Verified Web

ரமழான் காலத்து உபந்நியாசங்கள்

Ash Sheikh SHM Faleel

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளான இவர் தேசிய சூறா சபையின் பிரதித் தலைவர்களுள் ஒருவராகவும் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞராகவும் விளங்குகிறார்.

2017-05-21 06:49:07 Ash Sheikh SHM Faleel

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்(நளீமீ)
நல்­ல­மல்கள் செய்ய ரமழான் நல்­ல­தொரு பரு­வ­கா­ல­மாகும். மற்­றைய காலங்­க­ளை­விட ரமழான் காலத்தில் பொது­மக்கள் மார்க்க விட­யங்­களில் அக்­கறை காட்­டு­வார்கள்.உல­மாக்­களும் இந்த வாய்ப்­பு­களைப் பயன்­ப­டுத்தி அதி­க­பட்சம் அவர்­களை நெறிப்­ப­டுத்தி அதிகம் அமல் செய்­ப­வர்­க­ளாக அவர்­களை மாற்ற திட­சங்­கற்பம் பூண­வேண்டும். 

அதேபோல் பயான்கள் செய்ய ரம­ழானில் சந்­தர்ப்­பங்கள் அதிகம் உள்­ளன. தறா­வீ­ஹுக்கு பிறகு, இப்தார் வேளைகள், ளுஹ­ருக்கு பிறகு என்று இவற்றைப் பட்­டி­யல்­ப­டுத்­தலாம். வழக்­க­மாக ரமழான் கால ஜும்ஆப் பிர­சங்­கங்களும் இதில் சேர்க்­கப்­ப­டலாம். இருப்­பினும் ரம­ழானில் மக்­க­ளுக்குத் தேவை­யான அடிப்­ப­டை­யான அம்­சங்­களை போதிப்­பதில் திட்­ட­மிட்ட வழி­மு­றைகள் எதுவும் வழக்­க­மாக பின்­பற்­ற­ப­டாமல் பயான்கள் செய்­யப்­ப­டு­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

பல இடங்­களில் குர்ஆன் மத்­ர­ஸாக்­களில் போதிக்­கப்­பட வேண்­டிய சாதா­ரண பிக்ஹ் அம்­சங்கள் கூட திரும்பத் திரும்ப மீட்­டப்­ப­டு­வ­தையும் இன்னும் பல பள்­ளி­வா­சல்­களில் பயான்கள் பண்­ணப்­ப­டா­ம­லேயே சந்­தர்­ப்பங்கள் நழுவ விடப்­ப­டு­வ­தையும் பார்க்க முடி­கி­றது. சிலபோது ஒருசில விட­யங்கள் மாத்­திரம் திரும்பத் திரும்ப மீட்­டப்­ப­டு­கின்­றன.

இது இலங்­கையில் மட்­டு­மல்ல, உல­கெங்­கிலும் அவ­தா­னிக்­கப்­படும் குறை­பாடு என்­பதை பின்­வரும் சம்­பவம் உணர்த்­து­கி­றது. தற்­கால அறபு இஸ்­லா­மிய அறி­ஞர்­களில் ஒருவர் தனது நூலொன்றில் தனக்கு நடந்த சம்­பவம் ஒன்றை பின்­வ­ரு­மாறு விளக்­கு­கின்றார். 
'அது ரமழான் மாதம் 17ஆம் நாள் இரவு. அதா­வது அந்த நாளின் காலைப் பொழுதில் தான் இஸ்­லா­மிய வர­லாற்றில் பத்ர் யுத்தம் நிகழ்ந்­தது. இந்த நிகழ்வை நினை­வு­கூரும் வகையில் ஒரு கிரா­மத்தில் உபன்­னி­யாசம் செய்ய வேண்டும் என நான் அழைக்­கப்­பட்டேன். எனது உரை அவ்வூர் மக்­களை வெகு­வாகக் கவர்ந்­தது. தமது மார்க்­கத்­தி­னதும் வர­லாற்­றி­னதும், நபி­யி­னது வாழ்வு முறை­யி­னதும் அவர்கள் அறிந்­தி­ராத சில பகு­தி­களை அவர்கள் என் உரையின் மூலம் தெரிந்து கொண்­டார்கள். 

ஆனால், அங்கு வந்­தி­ருந்த ஒரு­வ­ருக்கு மட்டும் எனது உரை கொஞ்­ச­மேனும் திருப்­தி­க­ர­மா­ன­தாக இருக்­க­வில்லை. நான் உரை நிகழ்த்­திய பள்­ளிவாசலின் இமாம் அவர் தான். அவர் அக்­கி­ரா­மத்தில் மக்­க­ளுக்கு வழக்­க­மாக மார்க்­கத்தைப் போதித்து வரு­ப­வரும் கூட. நான் பேசிய வகை­யி­லான 'மார்க்க விட­யங்­களை' அவர் அறிந்­தி­ருக்­க­வில்லை.

