Verified Web

முஸ்லிம் தனியார் சட்டம் கடந்து வந்த பாதை

A.R.A Fareel

சிரஷே்ட ஊடகவியலாளரான .ஆர்..பரீல் உடத்தலவின்னையை பிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவி வகிக்கிறார்.

 

2016-12-08 12:04:50 A.R.A Fareel

இலங்­கையில் முஸ்லிம் தனியார் சட்டம் பல­ராலும் விவா­திக்­கப்­ப­டு­கி­றது. முஸ்லிம் தனியார் சட்டம் பற்­றிய தெளி­வான அறிவு இன்­மையே இந்த விவா­தங்­க­ளுக்குக் கார­ண­மாகும். முஸ்­லிம்­க­ளா­கிய நாமே எமது தனியார் சட்டம் பற்றி போதிய தெளி­வில்­லாது இருக்­கிறோம்.முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­க­ளுக்­கான நகர்­வுகள் இடம்­பெற்­று­வரும் நிலையில் தான் நாம் எமது சட்­டத்தைப் பற்றி தேடிப்­பார்க்க ஆரம்­பித்­தி­ருக்­கிறோம். ஊட­கங்­களும் இது விட­யத்தில் அக்­க­றை­காட்டி வரு­கின்­றன. பல்­லின மக்கள் வாழும் எமது நாட்டில் பல்­வேறு குடும்ப உற­வுகள் பல்­வேறு சட்­டங்­க­ளினால் ஆளப்­ப­டு­கின்­றன. 

எமது நாட்டில் பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழும் சிங்­க­ள­வர்கள் பொதுச் சட்­டத்­தினால் ஆளப்­ப­டு­கின்­றனர். இந்தப் பொதுச் சட்­ட­மா­னது ஆங்­கில சட்டக் கொள்­கை­யி­னதும் ரோமன் டச்சுச் சட்டக் கொள்­கை­யி­னதும் அம்­சங்­களைக் கொண்­ட­தாகும்.

இந்த பொதுச் சட்­டத்­தினைப் போன்றே இலங்­கையில் மேலும் மூன்று சட்­டங்­களும் காணப்­ப­டு­கின்­றன. அவை முஸ்லிம் தனியார் சட்டம், தேச வழமைச் சட்டம், கண்­டியச் சட்டம் என்­ப­தாகும். தமி­ழர்கள் தேச­வ­ழ­மைச் சட்டம் மூலமும் கண்­டியச் சிங்­க­ள­வர்கள் கண்­டியச் சட்டம் மூலமும் இஸ்­லா­மி­யர்கள் முஸ்லிம் தனியார் சட்டம் மூலமும் ஆளப்­ப­டு­கின்­றனர். இதே­வேளை, குடி­யியல், குற்­ற­வியல் விட­யங்­களில் அனைத்து மக்­களும் எவ்­வித வேறு­பா­டு­க­ளு­மின்றி பொதுச் சட்­டத்­தி­னாலே ஆளப்­ப­டு­கின்­றனர்.

முஸ்லிம் தனியார் சட்­டத்தின் வர­லாறு
எமது நாட்­டிற்கு முஸ்­லிம்கள் 8 ஆம் நூற்­றாண்டில் வருகை தந்த காலத்­தி­லி­ருந்து அவர்­க­ளது விவாகம் மற்றும் விவா­க­ரத்து தொடர்­பான விட­யங்­களில் தமது சட்­டங்­க­ள் மூலமே ஆளப்­பட்டு வந்­துள்­ளார்கள்.

இலங்­கைக்கு ஒத்­தான முத­லா­வது எழு­தப்­பட்ட சட்ட மூலம் 1770 ஆம் ஆண்டு பட்­டா­வி­யா­வி­லி­ருந்து கொண்டு வரப்­பட்­டது. இது அந்­நாட்டின் விவாகம், வாரி­சு­ரிமை தொடர்­பான சட்­டங்­களின் அடிப்­ப­டையைக் கொண்­டி­ருந்­தது. ஒல்­லாந்தர் இலங்­கையின் கரை­யோரப் பிர­தே­சங்­களை ஆட்சி செய்து கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்­தி­லேயே இச்­சட்­டம்­கொண்டு வரப்­பட்­டது. ஒல்­லாந்­தரின் ஆரம்ப கால­னித்­துவக் கொள்­கை­யா­னது தங்­க­ளது சட்­டங்­களை ஐரோப்­பி­யர்­க­ளுக்கும் உள்­ளூர்­வா­சி­க­ளுக்கும் ஒரே வித­மாகப் பயன்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருந்­தது. 

