Verified Web

இலங்கை.. முஸ்லிம் நாடுகளில் திருமணப் பதிவுகள்

A.R.A Fareel

சிரஷே்ட ஊடகவியலாளரான .ஆர்..பரீல் உடத்தலவின்னையை பிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவி வகிக்கிறார்.

 

2017-01-16 10:53:41 A.R.A Fareel

இலங்­கையில் நடை­மு­றை­யி­லுள்ள முஸ்லிம் திரு­ம­ணங்கள் தொடர்பில் மாற்று மதத்­த­வர்கள் மட்­டு­மல்ல முஸ்­லிம்­களும் பூரணத் தெளி­வு­களைப் பெற்­றுக்­கொண்­ட­வர்­க­ளாக இல்லை.இலங்­கையில் முஸ்லிம் ஆண் ஒரு­வரும் முஸ்லிம் பெண்ணும் சட்­ட­ரீ­தி­யாக கணவன் மனை­வி­யாக வாழ்­வ­தற்கு விவா­கப்­ப­திவு அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தல்ல. முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டப்­படி அவர்கள் நிக்காஹ் செய்து கொண்டு கணவன் மனை­வி­யாக வாழலாம். அது சட்­ட­பூர்­வ­மா­னதே. ஆனால் அவர்கள் குழந்தை பெற்­றுக்­கொள்­ளும்­போது குழந்­தை­களின் பிறப்­பினை பதிவு செய்­து­கொள்­வ­தற்கு திரு­மண அத்­தாட்சிப் பத்­திரம் தேவைப்­ப­டு­கி­றது.

 மற்றும் பல தேவை­க­ளுக்கும் திரு­மண அத்­தாட்­சிப்­பத்­திரம் எனும் ஆவணம் தேவைப்­ப­டு­கி­றது.
எமது நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ரமே நிக்காஹ் வைப­வத்­துடன் சட்ட ரீதி­யாக கணவன் மனை­வி­யாக வாழ முடியும். ஏனைய இனங்­க­ளுக்கு இச்­ச­லு­கைகள் வழங்­கப்­ப­ட­வில்லை.

இலங்­கையின் 1951ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க விவாக, விவா­க­ரத்து  சட்­டத்தின் பிரிவு 17, நிக்காஹ் முடிந்­த­வுடன் உத்­தி­யோ­க­பூர்வ விவா­கப்­ப­திவின் நடை­மு­றைகள் பற்றி விளக்­கு­கி­றது.

ஒரு திரு­ம­ணத்தை பதிவு செய்­ய­வேண்­டிய  கட­மையை எமது சட்டம் பின்­வ­ரு­வோரில் சுமத்­து­கி­றது. அவர்கள் மண­மகன் வழி அல்­லது திரு­மணப் பாது­கா­வலர், நிக்காஹ் நடத்­து­ப­வர்கள் என்­போ­ரா­வார்கள்.

இவர்கள் ஒரு திரும­ணத்தை பதிவு செய்யத் தவ­று­மி­டத்து சிறைத்­தண்­டனை அல்­லது தண்­டப்­பணம் அல்­லது இரண்­டிற்­கு­மான தண்­ட­னைக்­குட்­பட வேண்­டி­ய­வர்கள் எனச் சட்டம் கூறு­கி­றது.

இதே­வேளை இச்­சட்­டத்தின் பிரிவு 16 இஸ்­லா­மிய கண்­ணோட்­டத்தில் ஏனைய நிபந்­த­னைகள் பூர்த்தி செய்­யப்­பட்ட நிலையில் ஒரு திரு­ம­ணப்­ப­திவு செய்­யப்­ப­ட­வில்லை என்ற கார­ணத்­தினால் அதன் வலிதுத் தன்­மையை இழந்­து­வி­டாது எனக் கூறு­கின்­றது. ஆகவே இலங்­கையில் இஸ்­லா­மியத் திரு­ம­ணங்­களைப் பொருத்­த­வ­ரையில் ஒரு திரு­ம­ணத்தின் வலி­துத்­தன்­மைக்கு பதிவு  ஒரு அவ­சி­ய­மல்ல என்ற தீர்­மா­னத்­துக்கு வர­மு­டியும்.

