Verified Web

ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள்: ஓர் இஸ்­லா­மியப் பார்வை

Ash Sheikh SHM Faleel

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளான இவர் தேசிய சூறா சபையின் பிரதித் தலைவர்களுள் ஒருவராகவும் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞராகவும் விளங்குகிறார்.

2015-01-16 12:53:45 Ash Sheikh SHM Faleel

ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் நாட்டை நேசிப்­ப­வர்­க­ளுக்கும் இஸ்­லாத்தின் மீது உண்­மை­யான பற்­றுக்­கொண்­ட­வர்­க­ளுக்கும் சந்­தோ­ஷத்தைத் தந்­தி­ருப்­ப­தாகக் கருத முடியும். அச்சம் நிறைந்த, ஊழல்கள் மலிந்த ஓர் இருண்ட யுகம் முடி­வுக்கு வந்­தி­ருப்­பது பற்­றிய நற்­செய்­தியை இந்தத் தேர்தல் முடி­வுகள் தந்­தன. 

ஆனால், புதி­தாக உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­பது நூறு வீத தூய்மையான அரசோ அல்­லது அங்­குள்ள ஆட்­சி­யா­ளர்கள்  முற்றும் துறந்த முனி­வர்­களோ அல்லர். அவர்­களும் அர­சி­யல்­வா­திகள் தான். இருப்­பினும், கடந்த ஆட்­சி­யோடு ஒப்­பிடும்போது தற்­போ­தைய ஆட்­சியின் கோஷங்­களும் தேர்தல் விஞ்­ஞா­ப­னமும் திட்­டங்­களும் ஓர­ளவு திருப்­தி­க­ர­மாக இருக்­கின்­றன. பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த நியா­ய­மாகச் சிந்­திக்கும் புத்­தி­ஜீ­வி­களும் கூட இதனை ஏற்­றுக்­கொள்­கி­றார்கள். அந்­த­வ­கையில் ஏற்­படும் சந்­தோ­ஷமே அன்றி முழு சுபீட்­சமும் இங்கு கிடைத்து விடும் என நம்­பு­வது முஸ்­லிமின் ஈமானைப் பாதித்து விடும்.

நபி (ஸல்) அவர்­க­ளது காலத்தில் நடந்த ஒரு சம்­ப­வத்தை இன்­றைய வெற்­றி­யோடு ஒப்­பிட முடியும். அல்­குர்­ஆ­னின் ­அர்ரூம் எனும் அத்­தி­யா­யத்தின் ஆரம்ப  வச­னங்­களில் அச்­சம்­பவம்  சுருக்­க­மாகக் கூறப்­ப­டு­கி­றது.ரோமா­புரிப் பேர­ரசு கிறிஸ்­த­வத்தை அரச மத­மாக ஏற்­றி­ருந்­தது. அவ்­வ­ர­சுக்­கெ­தி­ராக நெருப்பு வணங்­கி­க­ளான பார­சீ­கர்கள் போர் தொடுத்து வெற்­றி­ய­டைந்­தனர். அப்­போது அல்லாஹ்,ரோமா­புரி தற்­போது வெற்றி கொள்­ளப்­பட்­டுள்­ளது  என்றும் பின்னர் சில வரு­டங்­களில் அப்­ப­குதி பார­சீ­கத்­துக்­கெ­தி­ராக வெற்றி வாகை சூடும் என்றும் கூறி­ய­துடன் அவ்­வாறு ரோமா­பு­ரிக்கு வெற்றி வரும்­போது மக்­காவில் இருக்கும் முஃமின்கள் சந்­தோ­ஷப்­ப­டு­வார்கள் என்றும் கூறினான். ரோமர்கள் வேதக்­கா­ரர்­க­ளாக இருந்­த­தனால் முஃமின்­க­ளுக்கு சந்­தோஷம் வந்­தது. நெருப்பு வணங்­கி­க­ளான பார­சீ­கர்­களை விட உரோ­மர்கள் கொள்கை ரீதி­யாக முஃமின்­க­ளுக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளாக இருப்­பதே இதற்­கான கார­ண­மாகும். அதேபோல் மஹிந்த அரசை விட ஒப்­பீட்டு ரீதியில் மைத்­திரி அரசு நல்­ல­தாகும் என எண்ண இட­முண்டு.