அவர் ரம­ழானின் அனைத்து இர­வு­க­ளிலும் மக்­க­ளுக்கு சிறுநீர் கழித்த பின் சுத்தம் செய்யும் முறைகள், வுழுவின் பர்­ளுகள், ஸுன்­ன­துகள், முஸ்­த­ஹ­புகள், வுழுவை முறிப்­பவை, சுத்தம் செய்ய உப­யோ­கிக்க முடி­யு­மான, முடி­யாத நீர் வகைகள் போன்ற அம்­சங்­களை போதித்­து­வரும் வழக்­க­மு­டை­யவர். இவ்­வாறே ரம­ழானும் கழிந்­து­விடும். பாவம் அந்த மனிதன் ரமழான் காலம் முடிந்­தாலும் குளி­ய­ல­றை­யி­லி­ருந்து வெளி­யா­க­மாட்டார். 

இந்த மனிதர் என்­னிடம் வந்தார். இதோ எமக்­கி­டை­யி­லான உரை­யாடல் தொடர்­கி­றது.

அவர்: 'உஸ்தாத் அவர்­களே உங்­க­ளது பேச்சு பிர­மாதம். ஆனால், மக்கள் இன்­றைய இரவில் தமது மார்க்க விட­யத்தில் ஏதா­வது சில­வற்றை உங்­க­ளி­ட­மி­ருந்து கற்­றி­ருந்தால் மிகப் பய­னள்­ள­தாக இருந்­தி­ருக்­கு­மல்­லவா?' என்றார். 

நான்: நபி­ய­வர்­க­ளதும், அவர்கள் புரிந்த யுத்­தங்­க­ளதும் வர­லா­றுகள் அவர்­க­ளது மார்க்க விவ­கா­ரங்கள் இல்­லையா? ஸஅத் இப்னு அபி­வக்காஸ்(ரழி) அவர்கள் 'எமது பிள்­ளை­க­ளுக்கு குர்­ஆனின் சூராக்­களை நாம் கற்­பிப்­பது போலவே நபி­ய­வர்கள் பங்கு கொண்ட யுத்­தங்­க­ளது வர­லா­று­க­ளையும் சொல்லிக் கொடுப்போம்' என்று கூறி­யி­ருக்­கி­றார்­களே என்றேன்.

அவர்: 'மார்க்க விவ­கா­ரங்­களை அவர்கள் கற்­றுக்­கொள்ள வேண்டும் என்­பதன் மூலம் நான் கரு­து­வது வுழு செய்யும், குளிக்கும் முறை­க­ளையும் அவற்றின் ஷர்த்­துகள், வாஜி­புகள், ஸுன்­னத்­துக்­க­ளையும் மற்றும் இவ்­வா­றான தொழுகை நிறை­வேற இன்­றி­ய­மை­யாத விட­யங்­க­ளையும் அவர்கள் கற்­றுக்­கொள்ள வேண்டும் என்­பதைத் தான்' என்றார்.

நான்: மதிப்­பிற்­கு­ரிய பெரியார் அவர்­களே! நீங்கள் குர்­ஆனை மன­ன­மிட்­டி­ருக்­கி­றீர்கள். வுழு செய்­வது, குளிப்­பது போன்ற சுத்தம் தொடர்­பான விட­யங்கள் பற்றிக் கூறும் குர்ஆன் வச­னங்கள் எத்­தனை இருக்­கின்­றன? என வின­வினேன்.

அவர்: (மௌன­மாக இருந்தார்).

நான்: வுழு தொடர்­பான அனைத்து விட­யங்­க­ளையும் அல்லாஹ் ஒரே ஒரு வச­னத்தில் உள்­ள­டக்­கி­விட்டான். அதுதான் சூரா மாயி­தாவின் 6ஆம் வச­ன­மாகும். இதுபற்றி சூரதுன் நிஸாவில் மற்­றுமோர் வசனம் வந்­தி­ருந்­தாலும் கூட அது இந்த சுத்தம் பற்­றிய விட­யத்தை சூரா மாயி­தாவில் உள்ள வச­னத்தைப் போலன்றி சுருக்­க­மா­கவே கூறி­யுள்­ளது. அப்­ப­டி­யாயின் சுத்தம் செய்­வது பற்றி குர்­ஆனில் இவ்­வ­ள­வுதான் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இது இப்­ப­டி­யி­ருக்க ஜிஹாத் செய்­வது – அல்­லாஹ்வின் பாதையில் போரா­டு­வது சம்­பந்­த­மாக குர்­ஆனில் எத்­தனை வச­னங்கள் உள்­ளன? என வின­வினேன்.  