ஆனால் பொதுச்­சட்டம் மற்றும் கண்­டிய சட்­டங்­களைப் பொறுத்­த­வ­ரையில் திரு­ம­ணப்­ப­திவு கட்­டா­ய­மாகும். பொது­வாக நோக்­கு­மி­டத்து இலங்­கையில் அனைத்து சமூ­கத்­தி­ன­ரி­டை­யேயும் திரு­ம­ணப்­ப­திவு என்­பது திரு­ம­ணத்தின் முக்­கிய பாக­மாக கரு­தப்­ப­டு­கி­றது.

திரு­ம­ணப்­ப­திவு என்­பது திரு­ம­ணத்­துடன் கூடிய உரி­மை­களைச் சட்­ட­ரீ­தி­யாகப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அவ­சி­ய­மா­ன­தாகும். பரா­ம­ரிப்பு, மஹர், கைக்­கூலி மற்றும் திரு­ம­ணத்­துடன் சம்­பந்­தப்­பட்ட உரி­மை­களை சிர­ம­மில்­லாமல் பெற்­றுக்­கொள்­வ­தற்கு பெண்­களைப் பொறுத்­த­வ­ரையில் திரு­ம­ணப்­ப­திவு செய்­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இலங்கை முஸ்லிம் திரு­ம­ணங்­களைப் பொறுத்­த­வ­ரையில் அதன் வலி­துத்­தன்மை நிலை­நாட்­டப்­பட பல விட­யங்கள் அவ­சி­ய­மா­கின்­றன.

திரு­மணம் என்­பது ஒரு ஒப்­பந்தம் என்ற அடிப்­ப­டையில் ஒரு திறத்­தவர் அல்­லது அவ­ரது சார்பில் ஒரு பிரே­ரணை அல்­லது கோரிக்­கையும் மறு திறத்­தவர் அல்­லது அவர் சார்பில் ஒரு ஏற்­றுக்­கொள்­ளலும் இருக்­க­வேண்டும். இந்தப் பிரே­ரணை அல்­லது கோரிக்­கையும் ஏற்­றுக்­கொள்­ளலும் ஒரே சந்­திப்பில் நடை­பெற வேண்டும். 

இவை­யி­ரண்டும் நியா­ய­மான, புத்­தி­சு­வா­தீ­ன­மு­டைய வயது வந்த இரண்டு முஸ்லிம் சாட்­சி­களின் முன்­னி­லையில் நடை­பெ­ற­வேண்டும். ஷாபி மத்­ஹபின் படி இரண்டு சாட்­சி­களும் ஆண்­க­ளாக இருக்க வேண்டும். ஹனபி மத்­ஹபின் படி இரண்டு சாட்­சி­களில் குறைந்­தது ஒரு சாட்­சி­யா­வது ஆணாக இருக்க வேண்டும். ஆண்­சாட்சி ஒரு­வ­ராக இருக்­கும்­போது இரண்டு பெண்கள் சாட்­சி­க­ளாக இருக்­க­வேண்டும். 

திரு­மண ஒப்­பந்­தங்­களின் பதி­வு­களும் அதன் வலி­துத்­தன்­மையும் ஒவ்வொரு நாடு­க­ளிலும் வேறு­பட்ட முறையில் அமைந்­துள்­ளன.  பின்­வரும் நாடு­களில்  பதிவு செய்­யப்­ப­டாத திரு­ம­ணங்கள் வலி­தா­ன­வை­யல்ல.

செனகல் 
குறிப்­பிட்ட நியா­யா­திக்­க­மு­டைய குடி­யியல் நிலை­யத்­திற்கு  திரு­ம­ணத்­திற்கு ஒரு மாதத்­திற்கு முன்னர் அறி­வித்தல் கொடுக்­கப்­படல் வேண்டும். திறத்­த­வர்­களின் பிறப்­பிடம் அல்­லது வசிப்­பிடம் அமைந்­துள்ள நியா­யா­திக்­கங்­க­ளுக்கு அமை­வான குடி­யியல் நிலை­யத்தில் திரு­மணம் நடை­பெற வேண்டும். குடி­யியல் நிலை­யத்தில் அதற்குப் பொறுப்­பான அதி­கா­ரியின் முன்னால் நடை­பெறும் திரு­ம­ண­மா­யினும் அல்­லது வேறு முறையில் நடை­பெறும் திரு­ம­ண­மா­யினும் சரி பதிவு செய்­யப்­ப­ட­வேண்டும். பதிவு கண­வ­னுக்கும் அதன் முதற்­பி­ரதி மனை­விக்கும் வழங்­கப்­படும். 