ஒல்­லாந்­தர்­களின் இவ்­வா­றான உள்­நாட்டு வழக்­கா­று­களை நிரா­க­ரிப்­பதும் மற்றும் இல்­லாமற் செய்­வ­து­மான கொள்கை அவர்­க­ளது ஆட்­சியின் பிற்­ப­கு­தியில் கைவி­டப்­பட்­டது. ஒல்­லாந்தர் தமது ஆட்­சியின் பிற்­ப­கு­தியில் தமது கொள்­கை­களை மாற்றிக் கொண்­டார்கள் இலங்­கை­யர்­களின் வழக்­கா­று­க­ளுக்கு அங்­கீ­காரம் வழங்­கி­னார்கள். அந்­தஸ்து வழங்­கி­னார்கள்.

ஒல்­லாந்தர் ஒரு சுமு­க­மான ஆட்­சியை நடத்த வேண்டும் என்­பதை உணர்ந்­தார்கள். இல்­லையேல் பல சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­படும் என்­பது தெளி­வா­யிற்று.
இலங்­கையில் ஆளு­ந­ராகப் பதவி வகித்த போல்க் என்­பவர் முஸ்லிம் தலை­வர்­களின் ஒத்­து­ழைப்­புடன் முஸ்லிம் சட்­டங்­களைத் தொகுப்­ப­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்டார். ஆளுநர் போல்க் 1765– 1785 காலப் பகு­தியில் கட­மையில் இருந்தார்.

ஆளுநர் போல்க்கின் முயற்­சிகள் பற்றி அலெக்­ஸாண்டர் ஜோன்ஸ்டன் தனது நூலில் பின்­வ­ரு­மாறு தெரி­வித்­துள்ளார்.

இத் தீவில் முஹம்­ம­திய சட்டம் பற்றி மிகத் தெளி­வான அறி­வு­டை­ய­வர்கள் இருக்­கி­றார்­களா என்­பது பற்றி ஆளுநர் போல்க் ஆராய்ந்தார். விசா­ர­ணைகள் மேற்­கொண்டார். விசா­ர­ணைகள் இத் தீவில் முஹம்­ம­திய சட்டம் பற்­றிய அறி­வு­டை­ய­வர்கள் இல்லை என்­பதை அறிந்து கொண்டார். இதனால் தலை­வர்கள் தீர்­மா­னங்­களை மேற்­கொள்­வ­தற்­கான சட்ட விதிகள் இருக்­க­வில்லை முஸ்­லிம்கள் தமது சட்­டத்­திலும் அது தொடர்­பான விட­யங்­க­ளிலும் என்­னென்ன வழி முறைகள் இருக்­கின்­றன. எது இல்லை என்­பதில் முற்­றிலும் அறி­வற்­ற­வர்­க­ளா­கவே இருந்­தார்கள்.

இதனால் ஒவ்­வொரு தலை­மைக்­கா­ரரும் தங்­க­ளது விருப்பு வெறுப்­புக்­க­மைய தீர்­மானம் எடுக்கும் நிலை ஏற்­பட்­டது. இவ்­வா­றான நிலைமை பெரு­ம­ள­வி­லான அடக்கு முறை­க­ளுக்கு வழி வகுத்­தது.

போர்த்­துக்­கே­யர்­களும் ஆரம்­ப­கால ஒல்­லாந்த கரை­யோர ஆட்­சி­யா­ளர்­களும் முஸ்­லிம்கள் மீது கொண்­டி­ருந்த எதிர்ப்பும் அடக்கு முறைப்­போக்­குமே முஸ்­லிம்­களின் இத்­த­கைய வெளிப்­ப­டை­யான அறி­யா­மைக்குக் கார­ண­மாக அமைந்­தன. இலங்­கையில் ஆரம்­ப­கால முஸ்­லிம்கள் சம­ய­வா­தி­க­ளா­கவும் வியா­பா­ரி­க­ளா­க­வுமே கரு­தப்­பட்­டனர்.

இந்த எதிர்ப்பும் அடக்கு முறைப்­போக்கும் முஸ்லிம் சமு­தா­யத்தின் சட்­டங்கள், நிறு­வ­னங்கள், வழக்­கா­றுகள், என்­ப­ன­வற்றின் வரை­ய­றை­யற்ற அழி­வுக்கு இதுவே கார­ண­மா­யிற்று. இதனைத் தொடர்ந்து பட்­டா­வி­யாவின் ஆளுநர் நாய­கத்­திற்கு ஆளுநர் போல்க்­கினால் ஓர் அறிக்கை அனுப்பி வைக்­கப்­பட்­டது.

