Verified Web

தோப்பூர் செல்வ நகர் மக்களை வெளியேற்றிய சோகம்

SNM.Suhail

 ஊடகவியலாளர், 
விடிவெள்ளி

2017-05-21 08:32:32 SNM.Suhail

ஆட்டுச் சண்டை, மாட்டுச் சண்டை, கோழிச் சண்டை என முற்­கா­லத்தில் சண்­டை­க­ளுக்­கான கார­ணங்கள் விசித்­தி­ர­மாக இருக்கும். இப்­போது அதை நினைத்தால் சிரிப்­புத்தான் வருகிறது.இன்றும் கிராமப் பகு­தி­களில் வீடு­களில் ஆடு மாடு, கோழி மற்றும் செல்லப் பிரா­ணி­களை வளர்க்கிறார்கள். இதனால் அவ்­வப்­போது அயல் வீடு­க­ளுடன் சண்டை சச்­ச­ர­வுகள் தோன்றும், ஆனால் ஓரி­ரு­நாட்களில் மறைந்து விடும். அடுத்த வீட்டு மாடு தமது தோட்­டத்­தினுள் மேய்ந்­த­தினால் ஏற்­பட்ட தக­ராறு குடும்பப் பகை­யா­வதும்  அடுத்த பரம்­பரை வரை கோபித்­துக்­கொண்­டி­ருப்­பார்கள். இது பழைய கதை, இன்று நிலைமை அப்­ப­டி­யல்ல என்று சிந்­திக்­கி­றீர்­களா. அதை விடவும் மோச­ம­டைந்­துள்­ளது.
மாடு மேயப்போய் இன முறு­கலில் வந்து முடிந்த கதையே தோப்பூர், செல்வ நகர் நீணாக்­கே­ணியில் இடம்­பெற்­றுள்­ளது. இதுவே அந்த முழுப்­பி­ரச்­சி­னைக்கும் கார­ண­மல்ல. 2009 ஆம் ஆண்­டு­முதல் அங்கு சல­ச­லப்பு இடம்­பெற்றே வந்­தது. எனினும் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற அசம்­பா­வி­தத்தின் பின்­ன­ணியில் மாட்டு விவ­கா­ரமும் குட்டிக் கதை­யாக அமைந்­து­விட்­டது.

நீணாக்­கே­ணியில் கடந்த திங்­கட்­கி­ழமையும் அசம்­பா­விதம் ஒன்று இடம்­பெற்­றது. அங்கு முஸ்­லிம்­களின் காணி­களை கட்டம் கட்­ட­மாக கப­ளீ­கரம் செய்யும் பேரி­ன­வாத சக்­திகள் அங்­குள்ள வெல்கம் விகா­ரையை பாது­காக்கும் தோர­ணையில் அங்கு முஸ்­லிம்­களை சீண்டிப் பார்த்­தனர். 

விகா­ரையை பாது­காப்­ப­தற்கு என கூறி அத்துமீறி நுழைந்து மக்­களின் வீட்டு வேலிகள் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டன.  இதனால் பிரதேசத்தில் சற்று அமைதி குலைந்தது. ஸ்தலத்­துக்கு உடன் விரைந்த பொலிஸார் சம­ரசப் படுத்­தினர். நீதி­மன்றம் ஊடாக தீர்வை பெற்­றுக்­கொள்­ளு­மாறும் இரு தரப்­புக்கும் ஆலோ­சனை வழங்­கி­யது. இதற்­க­மைய திங்­க­ளன்று பிரச்­சினை சுமுக­மா­னது.
இனித்தான் மேற்­சொன்ன மாட்டுக் கதை வரு­கி­றது,

மறுநாள் செவ்­வாய்க்­கி­ழமை மாலை ஐந்து மணி கடந்­தி­ருக்கும். பிர­தேசவாசி ஒரு­வ­ரது மாடு விகாரை வள­வுக்குள் புகுந்து புல் மேய்ந்­து­கொண்­டி­ருந்­தது.

