ்­லிம்­களைப் பொறுத்­த­மட்டில் சுகா­தா­ரத்­தி­லி­ருந்து கொஞ்­ச­மேனும் தங்­களை விடு­வித்துக் கொள்ள முடி­யாது என்று மார்­தட்­டிக்­கொள்­கின்றோம். ஐந்து வேளை தொழு­கைக்­காக வுழூ என்­கின்ற விட­யமும் மிகப்­பி­ர­தா­ன­மா­னது. சுத்தம், சுகா­தா­ரத்தை மையப்­ப­டுத்­திய இந்த நடை­முறை கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டது என்­பது பொது­வான உண்மை. இவை­க­ளையும் தாண்டி நம்­ம­வர்­களின் செயற்­பா­டுகள் இடம்­பெ­று­வது சமூ­கத்தை ஒட்­டு­மொத்­த­மான விமர்­சனப் பார்­வைக்குள் தள்­ளி­வி­டு­வ­தே­யாகும்.

தூரப் பிர­யா­ணங்­களை பஸ்­களில் பய­ணிக்கும் அதி­க­ள­வான பிர­யா­ணிகள் முகம்­கொ­டுக்கும் சம்­ப­வமும் இவ்­வாறே. சுகா­தா­ர­மற்ற, தரம்­ கு­றைந்த ஹோட்­டல்கள் மலிந்து காணப்­ப­டு­வதும் இந்த சமூ­கத்­துக்கு ஏற்­பட்­டுள்ள ஒரு­வகை நோய் என்றே சொல்­ல­வேண்டும்
குறிப்­பாக இவ்­வாறு பய­ணங்­களை மேற்­கொள்ளும் பஸ்கள் ஏறாவூர், ஓட்­ட­மா­வடி, நாவ­லடி, வற­க்காப்­பொல மற்றும் துல்­கி­ரிய, நாங்­கல்ல, பஸ்­யால போன்ற பிர­தே­சங்­க­ளி­லுள்ள ஹோட்­டல்­களில் உண­வுக்­காக தரித்துச்  செல்­கின்­றன. பொரும்­பாலும் இங்­குள்ள ஹோட்­டல்­களில் அதி­க­மா­னவை முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மா­னவை. ஒரு சில ஹோட்­டல்­களைத் தவிர அத்­த­னையும் மிக மோச­மான நிலை­யிலே காணப்­ப­டு­கின்­றன. 

இங்­குள்ள ஹோட்­டல்கள் சுகா­தார சீர்­கே­டுகள் என்ற ஒற்றை வச­னத்­துக்குள் வகைப்­ப­டுத்­தி­வி­ட­மு­டி­யாது. இதனை பல வகை­களில் தரப்­ப­டுத்த முடியும். 

தூரப் பய­ணங்­களை மேற்­கொள்ளும் அதி­க­ள­வான பஸ்கள் இரவு வேளையில் தங்­க­ளது பய­ணங்­களை மேற்­கொள்­கின்­றன.இதனை சாத­க­மாக பயன்­ப­டுத்­து­கின்­றனர் ஹோட்டல் உரி­மை­யா­ளர்கள்.

பழைய சிற்­றூண்டி, சாப்­பா­டு­களை விற்­பனை செய்­கின்ற ஹோட்­டல்­களே இந்தப் பய­ணப்­பா­தையில் அதிகம் என்­கின்­றனர் பிர­யா­ணிகள். மேலும் இங்­குள்ள மலசல கூடங்கள் மக்கள் பாவ­னைக்கு உத­வாத வகை­யிலே இருப்­ப­த­னையும் காண­மு­டி­கின்­றது. காலையில் தயா­ரித்த ரொட்­டிகள், உண­வு­களை  இரவு வரைக்கும் விற்­பனை செய்­கின்ற ஹோட்டல் சொந்­தக்­கா­ரர்­க­ளாக நம்­ம­வர்கள் இருப்­ப­தனை என்­ன­வென்று சொல்­வது. 

ஹலால், ஹறாம் பற்றி அங்­க­லாய்த்­துக்­கொள்­கின்றோம். இவ்­வா­றான விட­யங்­களில் அவை தாக்கம் செலுத்­தா­தது ஏன். அண்­மையில் ஒரு முகநூல் நண்பர் தனது முகநூல் பக்­கத்தில் இவ்­வா­றான ஒரு விட­யத்தை பதி­விட்­ட­டி­ருந்தார். அந்த விடயம் இக்­கட்­டு­ரைக்கு பொருத்தம் என்று கருதி பதிவு செய்­யப்­ப­டு­கின்­றது. 

இலங்­கையில் ஹலால் விடயம் சூடு­பி­டித்த காலத்தில் இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக குறிப்­பி­டு­கின்றார் அந்த நண்பர். வறக்­காப்­பொல ஹோட்டல் ஒன்றில் அன்­றைய தினம், இரவு 11.00மணி­ய­ளவில் பஸ் நிறுத்­தப்­ப­டு­கின்­றது. பய­ணிகள் அத்­த­னை­பேரும் இறங்கி தங்­க­ளுக்குத் தேவை­யா­ன­வற்றை பெற்று உண்டு கொண்­டி­ருக்­கின்­றனர்.