அவர்: (மௌன­மாக இருந்தார்).

நான்: குர்­ஆனில் உள்ள பல சூராக்­களின் பெயர்­களைப் பார்த்­தாலே அவை ஜிஹா­துடன் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­பதை காணலாம் அல்­லவா? என்றேன். எனக் குறிப்­பி­டு­கிறார்.

  இந்த சம்­ப­வத்தை நாம் குறிப்­பிடக் காரணம் நம்­நாட்­டிலும் நாம் ரம­ழானில் ஆயுதப் போராட்டம் பற்றிப் பேச வேண்டும் என்­ப­தற்­காக அல்ல.இஸ்­லாத்தின் அஸ்­தி­வா­ரங்­க­ளாக உள்ள அதே­வேளை உட­னடித் தேவை­க­ளுக்கு நாம் முக்­கி­யத்­து­வ­ம­ளிக்க வேண்டும் என்­பதே இதன் மூலம் வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது. 

 நம்­நாட்­டிலும் ரமழான் காலம் வந்­து­விடும் போது ரம­ழானின் முத­லா­வது பிறை­யையும், ஷவ்­வாலின் முதலாம் பிறை­யையும் தீர்­மா­னிப்­பதில் எமக்கு மத்­தியில் சர்ச்சை தோன்றும். சர்­வ­தேச பிறைதான் சரி­யென சிலரும் தேசியப் பிறையின் படியே நோன்பு பிடிப்­பதும் பெருநாள் கொண்­டா­டு­வதும் அமைய வேண்­டு­மென்று வேறு சிலரும் கார­சா­ர­மாக விவா­திப்பர். வேறு சிலர் நாம் 'நுஜூ­மிகள்' என்­று­கூறி மூன்­றா­வது நிலைப்­பாட்­டை­யெ­டுப்பர். இவர்கள் இவ்­வாறு வாதித்துக் கொண்­டி­ருக்­கையில் சமூ­கத்தில் உள்ள 90% ஆன பொது­மக்கள் மிகுந்த குழப்­பத்தில் மூழ்­கி­வி­டுவர். ரம­ழானின் வரு­கையை ஆவ­லாக எதிர்­பார்த்து அமல் செய்யக் காத்­தி­ருக்கும் அவர்கள் இந்த சர்ச்­சை­களின்  முன் திக்­­பி­ர­மை­யுடன் நிற்­பார்கள். முஸ்லிம் அல்­லா­த­வர்­களோ இந்த சண்­டை­களைப் பார்த்து எக்­கா­ள­மிட்டு சிரிப்­ப­துடன் எமது போயாக்கள், திரு­வி­ழாக்­க­ளது திக­தி­களை தீர்­மா­னிப்­பதில் இவ்­வ­ளவு பெரிய சண்­டைகள் இடம்­பெ­று­வ­தில்­லையே எனக்­கூறி அவர்­க­ளது மார்க்­கமே சரி­யென்­ப­தற்கு இத­னையும் ஆதா­ர­மாக காட்­டு­வார்கள். 

எனவே, ரம­ழானின் வருகை எமது சமூ­கத்­துக்கு மத்­தியில் சச்­ச­ர­வு­க­ளையும் பிற­ச­ம­யத்­த­வ­ரது மனங்­களில் அதிருப்­தி­யையும் வர­வ­ழைப்­ப­தாயின் இத­னைப்­பற்றி நாம் தீவி­ர­மாக சிந்­திக்க வேண்டும். முத­லா­வது பிறையை தீர்­மா­னிப்­பது சம்­பந்­த­மாக வர­லாறு நெடு­கிலும் கருத்­து­வே­று­பாடு இருந்து வந்­தி­ருப்­ப­தி­லி­ருந்து எவரும் எவர் மீதும் தனது கருத்தை திணிக்க முடி­யாது என்­பதைக் காட்­டு­கி­றது. ஆனால் அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உல­மா­கூ­று­வது போல் நடந்து கொள்­வது தற்­போ­தைய சூழலில் எல்லா வகை­யிலும் பாது­காப்­பா­ன­தாகும். கருத்து வேறு­பா­டு­க­ளுக்கு உட்­படும் அம்­சங்­களை பொது­மக்­க­ளது சபை­க­ளிலும் குத்­பாக்­க­ளிலும் பயான்­க­ளிலும் பேசு­வது எவ்­வ­கை­யிலும் பொருத்­த­மா­ன­தல்ல. அவை விட­ய­மாக நல்ல அறி­வுத்­தெ­ளி­வுள்ள துறை சார்ந்­த­வர்கள் மட்டும் ஓர் இடத்தில் ஒன்­று­கூடி ஆதா­ரங்­க­ளு­டனும் நிதா­ன­மா­கவும் பரஸ்­பர அன்­பு­டனும் அல்­லாஹ்­வுக்கு பதில்­கூற வேண்­டுமே என்ற பயத்­து­டனும் யாரு­டைய வாயி­லி­ருந்­தேனும் உண்மை வெளி­வந்தால் போது­மென்ற உணர்­வு­டனும் இதில் ஈடு­படும் போது மட்­டுமே சுமு­க­மான முடி­வு­களைப் பெற­மு­டியும்.

