Verified Web

நெருக்கடிமிக்க நாட்கள் சதிவலைகளை அறிவுபூர்வமாகக் கடந்து செல்வது எப்படி?

Siraj Mashoor

மீள்பார்வை பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரான இவர் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறார். சமூக, அரசியல் செயற்பாட்டாளராகவும் விளங்குகிறார்.

2017-05-26 10:09:04 Siraj Mashoor

இன்­றி­ரவு எங்கு இன­வா­தி­களின் வெறி­யாட்டம் அரங்­கேறும், எத்­தனை கடைகள் எரிக்­கப்­படும் என்ற அச்­சத்­து­டன்தான் தினமும் தூங்க வேண்­டி­யி­ருக்­கி­றது. காலையில் கண் விழித்தால், இரவின் அந்த அச்சம் நிதர்­ச­ன­மான உண்­மை­யாகி விடு­கி­றது.

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் 'அதி புத்­தி­சாலித் தன­மாக' கள்ள மௌனம் சாதிக்­கின்­றனர். இந்த நாட்­களில் நாட்டை விட்டே 'ஒளித்­தோ­டு­கின்­றனர்.' முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் இது­வரை ஜனா­தி­ப­தி­யையோ பிர­த­ம­ரையோ நேரில் சந்­திக்க முடி­யாமல் இருக்­கி­றது.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி இருக்க, அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­விடம் போய் அழ வேண்­டி­யி­ருக்­கி­றது. மஹா­நா­யக்க தேரர்­களைச் சந்­தித்து மடிப்­பிச்சை கேட்க வேண்­டி­யி­ருக்­கி­றது. வெளி­நாட்டுத் தூது­வ­ரா­ல­யங்­க­ளுக்கு சென்று மன்­றாட வேண்­டி­யி­ருக்­கி­றது. இவற்றைச் செய்யக் கூடாது என்று சொல்­ல­வில்லை. நமது சமூ­கத்­தி­னது கையறு நிலையின் குறி­காட்­டி­களே இவை.

சுதந்­தி­ரத்­திற்குப் பிந்­திய இரு கட்சி ஆட்சி முறை விளை­வாக்­கி­யி­ருக்கும் பெருந் தோல்­வியின் அவ­லத்­தையே கண்டு கொண்­டி­ருக்­கிறோம். அவர்கள் அப்­ப­டி­யென்றால், இந்த விட­யத்தில் இவர்­களும் அப்­ப­டித்தான் என்ற கதை­யாகி விட்­டது. மூன்­றா­வது சக்­திக்­கான பாதையை நோக்கி நமது தேடல் விரிய வேண்டும்.

இந்த அவலம் புதி­தில்­லைதான். வர­லாறு மீள்­கி­றது. வன்­முறைப் போராட்­டத்தைத் தூண்­டி­வி­டு­வ­தற்­கான முஸ்­தீ­பு­கள்தான் இவை. மீண்டும் நெருக்­கடிமிக்க நாட்­க­ளுக்­குள்ளால் நகர்ந்து கொண்­டி­ருக்­கிறோம். 1970,80 களில் தென்­னி­லங்கைச் சிங்­க­ள­வர்கள், 1970 கள் முதல் 2010கள் வரை தமி­ழர்கள், இப்­போது முஸ்­லிம்கள்...! இதுதான் கண்­ணுக்குத் தெரி­யாத 'அவர்­களின்' கணக்கு. இந்தக் கணக்கை நாம் பிழை­யாக்க வேண்டும். அதுதான் இப்­போது நமக்கு முன்­னே­யுள்ள பெரும் சவால்.

1983 ஜூலைக் கல­வ­ரத்­தின்­போது, எல்லா அதி­கா­ரமும் கொண்­டி­ருந்த, அப்­போ­தைய நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­தன இப்­ப­டித்தான் கள்ள மௌனம் காத்தார். அதன் விளைவு முப்­ப­தாண்டு காலப் போரில் போய் முடிந்­தது.

