Verified Web

யாப்பு விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் மெதுவாகவே பயணிக்கிறார்கள்

2017-03-29 11:47:36 Administrator

சிங்­க­ளத்தில்: தரிந்து உட­வ­ர­கெ­தர
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்


பேரா­சி­ரியர் ஜய­தேவ உயன்கொட
நல்­லாட்சி அர­சாங்­கத்தால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வி­ருக்கும் அர­சியல் யாப்பு குறித்து பல்­வேறு விமர்­ச­னங்­கள்  எழுந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. இச்­சந்­தர்ப்­பத்தில் அர­சியல் விஞ்­ஞா­னத்­து­றையில் ஆழ­மான சிந்­த­னையை வெளிப்­ப­டுத்­தி­வரும் பேரா­சி­ரியர் ஜய­தேவ உயன்­கொட உட­னான நேர்­காணல் ஒன்றை ராவய பத்­தி­ரிகை மேற்­கொண்­டது. அதன் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது கே: புதிய யாப்பு தொடர்­பாக பெரும்­ பாலும் பேசப்­பட்டு வரு­கி­ன்ற­போதும் தற்­போது எழுந்­துள்ள சூழ்­நி­லையில் யாப்பு நிறை­வேற்­றப்­படுமா என்ற சந்­தே­கமே நில­வு­கி­றது. எனவே  யாப்பு குறித்து தொடர்ந்தும் எதிர்­பார்க்­க­லாமா?

ப:
அர­சியலமைப்­புத்­திட்டம் தயா­ரிப்பு தொடர்­பாக அரசில் அங்கம் வகிக்கும் இரு பிர­தான கட்­சி­க­ளுக்­கி­டையே திருப்­தி­க­ர­மான கலந்­து­ரை­யாடல் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. யாப்பு விட­யத்தில் இதுதான் பிர­தான சிக்­க­லாக கொள்­ளப்­பட வேண்­டி­ய­தாகும்.  இரு தரப்­பி­னரும் ஒன்­றுக்­கொன்று முரண்­பா­டான நிலைப்­பாட்டில் இருப்­ப­தா­கவே தோன்­று­கி­றது. கடந்த காலத்தில் புதிய யாப்புதான் பிர­தான பேசு பொரு­ளாக இருந்­தது. நாட்டை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு புதி­யதோர் அத்­தி­வாரம் இடப்­பட வேண்டும். ஆனால் எமது ஜனா­தி­ப­திக்கு அது குறித்த ஆழ­மான சிந்­தனை இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அவரின் கடந்த கால அர­சியல் பய­ணத்தை உற்று நோக்­கினால் இதனைப் புரிந்­து­கொள்­ளலாம்.

2014 நவம்பர் வரை ஜனா­தி­பதி, யாப்பு திருத்தம் குறித்தோ அர­சியல் மறு­சீ­ர­மைப்பு பற்­றியோ எத்­த­கைய கலந்­து­ரை­யா­டல்­க­ளிலும் ஈடு­பட்­ட­வ­ரல்லர்.

அவர் அர­சியல் ரீதி­யாக மஹிந்த ராஜபக் ஷவை விட்டு வெளி­யே­றி­ய­வுடன் குறைந்த பட்­ச­மா­வது அவர் அர­சி­ய­லிலும் மாற்றமடைவார் என்று நாம் எதிர்­பார்த்தோம். ஆனால் எதுவும் நடக்­க­வில்லை. மிக மிக அற்­ப­மா­ன­தொரு மாற்­றமே நிகழ்ந்­தது. அதா­வது, தேர்­தலில் வெற்றி கண்டு அர­சி­ய­ல­மைப்பு 19 ஆவது திருத்­தத்­திற்குச் சென்­ற­தைத்தான் சாதித்தார். அதற்­கப்பால் நக­ரு­வ­தற்கு அர­சியல் ஞானமும் அர­சியல் நம்­பிக்­கை­யும்தான் அவ­சி­ய­மா­கி­றது. 
 