அர­சாங்கம் பதிவு செய்­யப்­பட்டு எழு­தப்­பட்ட திரு­ம­ணங்­க­ளையே  அங்­கீ­க­ரிக்­கின்­றது.  மத ரீதி­யான  சட்­டங்கள் மூல­மா­கவோ அல்­லது வழக்­காறு மூல­மா­கவோ நிகழ்த்­தப்­படும் திரு­ம­ணங்கள் சட்­டத்­தினால் ஓர­ளவு அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­கின்ற போதிலும் 6 மாதங்­க­ளுக்குள் அவை பதிவு செய்­யப்­பட வேண்டும்.

இரு திறத்­த­வர்­களும், சாட்­சி­களும் திரு­மண பதிவு செய்­யப்­ப­டும்­போது  உரிய அதி­கா­ரியின் முன்னால் பிர­சன்­ன­மாக வேண்டும்.

துருக்கி
குடி­யியல் சட்­டத்தின் அடிப்­ப­டையில் பதிவு செய்­யப்­பட்ட திரு­ம­ணங்­களே சட்­ட­பூர்­வ­மா­ன­வை­யாகும். சமய நிகழ்­வு­களின் அடிப்­ப­டையில் மாத்­திரம் இடம்­பெறும் திரு­ம­ணங்கள் சட்­ட­ரீ­தி­யான உரி­மை­க­ளினால் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது.

குடி­யியல் சட்­டத்தின் அடிப்­ப­டையில் திரு­மணம் நடை­பெற்ற பின்­னரே சமய ரீதி­யான நிகழ்­வுகள் நடை­பெ­ற­வேண்டும். பதி­வுக்­கு­ரிய தேவைப்­பா­டுகள் மீறப்­படும் பட்­சத்தில், அவை திறத்­த­வர்­க­ளையும் சம­யஸ்­தா­னங்­க­ளையும் குற்­ற­வியல் தண்­ட­னைக்­குட்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக அமையும். 

குறிப்­பிட்ட மாவட்ட ஆளு­ந­ரினால் அல்­லது ஆளு­நரின் அதி­காரம் வழங்­கப்­பட்ட உத்­தி­யோ­கத்­த­ரினால் திரு­ம­ணங்கள் சட்­ட­பூர்­வ­மாக்­கப்­படும். கிரா­மங்­களில் திரு­மணம் சம்­பந்­த­மான அறி­வித்தல் கிராமப் பெரி­ய­வர்கள் கொண்ட குழு­விற்கு அறி­விக்­கப்­படும். பின்னர் கிராமத் தலை­வ­ரினால் திரு­மணம் சட்­ட­பூர்­வ­மா­ன­தாக்­கப்­படும்.

டியூ­னி­சியா
சட்­டத்தில் விதந்­து­ரைக்­கப்­பட்ட உத்­தி­யோ­க­பூர்வ ஆவ­ணத்தின் மூலமே ஒரு திரு­மணம் நிரூ­பிக்­கப்­படும். திறத்­த­வர்­களின் இல்­லங்­களில் அல்­லது வேறு தனியார் இடங்­களில் நடை­பெறும் திரு­ம­ணங்கள் இரண்டு நொத்­தா­ரி­சு­களின் முன்­னி­லையில் நடத்­தப்­பட வேண்டும். மாறாக மாந­க­ர­சபை அலு­வ­ல­கத்தில் உரிய பதி­வா­ளரின் முன்­னி­லையில் நடை­பெ­ற­வேண்டும்.

உரிய உத்­தி­யோ­கத்­தரின் முன்­னி­லையில் அல்­லது இரண்டு நொத்­தா­ரி­சு­களின் முன்­னி­லையில் நடை­பெ­றாத திரு­ம­ணங்கள் வெற்றும் வெறி­து­மா­ன­தாகும்.   

திரு­ம­ணப்­ப­திவு கட்­டா­ய­மா­னது. ஆனால் திரு­மண வலி­துத்­தன்­மைக்­கான ஒரு நிபந்­த­னை­யல்ல.

