Verified Web

ஒரு பெண்ணின் சுதந்திரத்தை தீர்மானிப்பது அவளது ஆடையமைப்பு அல்ல

2017-04-09 06:55:59 Administrator

லறீனா அப்துல் ஹக்குடன் நேர்காணல்
தமிழில் : ஏ.எல்.எம்.சத்தார்.
கே:  இலங்­கையில் சிங்­கள – தமிழ் மொழி­பெ­யர்ப்புப் பணிகள் சிறப்­பாக இடம்­பெ­று­கின்­ற­னவா? அவற்­றுக்கு முறை­யான வழி­காட்­டல்கள் கிடைக்­கின்­ற­னவா?

குறிப்­பி­டத்­தக்க அளவில் கிடைப்­ப­தில்லை. பெரும்­பாலும் நாம் தனிப்­பட்ட ரீதி­யி­லேதான் மொழி­பெ­யர்ப்புப் பணி­களில் ஈடு­பட்டு வரு­கிறோம். அதா­வது, சிங்­கள மொழி­யி­லி­ருந்து தமி­ழுக்கும், தமிழ் மொழி­யி­லி­ருந்து சிங்­கள மொழிக்கும் எவற்றை மொழி­பெ­யர்க்க வேண்டும் என்று தனிப்­பட்ட முறை­யி­லேயே தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இவ்­விரு மொழி­க­ளுக்கும் இடையில் கட்­டாயம் செய்­யப்­பட வேண்­டிய மொழி­பெ­யர்ப்­புகள் தொடர்பில் முறை­யான முன்­னெ­டுப்­புகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.அவ்­வாறே, மொழி­பெ­யர்ப்பு முயற்­சி­க­ளின்­போது, அவை சரி­யான முறையில் மொழி­பெ­யர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­னவா என்று மீள்­ப­ரி­சீ­லனை செய்யும் முறை­யெ­துவும் இங்கு கையா­ளப்­ப­டு­வ­து­மில்லை. 

இது தொடர்பில் எனது அனு­பவ ரீதி­யான உதா­ரணம் ஒன்றை முன்­வைப்­ப­தாயின், மார்டின் விக்­கி­ர­ம­சிங்க எழு­திய 'கம்­பெ­ர­லிய' நாவல் ஏற்­கெ­னவே பேரா­சி­ரியர் ஒரு­வரால் மொழி பெயர்க்­கப்­பட்­டது.

ஆனால், அதில் மொழி தொடர்­பான பல சிக்­கல்கள் காணப்­பட்­டன. அவற்றைக் கண்­ட­றிந்து நான் அதனை மீள்­மொ­ழி­பெ­யர்ப்புச் செய்தேன். அது இன்னும் பிர­சு­ர­மா­க­வில்லை. அது ஒரு­பு­ற­மி­ருக்க, அரச அனு­ச­ர­ணை­யோடு மேற்­கொள்­ளப்­பட்ட சில மொழி­பெ­யர்ப்­புகள் கூட பெரும்­பாலும் திருப்­தி­க­ர­மான மொழி­பெ­யர்ப்­பு­க­ளாக அமை­ய­வில்லை. அண்மைக் கால உதா­ரணம் என்ற வகையில், 'செங்­கோட்டங்' சிங்­கள நாவலின் தமிழ்  மொழி­பெ­யர்ப்பு மிகவும் பல­வீ­ன­மான ஒன்­றாக அமைந்­துள்­ள­மையைக் குறிப்­பி­டலாம். 

சிங்­கள - தமிழ் மொழி­க­ளுக்கு இடை­யி­லான ஊடாட்டம் என்­பது ஒரு புதிய விட­ய­மல்ல.  உண்­மையைச் சொல்­வ­தானால், ஈழத்தின் முத­லா­வது தமிழ் நூலான ‘சர­சோ­தி­மாலை’  ‘கலி­கால சாஹித்ய சர்­வக்ஞ பண்­டிதன்’ எனப் போற்­றப்­பட்ட இரண்டாம் பராக்­கி­ர­ம­பாகு மன்­னனின் அர­ச­வை­யி­லேதான் வெளி­யி­டப்­பட்­டது. இதன் மூலம், அச்­சிங்­கள மன்னர் தமிழ் மொழியைத் தெரிந்து வைத்­தி­ருந்தார் என்­பது புல­னா­கி­றது. அது­மட்­டு­மல்ல, கோட்டை இரா­ச­தானி யுகத்தில் தமிழ் இந்துக் கலா­சா­ரத்தின் செல்­வாக்­கினை அக்­காலச் சிங்­கள இலக்­கி­யங்­களில் அதி­க­மாகக் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

நான், ‘’சிங்­கள மொழியில் தமிழ் மொழியின் செல்­வாக்கு’’ எனும் நூலைத் தமிழில் மொழி­பெ­யர்த்­துள்ளேன். அவை போன்ற ஆய்வு ரீதி­யான படைப்­புகள் அதி­க­ம­திகம் சமூ­க­ம­ய­மாக்­கப்­படல் வேண்டும். மொழி­பெ­யர்ப்பு என்­பது  சமூக நல்­லி­ணக்­கத்தைத் தோற்­று­விக்­கக்­கூ­டிய அதி­சக்­தி­வாய்ந்த ஓர் ஆயு­த­மாகும்.