கே: ஜனா­தி­பதி அப்­போது மஹிந்த ராஜபக் ஷவின் அர­சி­லி­ருந்து வெளி­யேறும் போதி­ருந்த சூடு இப்­போது தணிந்து வரு­வ­தாக  தோன்­று­கி­றது. இது குறித்து நீங்கள் என்ன நினைக்­கி­றீர்கள்? 
ப:
மஹிந்­தவின் அர­சாங்கம் குறித்து ஆழ­மான விமர்­ச­னங்கள் ஏதும் ஜனா­தி­ப­தி­யிடம் காணப்­ப­ட­வில்லை. தனிப்­பட்ட முறை­யிலும் ஒழுக்­கப்­பண்பு குறித்­துமே விமர்­சித்து வந்தார். ஜனா­தி­பதி பத­விக்கு வந்­த­தி­லி­ருந்து அவரை எதிர்த்து நிற்கும் மஹிந்த சார்­பான பிரி­வி­னர்­களை சமா­ளிக்க வேண்­டிய உரை­யா­டல்­க­ளிலே ஜனா­தி­பதி ஈடு­படும் நிலைக்குத் தள்­ளப்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறார்.

இப்­பி­ரி­வி­னர்­களுள் ஜாதிக ஹெல உறு­மய இரண்டாவது, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நிமல் சிறி­பால, டிலான் பெரேரா போன்ற ஜனா­தி­ப­திக்கு எதி­ராக இயங்கி பின்னர் ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்து செயல்­ப­டு­ப­வர்கள். மூன்­றா­வ­தாக அரச அதி­கா­ரி­களும் இரா­ணுவ அதி­கா­ரி­களும் ஆவர். ஆனால் ஜனா­தி­பதி தன்னை பத­வியில் அமர்த்­திய மக்­க­ளு­டனும் அர­சியலமைப்­புக்­க­ளு­டனும் உறு­தி­யான பேச்­சு­வார்த்­தைகள் எதிலும் ஈடு­ப­ட­வில்லை.

ஜனா­தி­பதி முன்­னெ­டுக்­காத பெரும் தவறு இதுதான். இதனை அவர் மேற்­கொண்­டி­ருந்தால் அவ­ரது அர­சியல் பயணம் சீராக அமைந்­தி­ருக்கும்.

இப்­போது ஜனா­தி­ப­தியின் உரைகள் நாளாந்தம் தின­ச­ரி­களில் வெளி­வந்த வண்­ண­முள்­ளன. அவற்றில் அவரின் சிறு­பிள்ளைத்தனம்தான் பளிச்­சி­டு­கின்­றன.

அர­சியல் முன்­னெ­டுப்­புக்கள் எத­னையும் பிர­தி­ப­லிப்­ப­தாக இல்லை. அவரின் சில கூற்­றுக்கள் 21 ஆம் நூற்­றாண்டின் அர­சியல் தலைவர் ஒரு­வ­ரு­டைய கருத்­து­க­ளாக எடை­போடவும் முடி­வ­தில்லை. ஒரு­சில விட­யங்­களை நிறை­வேற்ற முடி­வ­தில்லை என்ற பல­வீ­னத்தை வெளிப்­ப­டுத்தி வரு­கிறார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இய­லாமை குறித்து சாக்குப் போக்குச் சொல்லி வரு­கிறார். எந்­த­வொரு அர­சாங்­கமும் பத­விக்கு வந்து பாதிக்­கா­லத்தை நெருங்கும் தறு­வாயில் இய­லாமை குறித்து சமா­ளித்­துக்­கொள்ள முயற்­சிக்­கு­மாயின் மக்கள் ஆத­ரவு சிதை­யவே அது வழி­வ­குக்கும். இதனை அரசு உணர வேண்டும். 

கே: யாப்பு குறித்து எத்­த­கைய கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் முன்­னெ­டுக்க முடி­யாது அரசு திண்­டாடிக் கொண்­டி­ருப்­ப­தாகத் தோன்­று­கி­றதே?
ப:
அர­சியலமைப்பு குறித்து கடந்த இரண்டு தசாப்த கால­மாகப் பேசப்­பட்டு வந்­தது. ஆனால் மாறி மாறி பத­விக்­கு­ வந்­த­வர்­களால் எதுவும் மேற்­கொள்­ளாது புறக்­க­ணிக்­கப்­பட்டு வந்­ததே வர­லா­றாகும். தேர்தல் காலத்தில் கொடுக்கும் வாக்­கு­றுதி பத­விக்கு வந்­ததும் தட்­டிக்­க­ழிக்­கப்­ப­டு­கி­றது. அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்கு முக்­கி­ய­மான கட்­சிகள் பல­வற்றின் ஒத்­து­ழைப்பு தேவை என்ற கருத்து முன்­வைக்­கப்­ப­டு­கி­ற­தே­யன்றி, அவற்றின் ஆத­ர­வினைப் பெற்று நிறை­வேற்­றிக்­கொள்ள வேண்டும் என்ற முயற்­சி­களை முன்­னெ­டுப்­ப­தில்லை.