கடந்த அர­சாங்க காலத்தில் மஹிந்­தவும் இப்­ப­டித்தான் பரா­மு­க­மாக இருந்தார். அதுவே அவர் வீட்­டுக்குப் போகக் கார­ணமாய் அமைந்­தது. இப்­போது 'தேசிய அர­சாங்கம்', 'நல்­லாட்சி அர­சாங்கம்' என்று பூச்­சாண்டி காட்டும் மைத்­தி­ரியும் ரணிலும் இதற்கு நல்ல விலை கொடுக்க வேண்டி வரும். நிறை­வேற்று அதி­காரம் எதற்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்­பதை இங்கு அவ­தா­னிப்­பது பொருத்தம்.

ஆனால், பிரச்­சினை அது­வல்ல. எந்தப் பேய் ஆண்­டாலும் பிணந்­தின்னப் போவது மக்­கள்தான். எப்­போதும் இழப்­பு­களை சந்­திப்­பது அப்­பாவி மக்­கள்தான். உயி­ரி­ழப்­பு­களும் பொருள் இழப்­பு­களும் தொடர்­வ­தற்­கான 'அச்ச மன­நிலை' தூண்டி விடப்­பட்டு வளர்க்­கப்­ப­டு­கி­றது. நோன்பு காலம் நெருங்­கும்­போது இப்­படி அச்­சத்தை விதைப்­பது தொடர்­க­தை­யாகி விட்­டது.

சுட்­டெ­ரிக்கும் சூரி­யனால் ஏற்­க­னவே நாடு கொதித்துக் கொண்­டி­ருக்­கி­றது. இப்­போது அர­சியல் கால­நி­லையை மாற்றி, சூடாக்கி நம்மைக் கரு­வ­றுக்க, இருட்­டுக்குள் இருக்கும் சக்­திகள் முற்­ப­டு­கின்­றன. இந்த இடத்­தில்தான் நாம் நின்று நிதா­னிக்க வேண்டும். ஆழ­மாகச் சிந்­திக்க வேண்டும்.

இலங்­கையை அமைதி வல­யத்­தி­லி­ருந்து நெருக்­கடி வல­யத்­திற்குள் தள்ளி விட முனையும் தந்­தி­ரத்தின் ஒரு பகுதி இது. அர­சியல் வியா­பா­ரிகள் தொடங்கி ஆயுத வியா­பா­ரிகள் வரை ஆடும் ஆடு­புலி ஆட்டம். இதை போரினால் களைப்­புற்­றி­ருக்கும் இந்த நாடு தாங்­காது.

குறிப்­பாக முஸ்லிம் இளை­ஞர்­களை சூடேற்றி, வன்­முறைப் பாதைக்குள் இழுத்து விடத் தூண்டும் பெரும் சதி அரங்­கேறிக் கொண்­டி­ருக்­கி­றது. போதா­த­தற்கு பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்­திற்கு (Counter Terrorism Act - CTA) அமைச்­ச­ரவை பச்சைக் கொடி காட்­டி­யி­ருக்­கி­றது. இதன் அபா­யங்கள், பின்­வி­ளை­வுகள் சொல்லி மாளா­தவை.

9/11 இற்குப் பிந்­திய சர்­வ­தேச அர­சி­யலை உன்­னிப்­பாக அவ­தா­னித்தால், உல­கெங்கும் அரச பயங்­க­ர­வாதம் (State Terrorism) உச்­ச­ம­டைந்­தி­ருப்­பதை அவ­தா­னிக்­கலாம். உல­கெங்கும் பல விடு­தலைப் போராட்­டங்கள், சர்­வ­தேச வலை­ய­மைப்­பி­னூ­டாக மிகத் தந்­தி­ர­மாக துடைத்­த­ழிக்­கப்­பட்­டுள்­ளன.

ஆதலால், இந்த நாட்­களை முஸ்லிம் சமூ­கமும் சமூகத் தலை­வர்­களும், மிகவும் அறி­வு­பூர்­வ­மா­கவும் நிதா­ன­மா­கவும் கையாள வேண்டும். குறிப்­பாக, உணர்ச்சிக் கொந்­த­ளிப்­பு­களை அறிவின் தீட்­சண்­யத்­து­டனும் அனு­ப­வத்தின் ஒளி­யிலும் வெல்ல வேண்டும். ஒட்­டு­மொத்த சமூ­கத்­தி­னதும் கூட்டு உணர்­வெ­ழுச்சி விவே­கத்­திற்­கான (Collective Emotional Intelligence) ஒரு சத்­திய சோத­னை­யாக இதைக் கொள்ள வேண்டும்.