கே:  நீங்கள் எவ்­வாறு இந்த மொழி­பெ­யர்ப்புத் துறையில் ஈடு­பாடு கொண்­டீர்கள்?
எனது பிறந்­தகம் மாத்­தளை. எங்­க­ளூரில் தமிழ், சிங்­களம் ஆகிய இரு மொழி­க­ளையும் பேசும் மக்கள் மத்­தியில் வாழ்ந்­தவள் நான். எனது சிறு பரா­யத்­தி­லி­ருந்தே எங்கள் வீட்டில் சிங்­கள மொழியும் புழங்கி வந்­தது. அத்­துடன், நான் கல்வி கற்ற மாத்­தளை ஆமினா மகளிர் பாட­சா­லையில் சிங்­களம் கற்­பித்த நல்­லா­சி­ரி­யை­க­ளாலும் எனது சிங்­கள மொழி­ய­றிவு விருத்­தி­ய­டைந்­தது.

நான் பல்­க­லைக்­க­ழ­கத்தில் படித்­துக்­கொண்­டி­ருந்த கால கட்­டத்தில் தின­கரன் பத்­தி­ரி­கையில் 'சாளரம்' என்­றொரு பகுதி இடம்­பெற்­றது. அதில் சிங்­கள மொழி இலக்­கியப் படைப்­புகள் பல தமிழில் மொழி­பெ­யர்க்­கப்­பட்டு பிர­சு­ர­மா­கின. அந்தச் சந்­தர்ப்­பத்தில் பல்­க­லைக்­க­ழக வளா­கத்தின் ‘’சங்­கப்­ப­ல­கை’’க்­காக நான் சிங்­க­ளத்­தி­லி­ருந்தும் ஆங்­கி­லத்தில் இருந்தும் கவி­தை­களை மொழி­பெ­யர்த்து வழங்கி வந்தேன்.

தற்­செ­ய­லாக தின­கரன் சாளரம் பகு­திக்கு நான் அனுப்பி வைத்த மொழி­பெ­யர்ப்புக் கவி­தையை அதன் பொறுப்­பா­சி­ரியர் மர்ஹூம் எம்.எச்.எம். ஷம்ஸ் பிர­சு­ரித்தார். இது எனக்குப் பெரும் உந்­து­சக்­தி­யாக அமைந்­தது. அதன் பின்னர் பேரா­தெ­னிய பல்­க­லைக்­க­ழ­கத்தில் உதவி விரி­வு­ரை­யா­ள­ராக பணி­யாற்றி வந்த கால­கட்­டத்தில் பேரா­சி­ரி­யர்­க­ளான திருக்­கந்­தையா, எம்.ஏ. நுஃமான், சுமதி சிவ­மோகன் ஆகியோர் உள்­ளிட்ட குழு­வி­னரால் ஒழுங்­கு­செய்­யப்­பட்ட ஐந்து வார முழுநாள் மொழி­பெ­யர்ப்புச் செய­ல­மர்வில் என்­னையும் இணைத்­துக்­கொண்­டார்கள். அதன் மூலம் மொழி­பெ­யர்ப்புத் துறை சார்ந்த பரந்த அறிவைப் பெற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தாக இருந்­தது.

அது­வரை காலமும் வெறு­மனே ஆர்வம் கார­ண­மாகச் செய்து வந்த மொழி­பெ­யர்ப்புப் பணி­களைக் கோட்­பாட்டு சார்ந்த அறி­வோடு செய்­யக்­கூ­டிய வாய்ப்பு எனக்குக் கிட்­டி­யது.

பிற்­கா­லத்தில் அதே பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஆரம்­பிக்­கப்­பட்ட மொழி­பெ­யர்ப்பு டிப்­ளோமா, பட்­டப்பின் டிப்­ளோமா பாட நெறி­களில் ஆசி­ரி­ய­ராக இருந்து கற்­பிக்கும் வாய்ப்புக்கிடைத்தது.

அப்­பா­ட­நெ­றியில் பயன் ­ப­டுத்தும் வகையில் தமிழ் – சிங்­கள மொழி­களில் பொருத்­த­மான பாடப்­பி­ர­தி­களைத் தெரி­வு­செய்யும் பொறுப்பும் எனக்குக் கைய­ளிக்­கப்­பட்­டது. சிங்­க­ளம், -­தமிழ் மொழி மற்றும் கலா­சாரம் குறித்து ஏலவே இருந்த அறி­வுப்­ப­யிற்சி, அப்­ப­ணியை எனக்கு இல­கு­வாக்கித் தந்­தது. பௌத்த தர்மம் குறித்தும் நான் நன்கு கற்­றுள்ளேன்.

