Verified Web

டெங்கு நோய்க்கு பிரத்தியேக மருந்துகள் இல்லை...

2017-03-26 12:57:26 Administrator

நேர்­காணல்: இரோஷா வேலு
நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் வேக­மாகப் பரவி வரும் டெங்குக் காய்ச்சல் தொடர்பில்  கல்­முனை பிராந்­திய தொற்­றுநோய்த் தடுப்பு பிரி­வுக்கு பொறுப்­பான வைத்­திய அதி­காரி வைத்­திய கலா­நிதி என்.ஆரிப் விடி­வள்ளிக்கு வழங்­கிய செவ்வி.


கே: டெங்கு நோய் என்றால் என்ன?
டெங்கு நோயா­னது வைரஸ் கிரு­மி­யினால் உண்­டாக்­கப்­ப­டு­வ­தாகும். அதனால் இந்த நோய்க்கும் அதற்­கென்று பிரத்­தி­யே­க­மான மருந்­துகள் இல்லை. டெங்கு நோயினால் பீடிக்­கப்­பட்ட ஒரு­வ­ருக்கு இருக்­கின்ற சில அறி­கு­றி­களை வைத்து அதற்­கேற்­ற­வாறு துணை­ம­ருந்து சிகிச்சை நடை­பெறும். அப்­ப­டி­யென்றால் நுளம்­பு­களின் வகி­பாகம் என்ன என்ற கேள்வி எழு­கின்­றது. டெங்கு நோயி­லி­ருந்து தப்­பு­வ­தற்கு நுளம்­பு­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வதே ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்கை என்றே அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­றது.

கே:  டெங்கு நோய்த் தாக்­கத்தின் தற்­போ­தைய நிைல­வரம் என்ன?
 கடந்த வரு­டத்தில்  50 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்­ட­வர்கள் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன், பல மர­ணங்கள் நிகழ்ந்­தி­ருப்­ப­தா­கவும் தர­வுகள் தெரி­விக்­கின்­றன. புதிய வருடம் ஆரம்­பித்து இரண்­டரை மாதங்­களே கடந்து விட்ட நிலையில் 20,000 இற்கு மேற்­பட்டோர் டெங்கு நோயா­ளர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன், 46 உயி­ரி­ழப்­பு­களும் நிகழ்ந்­துள்­ளன. இத்­த­ர­வு­களை வைத்து நோக்கும்போது  கடந்த வரு­டத்தை விட இந்த வரு­டத்தில் பாதிப்பு அதி­க­மா­கலாம் என்று அஞ்­சப்­ப­டு­கி­றது.

இலங்­கையின் கொழும்பு, திரு­கோ­ண­மலை, யாழ்ப்­பாணம், கம்­பஹா, காலி, இரத்­தி­ன­புரி, மாத்­தறை போன்ற மாவட்­டங்­களை வெகு­வாகப் பாதித்­தி­ருக்­கின்ற அதே­வேளை, ஏனைய மாவட்­டங்­க­ளையும் கணி­ச­மா­ன­ளவு தாக்கிக் கொண்டே இருக்­கின்­றது.

கே:  டெங்குக் காய்ச்­சலும் அதன் பர­வு­கையும் குறித்து கூறு­வீர்­களா?
டெங்குக் காய்ச்சல் என்­பது திடீ­ரென நம் உடலைத் தாக்கும் ஒரு வைரஸ் நோயாகும். இது டெங்கு வைரஸின் வகை-1, வகை-2, வகை-3 மற்றும் வகை-4 எனும் நான்கு வைரஸ்­க­ளாலும் ஏற்­ப­டு­கி­றது. அதனால், ஒரு­வ­ருக்கு வாழ்­நாளில் நான்கு தட­வைகள் டெங்கு நோய் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­கின்­றது. வைரஸ் நோய் என்­பதால் இதற்கும் திட்­ட­மான மருந்­து­களோ சிகிச்சை முறை­களோ இல்லை. என்­றாலும் அச்­ச­ம­டைய வேண்­டி­ய­தில்லை.

