Verified Web

மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை : முஸ்லிம் தலைவர்கள் எங்கே

2017-04-30 06:25:03 S.Rifan

- எஸ்.றிபான் -
ஒரு சமூ­கத்தின் அடை­யா­ளங்­களுள் பூர்­வீகக் காணிகள் முக்­கிய இடத்­தினை வகிக்­கின்­றன. விடு­தலைப் புலி­களின் தோல்­விக்குப் பின்னர் முஸ்­லிம்­களின் பூர்­வீகக் காணிகள் அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் கடும் போக்கு பௌத்த இன­வாத தேரர்­க­ளினால் என்­று­மில்­லா­த­வாறு கப­ளீகரம் செய்­யப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.இத­னை­யிட்டு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், சிவில் அமைப்­பினர் கவலை கொள்­ளாது இருக்­கின்­றார்கள். நாட்டில் உள்­நாட்டு யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் தமிழ் மக்­க­ளிடமிருந்து பிடுங்­கப்­பட்ட காணி­களை அர­சாங்கம் படிப்­ப­டி­யாக விடு­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. இதே வேளை, முஸ்­லிம்­களின் காணியை விடு­விக்­காது மேலும் முஸ்­லிம்­களின் காணி­களை பறித்துக் கொண்­டி­ருக்கும் அபாய நிலையில் முஸ்­லிம்கள் உள்­ளார்கள்.

முஸ்­லிம்­களை துரத்திக் கொண்­டி­ருக்கும் இந்த ஆபத்தை இல்­லாமல் செய்­வ­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நட­வ­டிக்­கை­களை எடுக்­காது மக்­களை ஏமாற்றும் வகையில் அறிக்­கை­களை விடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் தலை­வர்கள் அர­சாங்­கத்தின் பங்­கா­ளிகள் என்­றி­ருந்­தாலும் அர­சாங்­கத்தில் அவர்கள் செல்­லாக்­கா­சா­கவே உள்­ளார்கள்.

அம்­பாறை மாவட்டம்
இலங்­கையில் முஸ்­லிம்கள் செறிந்து வாழ்­கின்­ற­தொரு மாவட்­ட­மாக அம்­பாரை உள்­ளது. இங்­குள்ள மொத்த சனத் தொகையில் முஸ்­லிம்கள் 43.59 வீத­மா­கவும், சிங்­க­ள­வர்கள் 38.73 வீத­மா­கவும், தமி­ழர்கள் 17.4வீத­மா­கவும் உள்­ளார்கள். இம்­மா­வட்­டத்தில் 1705 சதுர மைல் நிலப்­ப­ரப்­புள்­ளது. இந்­நி­லப்­ப­ரப்பில் சுமார் 65 வீதத்திற்கும் அதி­க­மான நிலப்­ப­ரப்பு சிங்­க­ள­வர்­களின் வச­மா­க­வுள்­ளது.
முஸ்­லிம்­களின் மொத்த சனத் தொகையை விடவும் குறைந்த அளவு காணி­யே முஸ்­லிம்­களின் வச­மா­க­வுள்­ளது. முஸ்லிம் பிர­தே­சங்­களில் சனத்தொகை அடர்த்தி மிகவும் செறி­வாகக் காணப்­ப­டு­கின்­றது. 1963ஆம் ஆண்டின் சனத்தொகை மதிப்­பீட்டின் படி முஸ்­லிம்கள் 46.11 வீத­ம­ாகவும், சிங்­க­ள­வர்கள் 29.28 வீத­மா­கவும், தமி­ழர்கள் 23.23 வீத­மா­கவும் இருந்­துள்­ளார்கள்.

இந்த சனத்தொகை விகி­தா­சா­ரத்தை காலத்­திற்கு காலம் ஆட்சி செய்த பேரி­ன­வாத ஆதிக்க அர­சாங்­கங்கள் திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­களின் மூல­மா­கவும், மாவட்­டத்தின் எல்­லை­களில் செய்த மாற்­றங்கள் கார­ண­மா­கவும் மாற்­றி­ய­மைத்­துள்­ளன.  அம்­பாறை மாவட்­டத்தை சிங்­க­ள­வர்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்­ட­தொரு மாவட்­ட­மாக மாற்­று­வதே பேரி­ன­வா­தி­களின் திட்­ட­மாகும். இதற்­கா­கவே முஸ்­லிம்­களின் பூர்­வீகக் காணி­களை புனித பூமி என்றும், தொல்­பொருள் பிர­தேசம் என்றும், வனப் பிர­தேசம் என்றும் கப­ளீ­கரம் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