நாம் மொழி­பெ­யர்ப்பில் ஈடு­ப­டும்­போது, குறித்த கலா­சாரம் பற்­றிய போதிய தெளிவு நமக்கு இல்­லை­யென்றால் பெரும் சிக்கல் தோன்றும். உதா­ர­ணத்­திற்கு, ஆபி­ரிக்கக் கோத்­தி­ரங்கள் மத்­தியில் விருந்­தி­னரை வர­வேற்கும் ஒரு முறை இருக்­கி­றது. இலங்­கையை எடுத்­துக்­கொண்டால், சிங்­கள மக்கள் வெற்­றிலை கொடுத்து வர­வேற்­கி­றார்கள்.  

இந்­துக்கள் மஞ்­சள்-­குங்­குமம் வழங்கி வர­வேற்பர். முஸ்­லிம்­க­ளா­கிய நாம் 'அஸ்­ஸ­லாமு அலைக்கும்' என்று கூறி வர­வேற்போம். ஆபி­ரிக்க நாட்டு இலக்­கியம் ஒன்றை மொழி­பெ­யர்க்கும் போது மேற்­கண்ட பௌத்த, இந்து, முஸ்லிம் கலா­சாரப் பண்­பு­களில் ஒன்றைச் சம­னி­யாகக் கொண்டு மொழி­பெ­யர்த்தால், அவர்­களின் கலா­சார முறை­மை­யொன்றை நாம் கற்­றுக்­கொள்ள முடி­யாமல் போய்­விடும்.
 

கே:  உள்­ளதை உள்ள வித­மா­க­வேதான் மொழி­பெ­யர்ப்புச் செய்ய வேண்­டுமா? அதன் மூலம் சிக்­கல்கள் எழும் சந்­தர்ப்­பங்கள் உள்­ள­னவா?
சில காலத்­துக்கு முன்பு சிங்­கள நாவல் ஒன்று தமி­ழாக்கம் செய்­யப்­பட்­டது. அது தோட்­டப்­புறத் தமிழ், சிங்­கள மக்­களின் வாழ்­வி­யலைப் பின்­பு­ல­மாகக் கொண்ட ஒரு கதை­யாகும். அக்­க­தையில் வரும் ஒரு தமிழ்ச் சிறுவன், புத்­தரின் உருவச் சிலையைப் பார்த்து, ‘அது எவ்­வ­ளவு   சாந்­த­மாகத் தோற்­ற­ம­ளிக்­கி­றது;

ஆனால், எங்­க­ளது தெய்வச் சிலை­களோ ஆயு­தங்கள் ஏந்­தி­ய­வை­யாகப் பயங்­கரத் தோற்­றத்­துடன் உள்­ள­னவே’ என்று தனக்குள் நினைப்­பது போல் ஒரு சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. நான் இந்து தெய்வச் சிலை­களின் கலைத்­தன்­மையை அவ­தா­னித்­துள்ளேன். அவற்றை வழி­படும் இந்து மக்­க­ளுக்கு அவை பக்­தி­ம­ய­மான மனத்­தோற்­றத்­தையே தரும். எனினும், யாரேனும் ஒரு­வ­ருக்கு மிக அரி­தா­க­வேனும் மாற்­ற­மான மனக்­க­ருத்து தோன்­றக்­கூடும். அதுவே அந்­நா­வலில் இடம்­பெற்­றி­ருந்­தது.

எனினும், நாட்டில் யுத்தம் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த அக்­கா­ல­கட்­டத்தில் மொழி­பெ­யர்ப்­பாளர் ஒருவர் எந்தத் தூர­நோக்கும் இன்றி, மேற்­படி சம்­ப­வத்தை அவ்­வாறே மொழி­பெ­யர்ப்புச் செய்­தி­ருந்தால், அது சமூ­கங்­க­ளுக்கு இடையில் பரஸ்­பர நல்­லி­ணக்­கத்­துக்குப் பதி­லாக, எத்­த­கைய எதிர்­வி­ளை­வு­களை எழுப்பி இருக்­கக்­கூடும்? இந்­நி­லையில், தமிழ் மொழி­பெ­யர்ப்பில் அப்­ப­குதி இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.  

கோட்­பாட்டு ரீதி­யாகப் பார்த்தால், மொழி­பெ­யர்ப்­பா­ள­ருக்கு அப்­படிச் செய்யும் உரிமை இல்­லைதான். ஆனால், மொழி­பெ­யர்ப்­பாளர் மூல­மொழி ஆசி­ரி­ய­ரோடு இதன் எதிர்­வி­ளை­வுகள் குறித்துக் கலந்­து­ரை­யாடி, அவ­ரது அனு­ம­தி­யோ­டுதான் அப்­ப­கு­தியை நீக்­கி­யி­ருந்தார் என்­பதைப் பின்னர் அறிந்­து­கொண்டேன்.