இது ஏடிஸ் எனப்­படும் நுளம்­பு­க­ளினால், குறிப்­பாக ஏடிஸ் ஈஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்­போ­பிக்ரஸ் எனப்­படும் நுளம்பு வகை­க­ளி­னா­லேயே பரப்­பப்­ப­டு­கி­ன்றன. இந்த நுளம்­புகள் இந்த நோயைப் பரப்­பு­கின்ற அல்­லது காவித்­தி­ரி­கின்­றதே தவிர, இந்த நோயை ஏற்­ப­டுத்­து­ப­வர்கள் அல்ல. இவை ஏனைய நுளம்­பு­களைப் போலல்­லாது, சுத்­த­மான நீரி­லேயே பொது­வாக வள­ரக்­கூ­டி­யவை என்­றாலும், அசுத்­த­மான நீரில் வள­ர­மாட்­டாது என்று அசி­ரத்­தை­யாக இருந்து விட முடி­யாது. 

தோணிகள் மற்றும் பட­கு­களில் காணப்­பட்ட உவர்த்­தன்­மை­யான நீரிலும், சீமெந்து கலந்த நீரிலும் கூட இந்த நுளம்­பு­களின் குடம்­பிகள் இருந்­ததை சுகா­தார பூச்­சி­யியல் அதி­கா­ரிகள் உறுதி செய்­துள்­ளார்கள். பொது­வாக காலை மற்றும் மாலை நேரங்­களில் கடிக்கும் பெண் நுளம்­பு­க­ளா­லேயே டெங்கு நோய் பரப்­பப்­ப­டு­கின்­றது என்­றாலும், இரவு நேரங்­க­ளிலும் நாம் நுளம்­புக்­க­டி­யி­லி­ருந்து எம்மைப் பாது­காத்துக் கொள்­வதே சிறந்­தது.

கறுப்பு நிற­மான இந்த நுளம்­பு­களின் உட­லிலே வெள்ளை நிறக்­கோ­டுகள் இருப்­பதைக் காணலாம். பொது­வாக வெளி­யி­லி­ருந்து வீட்­டிற்குள்  வந்து மனி­தரின் இரத்­தத்தைக் குடித்து விட்டு மீண்டும் வெளியே போய்த் தங்கும் என்­றாலும், வீட்­டிற்­குள்­ளேயே தங்க வச­தி­யான இடம் கிடைத்து விட்டால் அவ்­வ­ளவு தான். வீட்­டிற்­குள்­ளேயே தங்கி பசி வரும்­போ­தெல்லாம் இரத்தம் புசிக்க ஓய்­வாக இருப்­ப­வர்­களைக் கடித்து விடு­வார்கள்.

அதன் முட்டை ஆரோக்­கி­ய­மாக இருக்க, நமது இரத்­தத்­தி­லுள்ள புரதம் அதற்குத் தேவை. இதற்­கா­கவே அது நம்மைக் கடித்து இரத்­தத்தை உறி­ஞ­சும்­போது, அதன் வயிற்­றி­லுள்ள வைரஸ் நம் உட­லுக்குள் புகுந்து விடு­கி­றது. இது ஒரு தடவை கடிக்­கின்ற போதே நிகழ்ந்து விடும்.

இந்த நுளம்­பு­களின் வாழ்­நாட்­க­ளான இரண்டு தொடக்கம் நான்கு வாரங்­க­ளிலும், மூன்று அல்­லது நான்கு முறை முட்­டை­யி­டு­வ­துடன், ஒவ்­வொரு முறையும் சுமார்  100 - 200 முட்­டைகள் வரை இடும். உலர்­வான சூழல் நில­வினால்  9 -– 12 மாதங்கள் வரை இந்த முட்­டைகள் உயிர்ப்­பாக இருந்து, பிறகு தகுந்த சுத்­த­மான நீர், உணவு கிடைத்தால் குஞ்­சு­க­ளாகப் பொரிக்கும்.