மாயக்­கல்லி மலை
அம்­பாறை மாவட்­டத்தில் இறக்­காமம் பிர­தேச செய­ல­கத்­திற்கு உட்­பட்ட மாணிக்­க­ம­டு­வி­லுள்ள மாயக்­கல்­லி­ம­லையில் கடந்த 05 மாதங்­க­ளுக்கு முன்னர் சட்ட விரோ­தமாக புத்தர் சிலை ஒன்று வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சிலை வைப்பு அப்­பி­ர­தே­சத்தில் உள்ள முஸ்­லிம்­களின் பூர்­வீகக் காணி­களை பறிப்­ப­தற்­கா­ன­தொரு சதி­வ­லை­யாகும். இதனால், பௌத்­தர்கள் யாரு­மற்ற இப்­பி­ர­தே­சத்­தி­லி­ருந்து புத்தர் சிலை அகற்­றப்­பட வேண்­டு­மென்று முஸ்­லிம்கள் எதிர்ப்புத் தெரி­வித்­தார்கள். குறிப்­பிட்ட பிர­தே­சத்­திற்கு முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்­பட அம்­பாறை மாவட்­டத்தில் உள்ள அனைத்து கட்­சி­களின் பிர­தி­நி­தி­களும் வருகை தந்­தார்கள்.

ரவூப் ஹக்கீம் இரண்டு வாரங்­களில் புத்தர் சிலை அகற்­றப்­படும் அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்று தெரி­வித்தார். ஆனால், சிலையை அகற்­று­வ­தற்­கு­ரிய எந்த பூர்­வாங்க நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. புத்தர் சிலை வைப்­ப­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் சிங்­கள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வ­ரிடம் பணம் பெற்றுக் கொண்­ட­தாகக் கூட பர­வ­லாக பேசப்­பட்­டன. இதற்கு குறிப்­பிட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இன்று வரைக்கும் மறுப்­புரை தெரி­விக்­க­வில்லை. 

இந்­நி­லையில் மாயக்­கல்லி மலையில் வைக்­கப்­பட்­டுள்ள புத்தர் சிலைக்கு மேலும் வலு­வூட்டும் வகையில் கடந்த வாரம் முஸ்லிம்கள் இரு­வ­ருக்கு சொந்­த­மான காணியில் விகாரை ஒன்­றினை அமைப்­ப­தற்­கு­ரிய பலாத்­கார நட­வ­டிக்­கை­களில் பௌத்த தேரர்கள் ஒரு சிலர் ஈடுபட்டனர். இதற்கு அப்­பி­ர­தேச மக்­களும், அர­சி­யல்­வா­தி­களும் காட்­டிய எதிர்ப்பு கார­ண­மாக அங்­கி­ருந்து பௌத்த தேரர்­களும், பௌத்த கடும் போக்­கா­ளர்­களும் சென்­றார்கள்.
 
விகாரை அமைக்க தீர்­மானம்
இந்­நி­லையில் 25.04.2017 அன்று அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதி­பரின் தலை­மையில் கச்­சே­ரியில் நடை­பெற்ற கலந்­து­ரை­யாடல் ஒன்றில் மாயக்­கல்லி மலைக்கு அருகில் உள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான இரண்டு ஏக்கர் காணியை சுவீக­ரித்து விகாரை அமைப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் பௌத்த கடும் போக்கு அமைப்­புக்­க­ளான பொது பல சேன, சிங்­கள ராவய, மாணிக்­க­மடு வரி­வார சைத்­திய ராஜ­ம­கா­வி­காரை அதி­பதி அம்­ப­க­ஹட்­டிய சீல­ரத்ன தேரர், இறக்­காமம் பிர­தேச செய­லாளர், காணி ஆணை­யாளர், தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரிகள் உட்­பட உயர் அதி­கா­ரிகள் பலரும் கலந்து கொண்­டுள்­ளார்கள். 