இலங்கை முஸ்­லிமின் பார்வை

மஹிந்த ஆட்­சியில் முஸ்லிம் சமூகம் பல­வா­றான நெருக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டது. மஹி­யங்­கனைப் பள்­ளி­வா­ய­லுக்குள் பன்­றியின் இறைச்சி போடப்­பட்­டது. குளி­யாப்­பிட்­டியில் அல்­லாஹ்வின் பெயர் தாங்­கிய வெண்­ணிற கொடும்­பாவி தெருக்­களில் எடுத்துச் செல்­லப்­பட்டு இறு­தியில் தீயிட்டுக் கொழுத்­தப்­பட்­டது. தர்கா நகர் கல­வ­ரத்தில் அல்­குர்ஆன் பிர­தி­களும் ஹதீஸ்  கிரந்­தங்­களும் தீயில் எரிந்து சாம்­ப­லா­கின. இருவர் படு­கொலை செய்­யப்­பட்டு மற்றும் இருவர் கால்­களை இழந்­தனர். 200 கோடி ரூபாய்­க­ளுக்கும் அதிகம் பெறு­ம­தி­யான சொத்­துக்கள் அழிக்கப்பட்­டன. சுக­த­தாச  உள்­ளக அரங்கில் சர்­வ­தேச மியன்மார் கொலை­யாளி, பயங்­க­ர­வாதி  பகி­ரங்­க­மாக பதக்கம் வழங்கி கௌர­விக்­கப்­பட்டார். நாம் உயி­ரினும் மேலாக மதிக்கும் அல்­குர்­ஆனில் பிழைகள் பல இருப்­ப­தா­கவும் அது விட­ய­மாக இலங்கை மக்கள் ஜாக்­கி­ர­தை­யாக இருக்கும் படியும் ஞான­சார கூறி விவா­திக்க வரும்­படி சூளு­ரைத்தார். இப்­படி ஏரா­ள­மான நிகழ்­வுகள் அரங்­கேற்­றப்­பட்­டன. ஆனால்,ஒரு சிறு­பான்மைச் சமூகம் இவ்­வாறு படுமோச­மாகப் பாதிக்­கப்­பட்ட போது அரசு வாய்­மூடி நின்­றது. 

இவை முன்­னைய அரச தலை­வ­ரதும் பாது­காப்புச் செய­லா­ள­ரதும் பூரண அனு­ச­ர­ணை­யிலும் பாது­காப்­பிலும் நடந்­தே­றிய நாட­கங்கள் என முஸ்­லிம்கள் நம்­பு­கி­றார்கள். அப்­பாவி பௌத்த மக்­க­ளது உள்­ளங்­களில் முஸ்­லிம்­க­ளு­க்கெ­தி­ரான எதிர்ப்பு மனப்­பாங்கைத் தோற்­று­வித்து அவர்­க­ளது வாக்­கு­களைப் பெற வேண்டும்  என்ற மிகக் கீழ்த்­த­ர­மான நோக்­கத்­தோடு இந்த நாட்டில் அரச இயந்­திரம் மேற்­கொண்ட அரச பயங்­க­ர­வாதமே அது என்றால் மிகை­யா­காது.

இப்­ப­டி­யான பக்கச்சார்­பான ஒர் இன­வாத அரசை  வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் முஸ்­லிம்கள் அதற்கு எதி­ராக வாக்­க­ளித்­தி­ருப்­பது அப்­ப­டி­யொன்றும் அதி­ச­ய­மான காரி­ய­மல்ல.