இதனால் தான் மழை காலங்­களில் இந்நோய் அதி­க­மாகக் காணப்­ப­டு­வ­துடன், மழை இல்­லாத காலங்­களில், தண்ணீர் தேங்கும் பூச்­சா­டிகள், பிளாஸ்டிக் பைகள், தகரப் பேணிகள், தேங்காய் சிரட்­டைகள், டயர்கள் போன்­ற­வற்றில் இனப்­பெ­ருக்கம் செய்­கி­றது. ஒரு நுளம்பில் டெங்கு வைரஸ் இருந்தால், அதி­லி­ருந்து வரும் முட்டை, குஞ்சு என்று அதன் மூலம் பெருகும் அனைத்து நுளம்­பிலும் இந்த வைரஸ் கிரு­மிகள் இருக்கும்.

நாம் வெளி­விடும் மூச்­சுக்­காற்றே நுளம்­புகள் நம் இருப்­பி­டங்­களைக் கண்­டு­பி­டிக்க உத­வு­கின்­றன. நாம் வெளி­விடும் மூச்­சுக்­காற்றில் காப­னீ­ரொட்­சைட்டு அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றது. காப­னீ­ரொட்­சைட்டைத் தேடி­வரும் நுளம்­புகள் எம்மைக் கண்டு கொண்டு இரத்­தத்தை  உறிஞ்­சு­வ­துடன் அவை பிற­ரி­ட­மி­ருந்து காவி வந்த வைரஸ் கிரு­மி­க­ளையும் எம்முள் செலுத்தி விடு­கின்­றன.

இந்த டெங்கு வைரஸ்னது நுளம்­புக்­கடி மூலம் இல்­லாமல், நேரி­டை­யாக ஒரு நோயா­ளி­யி­ட­மி­ருந்து மற்­ற­வர்­க­ளுக்கு பர­வாது. நோயா­ளி­க­ளிடமிருந்து நுளம்­புக்குள் போய் பின்னர்தான் அடுத்­த­வர்­க­ளுக்குப் பரவும். ஒரு டெங்கு நோயா­ளியைத் தொடு­வ­தாலோ, அருகில் இருப்­ப­தாலோ அல்­லது அவர் பாவித்த பொருட்­களைப் பாவிப்­ப­தாலோ அந்நோய் அடுத்­த­வ­ருக்குப் பர­வாது.

கே:டெங்கு நோய் ஏற்­பட்டால் தென்­படும் அறி­கு­றிகள்  எவை?
 டெங்கு நோயினால் பீடிக்­கப்­பட்­ட­வரின் ஆரம்ப அறி­கு­றிகள் சாதா­ர­ண­மாக ஏற்­ப­டு­கின்ற வைரஸ் காய்ச்சல் போன்­ற­தாக இருக்கும். அதனால், ஆரம்ப நிலையில் அதனை அறி­கு­றி­களை வைத்து அடை­யாளம் காண்­பது கடி­ன­மாக இருக்கும். அதனால்தான், காய்ச்சல் இரண்டு நாட்­க­ளுக்கு மேல் நீடிக்­கு­மாக இருந்தால் மேல­திக சிகிச்­சைக்­கா­கவும், பரி­சோ­த­னைக்­கா­கவும் வைத்­திய அதி­கா­ரி­களை அல்­லது வைத்­தி­ய­சா­லை­களை அணுக வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

காய்ச்­ச­லோடு தலை­யிடி, கண்­களில் நோவு, சோர்வு, பசி­யின்மை போன்ற அறி­கு­றி­களும் இருந்தால், ஆரம்­பத்­தி­லேயே டெங்கு நோய்க்­கான பரி­சோ­த­னையை மேற்­கொள்­வது சிறந்­தது. எனினும், இந்த அறி­கு­றிகள் இருந்தால் நிச்­ச­ய­மாக டெங்கு நோய் தான் என்று அர்த்­த­மல்ல என்­ப­தையும் கவ­னிக்க வேண்டும்.