இதேவேளை, பௌத்த விகாரை அமைப்­ப­தற்கு தீர்­மா­னிக்­க­ப்பட்­டுள்ள காணி­களின் சொந்­தக்­கா­ரர்கள் அழைக்­கப்­பட்டு அவர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. அவர்­க­ளுக்கு மாற்று காணிகள் தரப்­ப­டு­மென்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு காணி உரி­மை­ய­ளர்கள் மறுப்புத் தெரி­வித்­துள்­ளார்கள். 

பௌத்த இன­வா­தி­களும், அதி­கா­ரி­களும் ஒன்று கூடி பலாத்­கா­ர­மாக முஸ்­லிம்­களின் காணி­களில் விகாரை அமைப்­ப­தற்கு முடிவு செய்­துள்­ளமை அம்­பாறை மாவட்­டத்திலுள்ள முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்கள், கிழக்கு மாகாண சபையின் முத­ல­மைச்சர், முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகி­யோர்­க­ளுக்கு  பலத்த சவா­லாகும். இவர்­க­ளுக்கு இதனை தடுத்து நிறுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டிய தார்­மீகப் பொறுப்­புள்­ளது. அம்­பாறை மாவட்டம் முஸ்லிம் காங்­கி­ரஸின் கோட்­டை­யாகும். முஸ்லிம் காங்­கிரஸ் முஸ்­லிம்­களின் காணி உரி­மைகள் முதல் அனைத்து உரி­மை­க­ளிலும் அச­மந்­த­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது என்ற குற்­றச்­சாட்டு பர­வ­லாக முன்வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் மாயக்­கல்லி மலையில் வைக்­கப்­பட்­டுள்ள புத்தர் சிலையை அகற்ற முடி­யாமல் திணறிக் கொண்­டி­ருக்­கின்­றனர் அக்­கட்­சி­யினர்.

 இந்­நி­லையில் முஸ்­லிம்­களின் காணி­களில் விகாரை அமைப்­ப­தற்கு எடுக்­கப்­பட்­டுள்ள தீர்­மா­னத்தை ரத்துச் செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் காங்­கிரஸ் எடுக்­காது போகு­மாயின் அம்­பாறை மாவட்­டத்தில் இக்­கட்­சியின் செல்­வாக்கு வெகு­வாக வீழ்ச்­சி­ய­டையும் என்­பதில் ஐய­மில்லை. இன்று முஸ்­லிம்­களின் காணியை பாது­காத்துக் கொள்­வது என்­ப­துதான் கடின பணி­யா­க­வுள்­ளது. இதனைச் செய்­யா­து முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியை காப்­பாற்ற வேண்­டு­மென்ற கோஷத்தை முன் வைத்துக் கொண்­டி­ருக்­கி­றது.

முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய குறிப்­பிட்ட இரண்டு ஏக்கர் காணியை  பாது­காத்துக் கொள்­வ­தற்கும், சட்­ட­வி­ரோ­த­மாக வைக்­கப்­பட்­டுள்ள புத்தர் சிலையை அகற்­று­வ­தற்­கு­மு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டாது போனால் எதிர் காலத்தில் அப்­பி­ர­தே­சத்தில் உள்ள முஸ்­லிம்­களின் காணிகள் மேலும் பறி­போகும் என்­பதில் ஐய­மில்லை. கடந்த காலங்­களில் முஸ்­லிம்­களின் காணிகளை பறித்து சிங்­க­ள­வர்­களை குடி­யேற்­றி­ய­தனைப் போன்று மாணிக்­க­மடு பிர­தே­சத்­திலும் முஸ்­லிம்­களின் காணி­களில் பௌத்த சிங்­க­ள­வர்­களை குடி­யேற்­று­வார்கள். இந்த அநியா­யத்தை தட்டிக் கேட்­ப­தற்கு வக்­கில்­லாத முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் அர­சாங்­கத்தின் பங்­கா­ளிகள் என்று சொல்லிக் கொண்­டி­ருப்­பதில் அர்த்­த­மில்லை.

இதே வேளை, மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் உள்ள முஸ்­லிம்­களின் காணியில் விகாரை அமைப்­ப­தற்கு கச்­சே­ரியில் எடுக்­க­ப்பட்­டுள்ள தீர்­மானம் மூல­மாக  நீதி நிலை நாட்­டப்­பட்­டுள்­ள­தாக அம்­ப­க­ஹட்­டிய சீல­ரத்ன தேரர் குறிப்­பிட்­டுள்ளார். அநி­யா­ய­மாக முஸ்­லிம்­களின் காணியைப் பறித்துக் கொள்­வ­த­றகு தீர்­மானம் எடுத்­துள்­ள­தனை நீதி நிலை நாட்­டப்­பட்­டுள்­ள­தென்று குறிப்­பிட்­டுள்­ளமை மூல­மாக பௌத்த இன­வாத தேரர்­களின் குரோத சிந்­த­னையை விளங்கிக்கொள்ள முடி­கின்­றது. 