அவ­ரது சிபா­ரிசின் அடிப்­ப­டையில் இந்­நாட்டில் சிறந்த தகவல் அறிவு கொண்ட கற்­ற­றிந்த முகம்­ம­தி­யர்கள் மூலம் திரு­ம­ணமும் வழி­யு­ரி­மையும் தொடர்­பான சிறி­ய­தொரு கோவை வரை­யப்­பட்­டது. இந்தக் கோவை “சோன­கர்கள் அல்­லது முகம்­ம­தி­யர்­களும் ஏனைய உள்­நாட்­டி­னங்­களும் தொடர்­பான சிறப்புச் சட்­டங்கள்" என அழைக்­கப்­ப­டு­கின்­றன. இது கரை­யோ­ரத்தில் வாழ்­கின்ற எல்லா முஸ்­லிம்­க­ளுக்­கான ஏற்­பு­டைத்­தான வழி­யு­ரிமை, வாரி­சு­ரிமை, விவாகம், விவா­க­ரத்து போன்ற விட­யங்­க­ளுக்­கான சட்ட ஏற்­பா­டு­களை உள்­ள­டக்­கி­யி­ருந்­தது.

முஹம்­ம­தியன் கோவை
ஒல்­லாந்தர் ஆட்சிக் காலத்தில் நடை­மு­றை­யி­லி­ருந்த சட்­டங்கள், ஸ்தாப­னங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே இலங்­கையின் நீதி முறைமை நிர்­வ­கிக்­கப்­பட வேண்­டு­மென்று 1799 ஆம் ஆண்டின் முன்­மொ­ழி­வொன்றின் மூலம் இலங்­கை­யி­லி­ருந்த பிரித்­தா­னி­யர்­களும் உத்­த­ர­வா­த­ம­ளித்­தனர். இந்தக் கொள்­கையின் அடிப்­ப­டையில் அக்­கா­லத்தில் ஆளு­ந­ராக இருந்த அலெக்ஸ்­ஸாண்டர் ஜோன்ஸ்டன் பட்­டே­வியன் கோவையை 1806 ஆம் ஆண்டில் ஆங்­கி­லத்­திற்கு மொழி­பெ­யர்த்தார்.

இக்­கோ­வை­யா­னது 20 முஸ்லிம் பிர­மு­கர்­க­ளுக்கு அவர்­களின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக வழங்­கப்­பட்­டது.

ஆங்­கில மொழி பெயர்ப்­பினைப் பெற்றுக் கொண்ட 20 முஸ்லிம் முக்­கி­யஸ்­தர்­களும் சில திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­தனர். அத­ன­டிப்­ப­டையில் திருத்­தங்­க­ளு­டன 1806 ஆம் ஆண்டில் பட்­டே­வியின் கோவை முஹம்­ம­தியின் கோவை­யாக உரு­வ­மைக்­கப்­பட்­டது. இக்­கோ­வை­யா­னது ஆரம்­பத்தில் கொழும்புப் பிர­தே­சத்­திற்கு மாத்­தி­ரமே அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. இக்­கோவை 1852 ஆம் ஆண்டின் 5 ஆம்  இலக்கச் சட்­டத்தின் மூலம் அதே ஆண்டு நாடு முழு­வ­தற்­கு­மாக விஸ்­த­ரிக்­கப்­பட்­டது. இச்­சட்­டத்தில் இரண்டு பிரி­வுகள் உள்­ள­டக்­கப்ப ட்டிருந்­தன. முதற்­பி­ரிவு வாரி­சு­ரிமை தொடர்­பா­ன­தா­கவும் இரண்­டா­வது பிரிவு விவாகம் தொடர்­பா­ன­தா­கவும் அமைந்­தி­ருந்­தன.

