Verified Web

கல்குடா : போதைக்குள் மூழ்கிடுமோ?

SNM.Suhail

 ஊடகவியலாளர், 
விடிவெள்ளி

2017-04-02 08:22:56 SNM.Suhail

போதை­யி­லி­ருந்து விடு­தலை பெற்ற நாடு என்ற ஜனா­தி­ப­தியின் தூர­நோக்கு இலக்கின் அடிப்­ப­டை­யிலும் கிழக்கு மாகாண சபையின் செயற்றிட்­டத்தின் அடிப்­ப­டை­யிலும் “போதை­யற்ற கிழக்கு” எனும் வேலைத் திட்டம் கடந்த பெப்­ர­வரி முதலாம் திகதி  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால்  ஆரம்­பிக்­கப்­பட்­டது.
ஜனா­தி­பதி ஆரம்­பித்த போதை ஒழிப்புப் பேர­ணியில் 3 ஆயிரம் இளை­ஞர்கள் உட்­பட செயற்­பாட்­டா­ளர்கள் பங்­கு­பற்­றினர்.

ஏறா­வூரில் இவ்­வா­றா­ன­தொரு பாராட்­டத்­தக்க விடயம் பகி­ரங்­க­மாக கோலா­க­ல­மாக இடம்­பெற்­ற­சந்­தர்ப்­பத்தில் கல்­கு­டாவில் தண்­ணீ­ருக்­குள்ளால் தீப்­பந்தம் ஏற்­றச்­சென்­றுள்­ளது  இந்த நல்­லாட்சி அர­சாங்கம். 

கடலும் கடல் சார்ந்த அழ­கிய பிரதே­சமே கல்­குடா. இலங்­கையின் சுற்­றுலாத் துறையின் முக்­கிய தள­மான பாசிக்­குடா அமைந்­தி­ருக்­கி­றது. அத்­துடன் இலங்­கையின் முத­லா­வது காகித தொழிற்­சா­லை­யான வாழைச்­சேனை காகித ஆலையும் இந்த தொகு­தியி­லேயே இருக்­கின்­றது. மூடப்­பட்டுக் கிடக்கும் அந்த பழ­மை­யான தொழிற்­சா­லையை மீண்டும் திறக்­கும்­படி பிர­தேச மக்­களும் தொழி­லா­ளர்­களும் தொடர் போராட்­டங்கள் நடத்­தியும் அவை செவிடன் காதில் ஊதிய சங்­கா­னது. சுற்­றுலாத் துறை அபி­வி­ருத்தி மற்றும் காகித தொழிற்­சாலை என முக்­கிய அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்ள முடி­யு­மான இடத்­திற்கு ஏன் மது உற்­பத்­தி­சாலை?. 


"மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 20 மது­பா­ன­சா­லை­களே சட்­டத்தின் பிர­காரம் காணப்­ப­ட­மு­டியும். அவ்­வா­றி­ருக்­கையில் 2009 ஆம் ஆண்டு மட்­டக்­க­ளப்பில் 47 மது­பான சாலைகள் காணப்­பட்­டன. தற்­போது மட்­டக்­க­ளப்பில் 58 மது­பா­ன­ச­லைகள் காணப்­ப­டு­கின்­றன. இவற்­றுக்கு யார் அனு­மதி அளித்­தது? எவ்­வாறு அனு­ம­திகள் வழங்­கப்­பட்­டன.

விடு­த­லைப்­பு­லி­களின் காலத்தில் அவர்­களின் பகு­தி­களில் எந்­த­வொரு மது­பா­ன­சா­லை­களும் இருக்­க­வில்லை. ஆனால் தற்­போது அங்­கெல்லாம் புதிது புதி­தாக மது­பா­ன­சா­லைகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன." என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சீனித்­தம்பி யோகேஸ்­வரன் அண்­மையில் குறிப்­பிட்­டி­ருந்தார். 

இந்­நாட்டில் புதிய அர­சியல் கலா­சா­ரத்­தையும் ஆட்சி முறை ஒன்­றி­னையும் உரு­வாக்­கு­வ­தற்­காக மக்­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட இந்த அர­சாங்­கத்தின் அண்­மைக்­கால நட­வ­டிக்­கைகள் மக்­களை ஏமாற்­று­வ­தா­கவும் ஏமாற்றம் அடையச் செய்­வ­தா­க­வுமே அமைந்­துள்­ளன. கல்­குடா பிர­தே­சத்தில் மது­பானத் தொழிற்­சாலை ஒன்றை அமைப்­ப­தற்­காக அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்­டுள்ள அனு­ம­தியும் விஷேட வரிச்­ச­லு­கை­களும் மக்­களை இன்­னு­மொ­ரு­முறை ஏமாற்றம் அடையச் செய்­தி­ருக்­கின்­றது. 

