Verified Web

ஐலான் குர்தி - சேயா

Ash Sheikh SHM Faleel

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளான இவர் தேசிய சூறா சபையின் பிரதித் தலைவர்களுள் ஒருவராகவும் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞராகவும் விளங்குகிறார்.

2015-09-20 15:50:33 Ash Sheikh SHM Faleel

உதிர்ந்த மொட்டுக்களுக்கு யார் பொறுப்பு?
ஐலான் குர்தி (வயது 3), காலிப் குர்தி (வயது 5). துள்ளித்திரியும் பருவத்தில் கடலில் விழுந்து வபாத்தாகி அலைகளால் கரையில் ஒதுக்கப்பட்ட இரண்டு சிட்டுக்கள். மழலை ஐலானின் உடல் கடற்கரையில் ஒதுங்கி முகங்குப்புறப்படுத்துக் கொண்டிருப்பது போன்ற அந்தக் காட்சியைக் கண்ட, மனசாட்சி விழிப்புடன் இருக்கும் எவரது உள்ளமும் குலங்கியது, கதறியது.ஜாஹிலிய்யாக் காலத்தில் பெண் குழந்தைகள் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டதைப் பற்றி அல்லாஹ் ''எந்தக் குற்றத்துக்காக அது கொல்லப்பட்டது என்று அந்த உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை விசாரணைக்கு உள்ளாக்கப்படும் போது'' என்று குர்ஆனில் கூறுகிறான். அந்தப்பிள்ளைக்கு பேசும் ஆற்றல் வழங்கப்பட்டு ஏன் கொல்லப்பட்டாய் என்று அந்தப்பிள்ளையிடம் கேட்பான். 

தான் கொல்லப்படுவதற்கான காரணங்களையும் நபர்களையும் பற்றிக் கூறவேண்டும் என்றும் அதனுடைய வாயிலிருந்தே அநியாயக் காரர்கள் பற்றிய தகவல்கள் வெளிவரவேண்டும் என்றும் அல்லாஹ் எதிர்பார்ப்பான்.

அல்லாஹ்வுக்கு எல்லாம் தெரியும் என்றாலும் கோடான கோடி மக்கள் மஹ்ஷர் மைதானத்தில் விசாரணைக்காக நின்று கொண்டிருக்கையில் அந்தக்குழந்தை பேச ஆரம்பிக்கும்.

ஐலானும், காலிபும் அவர்களைச் சுமந்து பாலூட்டி சீராட்டி வளர்த்து பிள்ளைகள் பற்றி கனவுகளை வரித்துக் கொண்டு வாழ்ந்த அருமைத்தாயும் மறுமையில் சாட்சியமளிப்பார்கள்.

 தம் நாட்டில் பாதுகாப்பில்லை; தாம் வாழும் அரபு இஸ்லாமிய உலகிலும் பாதுகாப்பில்லை. கிறிஸ்தவ உலகிலாவது பாதுகாப்பிருக்கும் என நம்பிய பெற்றாரின் ஆலோசனையை தட்டிவிட்டு அபிப்பிராயம் சொல்லும் வயதில் ஐலானும் காலிபும் இருக்கவில்லை.
 

பாவம் பச்சிளம் பாலகர்கள், அவர்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி மரணித்துவிட்டாலும் அவர்களுக்கு நிகழ்ந்த இந்த சோக முடிவுக்கு காரணமாக அமைந்தவர்கள் முதலில் சிரியாவை அணுங்குப்பிடிக்குள் இரும்புப் பிடிக்குள் வைத்திருக்கும் கொடுங்கோலன் பஷ்ஷாருல் அஸத்.

 இரண்டாவது குற்றவாளி, புரட்சியானது பல்லாயிரம் உயிர்களைக் காவுகொள்ளும் என்று தெரிந்திருந்தும் போராடும் அபூபக்கர் பக்தாதி உள்ளிட்ட ஐ.எஸ்.தீவிரவாதிகள்.