1929 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம்
முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்த பிர­பல்­ய­மான முக்­கி­யஸ்­தர்கள், புத்­தி­ஜீ­விகள் என்போர் 19 ஆம் நூற்­றாண்டின் முற்­ப­கு­தியில் 1806 ஆம் ஆண்டின் முஹம்­ம­தியன் கோவையில் உள்ள தவ­று­களைச் சுட்­டிக்­காட்டி அது தொடர்பில் தமது அதி­ருப்­தியை வெளி­யிட்­டனர். இக்­கோ­வை­யா­னது இஸ்­லா­மிய சட்­டத்தின் சரி­யான கொள்­கை­களைப் பிர­தி­ப­லிக்­க­வில்லை என்­பது உண­ரப்­பட்­டது. முஸ்லிம் சமூ­கத்தின் புத்­தி­ஜீ­விகள், முக்­கி­யஸ்­தர்­களின் முயற்­சியின் கார­ண­மாக இக்­கோ­வை­யா­னது 1937 ஆம் ஆண்டு முற்­றாக மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டது.

வாரி­சு­ரிமை தொடர்­பான விட­யங்­களை உள்­ள­டக்­கி­யி­ருந்த முஹம்­ம­தியன் கோவையின் முதற்­பி­ரிவு 1931 ஆம் ஆண்டின் முஸ்லிம் மரண சாச­ன­மில்லா வழி­யு­ரிமை வக்பு சட்டம் என்று மாற்­றப்­பட்­டது. விவாகம் தொடர்­பான விட­யங்­களை உள்­ள­டக்­கி­யி­ருந்த முஹம்­ம­தியன் கோவையின் இரண்­டா­வது பிரிவு 1929 ஆம் ஆண்டின் முஸ்லிம், விவாக விவா­க­ரத்துச் சட்­ட­மாக மாற்­றப்­பட்­டது. என்­றாலும் இது 1931 ஆம் ஆண்­டி­லேயே அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. இச் சட்­ட­மா­னது பல குறிப்­பி­டத்­தக்க மாற்­றங்­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டமை நோக்­கத்­தக்­கது.

1929 ஆம் ஆண்டின் சட்­டத்தின் பிரிவு 50 பின்­வ­ரு­மாறு தெரி­விக்­கி­றது. 

‘எந்­த­வொரு விடயம் தொடர்­பாக சட்­டத்தில் ஏற்­பா­டுகள் எது­வு­மில்­லா­துள்­ளதோ, அவ் விடயம் தொடர்­பாக இஸ்­லா­மிய சட்­டத்தில் பரி­காரம் தேடப்­பட வேண்­டுமே தவிர 1806 ஆம் ஆண்டின் முஹம்­ம­தியன் கோவையில் கூறப்­பட்டுள்­ளது போல் வழக்­கா­று­க­ளி­லி­ருந்தோ பொதுச் சட்­டத்­தி­லி­ருந்தோ பரி­காரம் தேட முடி­யாது. முஸ்லிம் சட்­டத்தை நிர்­வ­கிப்­ப­தற்­காக காதி நீதி­மன்றம் எனும் விசேட நீதி­மன்றம் நிறு­வப்­பட வேண்டும். காதி நீதி­மன்­றத்தின் மேன் முறை­யீ­டுகள் காதிகள் சபைக்கும் அதன் பின்னர் உயர் நீதி­மன்­றத்­திற்கும் செய்­யப்­பட வேண்டும்.

ஒரு குறு­கிய காலத்­தினுள் இச்­சட்­ட­மா­னது 1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்­தினால் முற்­றாக மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டது. இச்­சட்டம் இன்று வரைக்கும் அமு­லி­லுள்­ளது. இச்­சட்டம் 1954 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்கச் சட்டம், 1955 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்கச் சட்டம், 1969 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்கச் சட்டம் என்­ப­ன­வற்­றினால் திருத்­தப்­பட்­டது என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

தற்­போது அமு­லி­லுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம்
முஸ்லிம் தனியார் சட்­டத்­தினுள் உள்­ள­டங்கும் 1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டமே தற்­போது அமு­லி­லுள்­ளது. 1951 ஆம் ஆண்டின் சட்­டமும் இதற்கு முன்­ன­ரான 1927 ஆம் ஆண்டின் கோவைகள் மற்றும் சட்டம் போன்றே இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பு­டைத்­தான முஸ்லிம் சட்­டத்தை முழு­மை­யாகப் பூர­ணப்­ப­டுத்தி கோவைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

முஸ்லிம் சட்டம் தொடர்­பான வழக்­கு­களைத் தீர்­மா­னிக்கும் போது நடை­மு­றை­யி­லுள்ள முஸ்லிம் சட்­டத்தின் நியதிச் சட்­டத்தை விடவும் சட்ட மூலங்­க­ளையே முக்­கி­ய­மாகப் பின்­பற்ற வேண்­டிய நிலை நீதி­மன்­றங்­க­ளுக்கு ஏற்­பட்­டது.