கே:டெங்கு நோயின் வகைகள் என்ன? 
 டெங்கு நோயில் இரண்டு வகைகள் காணப்­ப­டு­கின்­றன. 
முத­லா­வது, சாதா­ரண டெங்குக் காய்ச்சல். இவர்­க­ளிடம் பொது­வாக மேலே சொல்­லப்­பட்ட அறி­கு­றிகள் காணப்­படும். இரண்­டா­வது, இரத்தம் கசியும் டெங்குக் காய்ச்சல். இது தீவி­ர­மான டெங்கு நோயாகும். இந்நோய் ஏற்­பட்­ட­வர்­களின் இரத்­தக்­ குழாய்­களில் இருந்து இரத்­தக்­க­சிவு ஏற்­படும். இத்­த­கை­ய­வர்­களின் மூக்­கி­லி­ருந்தும் முர­சி­லி­ருந்தும் சிறு­நீ­ரிலும் இரத்தம் வெளிப்­ப­டு­வ­தோடு, உட­லி­னுள்ளே மூடிய இடை­வெ­ளி­க­ளி­னுள்ளும்  (உதா­ர­ண­மாக, இத­யத்தைச் சுற்றி, நுரை­யீ­ரலைச் சுற்றி) இரத்தம் கசி­யலாம். அதனால் தான், டெங்கு நோயினால் பீடிக்­கப்­பட்­ட­வர்கள் என்று சந்­தே­கித்­தாலோ அல்­லது கண்­ட­றிந்­தாலோ அவர்­க­ளுக்கு சிவப்பு நிறத்­தி­லான பானங்கள் மற்றும் பீட்ரூட் போன்ற உணவு வகை­க­ளையோ கொடுக்கக் கூடாது என்று ஆலோ­சனை வழங்­கப்­ப­டு­கின்­றது.

கே: டெங்கு காய்ச்சல் என எவ்­வாறு உறு­திப்­ப­டுத்­து­வது?
இரத்தப் பரி­சோ­தனை காய்ச்சல் ஏற்­பட்­ட­வுடன் ஆரம்­பத்­தி­லேயே குறிப்­பாக காய்ச்சல் ஏற்­பட்டு முதல் ஐந்து நாட்­களில், என்.எஸ்.1 அன்­ரிஜென் (NS1 Ag) எனப்­ப­டு­கின்ற பரி­சோ­தனை செய்­வதன் மூல­மாக ஒரு­வரின் உட­லினுள் டெங்கு நோய்க் கிரு­மிகள் இருக்­கின்­றதா இல்­லையா என்­பதைக் கண்­ட­றி­யலாம். அத்­தோடு, செங்­கு­ருதிச் சிறு­தட்­டுக்­களின் எண்­ணிக்கை குறை­வ­டை­வ­தனை வைத்து சந்­தே­கிக்­கலாம். காய்ச்சல் ஏற்­பட்டு ஐந்து நாட்­க­ளுக்குப்  பிறகு, ஐஜீஎம் (IgM)பரி­சோ­தனை செய்து உறு­திப்­ப­டுத்­தலாம். இருந்த போதிலும், சில சந்­தர்ப்­பங்­களில் திட்­ட­மான உறு­தி­யான முடி­வுக்கு வர­மு­டி­யாத சந்­தர்ப்­பங்­களும் இருக்­கி­ன்றன என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை.