இந்த அர­சாங்­கமும் கூட அவ்­வாறு முயற்­சிப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. ஐ.தே.க., ஸ்ரீல.சு.க. ஆகிய இரு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஆட்­சி­ய­மைத்­துள்ள இந்த அர­சாங்­கத்­திலும் கூட ஒன்­று­பட்டு செயற்­படும் தன்­மையைக் காண­மு­டி­ய­வில்லை. இரு பிர­தான கட்­சி­க­ளையும் ஓர் இணக்­கப்­பாட்­டுக்குக் கொண்­டு­வரத் தவ­றி­ய­மைதான் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தவ­ற­விட்­டுள்ள மிகப்­பெ­ரிய தவ­றாகும். 

கே: யாப்பு தொடர்­பான பேச்­சு­வார்த்­தையில் இனப்­பி­ரச்­சினை குறித்த மாற்­றங்­க­ளையும் எதிர்­பார்க்­க­லாமா?
ப:
புதிய அர­சியல் திட்ட யாப்பு தொடர்­பான கலந்­து­ரை­யா­டலில் 13 ஆவது திருத்­தத்­துக்கும் அப்பால் சென்று திருத்­தங்கள் மேற்­கொள்­வது என்ற கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இது தொடர்­பாக நல்­ல­தொரு வாதத்தை முன்னாள் அமைச்சர் ஜீ.எஸ்.பீரீஸ் முன்­வைத்­தி­ருந்தார். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மட்­டு­மல்ல, டிலான் பெரேரா, ஜோன் சென­வி­ரத்ன, நிமல் சிறி­பால டீ சில்வா போன்றே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஒரு பிரி­வி­னரும் அதே நிலைப்­பாட்­டில்தான் இருந்­தார்கள்.

மங்­கள சம­ர­வீர போன்ற தலை­வர்கள் 13 + என்­றி­ருந்த நிலையில் ஐ.தே.க.வும் அதே கருத்­து­டனே இருந்­தது. ஆனால், இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு வேண்டும் என்ற உறு­தியில் இருந்­த­வர்­களும் இன்று அது பற்றி கலந்­து­ரை­யாட முன்­வ­ரு­வ­தாகத் தெரி­ய­வில்லை. இவ்­வாறு நடந்து கொள்­வோ­ருக்கு அர­சியல் எதிர்­காலம் சூனி­ய­மா­கத்தான் அமையும். யாப்பு நிகழ்­கா­லத்­துக்­கல்ல எதிர்­கா­லத்தின் தேவை கரு­தியே உரு­வாக்­கப்­ப­டு­வது என்­பது குறித்த அர­சியல் ஞான­மற்­ற­வர்கள் தான் இவர்கள் என்று கூறு­வதைத் தவிர வேறு வார்த்தை இல்லை.

கே: நிலை­யான திட்டம் ஒன்­றுக்­க­மைய செய­லாற்றக்கூடிய அளவில் அர­சாங்­கத்­துக்கு ஒருமுகப்­பட்ட   தலை­மைத்­துவம் இருப்­ப­தாக  தெரி­ய­வில்லை அல்­லவா? 
ப:
தேர்­த­லுக்கு முகம்­கொ­டுத்துக் கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்­திலே ஒன்­று­பட்ட தலை­மைத்­து­வத்தைக் காண­மு­டிந்­தது. இன்று அவ்­வாறில்லை. ஆனால் தலை­மைத்­துவ ஒரு­மைப்­பா­டுதான் இன்று அவ­சியத் தேவை­யாக இருக்­கி­றது. இந்த அர­சாங்­கத்­திற்கு நல்­ல­தொரு தலை­மைத்­து­வத்தை வழங்­கு­வ­தற்கு ஜனா­தி­பதி, பிர­தமர், சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க, மங்­கள சம­ர­வீர ஆகியோர் மத்­தியில் மிகவும் உறுதி வாய்ந்த இணக்­கப்­பாடு இருக்க வேண்டும். அவ்­வா­றில்­லா­விட்டால் துணிச்­ச­லுடன் செய­லாற்ற முடி­யாது.