இவ்­வாறு, ஒரு மொழி­பெ­யர்ப்­பா­ள­ருக்குத் தூர­நோக்கும் சமூகப் பொறுப்­பு­ணர்வும் இருப்­பது மிகவும் இன்­றி­ய­மை­யா­த­தாகும். எதனை, எதற்­காக மொழி­பெ­யர்ப்புச் செய்­கிறோம் என்­பது குறித்த தெளிவு இருத்தல் வேண்டும். என்னைப் பொறுத்­த­வ­ரையில் மொழி­பெ­யர்ப்பு என்­பது மிகவும் ஆத்­மார்த்­த­மாகச் செய்­யப்­பட வேண்­டிய ஒரு மகத்­தான பணி­யாகும்.
 

கே:  ஒருவர் தனது சமூகம் குறித்துச் செய்யும் சுய­வி­மர்­சன ஆக்­க­மொன்று மொழி பெயர்க்­கப்­ப­டு­கையில், அது மற்­றொரு சமூ­கத்­தி­னரால் இன­வா­தத்தைத் தூண்­டு­வ­தற்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டலாம் அல்­லவா?
 பெண் எழுத்­தாளர் தஸ்­லிமா நஸ்ரின் அன்று வங்­காள தேசத்தில் நில­விய மோச­மான பிற்­போக்­கான சமூக நிலையை பிர­தி­ப­லிக்கும் வகையில் எழு­தினார்.

ஆனால், அதனை அடிப்­ப­டை­யாக வைத்­துக்­கொண்டு முழு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் கலா­சார, சமூக நிலை இதுதான் என்று  கொள்­வது சரி­யல்ல. அவ்­வாறே, தமி­ழினி எல்.ரீ.ரீ.ஈ. யினை விமர்­சித்து  எழு­தினார் என்று வைத்­துக்­கொள்­வோமே. அது மொழி­பெ­யர்க்­கப்­பட்ட பின்னர், ‘பார்த்­தீர்­களா எல்.ரீ.ரீ.ஈ. குறித்து அவரே இப்­படிச் சொல்­லி­யி­ருக்­கிறார்; எனவே, அவர்­களைக் கொன்­றொ­ழித்­தமை சரிதான்’ என்று யாரேனும் சொல்­லக்­கூடும்.

உண்­மையில், இத்­த­கைய நோக்­கு­நிலை எல்லாம் குறு­கிய மனப்­பான்­மையின் வெளிப்­பா­டு­க­ளே­யாகும். மலா­லாவின் பிரச்­சி­னை­யையும் அனேகர் இதே குறு­கிய பார்­வை­யு­ட­னேயே நோக்­கி­னார்கள். மலா­லாவைப் போன்று பாட­சா­லைக்குச் செல்­வதைத் தடுக்கும் வகை­யி­லான பிரச்­சி­னைகள் எவையும் இலங்­கையில் எமது பெண் பிள்­ளை­க­ளுக்­கில்லை. முஸ்­லி­மான ஆண்கள், பெண்கள் அனை­வரும் கல்வி கற்­பது கட­மை­யென்று எங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி­யி­ருக்­கி­றார்கள்.


கே:  தமிழ் - சிங்­கள மோதலின் போது தமிழ் மக்கள் மீது அனு­தாபம் செலுத்­திய சிங்­க­ள­வர்­கள்­கூட முஸ்­லிம்கள் மீது சந்­தேகக் கண் கொண்டு நோக்­கு­வதைக் காணக் கூடி­ய­தாக உள்­ள­தல்­லவா?
 உண்­மையில், மேற்கு நாடுகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொண்­டு­வரும் இடை­ய­றாத பிர­சாரம் இவ்­வி­ட­யத்தில் அதிகச் செல்­வாக்கு செலுத்­து­கி­றது. இது ஒரு பிர­தா­ன­மான காரணம் எனலாம். இந்­நி­லையில், முஸ்­லிம்கள் தமது செயற்­பா­டு­களை தற்­போது இருப்­பதை விடவும் மிக வெளிப்­ப­டை­யா­கவும்  காத்­தி­ர­மா­கவும் அமைத்­துக்­கொள்ள வேண்டும் என்று நான் நினைக்­கிறேன்.

சிங்­கள – முஸ்லிம் இனங்­க­ளுக்கு இடையில் ஊடாட்­டமும் தொடர்­பா­டலும் போதி­ய­ளவு நிக­ழ­வில்லை. எங்­க­ளது கருத்­து­களை சிங்­கள மக்­க­ளி­டையே கொண்டு செல்­வது யார்? இலங்­கையில் மீண்­டுமோர் இனப்­பி­ரச்­சினை எழக்­கூ­டாது என்று சிந்­திக்கும் சிங்­கள மொழி தெரிந்த முஸ்­லிம்­க­ளுக்கும், பௌத்த ஊட­கங்­க­ளுக்கும் இது­தொ­டர்பில் மிகப்­பெரும் பொறுப்­பொன்று உள்­ளது. 