இலங்கை
இலங்­கையில் திரு­மணம் நடந்­த­வுடன் பதிவு செய்­யப்­பட வேண்டும். இது மண­மகன் வழி திரு­ம­ணத்தை நடத்­து­பவர் ஆகி­யோரின் கட­மை­யாகும். திரு­ம­ணப்­ப­தி­வா­ளரை நிகழ்­விற்கு  அழைப்­பதும் இவர்கள் அனை­வ­ரி­னதும் கட­மை­யாகும். திரு­ம­ணப்­ப­திவைத் தவிர வேறு விஷேட ஒப்­பந்தம் எதுவும் இல்லை. திரு­ம­ணப்­ப­திவு செய்­யப்­ப­டா­மைக்கு 6 மாத­கால சிறைத்­தண்­டனை விதிக்­கலாம். ஆனால் திரு­ம­ணப்­ப­திவு செய்­யப்­ப­டா­மையின் கார­ண­மாக அதன் வலி­துத்­தன்­மையை இழந்­து­வி­டாது என்று சட்டம் தெரி­விக்­கின்­றது.

மலே­சியா
மலே­சி­யாவில் திறத்­த­வர்கள் பதி­வா­ளரின் அனு­ம­திக்­காக விண்­ணப்­பிக்க வேண்டும். திரு­மணம் நடை­பெ­று­வ­தற்கு குறைந்­தது 7 நாட்­க­ளுக்கு முன்­ப­தாக விண்­ணப்­பிக்க வேண்டும். கணவன் பல­தார திரு­மணம் செய்­வ­தற்கு முற்­ப­டு­கி­றாரா? என்­பது உட்­பட அனைத்து தேவைப்­பா­டு­க­ளையும் பதி­வாளர் பரி­சீ­லிக்க வேண்டும்.

சில சந்­தர்ப்­பங்­களில் ஷரீஆ நீதி­ப­தி­யினால் மாத்­திரம் அனு­மதி வழங்­கப்­படும். ஆயினும் பதி­வின்மை ஷரீ­ஆவின் அடிப்­ப­டையில் திரு­ம­ணத்தின் வலி­துத்­தன்­மையை இல்­லா­ம­லாக்­காது. ஆனால் பதிவு செய்­யப்­ப­டாத ஒரு திரு­ம­ணத்தை அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்­டவர் நடத்­தி­வைக்கும் பட்­சத்தில் அது குற்­ற­மாகும். 

பதிவு செய்­யப்­ப­டாத திரு­ம­ணங்­களின் வலி­துத்­தன்மை சாட்­சி­யங்­களின் மூலம் நீதி­மன்­றங்­களில் நிரூ­பிக்­கப்­பட்ட பின்னர் அவை பதிவு செய்­யப்­படும்.

பாகிஸ்தான் 
பாகிஸ்­தானில் திரு­மணம் பதிவு செய்­யப்­ப­டுதல் கட்­டா­ய­மாகும். திரு­மணம் பதிவு செய்­யப்­ப­டா­விடின் அது திரு­ம­ணத்தை நடத்­தி­வைப்­ப­வரின் குற்­ற­மாகும். திரு­ம­ணத்தை பதிவு செய்­வ­தற்கு கால எல்லை எதுவும் இல்லை. வலி­தான நிக்­காஹ்­விற்கு மத ரீதி­யான நிகழ்­வுகள் எத­னையும் சட்டம் தேவைப்­ப­டுத்­த­வில்லை. மதத்­த­லை­வர்­களின் பிர­சன்­னமும் தேவை­யில்லை.

பதிவு செய்­யப்­ப­டாத திரு­ம­ணங்கள் வலி­தா­ன­வை­யல்ல என்று சட்டம் கூற­வில்லை. பதிவு செய்­யப்­ப­டாத திரு­ம­ணங்­களும் சாட்­சி­யங்­களின் மூலம் நிரூ­பிக்­கப்­படும் பட்­சத்தில் நீதி­மன்ற அங்­கீ­காரம் பெறு­கின்­றது.

வேறு ஏதேனும் சந்­தே­கங்கள் அல்­லது தெளி­வான சாட்­சி­யங்­களில் குறை­பா­டுகள் இருக்கும் பட்­சத்தில் பதிவு செய்­யப்­ப­டாத திரு­ம­ணங்­களை நீதி­மன்­றங்கள் அங்­கீ­க­ரிப்­ப­தில்லை. இது பெரும்­பாலும் திறத்­த­வர்­களில் ஒருவர் திரு­ம­ணத்தை மறுக்கும் சந்­தர்ப்­பத்தில் ஏற்­ப­டு­கின்­றது.