 கிளர்ச்சிக்கு நியாயங்கள் இருக்கலாம். ஆனால் அதனை மேற்கொள்பவர்களுக்கு இஸ்லாம் கூறும் குறைந்தபட்ச தகைமைகள் இருக்க வேண்டும். கையாளப்படும் அணுகு முறைகள் இஸ்லாம் அங்கீகரித்தவையாக இருக்க வேண்டும். 

ஆனால், அவற்றை தவிர்ந்து போராடும் கும்பல்தான் ஐ.எஸ் காரர்கள். குளிக்கப்போய் சேறு பூசியவர்கள். சட்டியிலிருந்த மக்களை அடுப்புக்குள் தள்ளியவர்கள். ஐலானின் சோக முடிவுக்கு நேரடியாகப் பதில் கூறவேண்டிய இரண்டாவது பொறுப்புதாரிகள்.

 மூன்றாவதாக சிரியாவின் அயலிலுள்ள அரேபிய, இஸ்லாமிய நாடுகளது கதிரைகளில் அமர்ந்து ஆட்சிச் சுகம் அனுபவிக்கும் ஆட்சியாளர்கள்.

சிரியாவின் அகதிகளுக்கு இஸ்லாமிய நாடுகள் எதுவுமே ஒன்றுமே செய்யவில்லை என்று நாம் கூறவில்லை. செய்திருக்கிறார்கள்.

ஆனால், பொருளாதார உதவி, அகதிகளுக்கான இல்லிடவசதி மட்டுமல்ல இப்படியான ஐ.எஸ். கிளர்ச்சிகள் உருவாகுவதற்கான சூழ்நிலைகளைத் தோற்றுவித்தவர்கள் இந்த அரபு நாட்டு ஆட்சியாளர்கள்தான். எனவே ஐலான், காலிப் மட்டுமன்றி பல இலட்சம் அபலைகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் அவர்களும்தான்.

நான்காவது பொறுப்பாளர்கள் மேற்குலக ஆட்சியாளர்களாவர். பெற்றோலிய வளத்தை சுரண்டும் நோக்கிலும் ஆயுத சந்தைகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் மிதவாத இஸ்லாமிய எழுச்சிக்கு அணை போடவும் முயற்சிக்கும் மேற்குலகம் இஸ்லாமிய நாடுகளிலுள்ள பொதுமக்களை பலிக்கடாக்களாக்கி அங்குள்ள தீவிரவாதத்துக்கு நேரடியாகவும் மறைமுகைமாகவும் துணை போகின்றன.

எனவே ஐலான் குர்தி போன்ற பாலகர்கள் மறுமையில் வழக்காடும் போது இவர்கள் அனைவரும் கூனிக் குறுகி நின்று திரு திருவென முழித்து பதிலளிக்க வேண்டியிருக்கும்.

அடுத்த விவகாரம் எமது மனதை பிழிந்த எமது நாட்டு மழலை சேயாவின் மீது மேற்கொள்ளப்பட்ட நீசத்தனமான பாலியல் வக்கிரமும் கொடூரக் கொலையுமாகும். 

இந்த அடாவடித்தனம் நடந்து முடிந்தவுடன் பல அபிப்பிராயங்கள் வெளியாகின. சிலர் கொலைஞனை திட்டித்தீர்த்தார்கள். இவன் கண்டு பிடிக்கப்பட்டு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றார்கள்.

நடிகர் ரஞ்சன் ராமநாயக்க போன்றவர்கள் அரபு நாட்டுப் பாணியில் தண்டனை தேவை என்றனர். 

இன்னும் சிலரோ தண்டிக்கலாம் ஆனால் மரண தண்டனை வழங்குவது மனித உரிமை மீறலாக அமையும் என்று மிகுந்த ‘அன்பு கலந்து’ பேசினார்கள். தொலைக்காட்சியில் தோன்றிய ஒரு அரச அதிகாரி கூடினால் 10 வருட சிறைத்தண்டனை போதும் என்று சிரித்துக் கொண்டே பேசினார்.