குறித்த சகோ­த­ரரும் இந்த ஹோட்­டலில் மரக்­கறி ரொட்டி வாங்கி சாப்­பிட்­டி­ருக்­கின்றார். அந்த ரொட்டி பழு­த­டைந்த வாடை வீசி­யி­ருந்­தது. உடனே அதனை அங்கு வைக்­கப்­பட்­டுள்ள குப்பை வாளியில் போட்­டு­விட்டார். அதே போல் பெரும்­பான்மை இன சகோ­த­ரரும் அவ்­வாறே நடந்­து­கொண்­ட­டுள்ளார். அதன் பின் பெரும்­பான்மை சகோ­தரர் இந்த முஸ்லிம் சகோ­த­ரரை பார்த்து சில கேள்­வி­களை கேட்­டதே இங்கு முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. "

 “மேக முஸ்லிம் கடே நேத 
மேவா ஹலால்த? மே சம்பந்தவ ஒயாலா கதா­கறன் நெத்த”  
“இது முஸ்லிம் கடை­தானே 
இப்­படி விற்­பது ஹலாலா. இது சம்­பந்­த­மாக நீங்கள் கதைப்­ப­தில்­லையா?”
 
இந்தக் கேள்­விக்கு அந்த முஸ்லிம் சகோ­தரரால் எந்­தப்­ப­திலும் அளிக்­க­மு­டி­யாமல் போனதாய் கவ­லை­பட அந்­தப்­ப­திவை இட்­டி­ருந்தார். 
பின்னர் இரு­வ­ரு­மாக அந்த ஹோட்டல் உரி­மை­யா­ள­ரிடம் விட­யத்தை முறை­யிட்­டுள்­ளனர். அந்த முறைப்­பாட்­டி­லுள்ள நியா­யங்­களை மறுத்­தி­ருக்­கின்றார் உரி­மை­யாளர்.

பெரும்­பான்மை இனத்­தவர் ஒரு இரா­ணுவ வீரர் என்று தன்னை அறி­மு­கப்­ப­டுத்தி பொலி­சுக்கு அறி­விக்­கப்­போ­வ­தாக கூறி­யுள்ளார். உடனே ஹோட்டல் உரி­மை­யாளர் “ஒவ் சேர் உதய தாபு றொட்டி தமாய்”, “ஆம் காலையில் போட்ட றொட்டி தான்” என்று கூறி­யி­ருக்­கின்றார். தூரப் பய­ணங்­களின் போது பஸ்கள் நிறுத்­தாட்­டப்­படும் அதி­க­மான ஹோட்­டல்­களின் நிலை இவ்­வா­றுதான்.  

தூரப் பய­ணங்கள் மேற்­கொள்ளும் அதி­க­மான பிர­யா­ணிகள் சார­தி­க­ளு­டனும், நடத்­து­நர்­க­ளு­டனும் இது­வி­ட­யத்தில் முரண்­பட்­டுக்­கொள்­ள­வ­தனைக் கண்­டு­கொள்­ள­மு­டி­கின்­றது.

ஒவ்­வொ­ரு­வரும் உழைப்­பது வாழ்­வ­தற்கே. பணத்தை கொடுத்து ஏன் நோயைத் தேட­வேண்டும் என்ற கேள்வி பிர­யா­ணிகள் மத்­தியில் அதி­க­ம­திகம். இங்கு அமை­யப்­பெற்­றுள்ள ஹோட்­டல்கள் பய­ணி­களின் நலனில் எந்த அக்­கறையும் செலுத்­து­வ­தே­யில்லை. சாரதியையும், நடத்துனரையும் ஒரு வீட்டுக்கு வந்த விருந்தினரைப்போல கவனிப்பதில் மகா நடிகர்கள். பணம் கொடுத்து உணவை கொள்வனவு செய்யும் மக்கள் தொடர்பில் எடுக்கின்ற அக்கறை பூச்சியமே. 

சுத்தம், சுகாதாரம் பேணி ஹோட்டல்களை நடாத்துவதில் என்ன தடைகள் உள்ளன. இந்த விடயம் உயிர்காக்கும் தர்மத்துடன் தொடர்புடையது. சமூகத்துக்கு முன்மாதிரியாக வாழ வந்தவர்கள் முஸ்லிம்கள். பிற சமூகங்கள் பொதுத்தளங்களில் கேவலமாக விமர்சிக்கின்ற நிலையிலிருந்து மீள்வது எப்போது. 

முஸ்லிம் ஹோட்டல் சொந்தக்காரர்களே சமூக இருப்பை காப்பாற்றுங்கள். முஸ்லிம்கள் தொடர்பிலான அவநம்பிக்கை மேலெழுகின்ற விடயங்களில் இதுவும் ஒன்று என்பதனை ஆழமாகப் பதித்துக்கொள்ளுங்கள்.

கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன தூய்மை, சுத்தம் என்கின்ற விடயம் சாதாரணமானதல்ல என்பதனை புரிந்துகொள்ளுங்கள். அது இறைநம்பிக்கை சார்புடையது. வெறுமனே பொருளாதார தேடல்களுடன் தொடர்புடையதல்ல. நாம் சம்பாதிக்கும் பொருளாதாரம் நம்மை எவ்வளவு காலத்துக்கு உலகில் நிலைத்திருக்கச் செய்யும். அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்.