இந்­நாட்டில் போதைப்பொருள் பாவ­னையை கட்­டுப்­ப­டுத்தி புதி­ய­தொரு சமூக கட்­ட­மைப்பை உரு­வாக்­குவோம் என்ற உறுதி மொழி­யு­ட­னேயே இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது. ஆனால், அந்த உறுதி மொழி­யினை அமுல்படுத்­து­வ­தற்­கான ஆக்­க­பூர்­வ­மான எந்த நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தனை காண­மு­டி­ய­வில்லை. இதற்குப் பதி­லாக மது­பான உற்­பத்­தி­யினை ஊக்­கு­விக்கும் நட­வ­டிக்­கை­களே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

கிழக்கு மாகா­ணத்தில் தொழிற்­சா­லை­களை நிறுவி, தொழில் வாய்ப்­புக்­களை உரு­வாக்கி, மக்­களின் வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்­துவோம் என இந்த அர­சாங்கம் கிழக்கு மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்­தது. ஆனால், இப்­போது மது­பான தொழிற்­சாலை அமைப்­ப­தற்கு மாத்­தி­ரமே அர­சாங்­கத்­தினால் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. 

மது­பா­வ­னையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு வழி­மு­றை­யாக மது­பானப் பொருட்கள் மீது அதி­க­மான வரி­யினை விதிப்­ப­தென்­பது பொது­வான ஒரு நடை­மு­றை­யாகும். ஆனால் குறித்த இந்த தொழிற்­சா­லைக்கு 450 கோடி ரூபா வரை­யி­லான வரிச்­ச­லு­கை­யினை இந்த அர­சாங்கம் வழங்­கி­யி­ருக்­கின்­ற­தென்­பது ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­கின்­றது. உண்­மையில் மது பாவ­னையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்குப் பதி­லாக அதனை ஊக்­கு­விக்­கின்ற போக்­கி­னையே இந்த அர­சாங்கம் கடைப்­பி­டிக்­கின்­றதா? என்ற கேள்வி இங்கு பல­மாக எழு­கின்­றது. 

இவ்­வி­வ­காரம் தொடர்பில் கடந்­த­வாரம் இடம்­பெற்ற சபை அமர்வில் மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சீனித்­தம்பி யோகேஸ்­வரன் கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்தார்.

அவரின் உரையில், மட்­டக்­க­ளப்பில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் புதிய மது­பான உற்­பத்தி நிலை­யத்தின் பின்­ன­ணியில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் இருக்­கின்­றனர். 

நாட்டில் நல்­லாட்சி முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது என்று கூறப்­பட்­டாலும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் கும்­பு­று­மூ­லையில் சட்­டத்­திற்கு முர­ணாக மது­பான உற்­பத்தி நிலை­ய­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இந்த மது­பான உற்­பத்தி நிலை­யத்தின் தவி­சாளர் யார் எனப் பார்க்­கையில் இலங்கை மத்­திய வங்கி முன்னாள் ஆளு­நரின் மரு­ம­க­னான அர்ஜுன் அலோ­சி­யஸே காணப்­ப­டு­கின்றார். 

இந்த உற்­பத்தி நிலை­யத்­தினை நிர்­மா­ணிப்­ப­தற்­காக இவர் 230 கோடியை முத­லீடு செய்­துள்­ள­தோடு இந்­திய நிறு­வ­ன­மொன்று 220 கோடியை முத­லீடு செய்­துள்­ளது. மொத்­த­மாக 450 கோடி ரூபா  முத­லீட்டில் இந்த உற்­பத்தி நிலையம் ஸ்தாபிக்­கப்­ப­டு­கின்­றது. 
மேலும், கிழக்கு மாகாண சபை­யிலும், மாவட்ட அபி­வி­ருத்திக் குழுக் கூட்­டத்­திலும் இந்த நிர்­மா­ணத்­திற்கு எதிர்ப்புத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தோடு இதனை உட­ன­டி­யாக நிறுத்­து­வ­தற்­கான தீர்­மா­னமும் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தீர்­மா­னத்தை பிர­தேச சபை செய­லா­ள­ருக்கு அனுப்பி நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு கோரப்­பட்­டுள்­ளது.