பொது­பல சேனாவை போஷிக்க இஸ்­ரே­லிய மொசாட்­டா­னது நோர்வே ஊடாகப் பணம் கொடுத்து வரு­கி­றது என நண்பர் எழுத்­தாளர் லதீப் பாரூக் அடிக்­கடி கூறுவார். இந்த பொது­ப­ல­சே­னாவை உரு­வாக்கி போஷிப்­பது மஹிந்­தவின் அரசு தான் என ராஜி­தவும் அனு­ர­கு­மா­ரவும் கூறி வந்­தார்கள். யதார்த்­தத்தை விளங்கி தைரி­ய­மாகப் பேசிய இவர்கள் பாராட்­டுக்­கு­ரி­ய­வர்கள்.

முஸ்லிம் சமூகம் மிகுந்த கவ­லை­யோடும் அச்­சத்­தோ­டுமே காலம் கடத்தி வந்­தது. அவர்­க­ளது பொரு­ளா­தா­ரத்தை முடக்­கவும் மார்க்­கத்தைப் பற்­றிய பிழை­யான மனப்­ப­திவை உரு­வாக்­கவும் சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­க­ளோடு அவர்­களை சம்­பந்­தப்­ப­டுத்­தவும் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களை இல­குவில் மறந்­து­விட முடியாது. எனவே,முஸ்லிம் சமூகம் கடந்த தேர்­தலில் முழுப் பலத்தைப் பிர­யோ­கித்து இன­வா­தி­களை ஓரங்­கட்­டி­யது. அதற்­காக பல­வ­கை­யான பிர­யத்­த­னங்கள் முஸ்­லிம்­களால் மேற்­கொள்­ளப்­பட்­டன. 

ஆட்சி மாற்­றத்­திற்­கான முன்­னெ­டுப்­புக்கள் 

அந்­த­வ­கையில்,முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள  வாக்­க­ளிக்கும் வய­தெல்­லைக்கு உட்­பட்ட அனை­வரும் தம்மை வாக்­கா­ளர்­க­ளாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற அறி­வித்­தலை தேசிய சூரா சபை நாடு பூராவும் அனுப்பி பதி­வு­க­ளுக்குத் தூண்­டுதல் வழங்­கி­யது. வேறு பல இஸ்­லா­மிய அமைப்­புக்­களும் இது விட­ய­மாகக் கவனம் செலுத்­தின.

தேர்­தலில் வாக்­க­ளிப்­பது அமா­னி­த­மாகும், சிபார்சு செய்­வ­தாகும், சாட்சி கூறு­வ­தாகும் போன்ற ஆன்­மீகப் பெறு­மா­னங்­களை வாக்­க­ளிப்­போடு சம்­பந்­தப்­ப­டுத்தி அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவும் தேசிய சூரா சபையும் பல­மாக வலி­யு­றுத்­தி­ய­துடன் வாக்­க­ளிப்­பது வாஜிப் என்றும் கூறி வந்­தன. பல உல­மாக்கள் தமது குத்பாப் பிர­சங்­கங்கள் வாயி­லா­கவும் பல எழுத்­தா­ளர்கள் தமது ஆக்­கங்­க­ளூ­டா­கவும் இதனை  வலி­யு­றுத்தி வந்­தார்கள்.முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளையும் அட்­டூ­ழி­யங்­க­ளையும் பலரும்

தொடர்பு சாத­னங்கள் வாயி­லாக அதிகம் பரப்பி வந்­தார்கள். 

முஸ்­லிம்கள் அழு­தார்கள், தொழு­தார்கள், மனம் உருகிப் பிரார்த்­தித்­தார்கள், அநி­யாயம் இழைப்­ப­வர்­களை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என அல்­லாஹ்­விடம் மன்­றா­டி­னார்கள். பெரும்­பா­லா­ன­வர்கள் தேர்தல் தினத்தில் நோன்­பி­ருந்த நிலையில் தான் மணிக்­க­ணக்கில் வரி­சை­களில் கால்­க­டுக்க நின்று வாக்­க­ளித்­தார்கள். வர­லாற்றில் என்­றுமே காண முடி­யாத அள­வுக்கு வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் முஸ்லிம் வாக்­கா­ளர்­களால் நிரம்பி வழிந்­தன.