அங்கி­ருக்கும் மாட்டை அழைத்­து­வர சென்­ற­போது, விகா­ரை­யி­லி­ருந்­த­வ­ருக்கும் மாட்டுச் சொந்தக்கார­ருக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்­பட்­டது. பெரும்­பான்­மை­யினர் இங்கு மாடு வந்­தது தப்பு என கூற, மாட்டுச் சொந்தக் காரரோ மாடு என்றால் புல் மேய வரும் என பதி­ல­ளிக்க வாய்த்­தர்க்கம் கொஞ்சம் பெரி­தா­னது. இதற்­கி­டையில் பிர­தே­ச­வா­சிகள் அங்கு சூழ ஆரம்­பித்­து­விட்­டனர். வெறு­மனே புதினம் பார்க்க வந்த சனத்தைப் பார்த்து பீதி­ய­டைந்த விகா­ரையில் இருந்தவர்கள் "முஸ்­லிம்கள் பன்­ச­லையை உடைக்க வரு­கின்­றனர்" என சிங்­கள மக்­க­ளுக்கு தக­வலை பரப்­பிய பின்­னரே அசம்­பா­விதம் ஏற்­பட்­டது என்ற பின்னணிக் கதையை சொன்னார் சேரு­வில பிர­தேச சபையின் முன்னாள் தவி­சாளர் பெளஸ்.

இந்தப் பொய்­யான தக­வலை அடிப்­ப­டை­யாக வைத்து எங்­கி­ருந்தோ ஒரு  நூற்றி ஐம்­பது, இரு­நூறு பேர் அளவிலான கும்பலொன்று தடி, இரும்புக் கம்­பிகள், கத்தி, வாள், கூரிய ஆயு­தங்கள் தரித்து நீணாக்­கேணி மக்­களை எச்­ச­ரித்­துக்­கொண்டு ஊருக்குள் நுழைந்­தது. 

"அப்­போது இரவு 7 மணி கடந்­தி­ருக்கும், பிள்­ளை­களை தூங்க வைத்­து­விட்டு நானும் உறங்­கச்­செல்ல ஆயத்­த­மா­கிக்­கொண்­டி­ருந்தேன். வீட்­டுக்கு வெளியே கூட்­ட­மொன்று கூச்­ச­லிட்டு வரும் சத்தம் கேட்­டது. வீட்டில் ஆண்கள் யாரும் இல்­லா­ததால் வெளியே எட்­டி­க்­கூடப் பார்க்­க­வில்லை. வீட்டு வேலை­களை பார்த்­துக்­கொண்­டி­ருந்தேன்" என அந்த ஆபத்­தான சந்­தர்ப்பம் குறித்து 28 வய­து­டைய இளம் தாய் அப்துல் வஹாப் பெள­சினா விப­ரிக்­கிறார். இரண்டு பிள்­ளை­களின் தாய் அவர் மூத்த பிள்­ளைக்கு ஏழு வயது. இளைய பிள்ளை ஒரு வரு­டமும் எட்டு மாத­மு­மே­யாகும். இதற்கு மேல­தி­க­மாக 1 வருடம் 6 மாத­மே­யான மற்­று­மொரு குழந்­தையை பரா­ம­ரிக்­கிறார் பெள­ஸினா. அக்­கு­ழந்தை வேறு­யா­ரு­மல்ல தனது சகோ­தரி ஒரு­வரின் மகளின் குழந்­தையே. அத்­தோடு அந்தக் குழந்­தையின் தாயும் மன­நிலை பாதிக்­கப்­ப­ட்டவர். கூடவே அவ­ரையும் பரா­ம­ரித்து வரு­கிறார். பெளஸி­னாவின் உம்­மாவும் அந்த வீட்­டில்தான் இருக்­கிறார்.

நிலை­மையை மேலும் விப­ரிக்­கிறார் அந்த இளம் தாய், "வீட்­டுக்கு வெளியே சத்தம் மேலும் அதி­க­ரிக்­கி­றது. கொஞ்சம் நேரத்தில் தக­ரத்தால் வேயப்­பட்ட வீட்டின் வேலி உடைக்­கப்­படும் சத்தம் கேட்­கி­றது. எந்த சம்­ப­வமும் தெரி­யாத நாங்கள் பயத்தில் வீட்­டுக்­குள்­ளேயே இருந்­து­கொண்டோம். நேரம் செல்லச் செல்ல வீட்டின் மீது கல் எறி­யப்­பட்­டது. நாம் நடு அறைக்குள் சென்று கதவை மூடிக்­கொண்டோம். பின்னர் வீட்டின் கத­வுக்கும் கற்கள் எறி­யப்­பட்­டன.