இருப்­பினும் அத்­தீர்­மானம் அறி­விக்­கப்­பட்­ட­போதும் நிர்­மா­ணப்­ப­ணிகள் தொடர்ந்­த­வண்­ண­முள்­ளன. இவற்­றுக்­கி­டையில் இந்த நிர்­மா­ணப்­ப­ணியை மக்கள் விரும்­ப­வில்லை. அவர்­களின் பிர­தி­நி­தி­க­ளாக நாம் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் சந்­தர்ப்­பத்தில் எம்மை இணங்கிச் செல்ல வைப்­ப­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன என குறிப்­பிட்­டி­ருந்தார்.

இது இவ்­வா­றி­ருக்க, குறித்த இந்த தொழிற்­சா­லையின் நிர்­மாணப் பணி­க­ளுக்கு கோரளைப்பற்று பிர­தேச சபை­யினால் அனு­மதி மறுக்­கப்­ப­ட­டுள்ள நிலை­யிலும் குறித்த இந்த நிறு­வனம் அதனை உதா­சீனம் செய்து நிர்­மா­ணப்­ப­ணி­களை தொடர்ந்தும் மேற்­கொள்­கின்­றது.  அத்­தோடு, இதனைப் பார்­வை­யிடச் சென்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் தாக்­கு­கின்ற அள­விற்கு மிகவும் மிலேச்­சத்­த­ன­மாக அவர்கள் நடந்து கொண­டி­ருக்­கின்­றனர். இந்த அர­சாங்­கத்தின் உயர் அதி­காரம் கொண்டோர் சிலர் இதற்கு உறு­து­ணை­யாக நின்று செயற்­ப­டு­வ­த­னையே இது போன்ற நட­வ­டிக்­கைகள் நிரூ­பிக்­கின்­றன.

இந்த விட­யத்தில் முஸ்லிம் அர­சியல்  கட்சிகளால் எதிர்ப்­புகள் வெளியி­டப்­ப­ட­வில்லை. அத்துன் கோடிட்டு காட்­ட­வேண்­டிய மற்­றொரு விட­யம்தான், ஓட்­ட­மா­வடி மற்றும் வாழைச்­சேனை பகு­தி­க­ளி­லுள்ள எந்தப் பள்­ளி­வா­சலும் இந்த மது­பான உற்­பத்தி தொழிற்­சாலை அமைப்­ப­தற்கு எவ்­வித எதிர்ப்பும் வெளியிட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. 

அத்­தோடு கல்­குடா தொகு­தியின் முஸ்லிம் பிர­தி­நி­தி­களும் மெளனம் காக்­கின்­றனர். குறிப்­பாக பிர­தி­ய­மைச்சர் அமீர் அலி இது விட­ய­மாக எதுவும் பேசா­தி­ருக்­கின்­றமை பல சந்­தே­கங்­களை தோற்­று­விக்­கி­ன்றன.
மட்­டக்­க­ளப்பு மாவட்ட அபி­வி­ருத்­தி­குழு மற்றும் கல்­குடா தொகு­திக்­குட்­பட்ட அபி­வி­ருத்திக் குழுவில் இணை­த­லைமை வகிக்கும் அமீர் இவ்­வி­ட­யங்­களை கண்டும் காணாமல் இருக்­கின்­றாரா? அல்­லது மது­பான உற்­பத்­தி­சா­லை­யினர் அவ­ருக்கும் அழுத்தங்களைக் கொடுத்து இத்­தொ­ழிற்­சா­லையை அமைப்­ப­தற்­கான சம்­ம­தத்தை திரை­ம­றைவில் பெற்­றுள்­ள­னரா என்ற கேள்­விகள் சமூக ஆர்­வலர்கள் மத்­தியில் எழுந்­துள்­ளன.   

இவ்விடயம் குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. 

மக்களின் வாழ்க்கையினையும் சமூக, பொருளாதார கட்டமைப்பினையும் சீரழிக்கின்ற இந்த வேலைத்திட்டத்திற்கு அனுமதி வழங்கியமைக்கு எமது வன்மையான கண்டனத்தை மக்கள் சார்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியாகிய நாம் தெரிவிக்கின்றோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அத்தோடு இந்த நடவடிக்கையினை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறுகின்ற நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டை சீரழிவுக்கு இட்டுச்செல்லும் மக்களை அதலபாதாளத்துக்கு தள்ளும் செயற்பாடுகளுக்கு அனுமதியளிக்க முடியாது. இந்த மதுபான உற்பத்திச்சாலை நிர்மாணிக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு முஸ்லிம் சமூகம் முழுமூச்சுடன் போராடவேண்டியது அனைவரதும் கடமையாகும்.