பிர­ப­ல­மான முஸ்லிம் கட்­சி­களின் முடி­வு­க­ளுக்­காகக் கூடக் காத்­தி­ருக்­காமல் ஏற்­க­னவே முஸ்­லிம்கள் முடி­வு­களை எடுத்து விட்­டார்கள். முஸ்­லிம்­க­ளது தனித்­து­வங்கள் மீதும் சுதந்­தி­ரங்கள் மீதும் கைவைத்­த­வர்­களை முஸ்­லிம்கள் ஆன்­மீகப் பலத்­தாலும் ஒற்­று­மை­யாலும் தோற்­க­டித்­தது போல் வாக்­குகள் என்ற பிர­ப­ல­மான ஜன­நா­யக ஆயு­தத்­தாலும் தோற்­க­டித்­தார்கள்.

முஸ்­லிம்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் எதிர்­பார்த்­த­ப­டி­யான வெற்­றியை அல்­லாஹ்தான் கொடுத்தான். ஆனால் மக்கள் அல்­லாஹ்வின் பால் மீண்டு வரும் போதும், ஒற்­று­மைப்­படும் போதும் அவர்­க­ளுக்கு அவன் கை கொடுப்பான் என்­ப­தற்கு தேர்தல் முடி­வுகள் நல்ல சான்­றாகும். ”தேர்­தலில் மஹிந்த தோற்­க­வில்லை. பௌத்த  மதம் தோற்­றது” என்ற ஞான­சா­ரவின் கூற்று சிந்­த­னைக்­கு­ரி­யது. அகிம்­சை­யையும் அன்­பையும் மட்­டுமே போதிக்கும் பௌத்த மதத்தை தனது கோஷ­மாகக் காட்டி பௌத்­தத்­துக்கே  இழுக்கைத் தேடித்  தந்த இந்த பயங்­க­ர­வா­தி­யுடன் சேர்ந்து அவ­ருடன் ஒட்டிக் கொண்­டி­ருந்­த­வர்­களும் தேர்தல் முடிந்த பின்­னரும் திட்­ட­மிட்ட வகையில் இந்­நாட்டில் இன­வா­தத்தை தொடர்ந்தும் பரப்ப முயற்­சி­யெ­டுத்து வரு­கி­றார்கள்.

குர்ஆன், ஹலால், ஹிஜாப் என முஸ்­லிம்­க­ளது பிர­தா­ன­மான தனித்­துவ அம்­சங்­களின் மீது கைவைத்­த­வர்கள் தற்­போது தோற்­க­டிக்­கப்­பட்­டது உண்­மைதான். ஆனால் தேர்­த­லுக்குப் பின்­ன­ரான எமது நட­வ­டிக்­கைகள் மிகவும் கவ­ன­மாகத் தீர்­மா­னிக்­கப்­பட வேண்டும். அவற்றை பின்­வ­ரு­மாறு நோக்­கலாம்.

1. தோற்­ற­வர்கள் மீண்டும் தலை­தூக்­கலாம்:-

ஆட்சி கைமா­றி­யது சம்­பந்­த­மாக 51% ஆன­வர்கள் சந்­தோ­ஷப்­பட்­டாலும் 47% ஆன­வர்கள் ஆட்சி மாறக் கூடாது என்று தான் விரும்­பி­னார்கள். அவர்­களில் கணி­ச­மான பிரி­வினர் மஹிந்­தவின் ஆட்­சியைத் தக்க வைத்­துக்­கொள்ள இறுதிக் கட்டம்  வரை முயற்­சித்­தார்கள். துவேஷ  உணர்வை வளர்த்­த­வர்­களும் போதை­வஸ்துக் கடத்­தல்­கா­ரர்­களும் மெகா கொந்­த­ராத்­துக்­கா­ரர்­களும் நீறு பூத்த நெருப்­பாக இந்­நாட்டில் தான் இன்னும் இருந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். பல­ரது வயிற்றுப் பிழைப்பு இல்­லாமல் போயி­ருக்­கி­றது.சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகள் கடந்த அர­சுடன் பல­வ­கை­யான தொடர்­பு­களை வைத்து பல்­வேறு திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி வந்­துள்­ளன. அவற்றின் நீண்ட கால அபி­லா­ஷை­க­ளுக்கும் முற்றுப் புள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில்,இவர்கள் அனை­வரும் இந்த புதிய ஆட்­சி­யா­ளர்­களை அழித்­தொ­ழிக்கத் தருணம் பார்த்துக் கொண்­டி­ருப்­பார்கள் என்­பதில் சிறிதும் சந்­தே­க­மில்லை..எனவே புதிய ஆட்­சி­யா­ளர்கள் நிம்­மதிப் பெரு­மூச்சு விட நேர­மில்லை. மிகுந்த ஜாக்­கி­ர­தை­யாக இருக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