ஞான­சார தேரர் வருகை
இதே வேளை, முஸ்­லிம்­க­ளுக்கு விரோ­த­மாக நடப்­ப­த­னையே தமது கொள்கை போல் வைத்­துள்ள பொது பல சேனவின் செய­லாளர் கல­கொட அத்த ஞான­சார தேரர் மாணிக்­க­ம­டு­விற்கு வருகை தந்து சிலை வைக்­கப்­பட்­டுள்ள இடத்­தினை பார்­வை­யிட்­டுள்ளார். இவ­ரின் வரு­கையின் பின்­னர்தான் கச்­சே­ரியில் அதி­கா­ரிகள் ஒன்று கூடி முஸ்­லிம்­களின் காணியை சுவீ­க­ரித்து விகாரை அமைப்­ப­தற்கு தீர்மா­னி­த்துள்ளனர். எதிர்­வரும் மே மாதம் முதலாம் திகதி விகாரை அமைப்­ப­தற்­கு­ரிய பூஜை­யையும், அடிக்­கல்­லையும் நடு­வ­தற்கு முடிவு செய்­துள்­ளார்கள் பௌத்த இன­வாத தேரர்கள். இது தங்­க­ளுக்கு கிடைத்த வெற்றி என்றும் குறிப்­பிட்­டுள்­ளார்கள். 

அர­சாங்­கத்தில் உச்ச அதி­கா­ரத்­திலும், கிழக்கு மாகாண சபையின் முத­ல­மைச்­ச­ரையும், அதி­கா­ரத்­தையும் வைத்­துள்­ள­தாக அடிக்­கடி தெரி­வித்துக் கொண்­டி­ருக்கும் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், மாயக்­கல்லி மலையில் வைக்­கப்­பட்­டுள்ள சிலையை அகற்­று­வ­தற்கு அதி­கா­ர­மற்­ற­வ­ரா­கவே உள்ளார். இதே வேளை, எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் கிளி­நொச்சி மற்றும் மட்­டக்­க­ளப்பில் வைக்­கப்­பட்ட புத்தர் சிலை­களை இரண்டு வாரங்­களில் அகற்­றி­யுள்ளார்.

ஆகவே, அர­சியல் அதி­காரம் என்­பது தாம் சார்ந்­துள்ள மக்­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கக் கூடி­ய­தாக இருக்க வேண்டும். அதனை விடுத்து வெறு­ம­னே அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக்கொண்டு அதனை முஸ்­லிம்­க­ளுக்கும், கட்­சிக்கும் கிடைத்த அதி­காரம் என்று பீற்றிக் கொண்­டி­ருப்­பது மக்­களை ஏமாற்றும் அர­சி­ய­லாகும். 

இதே வேளை, வடக்கும், கிழக்கும் இணை­வ­தற்கு முஸ்­லிம்கள் கடும் எதிர்ப்­புக்­களை காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அம்­பாறை மாவட்­டத்தில் தென்­கி­ழக்கு அலகு ஒன்­றினை முஸ்லிம் காங்­கி­ரஸின் சம்­ம­தத்­துடன் ஏற்­ப­டுத்­தவும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. தமி­ழர்கள் இணைந்த வடக்கு, கிழக்கை வேண்­டு­கின்­றார்கள். இதனைச் செய்­வ­தற்­காக கிழக்கு மாகா­ணத்தில் உள்ள சிங்­கள பிர­தே­சங்­களை இணைத்து தனி அதி­கார அல­கொன்றை ஏற்­ப­டுத்­து­வது அல்­லது ஏனைய மாகா­ணங்­க­ளுடன் இணைத்துக் கொள்­வது என்ற திட்­ட­மொன்­றினை பேரி­ன­வா­திகள் கொண்­டுள்­ளார்கள். இதற்கு முஸ்­லிம்­களின் அங்­கீகாரம் வேண்டும்.