 இவர்கள் அனைவரும் நடந்து முடிந்த சம்பவத்தைக் கண்டிப்பதுடன் இனிமேல் அது போன்றவை நிகழக்கூடாது என்றும் எதிர்பார்க்கிறார்கள். 

தண்டனைகள் தான் குற்றத்தைத் தடுக்கும்.

ஆனால் கடுமையாகத் தண்டிப்பதும் கூடாது என்பதும் அவர்களது கருத்து. 

கம்புக்கும் நோகாமல் பாம்புக்கும் நோகாமல் பாம்பு விவகாரத்தை கையாள்பவர்கள் குற்றங்கள் ஒழியவும் வேண்டும்.

குற்றவாளிகள் பாதுகாக்கப்படவும் வேண்டும் என்றால் கூழும் குடிக்க வேண்டும் மீசையிலும் படக்கூடாது என்பது போல் இருக்கிறது. 

இவர்கள் இவ்வாறு கூறிவிட்டு ஓய்ந்து விடுவார்கள். ஆனால் மீண்டும் ஒரு சம்பவம் நடக்கும் போது அப்போதும் இதே பல்லவியைப் பாடுவார்கள். காரணம் குற்றம் செய்தவர்கள் உரிய தண்டனையை பெற்றிருக்கமாட்டார்கள் அல்லது புதிதாக குற்றம் செய்வதற்கு விரும்புபவர்களுக்கு நாட்டில் சட்டம் இறுக்கமாக இருக்கிறதே என்ற பயமில்லாதிருக்கும்.

இவ்வாறு கூறும் போது இஸ்லாம் குற்றங்களை இல்லாமல் ஒழிக்க தண்டனைகளில் மட்டும் தங்கியிருக்கிறது என்பது பொருளல்ல. குற்றங்களே அற்ற அல்லது குற்றங்கள் மிகக் குறைவாக நிகழ்கின்ற ஒரு சூழலைத் தோற்றுவிக்க பின்வரும் ஏற்பாடுகள் தேவை என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

1. குற்றம் நிகழ்வதற்கு ஏதுவாக தூண்டுதலாக அமையும் சூழலை மாற்றியமைப்பது. அதாவது குற்றங்கள் நிகழாத அவற்றை தூண்டாத புனிதமான ஒரு சூழலை உருவாக்குவது. உதாரணமாக அரை நிர்வாண ஆடைகளோடு பெண்களை தெருவில் நடமாட விட்டு விட்டு பாலியல் உணர்வைத் தூண்டும் சினிமாக்களை சர்வ சாதாரணமாக அனுமதித்துவிட்டு பாலியல் கிறுக்கும் பித்தும் கொண்டவர்கள் உருவாகுவதற்கான சகல வழிகளையும் திறந்துவைத்துக் கொண்டு வல்லுறவுக்காரர்களைத் தண்டிப்பதற்கு முனைவது பற்றி என்ன கூறுவது?

 இஸ்லாம் பெண்களுக்கான ஒழுக்கமான ஆடையை கட்டாயப்படுத்துகிறது. ஆண்களும் பெண்களும் பழகிக் கொள்வதற்கு கண்ணியமான கட்டுப்பாடுகளைப் போட்டிருக்கிறது.  குடும்ப அமைப்பை பலப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது.

2. குற்றச் செயல்களை குறைப்பதற்கு அல்லது இல்லாமலாக்கச் செய்யும் மிக முக்கியமான ஏற்பாடு ஈமானிய (தக்வா) பக்குவமாகும். அப்போது பாவம் செய்யும் மனோநிலை இருக்கமாட்டாது. பாவத்தைக் காணும் போதே உள்ளம் நடுங்கி விடுகிறது. சட்டத்தின் பார்வை படாத இடத்திலும் சகலரையும் பார்க்கும் அல்லாஹ்வின் பார்வை அணுகி ஊடுருவியிருக்கிறது என்று உணரும் ஒரு விசுவாசி பாவச் செயல்களில் ஈடுபடமாட்டான்.