அர­சி­யல்­வா­தி­களை நம்பிக் கொண்­டி­ராமல் சிவில் சமூக சக்­திகள் முனைப்­பா­கவும் செய­லூக்­கத்­து­டனும் கள­மி­றங்க வேண்டும். சர்ச்­சைக்­கு­ரிய நபர்­களை சட்­டத்தின் பிடிக்குள் சிக்க வைக்க வேண்­டுமே தவிர, நாம் ஒரு­போதும் சட்­டத்தைக் கையில் எடுத்து விடக் கூடாது. சட்ட ரீதி­யான காய் நகர்த்­தல்­களில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த கால உள்­நாட்டு மற்றும் உல­க­ளா­விய அனு­ப­வங்கள் மூலம், நாம் எண்­ணற்ற பாடங்­களைக் கற்­றுள்ளோம். தீய சக்­திகள் விரிக்கும் பொறிக்குள் நாம் அகப்­பட்டு விடக் கூடாது.

இப்­போ­தி­ருக்கும் வலை­ய­மைப்பு உலகில், எந்தப் பிரச்­சி­னையும் உள்ளூர்ப் பிரச்­சினை மட்­டு­மல்ல. ஏதோ ஒரு விதத்தில் அந்த விவ­காரம் நாடு­களின் எல்­லைக்கு வெளியே முடிச்சுப் போடப்­ப­டு­கி­றது. இந்தக் கள­நிலை யதார்த்­தங்­களை நாம் ஆழ்ந்து உள்­வாங்க வேண்டும்.

வன்­முறை நமது வழி­மு­றை­யாக அமைந்தால் கற்­பனை செய்ய இய­லாத இழப்­பு­களை எதிர்­கொள்ள வேண்டி வரும். முஸ்லிம் மக்­க­ளது சமூக, பொரு­ளா­தார, குடிப் பரம்பல் கட்­ட­மைப்பு இதில் அதிக பாதிப்புச் செலுத்தும். ஆதலால், ஜன­நா­யக வழி­மு­றையில் போரா­டு­வதே சேதம் குறைந்த மிகச் சிறந்த வழி­முறை.

ஒருங்­கி­ணைந்த பொறி­முறை, வேலைத்­திட்டம் இதற்கு மிகவும் அவ­சியம். இது முஸ்லிம் மக்­களின் போராட்டம் மட்­டு­மல்ல. நமது பரப்­புக்கு வெளியே சிந்­திக்க வேண்டும். நமது வட்­டத்­திற்கு வெளியே இருக்கும் நேச சக்­தி­களை நோக்கி நமது சமூ­கத்தின் கரம் நீள வேண்டும். ஆங்­காங்கே நம்­பிக்­கை­யூட்டும் சில குரல்கள் கேட்கத் தொடங்­கி­யி­ருப்­பது சற்று ஆறு­த­லா­கவே இருக்­கி­றது.

இது அவ்­வ­ளவு இல­குவில் முற்றுப் பெறும் விடயமாகத் தெரியவில்லை. ஆதலால், நீண்ட தொலைநோக்கின் அடியாகத் தோன்றும் மூல உபாய நகர்வே மிகச் சிறந்தது.

இதுபோன்ற கருத்துக்களை விவாதிக்கும் உரையாடல் மன்றங்களை (Dialogue Forum) பரவலாக நடத்துவது காலத்தின் கட்டாயம். நமக்கு பரவலான அமைப்பில், பல மட்டங்களில் சிந்தனைக் கூடங்கள் (Think Tank) மிகவும் இன்றியமையாதவை.

ஆழமாக உரையாடுவோம், விவாதிப்போம். அவற்றினூடாக, வெளியேறும் வழிகளையும் விடைகளையும் கண்டடைவோம். வரலாறு நமக்காகக் காத்திருக்காது. நாம்தான் வரலாற்றில் தலையீடு செய்ய வேண்டும். அப்போதுதான் மாற்றம் சாத்தியப்படும்.