கே: காய்ச்சல் வந்து விட்டால் எவ்­வாறு செயற்­பட வேண்டும்?
குறிப்­பாக டெங்கு நோயின் தாக்கம் அதி­க­மாக இருக்­கின்ற காலப்­ப­கு­தியில் காய்ச்சல்  ஏற்­பட்ட நோயா­ளியை கவ­ன­மான அவ­தா­னத்தின் கீழ் வைத்­தி­ருப்­பதன் மூல­மாக அனர்த்தம் நிகழ்­வதை கூடி­ய­ளவு தவிர்க்­கக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

காய்ச்சல் ஏற்­பட்ட ஆரம்ப இரண்டு நாட்­க­ளிலும் பர­சிற்­றமோல் தவிர்ந்த வேறு எந்த மருந்து வகை­க­ளையும் காய்ச்­சலைக் குறைப்­ப­தற்­காக பாவிக்­கக்­கூ­டாது. இரண்டு நாட்­க­ளுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் வைத்­தி­ய­சா­லை­களை நாட வேண்டும்.

முக்­கி­ய­மாக, டெங்­கு­வாக இருக்­கலாம் என்று சந்­தே­கித்தால், சிவப்பு நிறத்­தி­லான அல்­லது பழுப்பு நிறத்­தி­லான பானங்கள், உண­வு­களைக் கொடுக்கக் கூடாது.

ஏனெனில், இரத்­தக்­க­சிவு ஏற்­பட்டு அது முர­சி­னூ­டாக, சிறுநீர் மற்றும் மலத்­தி­னூ­டாக வெளி­யே­று­கின்ற போது, அதனை அத்­த­கைய பானங்கள் மற்றும் உண­வு­க­ளோடு தொடர்­பு­ப­டுத்த வாய்ப்­பி­ருப்­பதால், அந்­நோயின் தீவி­ரத்­தன்­மையை அறிந்து கொள்­வதில் சில மணி­நே­ரங்கள் தாமத்தை ஏற்­ப­டுத்தி உயி­ரி­ழப்பு ஏற்­படக் கார­ண­மாகி விடலாம். முதல் பத்து அல்­லது பதி­னைந்து நாட்­க­ளுக்கு பப்­பா­சிச்­சாறு கொடுப்­பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதனால் எதிர்­பா­ராத பார­து­ர­மான விளை­வுகள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­கின்­றது.போதி­ய­ளவு ஆகா­ரங்கள் வழங்­கப்­ப­டு­வ­துடன், ஓய்­வா­கவும் இருக்க வேண்டும்.

கேள்வி : டெங்கு நோய் ஏற்­ப­டாமல் எவ்­வாறு எம்மைப் பாது­காத்துக் கொள்­வது?

பதில் : ஏற்­கெ­னவே சொல்­லப்­பட்­டது போல இதற்­கென பிரத்­தி­யே­க­மான சிகிச்சை இல்லை என்ற போதிலும், நுளம்­பு­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வதன் மூல­மா­கவே இதி­லி­ருந்து தப்­பு­வ­தற்கு ஏது­வாக இருக்கும்.