நாம் அச்­சத்­துடன் இருந்தோம். வீட்டை விட்டு வெளியே வரு­மாறு கத்­தினர். பின்னர் நாம் அங்­கி­ருந்து செல்ல தீர்­மா­னித்து, அனைத்­தையும் விட்­டு­விட்டு இரு கைக்­கு­ழந்­தை­க­ளையும் ஏந்­திக்­கொண்டு வெளி­யே­றினோம். உம்மா, மன­நோயால் பாதிக்­கப்­பட்ட சகோ­த­ரியின் மகள் மற்றும் எனது 7 வயது குழந்­தை­யையும் அழைத்­துக்­கொண்டு வீட்டை விட்டு ஓடினோம் எங்­க­ளுக்கும் கல் அடிபட்­டது. உம்­மா­வுக்கே காயம் ஏற்­பட்­டது. பின்னர் வைத்­தி­ய­சா­லைக்கு சென்று மருத்­துவம் செய்­து­கொண்டோம்" என கண்ணீர் மல்க தமக்கு நேர்ந்த அவ­லத்தை கூறினார்.

பெள­சி­னாவின் வீட்டு யன்­னல்கள் தாக்­கப்­பட்­டு அவரின் வீட்டு வேலிகள் நொறுக்­கப்­பட்­டுள்­ளன. வீட்டை விட்டு வெளி­யே­றிய அந்த ஆண் துணை­யற்ற குடும்பம் பள்­ளி­வா­சலில் தஞ்சம் புகுந்­தது. 

அப்துஸ் ஸலாம் அக்பர், ஒரு கூலித் தொழி­லாளி. "இருட்­டுக்குள் யார், எவர் என்­பது எமக்கு தெரி­ய­வில்லை. ஆயுதம் தரித்து எம்மை தாக்க வரு­வது மட்டும் புரிந்­தது. எங்கள் வீட்டு வேலியை உடைத்த சத்தம் கேட்டு எனது பிள்­ளைகள் அச்­ச­ம­டைந்­தனர். வீட்டை விட்டு வெளி­யே­றுங்கள் என அவர்கள் சத்­தம்­போட்­டுக்­கொண்டு வந்­தனர். நானும் செய்­வ­த­றி­யாது அனைத்­தையும் விட்­டு­விட்டு மனைவி, பிள்­ளை­களை அழைத்­துக்­கொண்டு அங்­கி­ருந்து சென்றேன். அருகிலுள்ள அண்ணல் நகரில் எனது சகோ­த­ரனின் வீடு இருக்­கி­றது. அங்­கே சென்றேன்" என்றார் அவர்.

இப்­படி அந்த ஒருநாள் இரவு செல்­வ­நகர் நீணாக்­கேணி மிகவும் பதற்­ற­மாக இருந்­தது. அங்­குள்­ள­வர்கள் உட­ன­டி­யாக அர­சியல் தலை­மை­க­ளுக்கும் அதி­கா­ரி­க­ளுக்கும் விட­யத்தை தெளி­வு­ப­டுத்­தினர். 

அதிஷ்­ட­வ­ச­மாக குறித்த நேரத்தில் திருகோணமலை துறை­முகத்தில் இடம்­பெற்ற வைபவம் ஒன்றில் பாது­காப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்­னாண்டோ ஆகியோர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். அந்த வைப­வத்தில் இருந்த திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்­ரூ­பிற்கும் சம்­பவம் குறித்து எத்­தி­வைக்­கப்­பட்­டது. அவர் உடனே விவ­காரம் குறித்து அமைச்­ச­ருக்கும் ஆளு­ந­ருக்கும் தெளி­வு­ப­டுத்தி உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி கேட்­டுக்­கொண்டார்.

அத்­துடன், மறு­மு­னையில் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ்.தெளபீக் இவ்­வி­ட­யங்கள் குறித்து பொலி­ஸா­ருடன் தொடர்­பு­கொண்டு நட­வ­டிக்கை எடுக்­கும்­படி கேட்­டுக்­கொண்டார்.