1806 ஆம் ஆண்டின் முகம்­ம­தியா கோவை நடை­மு­றை­யி­லி­ருந்த காலத்தில் குறிப்­பிட்­ட­தொரு விட­யத்தில் சட்­டத்தில் ஏற்­பா­டுகள் எது­வு­மில்­லாது சட்டம் அமை­தி­யாக உள்­ள­போது உள்ளூர் மக்கள் மத்­தியில் நடை­மு­றை­யி­லி­ருந்த வழக்­காற்று முறைகள் ஏற்­பு­டை­ய­தாக அமைந்­தன. அவ்­வா­றான வழக்­காற்று முறைகள் எது­வு­மில்­லாத பட்­சத்தில் நாட்டின் பொதுச்­சட்டம் ஏற்­பு­டைத்­த­தாக அமைந்­தன. 1929 ஆம் ஆண்டின் மற்றும் 1951 ஆம் ஆண்டின் சட்­டங்­களில் முஸ்லிம் சட்டம் பாது­காக்­கப்­பட்­டது.

குறிப்­பிட்­ட­தொரு விட­யத்தில் சட்­டத்தில் எந்த ஏற்­பா­டு­க­ளு­மில்­லாது சட்டம் அமை­தி­யாக இருக்கும் போது திறத்­த­வர்கள் எந்த மதப்­பி­ரி­வினால் ஆளப்­ப­டு­கி­றார்­களோ அம்­மதப் பிரி­விற்­கான முஸ்­லிம்­சட்டம் ஏற்­பு­டை­ய­தா­னது.

1929 ஆம் ஆண்டின் சட்­டத்தில் காணப்­பட்ட பல நிலை­யான சட்ட விட­யங்கள் தொடர்­பான பிரி­வு­களை 1951 ஆம் ஆண்டின் சட்டம் உள்ள­டக்­கி­யி­ருந்­தது. என்­றாலும் குறிப்­பாகப் பெண் பிள்­ளைகள் தொடர்­பான விட­யத்தில் பல முன்­னேற்­ற­க­ர­மான திருத்­தங்கள் இச்­சட்­டத்தில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தன.

முஸ்லிம் பெண்­க­ளுக்கு அவர்­க­ளது சம்­ம­த­மின்­றியே திரு­மணம் செய்து வைக்க முடியும் எனச் சில வழக்­கா­று­களில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன. இதனை மாற்றி ஒரு பெண்­ணுக்கு விவாகம் செய்து வைக்கும் போது அவ­ளது சம்­ம­தத்­தினை வலி­காரர் அல்­லது பாது­கா­வலர் பெற வேண்டும் எனும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. இம்­மாற்றம் மிகவும் வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

இரண்டாம், மூன்றாம் அல்­லது நான்காம் திரு­மணம் செய்ய விரும்­பு­கின்ற ஒருவர் காதி­நீ­தி­வா­னுக்கு அறி­வித்தல் கொடுத்தல் அவ­சியம் என்ற தேவைப்­பாட்டை வலி­யு­றுத்­து­வதன் மூலம் பலதார மணத்தை ஒழுங்­க­மைப்­ப­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டன.
பல்­தார திரு­மணம் என்ற விடயம் தவிர்க்­கப்­ப­டு­வ­தற்­கான வழி­மு­றைகள் அறி­முகம் செய்­யப்­பட்­டன.

1951 ஆம் ஆண்டு சட்­டத்தின் சீர்­தி­ருத்தம்
1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை திருத்­து­வ­தற்­கென 1990 ஆம் ஆண்டு குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இக்­குழு பல சிபா­ரி­சு­களை முன்­வைத்­தது. விவா­க­ரத்தின் போது பெண்­க­ளுக்கு மத்தாஹ் (நஷ்டஈடு) வழங்குதல், காதிநீதிமன்றங்களை மறுசீரமைத்தல் போன்ற சிபாரிசுகளை இக்குழு முன்வைத்தவற்றில் குறிப்பிடத்தக்கனவாகும் என்றாலும் இச்சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஓய்வுபெற்ற நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையிலான குழு
1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சிபாரிசுகளை செய்வதற்கென 2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடயினால் தற்போது ஓய்வு பெற்றுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழுவில் நீதிபதிகள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என்போர் அங்கம் வகிக்கின்றனர்.
இக்குழு பலகட்டக் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளது. பொதுமக்களிட மிருந்தும் ஆலோசனைகளைக் கோரியது. சிவில் அமைப்புக்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன. காதிநீதிபதிகளின் சிபாரிசுகளும் ஏற்கப்பட்டன. இந்தக்குழு முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பான தனது அறிக்கையைத் தயாரித்துள்ளது. 