இந்த இரண்டு இனங்­க­ளுக்கும் மத்­தியில் காணப்­படும் புரிந்­து­ணர்­வின்மை முதலில் களை­யப்­பட வேண்டும். முஸ்­லிம்கள் எப்­ப­டி­யா­ன­வர்கள் என்ற தெளிவை ஏற்­ப­டுத்தும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­சியம். நாம் என்ன சிந்­திக்­கின்றோம் என்­பதைச் சிங்­க­ள­வர்­க­ளா­கிய நீங்கள் எவ்­வாறு அறிந்­து­கொள்­வீர்கள்? பரஸ்­பரம் மொழிகள் தெரி­யா­விட்டால், இரு தரப்­பி­ன­ரி­டை­யேயும் வேறு­பாடும் புரிந்­து­ணர்­வின்­மையும் ஏற்­ப­டு­வது இயல்­பா­ன­தாகும்.

இப்­போது இந்த ஈரி­னங்­க­ளுக்கும் இடை­யி­லான ஆழ­மான கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது.

இரு மொழி­க­ளையும் இணைக்கும் மொழி­பெ­யர்ப்புப் பாலம் ஒன்று இன்­றி­ய­மை­யா­த­தாகி உள்­ளது. அல்­குர்ஆன் மொழி­பெ­யர்ப்­பு­களில் காணப்­படும் சிக்­கல்­களும் இதற்கு ஒரு கார­ண­மாகும். ‘கண்ட இடத்தில் கொலை செய்­யுங்கள்’ போன்ற வச­னங்கள் உரிய விளக்­கங்­க­ளுக்கு அப்பால் எடுத்­தா­ளப்­ப­டு­கின்­றமை இதற்­கான உதா­ர­ண­மாகும்.

உஸ்தாத்  மன்சூர் அவர்கள், அல்­குர்­ஆனின் மிகப்­பெ­ரிய அத்­தி­யா­ய­மான சூறா அல் பக­ரா­வுக்கு எழு­திய விளக்­க­வுரை நூல், ‘’அல்­குர்ஆன் சிந்த்­தாவ’’ எனும் பெயரில் சிங்­க­ளத்தில் மொழி­யாக்கம் செய்­யப்­பட்டு விரைவில் வெளி­வ­ர­வி­ருக்­கி­றது. அதன் மூலம் சிங்­கள மக்­க­ளுக்கு இஸ்லாம் பற்றிப் புரிந்­து­கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும். 

சிங்­க­ள­வர்கள் இஸ்லாம் குறித்து மிகச் சொற்­ப­மா­கவே அறிந்து வைத்­துள்­ளனர். எனவே அவர்கள் அது குறித்து இன்னும் தெளி­வாகப் புரிந்­து­கொள்­ளத்­தக்க வாய்ப்­புகள்  பர­வ­லாக வேண்டும்.

உண்­மையில், சிங்­கள மொழி மற்றும் இலக்­கியப் பாட­நூல்­களில் இவை குறித்தும் உள்­ள­டக்­கப்­படல் வேண்டும். சமூ­க­வியல் கற்­கை­க­ளிலும் இவை இடம்­பெறல் வேண்டும். சிங்­க­ளப் ­பாட நூல்­களில் முகம்­மது, பாத்­திமா, அப்­துல்லாஹ் என்­பன போன்ற முஸ்லிம் கதா­பாத்­தி­ரங்­களை நீங்கள் சந்­திக்­கக்­கூடும்.

அத­னூடே முஸ்­லிம்கள் நோன்பு நோற்­பது குறித்தும், முஸ்­லிம்­களின் உடைகள் பற்­றியும் சிங்­கள மாண­வர்கள் தெரிந்­து­கொள்­ளக்­கூடும்.

எனினும், முஸ்­லிம்­களின்  சமூகக் கலா­சா­ரங்கள் குறித்து விரி­வாக விளக்கும் சிங்­களப் பாடங்கள் எவையும் இல்லை. இவை பாட­சாலைக் கல்­வியில் இருந்தே ஆரம்­பிக்­கப்­படல் வேண்டும். அப்­போ­துதான் பரஸ்­பரப் புரிந்­து­ணர்வு ஏற்­பட வழி­பி­றக்கும். 


கே:  இது தொடர்பில் நீங்கள் என்ன செய்­தி­ருக்­கி­றீர்கள்?
இன்ஷா அல்லாஹ், எனது மர­ணத்­திற்கு முன்னர் நிறை­வேற்ற வேண்டும் என நினைக்கும் ஒரு கனவு எனக்­கி­ருக்­கி­றது. அதா­வது, பௌத்தம் – இஸ்லாம் ஆகிய இரு சம­யங்­க­ளுக்கும் இடை­யி­லான பொது­வான எண்­ணக்­க­ருக்­களை விளக்கும் ஓர் அற்­பு­த­மான ஆங்­கில மொழி நூல் உள்­ளது. அது ஒரு பெரிய நூலாகும். நான் இறப்­ப­தற்கு முன்னர் இதனை சிங்­களம், தமிழ் ஆகிய இரு­மொ­ழி­க­ளிலும் மொழி­பெ­யர்ப்புச் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்­டி­ருக்­கிறேன். 