இந்தக் கால­எல்­லையில் அர­சாங்­கத்தால் துணிச்­ச­லான தீர்­மானம் எதுவும் நிறை­வேற்­றவும் முடி­ய­வில்லை. சைட்டம் போன்ற பிரச்­சி­னைகள் பல­வும் மேலும் சிக்­க­லுக்­குள்­ளாக்கிக் கொண்டே செல்­கின்றன.

எதுவும் செய்­யாத, பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைக்­காத கையா­லா­காத அர­சாங்­க­மா­கவே இறு­தியில் இந்த அரசு வர­லாற்றில் பதி­யப்­போ­கி­றது.

அதி­காரப் பகிர்வு விட­யத்தை எடுத்­துக்­கொண்­டாலும் ஆரம்­பத்தில் காணப்­பட்ட துரி­த­நிலை இப்­போது தூர்ந்து கொண்டு போவ­தா­கவே தோன்­று­கி­றது. அதி­காரப் பகிர்வு விடயம் யுத்­தத்தின் இறுதிக் கட்­டத்தில் எழுந்­த­தொரு அர­சியல் பின்­பு­ல­மாகும். ஆனால் இப்­போது அன்று காணப்­பட்ட சூடு தணிந்­த­தா­கவே உள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இது விட­யத்தை இழுத்­த­டித்துக் கொண்டே இருக்­கிறார். அர­சாங்­கத்தின் பதவிக் காலத்தில் பாதிப்­ப­கு­தியை எட்டி இறுதிக் காலத்­திற்கு நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. 

கே: அவ்­வா­றாயின் பிர­தமர் எது குறித்து திட்டம் தீட்­டி­யி­ருக்­கிறார்? 
ப:
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விட்ட தவ­றினை சுட்­டிக்­காட்­டா­ம­லி­ருக்க முடி­யாது. 2002 ஆம் ஆண்டு அவ­ரது ஆட்­சி­யின்­போது கற்­றுக்­கொள்ள வேண்­டிய அர­சியல் பாடம் ஒன்­றி­ருக்­கி­றது. அதா­வது, ஆட்சி சீர­மைப்பும் புதிய மித­வாத பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்பு ஆகிய இரண்­டையும் ஒன்­றாக முன்­னெ­டுக்க முடி­யாது.

அர­சியல் சீர­மைப்பை முதலில் மேற்­கொள்ள வேண்டும் என்­றுதான் நான் கூறுவேன். புதிய மித­வாத பொரு­ளா­தார முறை­மையை முன்­னெ­டுக்கும்போது மக்கள் மீது சுமை­யேற்­றப்­ப­டு­வது சகஜம். அதனால் மக்கள் கொதித்­தெ­ழவே செய்வர்.

இந்த எதிர்ப்­புக்கு மத்­தியில் யாப்பு செயற்­பாட்­டுக்கு அவர்­க­ளது ஆத­ரவைப் பெற்றுக் கொள்ள முடி­யாது போவது தவிர்க்க முடி­யா­த­தாகும். 

பிர­த­மரால் இதனை இன்னும் புரிந்­து­கொள்ள முடி­யா­தி­ருக்­கி­றதே. அடுத்­தது புதிய மித­வா­தத்தில் காலம் கடந்த இத்­துப்­போன விட­யங்கள் புதுப்­பிக்­கப்­ப­டவும் இல்லை.

இப்­போது லிப­ரல்­வா­திகள் கூட மாற்றம் கண்­டி­ருக்­கி­றார்கள். ஆனால் ரணில் மாத்­திரம் இன்னும் தன்னை மாற்­றிக்­கொள்­ள­வில்லை. அரச மறு­சீ­ர­மைப்பு விட­யங்­களை எதிர்த்து நிற்கும் கூட்டு எதி­ர­ணி­யி­ன­ருடன் பொது மக்­களும் கைகோர்க்க மேற்­படி பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்பே வழி­விட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது. 

இன்று யுத்தம் முடிந்­து­விட்­டது. இனி பொரு­ளா­தார அபி­வி­ருத்­திதான் மேற்­கொள்ள வேண்டும் என்று மஹிந்த ராஜபக் ஷவின் அரசும் கூறு­கி­றது.