2. பெருமை அடிப்­பது ஆபத்­தா­னது

நடந்து முடிந்த தேர்­தலில் சிறு­பான்­மை­யி­ன­ரது குறிப்­பாக முஸ்­லிம்­க­ளது  வாக்­குப்­பலம் பெரும் செல்­வாக்குச் செலுத்­தி­யி­ருப்­பது யாவரும் அறிந்த உண்­மை­யாகும். இதனை அர­சியல் ஆய்­வா­ளர்கள் கூட ஏற்­றுக்­கொள்­கி­றார்கள்.இதனை முஸ்­லிம்கள் சொல்­லிக்­காட்டி பெரு­மை­ய­டிக்கக் கூடாது.மிகவும் பொறுப்­பு­ணர்­வோடும் நிதா­ன­மா­கவும் நடந்து கொள்ள வேண்டும். ஏற்­க­னவே தூண்­டப்­பட்­டுள்ள இன உணர்வு சம்­பந்­த­மாக முஸ்­லிம்கள் தொடர்ந்தும் விழிப்­போடு இருப்­பது அவ­சி­ய­மாகும். அவ்­வு­ணர்வை இல்­லா­ம­லாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களில் நாம் கூடிய கவ­ன­மெ­டுக்க வேண்டும்.குறிப்­பாக முஸ்­லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணம் போன்ற பகு­தி­களில் வாழு­ப­வர்கள் வெற்றிக் களிப்பைக் கொண்­டாடும் போது நாட்டின் பிற பகு­தி­களில் சிங்­கள சகோ­த­ரர்­க­ளுடன் இரண்­டறக் கலந்து வாழும் முஸ்லிம் சகோ­த­ரர்­க­ளுக்கு அதனால் ஏற்­படும் பக்க விளை­வுகள் பற்றி நன்கு சிந்­திக்க வேண்டும்.பட்­டாசு கொழுத்தி, பால்­சோறு சமைத்து கூத்­தா­டி­யதால் சில பிர­தே­சங்­களில் பல விப­ரீ­தங்­களைத் தோற்­று­வித்­துள்­ளது.  இப்­ப­டி­யான இக்­கட்­டான கால கட்­டத்தில் முஸ்­லிம்கள் தூர நோக்­கோடு நடந்து கொண்டால் தான் நாட்டில் ஐக்­கி­யப்­பட்டு வாழ முடியும். பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளது ஆத்­தி­ரத்­தையும் ஆவே­சத்­தையும் தூண்டும் வகை­யி­லான வாச­கங்­க­ளையோ செயற்­பா­டு­க­ளையோ முஸ்­லிம்கள் முற்­றாக தவிர்க்க வேண்டும். இது வீராப்புப் பேசும் நேரம் அல்ல.

2. நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதே இன்­றைய பணி

தேர்­த­லுக்கு முன்னர் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் அர­சியல் சார் விட­யங்கள் பற்­றிய அதி­க­மான வாதப்­பி­ர­தி­வா­தங்­க­ளிலும் விமர்­ச­னங்­க­ளிலும் ஈடு­பட்டு வந்­தார்கள். அன்­றாடம் இடம்­பெற வேண்­டிய பல நிகழ்ச்­சிகள் கூட பிற்­போ­டப்­பட்­டன. அல்­லது மந்­த­க­தியில் தான் இடம்­பெற்­றன. ஆனால், தற்­போது ஆட்சி மாற்றம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது. புதிய ஆட்­சி­யா­ளர்கள் தமது பொறுப்­புக்­களைச் செய்­வார்கள் என்ற எதிர்­பார்ப்பு இருக்­கி­றது. எனவே,சென்ற ஆட்­சி­யா­ளர்­களைப் பற்­றியே இன்னும் பேசிக்­கொண்­டி­ருக்­காமல் முஸ்லிம் சமூ­கத்­தையும் நாட்­டையும் காட்­டி­யெ­ழுப்பும் பாரிய பணியில் முஸ்­லிம்கள் அனை­வரும் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிம் சமூ­கத்தின் இஸ்­லா­மிய விசு­வாசக் கோட்­பாட்டை, கல்வித் துறையை, பண்­பாட்டு விழு­மி­யங்­களை பல­மான அடிப்­ப­டை­களின் மீது கட்­டி­யெ­ழுப்பும் தேவை இருக்­கி­றது. இதற்­காக யாவரும் பேதங்­களை மறந்து செயல்­பட வேண்டும்.      

3 நாட்டு நலனும் முஸ்லிம் சமூக நலனும்

மைத்­தி­ரி­யுடன் இணைந்­துள்ள முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் அமைக்­கப்­பட்­டுள்ள அரசில் தமது தனிப்­பட்ட நலன்­களை முன்­னி­றுத்தி  செயல்­ப­ட­லா­காது.அப்­படி நடந்­து­கொண்டால் அவர்கள் சந்­தர்ப்­ப­வா­திகள் என்­பதில் சந்­தே­க­மில்லை. அமைச்சுப் பொறுப்­புக்கள், செய­லாளர் பத­விகள் மற்றும் இன்­னோ­ரன்ன வரப்­பி­ர­சா­தங்­களை விட சமூ­கத்தின் அபி­லா­சை­க­ளுக்கே அவர்கள் முன்­னு­ரிமை  வழங்க வேண்டும். நல்­லாட்­சிக்­காக உழைத்த ஜே.வி.பி. யின­ரிடம் இதற்கு நல்ல முன்­மா­தி­ரி­யுண்டு. அரா­ஜக ஆட்­சியை வீழ்த்த வேண்டும் என்­பதே அவர்­க­ளது குறிக்­கோ­ளாக இருந்­தது. எவ்­வித பத­வி­க­ளையோ  அமைச்­சுக்­க­ளையோ ஏற்கப் போவ­தில்லை என அவர்கள் அறி­வித்­தி­ருக்­கி­றார்கள். அத்­துடன் ஆட்சி மாறு­வதால் மட்டும் பிரச்­சினை தீரப்­போ­வ­தில்­லை­யென்றும் ஆட்சி மாற்­றத்தின் பின்­ன­ரான நிலை அதனை விட மிக முக்­கி­ய­மா­னது என்றும் அவர்கள் கூறி­யி­ருக்­கி­றார்கள். எனவே, முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் முதலில் நாட்டு நல­னையும் பின்னர் முஸ்லிம் சமூக நல­னையும் முன்­னு­ரி­மைப்­ப­டுத்த வேண்டும்.

நாட்டு நலன் என்று வரும்­போது அரா­ஜகம், இன­வாதம், லஞ்சம், ஊழல், வறுமை என்­ப­வற்றை ஒழித்து சுபீட்­ச­மிக்க ஒரு நாட்டை ஸ்தாபிப்­ப­தற்கும் நல்­லாட்­சியை  உரு­வாக்­கவும் பெரும்­பான்மை சமூகம் இடும் திட்­டங்­க­ளுக்கு முஸ்லிம் சமூகம் பூர­ண­மாக ஒத்­து­ழைப்பு நல்க வேண்டும்.  பல்­வே­று­பட்ட ஆணைக்­கு­ழுக்­களை அமைக்கும் திட்­டத்தை புதிய அரசு கொண்­டுள்­ளது. இது போன்ற யாவ­ருக்கும் பொது­வான அம்­சங்­களில் கூடிய கரி­சனை காட்ட வேண்டும். ’எரியும் வீட்டில் பிடுங்­கி­யது லாபம்’ என்று கருதி முஸ்லிம் சமூக நலன்கள் பற்றி மட்­டுமோ தனிப்­பட்ட நலன்கள் பற்றி மட்­டுமோ பேச­லா­காது.