பாவம் செய்யும் சந்தர்ப்பம் கிட்டினாலும் அதனை விட்டுவிட்டால் அல்லாஹ்வின் கூலி கிட்டுமே என்று நினைத்து அதனைத் தவிர்த்து வாழ்வான். யூசுப் அவர்களது வாழ்வு இதற்கு உதாரணமாகும்.

3. இப்படிக் கூறும் போது எல்லோரும் இஸ்லாத்தின் சூழலில் வாழ்கிறார்களா? ஈமானியப் பக்குவம் எல்லோருக்கும் இருக்குமா? என்ற கேள்விகள் எழலாம்.  அப்படியான நிலையில் விதிவிலக்காக சிலர் இருக்கலாம். அவர்களை தடுத்து நிறுத்தவே சட்டத்தின் பிரயோகம் தேவைப்படுமே தவிர முதல் தீர்வே தண்டிப்பது அல்ல. 

தெளிவாகச் சொன்னால் அசம்பாவிதங்கள் நிகழ்ந்த பின்னர் அவற்றுக்காக தீர்வுகளை வழங்குவதனை விட அவை நிகழ முன்னர் முன்கூட்டியே பாதுகாப்பான சுமுகமான சூழலை உருவாக்குதில் இஸ்லாம் கவனம் செலுத்தும். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். ஆனால் முள்குத்தாத பாதையை பயணத்துக்காகத் தெரிவு செய்யவேண்டும். அல்லது முட்கள் இருக்கின்ற சூழலில் மிகக் கவனமாக நடந்து போக வேண்டும்.

4. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை தடுத்து நிறுத்துவதற்கான மற்றொரு முன்னேற்பாடு குறித்த நிறுவனத்தை பலப்படுத்துவதாகும். மனிதனுக்குள் இருக்கும் மிகப்பலமான உணர்வு பாலியல் உணர்ச்சியேயாகும். 

எனவே அதற்கான பாதுகாப்பான, கெளரவமான ஏக வடிகாலாக திருமணத்தை இஸ்லாம் தந்திருக்கிறது. எனவே அத்துறையில் அதிக கவனம் செலுத்தி அதனை வலுப்படுத்தவதற்கான ஏற்பாடுகள் தேவை. 

கணவன் மனைவி உறவு பலவீனப்படுவது பாலுறவைப் பாதிக்கும். அது முறைகேடான உறவுக்குள் தள்ளிவிடும். சிலபோது பாலியல் வக்கிரங்களும் நிகழ வழிவகுக்கும். தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவர்கள் மது போன்ற போதை வஸ்துகளுக்கு அடிமையாவார்கள். அது வன்புணர்வுக்கு இட்டுச் செல்லும்.

அடுத்ததாக பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர்கள் அதிகூடிய கவனம் செலுத்தி அவர்களை திட்டமிட்டு அவர்கள் மீது அன்பை ஊட்டி வளர்க்க வேண்டும்.

எனவே மரத்தின் இலைகளுக்கு தீர்ப்புச் சொல்வதைத் தவிர்த்து வேர்களை நோக்கி  பார்வையை செலுத்த முயற்சிப்போமாக!
இறுதியாக நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரித்து செல்வது மட்டுமன்றி அவற்றின் வீரியமும் கொடூரமும் கடுமையாகவே உள்ளன. அவற்றை கட்டுப்படுத்தி சிறந்த ஒரு சமூகத்தை தேசத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டுமாயின் பின்வரும் ஏற்பாடுகள் தேவை.

1. உளப்பக்குவமும் மனமாற்றம்
2. தீமைகள் உருவாகாத நன்மைகள் வளரும் சூழல்.
3. குடும்ப நிறுவனத்தை பலமாக கட்டியெழுப்புவது
4. பிள்ளை வளர்ப்பை திட்டமிட்டு மேற்கொள்வது
5. குற்றவாளிகள் உரியமுறைகளில் கண்டுபிடிக்கப்பட்டு உயர்ந்த பட்சத் தண்டனை வழங்குவது 

அல்லாஹ் எம் சிறார்களை பாதுகாப்பானாக.