இந்த அங்­கீகா­ரத்தை பெற்றுக் கொள்­வ­தற்­காக அம்­பாறை மாவட்ட முஸ்­லிம்­க­ளுக்கு அழுத்­தங்­களை ஏற்­ப­டுத்­து­வதும், அதன் உச்­ச­கட்­ட­மாக அம்­பாறை மாவட்ட முஸ்­லிம்கள் தாமா­கவே அர­சாங்­கத்தின் திட்­டத்­திற்கு ஒத்­து­ழைக்க வேண்­டி­ய­தொரு கட்­டாய சூழலை ஏற்­ப­டுத்­தவும் மாயக்­கல்லி மலை சிலை வைப்பு, இன்னும் பல இடங்­களில் சிலை வைப்­ப­தற்கு இருக்­கின்­றார்கள் என்ற செய்­திகளும் உள்­ள­னவா என்றும் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.


இந்­தி­யாவின் தலை­யீடு
இலங்­கையின் அர­சியல் போக்கில் இந்­தி­யாவின் தலை­யீ­டுகள் அதி­க­ரித்­துள்­ளன. இந்­தி­யாவின் இன்­றைய அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான திட்­டங்­களை உலக ரீதி­யாக கொண்­டுள்­ளது. இதே வேளை, அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்போடும் இந்­திய அர­சாங்கம் நெருக்­கங்­களைக் கொண்­டுள்­ளது. டொனால்ட் ட்ரம்ப் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கொள்­கை­களை கொண்­டுள்­ளவர்.

ஆகவே, இந்தப் பின்­னலில் இலங்கை அர­சாங்­கமும் உள்­ளதா என்றும் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. இலங்கை அர­சாங்­கத்­திற்கும் அமெரிக்­கா­வுக்கும், இந்­தி­யா­வுக்­கு­மி­டையே நெருக்­க­மான உற­வுகள் காணப்­ப­டு­கின்­றன. ஆகவே, இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் நட­வ­டிக்­கைகள் வெறு­ம­னே பௌத்த இன­வா­தி­களின் செயற்­பா­டுகள் மட்­டு­மன்றி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­படும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் அனு­ச­ர­ணை­க­ளுடன் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் நிகழ்ச்சித் திட்­ட­மா­கவே உள்­ளது.

இதனை முறி­ய­டிப்­ப­தற்கு முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அர­சியல் கட்­சி­க­ளுக்கு அப்பால் சமூ­கத்தின் தேவைக்­காக ஒற்­று­மைப்­ப­டுதல் வேண்டும்.

மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்தில் நடை­பெற்ற அனைத்துக் கெடு­தி­களும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அர­சாங்­கத்தில் முஸ்லிம் கட்­சிகள் யாவும் பங்­கா­ளி­க­ளாக உள்­ளன. முஸ்லிம் அமைச்­சர்கள் உள்­ளார்கள். இந்­நி­லையில் கடந்த அர­சாங்­கத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கோரத்­தாண்­டவம் ஆடிக் கொண்­டி­ருந்த ஞான­சார தேரர் மௌன­மாக இருக்­கின்றார் என்ற பார்வை உள்­ளது.

ஆயினும், அவர் பௌத்த இன­வா­தி­களின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு தடைகள் ஏற்­படும் போது களத்தில் குதித்து தமது கோரத்தை காண்­பித்துக் கொண்­டி­ருக்­கின்றார். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­டதன் பின்னர் ஏற்­பட்ட பிரச்­சி­னை­களின் போது ஞான­சார தேரர் ஆர்ப்­பாட்­டத்தில் கலந்து கொண்டார். மட்­டு­மல்­லாது நீதி­மன்­றத்தின் தடை உத்­த­ர­வையும் கிழித்து எறிந்தார். 

இது போலவே, மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் பலாத்­கா­ர­மாக விகாரை கட்­டு­வ­தற்கு தேரர்கள் தலை­மை­யி­லான குழு­வினர் வந்தபோது அங்கு காட்­டப்­பட்ட எதிர்ப்­புக்­க­ளினால் அவர்கள் திரும்பிச் சென்­றார்கள். பின்னர் ஞான­சாரர் வந்தார் கச்­சே­ரியில் கூட்டம் நடை­பெற்­றது. முஸ்­லிம்­களின் காணி­களை சுவீ­கரித்து விகாரை அமைப்­ப­தற்கு தீர்­மா­னமும் எடுக்­கப்­ப­ட்­டுள்­ளது. ஆகவே, ஞானசார தேரர் தமது திட்­டங்­களை அர­சாங்­கத்­திடம் ஒப்­ப­டைத்­துள்ளார்.