ஹெல­உ­று­மய போன்ற கட்­சி­களும், இரா­ணுவம் மற்றும் சிங்­கள இன­வா­தி­களும் இவ்­வா­றுதான் கூறு­கி­றார்கள். அதனால் அர­சியல் மறு­சீ­ர­மைப்பு இப்­போ­தைக்கு அவ­சி­ய­மில்லை என்ற கருத்தே மேலோங்­கி­யி­ருக்­கி­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சுற்­றி­யுள்­ள­வர்கள் இப்­போது யுத்தம் ஓய்ந்து விட்­டது இனி­மேலும் யுத்தம் எழா­தி­ருக்கும் வகையில் நடந்­து­கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஜனா­தி­ப­திக்கு ஊட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அதே­போன்றே ரணில் விக்­ர­ம­சிங்­கவின் தரப்­பினர் இப்­போது யுத்­தமோ புலி­களோ இல்­லா­ததால் இந்த அர­சியல் மறு­சீ­ர­மைப்பு விட­யத்தை ஆர அமர்ந்து செய்து பொரு­ளா­தார சீர­மைப்பை மேற்­கொள்­வதே நல்­லது என்ற நிலைப்­பாட்டை வெளி­யிட்டு வரு­கின்­றனர். 

கே: ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இப்­போது  செய்ய வேண்­டிய பணிகள் என்ன? 
ப:
மறு­சீ­ர­மைப்பு குறித்து மக்கள் மனங்­களை வெல்லும் விதத்தில் காய்கள் நகர்த்­தப்­பட வேண்டும். இதற்­காக மக்­க­ளுக்கு பொருத்­த­மான அர­சியல் ஞானத்­தையும் தெளி­வையும் முதலில் ஏற்­ப­டுத்த வேண்டும். 1996 க்குப் பின்னர் அப்­போ­தைய ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா அம்­மையார் அதி­காரப் பகிர்வு குறித்து மக்கள் மத்­தியில் கருத்துப் பரி­மாற்றம் செய்து மிகவும் பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்டார்.

இன்­றுள்ள தலை­வர்­க­ளி­டையே அத்தகைய போக்கினைக்காண முடியவில்லை.

அத்துடன் சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்றால் தோல்வியடையும் என்ற ஐயத்துடனே அரச தரப்பினர் இருக்கிறார்கள். அரசாங்கம் இப்போதுள்ள நிலையிலே போய்க்கொண்டிருந்தால் எந்தத் தேர்தல் வந்தாலும் அரசு தோல்வியைத்தான் தழுவும் என்பதில் ஆச்சரியமில்லை. எனவே மக்களிடையே தெளிவை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும். 

மக்களிடையே உரையாற்றுவதற்கு நாட்டில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருக்கிற வாய்ப்பைப் போன்று வேறு எவருக்கும் அமைவதில்லை.

மைத்திரி, ரணில் ஆகிய இரு தலைவர்கள் மீதும் மக்கள் மத்தியில் இருக்கிற நம்பிக்கை இன்னும் நழுவிச்செல்லவில்லை.

அது சிதைந்து போவதற்கிடையே இதனைச் சாதித்துக் கொள்ள வேண்டும். இன்றுள்ள நிலையில் அரசியல் பயணத்தைத் தீர்மானிப்பது மஹிந்த ராஜபக் ஷதான். ஏனெனில் ஜனாதிபதியோ பிரதமரோ ஆற்றக்கூடிய உரைகள் அறிக்கைகள் அன்றாடம் ஊடகங்களில் வெளிவருகின்ற போதும் இலங்கையின் அரசியல் பயணத்தைத் தீர்மானிக்கக்கூடிய எத்தகைய கருத்துக்களும் இவர்களால் பேசப்படுவதில்லை. 

கே: ஜனாதிபதி சமூகத் தலைவர்களைச்  சந்தித்து யாப்பினை நிறைவேற்றிக்  கொள்வதற்காக தனிப்பட்ட ரீதியில் முயற்சிகளை  மேற்கொண்டிருக்கிறார் அல்லவா?
ப:
தனிப்பட்ட முறையில் இவ்வாறு  மேற்கொள்வதில்  பயனில்லை. சமூகத்தின் மத்தியில் அக்கருத்துக்கள்  சென்றடைய வேண்டும். கூட்டு எதிரணிக்காக பொது ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் தயான்  ஜயதிலக்க போன்ற ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால் அரச சார்பாக  எழுதுவோர்.

எவருமில்லை. ஜனாதிபதிக்கு  ஆலோசகர்களாக பலர் இருக்கிறார்கள். ஆனால் அரசு குறித்த சிந்தனைத்தெளிவை  வழங்குவதற்கு யாரும் இல்லை.