 Ø    நுளம்புக் கடி­யி­லி­ருந்து தம்மைப் பாது­காத்துக் கொள்ள வேண்டும். அதற்­காக, பகல் நேரத்­திலும் கூட தூங்கும் போது நுளம்பு வலை பாவிப்­பது, கதவு யன்­னல்­க­ளுக்கு திரைச்­சீலை மற்றும் வலை­களைப் பாவிப்­பது, நுளம்­பு­களைக் கொல்­வ­தற்­கான நுளம்­புச்­சுருள் போன்­ற­வற்றைப் பாவித்தல், உடலை மறைக்கும் நீள­மான உடை­களை அணிதல் போன்­ற­வற்றைக் கடைப்­பி­டிக்­கலாம்.
இதனை விட, மிகவும் முக்­கி­ய­மான விடயம் தமது சுற்­றுப்­புறச் சூழலில் காணப்­படும் நுளம்­புகள் பல்­கிப்­பெ­ருகும் வித­மாக இருக்­கின்ற கார­ணி­களை இல்­லாமல் செய்­வது. 
 Ø    நாம் பாவித்த சிரட்டை, பேணிகள், போத்­தல்கள் போன்ற கொள்­க­லன்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொலித்தீன் உறைகள் என்­ப­வற்றை கண்­ட­படி வீசு­வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
 Ø    நாம் வளர்க்கும் பூஞ்­செ­டிகள் மற்றும் மரக்­க­றிக்­கன்­றுகள் வளர்க்­கப்­படும் இடங்­களில் அல்­லது பூச்­சா­டி­களின் அடிப்­பா­கத்தில் நீர் தேங்கி நிற்­காது பார்த்துக் கொள்ள வேண்டும்.
 Ø    வீட்­டுக்­கூ­ரை­களில் காணப்­படும் பீலிகள், நீர்த்­தாங்­கிகள் மற்றும் கட்­டட நிரு­மாணம் நடை­பெறும் இடங்­களில் நீர் தேங்கி நிற்­காத வண்ணம் கவனம் எடுக்க வேண்டும்.
 Ø    கிண­றுகள், குழாய்க்­கி­ண­றுகள், மற்றும் நீர்த்­தாங்­கிகள் போன்­ற­வற்றை நுளம்பு வலை போன்­ற­வற்­றினால் உரிய முறையில் மூடி வைக்க வேண்டும்.
 Ø    வீட்­டி­னுள்ளே சமை­ய­லறை மற்றும் குழி­ய­லறை போன்­ற­வற்­றிலும், குளிர்­சா­தனப் பெட்­டியின் அடிப்­பா­கத்­திலும் நீர் தேங்கி நிற்­கக்­கூ­டிய இடங்­களை அடிக்­கடி கவ­னித்து, தேங்­கி­யி­ருக்கும் நீரை அகற்றி விட வேண்டும்.
 Ø    அனைத்து வகை­யான கிண­றுகள் மற்றும் பள்­ளி­வா­சல்­களில் வுழூச் செய்­வ­தற்­காகப் பயன்­ப­டுத்­தப்­படும் நீர்த்­தொட்­டி­க­ளி­னுள்ளும் மீன்­களை வளர்க்க வேண்டும்.
 Ø    தத்தமது வீடுகளுக்கு முன்னாலுள்ள வடிகான்களில் நீரோட்டத்தை தடுக்கக்கூடியவாறு காணப்படும் கழிவுகளை அகற்றி துப்புரவு செய்து சீரான நீரோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 Ø    ஒவ்வொரு நாளும் நாங்கள் காலையில் எழுந்தவுடன் இப்போது முதலில் செய்யவேண்டியது தமது வீடுகளை சுற்றிப்பார்த்து, நீர் தேங்கி நிற்கக்கூடியவாறான எதையாவது பிள்ளைகள் வீசியிருக்கிறார்களா?  பறவைகள், பிராணிகள் கொண்டு வந்து போட்டிருக்கின்றனவா என்பதனைப் பார்ப்பதேயாகும்.
 Ø    தமது வீடுகளில் சேருகின்ற கழிவுகளை தரம் பிரித்து, உக்கக்கூடிய பொருட்களை வேறாகவும், எரிக்கக்கூடியவற்றை வேறாகவும், நீர் தேங்கக்கூடிய பொலித்தீன், தகரப்பேணிகள், போத்தல்கள் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்கள் முதலானவற்றை வேறாகவும் சேகரித்து அகற்றும் நடைமுறையை எல்லோரும் தமது வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டும்.

பொதுவாக, எங்கெல்லாம் நீர் தேங்கி நிற்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றதோ அவற்றை இல்லாமல் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் யாவும் நம்மையும், நமது பிள்ளைகளையும், நமது உறவுகளையும் கொடிய டெங்கு நோயிலிருந்து காப்பாற்றுவதற்காகவே என்பதை மறந்து விடாதீர்கள்!