இவ்­வா­றான வேண்­டு­கோ­ளுக்கு அமைய பாது­காப்பு தரப்­பினர் மிகவும் பொறுப்­புடன் செயற்­பட்டு நிலை­மையை கட்­டுப்­ப­டுத்­தினர்.
பொலிஸார் துரி­த­மாக செயற்­பட்­ட­மையால் பார­தூ­ர­மான விளை­வு­க­ளி­லி­ருந்து தப்­பித்­துக்­கொள்ள முடிந்­தது என்­கிறார் சேரு­வில பிர­தேச சபையின் முன்னாள் தலைவர் பெளசான். செவ்­வாய்க்­கி­ழமை மாலை முதல் பிர­தே­சத்தில் பதற்­ற­மா­ன­தொரு நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. பொலிஸார் மிகவும் சிறந்த முறையில் செயற்­பட்­டனர்.

அத்­தோடு, பெரும் அசம்­பா­வி­தங்கள் ஏற்­பட்­டு­வி­டாது நிலை­மையை கட்­டுப்­ப­டுத்­தினர். தொடர்ந்தும் தற்­போ­து­வரை அங்கு பொலிஸார் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இந்த சம்­பவம் துர­திஷ்­ட­மா­னது. ஆனால் அங்கு திட்­ட­மி­டப்­பட்ட செயற்­பா­டு­களே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்றார்.

‍நீணாக்­கேணி பகு­தி­யி­லி­ருந்து வெ ளியே­றிய மக்கள் சற்று தொலைவில் உள்ள செல்­வ­நகர் ஹுதா பள்­ளி­வாசல் மற்றும் உற­வி­னர்கள் வீடு­களில் தஞ்­சம்­பு­குந்­தனர். இர­ாணு­வத்­தி­னரும் பொலி­ஸாரும் சம்­பவ இடத்­துக்குச் சென்­ற­தோடு செவ்வாய் இரவு முதல் புதன் 
காலை வரை பிர­தே­சத்­துக்கு பாது­காப்­ப­ளித்­தனர். மறுநாள் காலையில் மக்கள் வீடு­க­ளுக்கு திரும்­பினர். 

திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் மற்றும் எம்.எஸ்.தெளபீக் எம்.பி., மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான அன்வர், லாஹிர் ஆகி­யோரும் நீணாக்­கேணி பகு­திக்கு விரைந்­தனர். அத்­துடன், செல்­வ­நகர் பள்­ளி­வா­சலில் தங்­கி­ருந்த மக்­களை சந்­தித்­தனர். 

"வெடிச்­சத்­தமும் வாள் வீச்சும் மேலோங்­கி­யி­ருந்­தன. அச்­சத்­துடன் முஸ்லிம் மக்கள் ஓடி வந்த காட்­சிகள் 2006 ஆம் ஆண்டு மூதூர் வெளியேற்­றத்­தையும் அதற்கு முன்னர் விடு­தலை புலிகள் காலத்தில் இருந்த பதற்­ற­மான நிலை­மை­யையே காட்­டின. மீண்டும் ஒரு முறை யுத்­தத்தின் கொடூ­ரத்தை அனு­ப­வித்­த­துபோல் இருந்­தது." என்றார் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான்.

நீணாக்­கேணி பிரச்­சி­னையை மையப்­ப­டுத்தி மறுநாள் புதன்கிழமை காலை ஆளுநர் அலு­வ­ல­கத்தில் விசேட கூட்­ட­மொன்று இடம்­பெற்­றது. 

இதன்­போது, பிர­தே­சத்­தி­லுள்ள பிரச்­சி­னைகள் குறித்து ஆராய விஷேட குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டது. 
கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்­னாண்டோ தலை­மையில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் திரு­கோ­ண­மலை மாவட்ட அர­சாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஷ்­ப­கு­மார, திரு­கோ­ண­மலை மாவட்ட  பொலிஸ் அத்­தி­யட்­சகர், இரா­ணுவ பிர­தா­னிகள், தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரிகள், வன­ஜ­ீவ­ரா­சிகள் திணைக்­கள அதி­கா­ரிகள், பிர­தேச செய­லாளர் மற்றும் கிராம சேவ­கரும் கலந்­து­கொண்­டனர். அத்­துடன், திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப், தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ்.தொளபீக், கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் அன்வர், பள்­ளி­வா­சல்கள் நிரு­வா­கிகள், விகா­ரை­களின் பிர­தா­னி­களும் பங்­கு­கொண்­டனர்.