புத்தி ஜீவி­களின் இறு­தி­நேர முன்­மொ­ழி­வுகள்
சலீம் மர்சூபின் குழு தனது அறிக்­கைக்கு கடந்த 27 ஆம் திகதி அங்­கத்­த­வர்­களின் கையொப்­பங்­களைப் பெற்று அதனை தற்­போது அர­சாங்கம் நிய­மித்­துள்ள அமைச்­ச­ரவை உப குழு­விடம் கைய­ளிக்கத் தயா­ராக இருந்த நிலையில் எமது புத்­தி­ஜீ­விகள் இறுதி நேரத்தில் சில திருத்த முன்­மொ­ழி­வு­களை குழு­விடம் கைய­ளித்­துள்­ளனர்.

கண்டி போரம், நளீ­மிய்யா பட்­ட­தா­ரிகள், முன்னாள் வேந்தர் ஹுசைன் இஸ்­மாயில் என்­போரின் திருத்த முன்­மொ­ழி­வு­களை குழு ஒன்று கூடி ஆராய வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டது.

இந்­நி­லை­யி­லேயே குழுவின் தலைவர் முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் அறிக்­கையை பூர­ணப்­ப­டுத்­து­வதை எதிர்­வரும் 13 ஆம் திகதி வரை ஒத்­தி­வைத்­துள்ளார்.

இவ்­வாறு முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் கால­தா­ம­தப்­பட்டே வரு­கின்­றன. 2009 ஆம் ஆண்டு நிய­மிக்­கப்­பட்ட இக்­கு­ழு­வுக்கு 7 வரு­டங்­க­ளுக்குப் பின்பும் திருத்­தங்கள் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தென்றால் எமது சமூகம் எந்­த­ள­வுக்கு சமூ­க­தே­வை­க­ளிலும் பிரச்­சி­னை­க­ளிலும் ஆர்வம் குன்­றி­யி­ருக்­கி­றது என்­பது தெளி­வா­கி­றது.

திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக 7 வரு­ட­காலம் ஏன் தேவைப்­பட்­டது என்­பதை சலீம் மர்சூப் தனது அறிக்­கையில் தெரி­வித்­துள்­ள­தாக எம்­மிடம் குறிப்­பிட்டார்.

குழுவில் அங்­கத்­துவம் பெற்­றுள்ள முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்­னணி (MWRAF) யும் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்கள் தாம­தப்­ப­டுத்­தப்­படக் கூடாது எனத் தெரி­வித்­துள்­ளது.

முஸ்லிம் தனியார் சட்டம் திருத்­தப்­பட வேண்டும். அதில் மாற்­றுக்­க­ருத்­துகள் இல்லை. ஆனால் அது குர்­ஆ­னுக்கு முர­ணா­ன­தாக அமையக் கூடாது என்றே சமூகம் எதிர்­பார்க்­கி­றது.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் பெண்­களின் திரு­மண வய­தெல்­லையில் மாற்றம் தேவை. உரிய கார­ணங்­க­ளின்றி தலாக் கூறப்­படும் பெண்­க­ளுக்கு நஷ்ட ஈடு வழங்­கப்­பட வேண்டும். முஸ்லிம் விவாக பதி­வா­ளர்கள் மத்­ஹ­பு­களை தமது சுய­நலன் கருதி மாற்றிட மேற்­கொள்ளும் திரு­மண பதி­வு­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். முஸ்லிம் சட்­டத்­துக்கு முர­ணான விவாக பதி­வு­களை மேற்­கொள்ளும் முஸ்லிம் விவாக பதி­வா­ளர்­க­ளுக்கு எதி­ராக சட்டம் கடு­மை­யாக அமுல்­ந­டத்­தப்­பட வேண்டும். 

பலதாரமணம் விடயத்தில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டுமென்றே சமூகம் எதிர்பார்க்கிறது. இவற்றுக்கெல்லாம் சலீம் மர்சூபின் தலைமையிலான குழுவின் அறிக்கை பதில்கள் தரும் என எதிர்பார்ப்போம்.