முத­லா­வது பிறையைத் தீர்­மா­னிப்­பது, தரா­வீஹின் ரக­ஆத்­து­க­ளது எண்­ணிக்கை, நோன்பின் நிய்­யத்து போன்ற விட­யங்­களை நோன்பு காலத்தில் விவா­திப்­பதும் பயான்­க­ளது பேசு­பொ­ரு­ளாக கொள்­வதும் முற்­று­மு­ழு­தாக தவிர்க்க வேண்டும். இவற்றை சிலர் விவா­தித்துக் கொண்­டி­ருக்­கையில் பல இலட்சம் மக்கள் நோன்பின் கட­மையை உண­ராமல் நோன்பு பிடிக்க வச­தி­யி­ருந்தும் நோன்பு பிடிக்­கா­தி­ருக்­கின்­றார்கள். வேறு சிலர் நோன்பு நோற்­ப­தற்­கான வச­தி­வாய்ப்­புக்கள் இல்­லாமல் வறு­மையின் கொடூ­ரத்தில் சிக்­கி­யி­ருக்­கி­றார்கள். இவர்­களைப் பற்றி கவ­லைப்­ப­டு­வ­தற்கும் கரி­சனை எடுப்­ப­தற்கும் அதிக முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­படல் வேண்டும். அதிக கவ­ன­யீர்ப்­பிக்கு உள்­ளாக வேண்­டி­யது சிறிய விட­யமா? பெரிய விட­யமா? என நாம் சிந்­திக்­கலாம். 

தரா­வீஹின் ரக­ஆத்­துக்கள் பற்றி சர்ச்­சைப்­படும் போது பல இலட்சம் பேர் ஐவேளை தொழு­கை­யின்றி வாழ்­கின்­றார்கள். அத்­த­ஹி­யாத்தில் விரல் அசைப்­ப­து­பற்றி வாதிப்­ப­வர்கள் 'அஷ்­ஹது அல்­லா­யி­லாஹ இல்­லல்லாஹ்' எனப்­படும் வாச­கத்தை வாழ்­கையில் ஒரு தட­வை­யேனும் உச்­ச­ரிக்­காமல் காபிர்­க­ளாக வாழ்ந்­து­வரும் கோடிக்­க­ணக்­கானோர் பற்றி சிந்­திக்­கலாம்.
எமது கால நேரங்­களை இரண்­டாம்­பட்ச அம்­சங்­களில் செல­விட்டு ரம­ழானின் பிர­தான இலக்­கு­களில் மக்கள் தவ­றி­வி­டு­வ­தற்கு காரண கர்த்­தாக்­க­ளாக அமைந்­து­வி­ட­லா­காது.

அதேபோல் சில தலைப்­புக்­களில் நாம் பேசும் போது அதனுள் அடங்கும் விட­யங்கள் ஏற்­ப­டுத்தும் சாத­க­மான விளை­வு­க­ளையும் பாத­க­மான விளை­வு­க­ளையும் சீர்­தூக்கிப் பார்க்க வேண்டும். பாத­கங்கள் அதிகம் விளை­யு­மாயின் அத்­த­கைய தலைப்­புக்­களை தவிர்ப்­பதே சாலச் சிறந்­த­தாகும். அலி (ரலி) அவர்கள் 'மக்­களோடு அவர்­க­ளது அறிவுத் தரங்­க­ளுக்­கேற்ப்ப பேசுங்கள். அல்­லாஹ்வும் அவ­னது தூதரும் பொய்ப்­பிக்­கப்­ப­டு­வதை நீங்கள் விரும்­பு­கி­றீர்­களா?' என்­றார்கள்.