ஒவ்­வொ­ரு­வரும் அடுத்­த­வரைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிதல் என்­பது வெறு­மனே ஒரு­வரைத் தெரியும் என்­பதில் மட்டும் தங்­கி­யி­ருப்­ப­தில்லை. மாறாக, மற்­றொ­ரு­வரின் கலா­சாரப் பாரம்­ப­ரியம், வர­லாறு, விருப்பு, வெறுப்பு போன்­ற­வற்­றையும் சேர்த்துப் புரிந்­து­கொள்­வ­தாகும்.


கே:  முஸ்லிம் பெண்கள் கொடுமை அனு­ப­விக்­கி­றார்கள் என்று சொல்­லப்­ப­டு­கி­றதே. நீங்கள் ஒரு முஸ்லிம் பெண் என்ற வகையில் அது குறித்துக் கருத்­து­ரைக்க முடி­யுமா?
 முஸ்­லிம்கள், முஸ்லிம் பெண்­க­ளுக்கு பர்தா அணி­வித்து அவர்­களைக் கொடுமைப் படுத்­து­கி­றார்கள் என்று கூறும் அதே நபர்கள், சிங்­களப் பெண்கள் ஐந்து குழந்­தை­களைப் பெற்­றெ­டுக்க வேண்டும் என்ற கருத்­தையும் வலி­யு­றுத்தி வரு­கி­றார்கள். இது மிகப்­பெரும் முர­ண­கை­யாகும். சமூ­கத்தில் இன்­னல்கள் அனு­ப­விப்­ப­வர்கள் முஸ்லிம் பெண்கள் மட்­டு­மல்லர்.

முஸ்­லி­மாக இருந்­தாலும் சரி முஸ்­லி­மல்­லா­த­வ­ராக இருந்­தாலும் சரி, ‘பெண் என்­பவள் பிள்ளை பெற்­றுப்­போடும் ஓர் இயந்­திரம்’ என்று யாரேனும் கரு­து­வார்கள் எனில், அதனை நாம் அனை­வரும் எதிர்த்து நிற்க வேண்டும் என்றே நான் கூறுவேன். எனவே, பெண்­க­ளுக்கு எதி­ரான  கொடு­மைகள் எங்கு நடந்­தாலும் நாம் அவற்றை எதிர்த்து நிற்போம்.


கே:  இளம் சிறு­மி­யரைத்  திரு­மணம் முடித்துக் கொடுப்­பது குறித்த கதை­யாடல் ஒன்று இடம்­பெற்று வரு­கின்­ற­தல்­லவா?
 இலங்­கையில் இள வயது திரு­ம­ணங்கள் இடம்­பெ­றக்­கூ­டிய சந்­தர்ப்­பங்கள் இல்­லா­ம­லில்லை. ஆனால், இவற்­றுக்குச் சமயச் செல்­வாக்­குத்தான் ஒட்­டு­மொத்தக் காரணம் என்று சொல்­வ­தற்­கில்லை.

அனே­க­ரது குடும்ப நிலை­மை­களே இவற்­றுக்­கான கார­ண­மெ­னலாம். நான் இதனைச் சரி காண­வில்லை.

ஆனால், இது­வொரு சமூகப் பிரச்­சி­னை­யாகும். தனிப்­பட்ட கார­ணி­களால் நடந்­தேறும் இத்­த­கைய நிகழ்­வு­களை உதா­ர­ண­மா­கக்­கொண்டு ஒரு சம­யத்தைக் குறை­கூ­று­வதால் எந்தப் பய­னு­மில்லை. சிங்­க­ள­வ­ராக, தமி­ழ­ராக, முஸ்­லி­மாக உள்ள ஒருவர் இள­வ­யதுத் திரு­ம­ணத்­துக்கு உட்­பட்டார் என்­ப­தற்­காக, அவர் ஏற்­றுள்ள சம­யத்தைக் குறை­காண்­பது சரி­யல்ல.

தற்­போ­துள்ள சமூக மற்றும் கல்வி நிலை­மை­களை அடிப்­ப­டை­யாக வைத்து நோக்­கு­கையில், முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திரு­மண வய­தெல்லை 18 வய­தாக உயர்த்­தப்­பட வேண்டும் என்­பதே எனது தனிப்­பட்ட அபிப்­பி­ரா­ய­மாகும்.

பெரும்­பா­லான முஸ்­லிம்கள் இதே நிலைப்­பாட்டில் உள்­ளனர். இன்­றைய கால­கட்­டத்தில் 18 வய­தென்­ப­தும்­கூட சிற்­றி­ளமைப் பரு­வம்தான். திரு­ம­ணத்­தின்­போது மணப் பெண்ணின் சுய­வி­ருப்­பத்தைக் கட்­டாயம் அறிய வேண்டும் என்று இஸ்லாம் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது. ஆனால், இதனைப் பெரும்­பா­லானோர் கடைப்­பி­டிப்­ப­தில்லை.