அத்­துடன் திரு­கோ­ணமலை மாவட்ட அர­சாங்க அதிபர் தலை­மையில் மாகாண காணி ஆணை­யாளர், பிர­தேச செய­லாளர் ஆகியோர் ஒரு மாத காலத்­திற்குள் அறிக்கை சமர்ப்­பிக்க வேண்டும் எனவும்  கேட்­டுக்­கொண்­டனர்.  

அத்­துடன் பாதிப்­பு­களை தான் பொறுப்­பேற்­ப­தாக கூறிய மாவட்ட செய­லாளர், குறித்த பிர­தே­சத்­திற்கு நேர­டி­யாக சென்று சேத விப­ரங்­களை ஆராய்ந்து இழப்­பீடு குறித்து தீர்­மா­னிக்­கலாம் எனவும் குறிப்­பிட்டார்.

சேரு­வில பிர­தேச செய­லகப் பிரி­விற்கு உட்­பட்ட செல்­வ­நகர் நீணாக்­கேணி பிர­தே­ச முஸ்லிம் மக்கள் வாழும் குக்­கி­ரா­ம­மாகும். மக்கள் குடி­யி­ருப்­பு­க­ளுடன் நெற்­செய்கை காணி­களும் மேட்டு நிலப் பயிர்ச்­செய்கை காணி­களும் அங்கு காணப்­ப­டு­கின்­றன.

நூற்­றாண்டு கால­மாக அப்­ப­கு­தியில் முஸ்லிம் மக்கள் வாழ்ந்­து­ வந்­துள்­ளனர். அப்­பி­ர­தே­சத்தில் முஸ்­லிம்கள் அல்­லாத வேறு இன மக்கள் வாழாத நிலையில் கூட அங்கு குறிப்­பிட்­ட­தொரு இடத்தில் புத்தர் சிலை­யொன்று காணப்­ப­டு­கின்­றது. 1974 ஆம் ஆண்டு அதனை விஸ்­த­ரிப்பு செய்து விகாரை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் பின்னர் நாட்டில் ஏற்­பட்ட அசா­தா­ரண நிலைமை கார­ண­மாக அம்­மு­யற்சி கைவி­டப்­பட்­ட­தா­கவும் அப்­பி­ர­தே­சத்தில் வசிக்கும் 59 வய­து­டைய சாஹுல் ஹமீத் தெரி­வித்தார்.

சாஹுல் ஹமீத் நீணாக்­கேணி மஸ்­ஜிதுல் ஹுதா ஜும்ஆப் பள்­ளி­வா­சலின் தலைவர். அவர் அப்­பி­ர­தே­சத்­தி­லேயே நீண்­ட­கா­ல­மாக வசித்து வரு­கின்றார். அங்கு தற்­போது ஏற்­பட்­டுள்ள கொந்தளிப்பு நிலைமை தொடர்பில் அவர் விப­ரிக்­கையில், “செல்வ நகர் கிராம பிரிவில் நீணாக்­கேணி பிர­தே­சத்தில் 40 வரு­டங்­க­ளாக வசிக்­கின்றேன். இது யுத்­தத்­தினால் பெரிதும் பாதிக்­கப்­பட்ட பிர­தே­ச­மாகும். நாம் இரண்டு தட­வைகள் இக்­கி­ரா­மத்­தி­லி­ருந்து இடம் பெயர்ந்­தி­ருக்­கின்றோம்.