இமாம் புஹாரி அவர்கள் 'நாம் தெரிவு செய்­துள்ள சில தலைப்­புக்கள் மக்­களால் கிர­கிக்க முடி­யாத அம்­சங்­களை கொண்­டி­ருக்­கு­மாயின் அவற்றை நாம் பேசு பொரு­ளாகக் கொண்டால் அவர்கள் இருக்கும் நிலையை விட மோச­மான ஒரு நிலைக்கு போய்­வி­டு­வார்கள் எனக் கரு­தினால் அப்­ப­கு­தி­களைத் தவிர்ப்­பது' என்று ஒரு தலைப்பை இட்டு சில ஹதீஸ்­களை அதன் கீழ் போட்­டி­ருக்­கி­றார்கள். இதற்கு விளக்கம் கூறும் இமாம் இப்னு ஹஜர் அல்­அஸ்­க­லானி 'ஒரு தீமையை தடுக்கப் போய் அத­னை­விட மோச­மான ஓரு தீங்­கிற்குள் மக்கள் வீழ்ந்து விடு­வார்­களோ எனப் பயந்தால் அதனை தடுக்­காது விடலாம் என்­ப­தற்கு இதனை ஆத­ர­மாகக் கொள்­ளலாம்' என எழு­து­கி­றார்கள்.

மேலும் இமாம் புஹாரி அவர்கள் 'சிலர் சில விட­யங்­களை புரி­ய­மாட்­டார்­க­ளாயின் அவர்­களைத் தவிர்த்து அவற்றை புரிய முடி­யு­மா­ன­வர்­க­ளுக்கு மட்டும் அதனைப் போதிப்­பது' என்று வேறு ஓர் தலைப்பை தனது ஸஹீஹுல் புகா­ரியில் இட்டு அதன் கீழ் சில ஹதீஸ்­களை இட்டிருக்­கி­றார்கள்.

எனவே, மக்­க­ளது அறி­வுத்­தரம், வயது, பால் வித்­தி­யாசம், பிர­தேச வேறு­பா­டுகள், அவ்வப் பிர­தேச தேவைகள், கொள்கைப் பின்­ன­ணிகள், உட­னடித் தேவைகள் போன்­ற­வற்றை கவ­னத்தில் எடுத்து உபந்நியா­சங்கள் அமைக்­கப்­பட வேண்டும். இருக்கும் பிரச்­சி­னை­க­ளது வீரி­யத்தை மேலும் அதி­க­ரிக்­கா­மலும் சிந்­தனைச் சிக்­க­லையும் மார்க்­கத்தில் அவ­நம்­பிக்­கையும் தோற்­று­விக்­கா­மலும் இருக்க வேண்டும்.

தற்கால சூழலில் இளைஞர் சமுதாயம் கல்வியிலும் ஒழுக்கத்திலும் வீழ்ச்சியிலிருக்கிறது. குடும்ப உறவுகள் சீர் குலைந்திருக்கின்றன. அல்லாஹ், மறுமை, குர்ஆன், ஸுன்னா மீதான விசுவாசம் தளர்வடைந்துள்ளது. இதற்கெல்லாம் தொலைத்தொடர்பு சாதனங்கள் பெரிதும் பங்களித்துள்ளன. மக்கள் சடவாதம், நாஸ்திகம், சுயநலம், அற்ப இன்பங்கள் என்பவற்றில் மூழ்கித் திழைக்கிறார்கள். அறிஞர்களுக்கும் அறிவுக்கும் சமூக சேவகர்களுக்குமுள்ள முக்கியத்துவம் குறைந்து, நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், பணம் படைத்தவர்கள் தான் 'ரோல் மொடல்களாக' ஆக்கப்பட்டுவிட்டார்கள். இபாதத்களில் ஈடுபடுவோரது தொகை ஓரளவு அதிகரித்திருந்தாலும் அவற்றை அறிவுத் தெளிவோடும் பயபக்தியோடும் அவை தரப்பட்ட நோக்கத்தை புரிந்த நிலையிலும் மேற்கொள்வோரது தொகை குறைவாகும். நோன்பு, தொழுகை, ஹஜ், உம்ரா என்பன வெறும் சடங்குகளாகத் தான் நிறைவேற்றப்படுவதாக தெரிகிறது.

எனவே குத்பாக்கள், பயான்களது தலைப்புக்களை தெரிவு செய்யும் போது அடிப்படையான தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி ஈமான், இபாதத்கள், அஹ்லாக்குகள், அறிவுஞானம், குடும்ப உறவுகள் போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்போமாக!