அது இஸ்­லா­மியக் கலா­சா­ரத்தின் தவ­றல்ல. முஸ்­லிம்­களின் தவ­றுதான். எல்லாக் கலா­சாரச் சமூ­கங்­க­ளிலும் பெண்­களின் சுதந்­திரம் இவ்­வாறு வரை­ய­றுக்­கப்­ப­டு­வதைக் காண்­கின்றோம். எனவே, பார்­வை­யி­ழந்­தவர் யானையைப் பார்க்க முற்­ப­டு­வதைப் போன்று இஸ்லாம் மார்க்­கத்தை நோக்­கக்­கூ­டாது.

கே:  இஸ்­லா­மியப் பெண்­களின் உடை­யா­னது அவர்கள் அனு­ப­விக்­கின்ற அடக்­கு­மு­றையின் ஒரு சின்­னம்தான் என்று நினைப்­போரும் இருக்­கி­றார்கள் தானே?
 ஒரு­வ­ருக்கு உடலின் சில பகு­திகள் வெளித்­தெ­ரியும் வகையில் ஆடை அணி­வ­தற்கு இருக்கும் அதே உரிமை, மற்­றொ­ரு­வ­ருக்கு உடலை மூடும் வகை­யி­லான ஆடையை அணி­வ­தற்கும் இருக்­கி­றது. நான் பர்தா அணி­கின்றேன். எங்கள் வீட்டில் அதனை முதன் முத­லாக அணிந்­தவள் நானே.

அதனை அணி­யும்­படி என்னை யாரும் வற்­பு­றுத்­த­வில்லை. அது என் சுய­தெ­ரிவு. பின்­னர்தான் எனது தங்­கையும் பர்தா அணிய ஆரம்­பித்தார். நான் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இதே பர்­தா­வு­டைய ஆடை­யுடன் நாட­கங்­களில் பங்­கேற்­றி­ருக்­கிறேன். பாட­லி­யற்றி மெட்­ட­மைத்து, இசை­ய­மைத்துப் பாடியும் இருக்­கிறேன்.

பல நூல்கள் எழு­தி­யி­ருக்­கிறேன். பல்­வேறு துறை­க­ளிலும் ஈடு­பாடு காட்டி, சமூகச் செயற்­பாட்­டுத்­த­ளத்தில் தொடர்ந்து இயங்கி வரு­கின்றேன். கலா­நிதி பட்டப் படிப்­பையும் தொடர்ந்து வரு­கிறேன். மேலே நான் குறிப்­பிட்­டுள்ள எந்­த­வொரு விட­யத்­திலும் ஈடு­பட வாய்ப்­பில்­லாமல் வீடு மட்­டுமே கதி­யென்று கிடக்கும் எத்­த­னையோ சிங்­கள, தமிழ்ப் பெண்கள் இருப்­பார்கள். அவர்கள் பர்தா அணி­வ­தில்லை.

அப்­ப­டி­யாயின் சுதந்­திரம் என்­பது, ஒரு பெண் முஸ்­லி­மாக அல்­லது சிங்­க­ள­வ­ராக, தமி­ழ­ராக இருக்­கிறார் என்­ப­திலோ ஒருவர் பர்தா அணிந்­தி­ருக்­கி­றாரா இல்­லையா என்ற அம்­சத்­திலோ தங்­கி­யுள்ள ஒரு விஷ­யமா என்ற கேள்வி எழு­கி­ற­தல்­லவா? என்னைப் பொறுத்­த­வ­ரையில் என்­னு­டைய இந்த ஆடை எனக்கு சாரியை விட இல­கு­வா­ன­தாக, வச­தி­யா­ன­தாக உள்­ளது. சிங்­களப் பெண்கள் உடுத்தும் ஒஸரி சற்றுக் கவர்ச்­சி­யா­னது என்றே எனக்குத் தோன்­று­கி­றது. அதனை அணி­வது எனக்குத் தனிப்­பட்ட முறையில்  மன­துக்குச்  சங்­க­ட­மா­ன­தாக இருக்­கலாம்.

ஆனாலும் சாரி­யையும் அழ­கா­கவும் மன­துக்குப் பிடித்­த­மான முறை­யிலும் அணி­ப­வர்கள் எங்கள் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றனர். 
கறுப்பு நிறத்தில் முழு உட­லையும் மறைத்து நிகாப் அணி­ப­வர்­களை ஏள­ன­மாகக் கதைப்­ப­வர்­களும் இருக்­கவே செய்­கி­றார்கள். அவ்­வாறு அணி­ப­வர்கள் வறுமை முத­லான கார­ணங்­க­ளாலும் கறுப்பு நிறத்தைத் தேர்வு செய்­யக்­கூடும்.