முதன் முறை­யாக நாட்டில் இன­மு­றுகல் ஏற்­பட்ட 1983 இல் இங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்து தோப்பூர் பகு­தியில் வசித்தோம். நாம் இங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்த நிலைமை கொடு­மை­யா­னது. பெரும் பதற்­றத்­தோடு அப்­ப­கு­தி­யி­லி­ருந்து வெளி­யே­றினோம். 
இதன்­போது எந்த உடை­மை­க­ளையும் எங்­களால் எடுத்துச் செல்ல முடி­ய­வில்லை. பலர் முக்­கிய ஆவ­ணங்­களைக் கூட விட்டுச் சென்­றனர். குறிப்­பாக காணி அத்­தாட்சிப் பத்­தி­ரங்­க­ளைக்­கூட தொலைத்­த­வர்கள் பலர் இருக்­கின்­றனர். இடம்­பெ­யர்ந்து இருந்த காலத்தில் விடு­தலைப் புலிகள் எமது சொத்­து­க­ளையும் ஆவ­ணங்­க­ளையும் கொள்­ளை­யிட்­டமை பெரி­து­ப­டுத்­தப்­ப­டாத விட­ய­மாக இருக்­கின்­றது.
இரண்­டா­வ­தாக இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது 2007 ஆம் ஆண்டு இங்­கி­ருந்து வெளி­யேற நேரிட்­டது. இதன்­போது கந்­த­ளாய்க்கு இடம்­பெ­யர்ந்த நாம் மீண்டும் 2009 ஆம் ஆண்டு சொந்த இடத்­துக்கு வந்து வாழ்வை மீளக் கட்­டி­ய­மைத்துக் கொண்டோம். இப்­பி­ர­தே­சத்தில் காணிப்­பி­ரச்­சினை 2013 ஆம் ஆண்டு தலை­தூக்­கி­யது.

1974 ஆம் ஆண்­டிற்கு முன்­னரே எமது பிர­தே­சத்தில் காணி உறு­திகள் பகி­ரப்­பட்­டன. அதற்கு பின்னர் காணி உறு­திகள் பெறு­வதில் பெரும் சிக்கல் நிலை தோன்­றி­ய­மையால் பல­ருக்கு தமது காணி­க­ளுக்­கான உறுதிப் பத்­தி­ரங்­களை உரிய காலத்தில் முறை­யாக பெற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. இது தற்­போது பெரும் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ள­மை­யா­னது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்” என்றார்.
நீணாக்­கேணி கிரா­மத்தில் 600 க்கும் மேற்­பட்ட முஸ்லிம் குடும்­பங்கள் வசிக்­கின்­றன. இவர்­களில் 120 குடும்­பங்­க­ளுக்கு சொந்­த­மான இடம் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு தொல்­பொருள் திணைத்­திற்கு சொந்­த­மா­னது என 2014 வர்த்­த­மானி மூலம் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது . 

49 ஏக்கர் பரப்­ப­ளவு கொண்ட அப்­ப­கு­தியில் 39 வீடு­களும் விவ­சாய நில­முமே அடங்­கு­கின்­றது. அத்­தோடு பள்­ளி­வாசல் காணியும் அடங்­கு­கின்­றது.

வர்த்தமானி அறிவித்தல் மிகவும் சூட்சுபமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிவித்தல் வெளிவரும் வரையில் யாருக்கும் தெரியாதநிலை காணப்பட்டதாக தெரிவிக்கிறார் பெளஸர் "திட்டமிட்டு எமது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு எமது காணி பிரச்சினைகளுக்கு தீர்வை தருவதாக கூறி அளவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. திரைமறைவில் 2014 ஆம்ஆண்டு நவம்பரில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமானது என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது" என்றார்.

தீகவாபி, அஷ்ரப் நகர்,பொத்துவில், புல்மோட்டை, இறக்காமம், பலாங்கொடை ஜீலானி, தம்புள்ளை, முசலி, அநுராதபுரத்தின் சில பகுதிகள், பொலன்னறுவை முஸ்லிம் கிராமங்கள், தெவனகல உள்ளிட்ட பல பிரதேசங்கள் அண்மைக்காலமாக காணிப்பிரச்சினை எனும் தொற்று நோய்க்கு உள்ளாகி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்நோய்  தொடராய் தற்போது முஸ்லிம்களை வாட்டி வதைக்கிறது.
எனவே மக்கள் மத்தியில் குடிகொண்டுள்ள அச்ச நிலைமையை நீக்கி சொந்த இடத்தில்  நிம்மதியான வாழ்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

அத்தோடு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரிப்பதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அரசியல் பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டியதே இப்போது அனைவரினதும் முன்னுள்ள பணியாகும்.