ஈரான்
அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட பிர­தம உத்­தி­யோ­கத்தர் திரு­ம­ணப்­ப­தி­வி­லுள்ள நிபந்­த­னை­களை வாதிக்கக் கட­மைப்­பட்­டவர். திறத்­த­வர்கள் இரு­வரும் அந்­நி­பந்­த­னை­களை ஏற்­றுக்­கொண்டால் கையொப்­ப­மிட வேண்டும்.

திரு­ம­ணப்­ப­திவு செய்­யப்­ப­டா­த­வி­டத்து அது தண்­டப்­ப­ணத்­திற்­கு­ரிய குற்­ற­மாக இருந்­த­போ­திலும் கூட பதிவு செய்­யப்­ப­டாத திரு­ம­ணங்­களும் வலி­து­டை­யவை. கணவன் ஏற்­றுக்­கொண்டால் வாய்­மொ­ழி­மூ­ல­மான திரு­ம­ணங்­களும் வலி­து­டை­யவை. ஆயினும் திரு­மண வலி­துத்­தன்­மையில் பிரச்­சினை ஏற்­படும் பட்­சத்தில் அதை நிரூ­பிக்க பெண்கள் சிர­மப்­ப­டு­வார்கள். 

ஏனெனில் திரு­ம­ணத்தை அத்­தாட்­சிப்­ப­டுத்தும் வகையில் இரண்டு ஆண் சாட்­சிகள் தேவை. 

மொரோக்கோ
திரு­மண ஒப்­பந்தம் நீதி­மன்­றத்­தி­லுள்ள திரு­மணம் பதிவு செய்யும் புத்­த­கத்தில் பதிவு செய்­யப்­பட வேண்டும். அத்­துடன் அதன் பிர­தி­ ப­தி­வாளர் நிலை­யத்­திற்கு அனுப்­பி­வைக்­கப்­பட வேண்டும். திரு­மணம் பதிவு செய்­யப்­ப­டா­மைக்­கு­ரிய எந்தத் தண்­ட­னை­களும் சட்­டத்தில் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. 15 நாட்­க­ளுக்குள் மனைவி அல்லது அவரது பிரதிநிதிக்கு மூல ஆவணம் அனுப்பப்படும். அதன் பிரதியை பெற்றுக்கொள்ளும் உரிமை கணவனுக்கு உண்டு.

பங்களாதேஷ்
எல்லாத் திருமணங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். மீறினால் 3 மாதகால சிறைத்தண்டனையும் அல்லது தண்டப்பணமும் குற்றத்துக்குரிய தண்டனையாகும். 

எகிப்து
திருமணமானது அதிகாரமளிக்கப்பட்டவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டு பதிவுசெய்யப்படவேண்டும்.

அதிகாரமளிக்கப்பட்டவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்படாத திருமணங்களும் வலிதானவையாக அமையலாம். ஆயினும் அவ்வாறு சட்ட பூர்வமாக கைச்சாத்திடப்பட்ட திருமணத்தின் மூலம் ஒரு மனைவி பெறக்கூடிய நன்மைகளை அதிகாரமளிக்கப்பட்டவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்படாத திருமணத்தின் மூலம் அம்மனைவி பெற முடியாது. திருமணப்பதிவு அவசியமில்லை.

கம்பியா
கம்பியா நாட்டில் திருமணப்பதிவு கட்டாயமானதல்ல. பதிவு செய்யப்படாதமைக்கு எந்த தண்டனையும் இல்லை. பதிவு செய்யப்படாத வாய்மூலமான திருமணங்களும் வலிதானவை. ஆனால் திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளபோது மாத்திரமே அந்தப் பெண் ஊதியத்துடன் கூடிய பிரசவ விடுமுறை போன்ற உரிமைகளைப் பெறலாம்.

பதிவின்போது இரு திறத்தவர்களின் பிரசன்னமும் அவசியமில்லை. திருமணத்தை பதிவு செய்வதற்கும் பதிவுப்பத்திரங்களை வழங்குவதற்கும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இடம் முஸ்லிம் நீதிமன்றங்களாகும்.