அவற்­றிற்கு தடைகள் ஏற்­படும் போது அவரே களத்­திற்கு வந்து தீர்­வு­களைப் பெற்றுக்கொள்ளும் நட­வ­டிக்­கை­களை எடுத்துக் கொண்­டி­ருக்­கின்றார். அவர் செய்­கின்­ற­வைகள் சட்­டத்­திற்கு முர­ணாக இருந்­தாலும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வ­தில்லை. இதன் மூல­மாக இன்­றைய அர­சாங்­கத்தை கட்­டுப்­ப­டுத்தும் வல்­ல­மையை கல­கொட ஞான­சார தேரர் கொண்­டுள்ளார் என்றும் அல்­லது ஞான­சார தேரரின் பௌத்த இன­வாத போர்­வைக்குள் மறைந்து இருந்து கொண்டு அர­சாங்கம் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றதா என்றும் சந்­தே­கிக்க வேண்­டி­யுள்­ளது. 

இதேவேளை, தொல்­பொருள் திணைக்­களம் தொல்­பொருள் பிர­தே­சத்­திற்­கு­ரிய காணியில் விகாரை அமைக்க முடி­யாது. ஆனால், இதற்கு வெளி­யே­யுள்ள காணி­யில் விகாரை அமைப்­பதில் தங்­க­ளுக்கு ஆட்­சே­பனை இல்லை என்று தெரி­வித்­துள்­ளது.

இதே வேளை, தொல்­பொருள் பிர­தே­சத்தில் வைக்­கப்­பட்­டுள்ள சட்டவிரோத புத்தர் சிலையை அகற்­று­வ­தற்கு இத்­தி­ணைக்­களம் நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. அர­சாங்­கமும், அதி­கா­ரி­களும் முஸ்­லிம்­களின் காணி­களை பறி­முதல் செய்­வதில் ஒரு திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­பது தெளி­வா­கின்­றது. 

முஸ்லிம் அமைச்­சர்கள்
மறு­பு­றத்தில் அர­சாங்­கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அர­சாங்­கத்தின் பங்­கா­ளிகள் என்று இருப்­பதில் காட்டும் ஆர்­வத்­தினை முஸ்­லிம்­களின் உரி­மைகள் விவ­கா­ரங்­களில் காட்­டு­வ­தில்லை. முஸ்­லிம்­களின் உரி­மை­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கும், இருக்­கின்ற உரிமைகளை பாதுகாத்துக்  கொள்வதற்கும் எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை.
அரசாங்கத்தின் பங்காளிகள் என்று இருந்தால்தான் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளலாமென்று ரவூப் ஹக்கீம் உட்பட எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், கடந்த அரசாங்கத்திலும், இன்றைய அரசாங்கத்திலும் அரசாங்கத்தின் பங்காளிகள் என்றிருந்து முஸ்லிம்களுக்கு உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. முஸ்லிம்களின் உரிமைகள் மேலும் பறிபோய்க் கொண்டிருப்பதனையும் முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கையாளாகாதவர்களாக இருந்து கொண்டிருப்பதும்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. 

முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுக்கின்ற அறிக்கைகள் மிகவும் சூடாகவே இருக்கின்றன. ஆனால், அவர்களின் அந்த அறிக்கைகளில் காணப்படும் அணலை அவர்களின் செயற்பாடுகளில் காண முடிவதில்லை. சூடான அறிக்கைகள் மூலமாக முஸ்லிம்களை திருப்திப்படுத்திக் கொள்ளலாமென்ற மட்டமான சிந்தனைதான் முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் காணப்படுகின்றன.

முஸ்லிம்களின் உரிமைகள் இவ்வாறு பறிபோய்க் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அபிவிருத்திகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் உரிமைகளை நிலையற்ற அபிவிருத்திகளுக்கும், அமைச்சர் பதவிகளுக்கும் தாரைவார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால்தான் மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு முடியாதவர்களாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உள்ளார்கள்.

பௌத்த இனவாதிகளும், தேரர்களும் முஸ்லிம்களின் காணியில் விகாரை அமைப்பதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.