தனிப்­பட்ட ரீதியில் நான் அவ்­வாறு கறுப்பு நிற ஆடையை மட்டும் அணி­வதை விரும்­பு­வ­தில்லை. எனவே, நான் அதனை அணி­யாமல் தவிர்ந்­து­கொள்­கின்றேன். என்­றாலும், யார் யாரெல்லாம் தமது சுய­வி­ருப்­பத்தின் பேரில் அதனைத் தேர்வு செய்து அணி­கி­றார்­களோ, அது தொடர்பில் அவர்­க­ளுக்கு உள்ள உரி­மைக்­காகக் குர­ல்கொ­டுக்­கவும் நான் தயங்க மாட்டேன். அவ­ரவர் தெரிவு அவ­ர­வர்க்கு.

கே:  இலங்கை முஸ்­லிம்கள் அரபு நாடு­க­ளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இந்­நாட்டை ஓர் அரபுக் கொல­னி­யாக மாற்­றி­ய­மைக்கப் போகி­றார்கள் என்று நிலவும் கருத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்­கி­றீர்கள்? 
எங்­க­ளுக்குச் சவூ­தி­யுடன் இருப்­பது ஆன்­மீக ரீதி­யான ஒரு தொடர்­புதான். எங்கள் அனை­வ­ருக்கும் மக்கா சென்று ஹஜ் கட­மையை நிறை­வேற்ற வேண்டும் என்ற கடப்­பாடு இருக்­கி­றது. அதற்­காக சவூதி அரசின் எல்லாச் செயற்­பாட்­டையும் அங்­கீ­க­ரிப்­ப­தாக அர்த்­த­மில்லை.

ரிஸானா நபீக் என்ற இளம் பெண்ணின் மரண தண்­ட­னையின் போதும், மற்­றொரு பணிப்­பெண்­ணுக்கு ஆணிகள் அறை­யப்­பட்ட சந்­தர்ப்­பத்­திலும் நான் உட்பட முஸ்லிம்களில் அனேகர் அவற்றைக் கண்டிக்கவும் விமர்சிக்கவும் செய்தோம் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

கே: சிங்கள இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் விளைவாக முஸ்லிம் சமூகத்தில் அடிப்படைவாதிகள் தலைதூக்குவது  அதிகரித்ததா?
 ஒருவர் திடீரென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு நல்லது எனக்கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். உடனே அதனை எதிர்த்து முஸ்லிம்கள் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

அவ்வமைப்பின் நடவடிக்கைகளை முஸ்லிம்களே கடுமையாகக் கண்டித்து வருகிறார்கள். எல்லாச் சமூங்களிலும் அடிப்படைவாதக் கருத்துகள்  இருக்கவே செய்கின்றன. எனவே, இங்கும் அத்தகையக் கருத்தியலைத்தான் எதிர்க்க வேண்டுமேயன்றி, இஸ்லாத்தை எதிர்ப்பது சரியல்ல. இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு திரிந்த மேற்படி பயங்கரவாத அமைப்பினர் அனேக மதவழிபாட்டுத்தலங்களை நிர்மூலமாக்கினர். நாம் ஒருபோதும் அத்தகைய அடாவடித்தனங்களை ஆதரிக்கவில்லை. 

யுத்தம் ஒன்றில் ஈடுபடும் போது பிற சமூகங்களின் வணக்க வழிபாட்டுத் தலங்களுக்கு எத்தகைய சேதங்களும் இழைக்கக் கூடாது என்றும், பிற மதத் தலைவர்களைக் கொல்லவோ, சிறுவர்களைத் தாக்கவோ கூடாது என்றும் அல்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கட்டளையிடப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் தர்ஹாநகர் தாக்கப்பட்டபோது நாம் அச்சம் கொண்டோம். இந்தப் பீதி காரணமாக எனது சில முக்கியமான ஆவணங்களைக்கூட நான் வெளிநாட்டுக்கு அனுப்பிப் பாதுகாத்து வைத்தேன். அப்போது நாம் அனைவரும் நிம்மதி இழந்து தவித்துப் போயிருந்தோம்.

தொடர்ந்து பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போது அடிப்படைவாத எண்ணக்கருக்களை நோக்கி வெகுசிலர்  ஈர்க்கப்பட்டிருக்கலாம். என்றாலும், முஸ்லிம் சமூகம் அவ்வாறான ஒன்றை  ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை. அவ்வாறான கருத்துநிலைகள் உருவாகாமல் தடுக்கப்பட வேண்டும்.

காரணம், இதனால் அனைவருக்குமே பொருள், உயிர் அழிவுகள் ஏற்படும். சிங்கள மக்கள் அனைவரும் அடிப்படைவாதிகள் என்பதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். ஆனால், அவர்கள் மத்தியிலும் அடிப்படைவாதிகள் இருக்கவே செய்கின்றனர். என்றாலும், முழுமொத்தச் சிங்கள மக்களும் அதற்கான பொறுப்பை வகிக்க வேண்டிய தேவையில்லை. மறுதலையாகவும் அதனையே கூறவிழைகின்றேன்.

 

நன்றி: ராவய