எம்மைப்போன்றவர்கள் அரசின்  எதிரிகளல்லர். இந்த அரசு தொடர்ந்து நிலைத்திருக்க  நாம் ஆசைப்படுகிறோம்.  ஆனால்  ஜனாதிபதி  எம்மைப்  போன்றவர்களை அணுகவேண்டும். நாம் இவ்வாறுதான் நாட்டைக் கட்டியெழுப்பப் போகிறோம்.

இதற்காக எங்களுக்கு ஒத்துழைப்பு  வழங்குங்கள் என்றாவது அவர் எங்களைப் போன்றவர்களிடம்  கேட்டுக் கொள்வதில்லை. இந்த இடத்தில் தான் அரசாங்கம் தவறு விட்டிருக்கிறது. 

கே: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியூடாக தனது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று   ஜனாதிபதி  கருதிக் கொண்டிருக்கிறார் என்ற கூற்றுக்கு   உங்கள் கருத்தென்ன?
ப:
இவ்வாறான நிலைப்பாட்டில் ஜனாதிபதி  இருப்பாரேயானால் அவரது அரசியல் பயணம் அஸ்தமனமாகி விடும். இவரைச்  சுற்றியுள்ள கூட்டத்தினரை நோக்குங்கள் அரசியல் ரீதியாக ஜனாதிபதி மீது மிகவும்  உறுதியற்ற  அனுதாபமுள்ளவர்களே அவரின்   ஆலோசகர்களாக  அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.  

இந்தப் பதவிக்காலம் முடியும் வரையிலே அவரால் ஜனாதிபதியாக  இருக்க முடியும். அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன்  தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலமே அவரால் பயணத்தைத் தொடரமுடியும். அதாவது 2019 ஆம் ஆண்டாகும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் போல அன்னாரைப் புறக்கணித்து கோதாபய  ராஜபக் ஷவுடன் நெருங்கிவிடுவர். இதுதான் நடக்கப் போகும் யதார்த்தம் என்று எதிர்வு கூறலாம். 

கே: இன்றுள்ள நிலையில் சிவில்   சமூகத்தின் மீதுள்ள பொறுப்புக்கள்  என்ன?
ப:
நாம் கடைப்பிடிக்க வேண்டிய  இரு விடயங்கள் இருக்கின்றன. இந்த அரசின் குறைநிறைகளை  உற்று நோக்க வேண்டும். அத்துடன்  அரசு பயணிக்க பகிரங்கமாக கைகொடுத்துதவ வேண்டும்.

சில சமயங்களில் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியும் ஏற்படும். மக்கள் மத்தியில் அரசியல் கலந்துரையாடல்களை ஏற்படுத்தி மக்களைத் தட்டி எழுப்பி அதன் மூலம் விசேடமாக மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரு தலைவர்களுக்கும் அழுத்தங்கள் கொடுத்து அவர்களை  செயற்பட தூண்ட வேண்டும்.

எந்தவொரு  அரசாங்கத்துக்கும் பதவிக்காலத்தின் முதலாவது பாதிக்காலத்தின் பின்னர் அரசியல் சீரமைப்பு மேற்கொள்ள இயலாது. காரணம் பிற்பகுதியில் மக்கள் ஆதரவு அருகுவது இயல்பு. அடுத்தது அரசின் நிகழ்ச்சி நிரல் அடுத்து வரும்  தேர்தல் குறித்த இலக்காகவே அமையும். இதனால் இந்த அரசின் சரிபாதிக்காலத்துக்கு முன்னர் அதாவது இப்போதிருந்தே மேற்படி விடயத்தை மக்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

எனவே மக்கள் தலைவர்கள் இருவருக்கும் பகிரங்கமாகவும் நேரில் சந்தித்தும் நீங்கள் தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பயணப்பாதையை சீர் செய்து கொள்ளுங்கள் என்ற கருத்தை துணிச்சலுடன் முன் வைக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டில் இல்லாத மாதிரியான சவால் ஒன்றுக்கு சிவில் சமூகம் முகம் கொடுக்க வேண்டியிருக்கும். எங்களாலே உருவாக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் தலைவர்களை சீரான அரசியல் பயணத்துக்கு எவ்வாறு வழிநடத்துவது என்பது குறித்த சவாலில் மக்கள் வெற்றிபெறவேண்டும். எப்படியும் மக்களால் அது நடந்தே ஆக வேண்டும். அப்போதுதான் நல்லாட்சியைக் காணமுடியும். 

நன்றி: ராவய