அடுத்­த­தாக முஸ்லிம் சமூ­கத்­திற்­கென்று அர­சியல் ரீதி­யான தனி­யான தீர்க்­கப்­ப­டாத பல பிரச்­சி­னைகள் உள்­ளன. 
1.கல்வி மற்றும் தொழில் வாய்ப்­புக்­களில் நிலவும்  ஓர­வஞ்­சனை 
2.முஸ்­லிம்­க­ளது தனித்­து­வங்­களைப் பாது­காப்­பதில் நிலவும் இடர்­பா­டுகள் 
3.முஸ்லிம் சமூ­கத்தை ஒழித்­துக்­கட்­டு­வதை இலக்­காகக் கொண்ட பௌத்த தீவி­ர­வா­தி­க­ளது கெடு­பி­டிகள் 
4.அக­திகள் விவ­காரம் 
5.மீள்­கு­டி­யேற்றம் உரிய விதத்தில் இடம்­பெ­றாமை 
6.முஸ்­லிம்­க­ளது காணிகள் அப­க­ரிக்­கப்­ப­டு­வது
7.சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் போது பிற சமூ­கங்­க­ளு­ட­னான உற­வு­களில் முஸ்­லிம்கள் பல­போது இஸ்­லா­மிய ஒழுங்கு விதி­களைப் பேணத் தவ­றி­யி­ருப்­பது.போன்­றன இன்­றுள்ள மிகப் பிர­தான பிரச்­சி­னை­க­ளாகும்.

இந்­நாட்டில் வாழும் தமிழ் சகோ­த­ரர்­க­ளுக்கும் முஸ்­லிம்­களைப் போன்றே பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன என்றும்   (நாம் ஏற்­று­கொள்­வதும் அவற்றை அவர்கள் தீர்ப்­ப­தற்கு எடுக்கும் முயற்­சி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு நல்­கு­வதும் எமது கட­மை­யாகும்.

எனவே, நாட்டின் பொது நல­னோடு தொடர்­பான பிரச்­சி­னை­களும் முஸ்லிம் சமூ­கத்­தோடு தொடர்­பான பிரச்­சி­னை­களும் இருக்­கின்­றன என்­பதை மனதிற்  கொண்டு முதலில் அவற்றைச் சரி­யாக இனம்­காண வேண்டும். அடுத்­த­தாக, அவற்றைத்  தீர்ப்­ப­தற்­கான அணு­கு­மு­றைகள் யாவை என விரி­வாகச் சிந்­திக்க வேண்டும். இது விட­ய­மாக ஆலோ­சனை வழங்க தேசிய சூரா சபை போன்ற அமைப்­புக்கள் கூட தயா­ரா­கவே இருக்கிறன.         

கலந்தாலோசனையின்றி மேற்கொள்ளப்படும் காரியங்களில் அபிவிருத்தி-பரகத்  இருக்காது  என்பதுடன் சமூகத்தின் பல்துறை சார்  தேவைகள் புறக்கணிக்கப்படும் நிலையும் உருவாகும்.

முடிவுரை

எனவே, ஏற்பட்டிருக்கும் புதிய ஆட்சி மாற்றம் பல சவால்களைக் கொண்டி ருக்கிறது. தோல்வி கண்டவர்கள் விடய மாக எப்போதும் அவதானத்தோடு தான் இருக்க வேண்டும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை வெற்றியை எல்லை மீறிக் கொண்டாடுவதன் மூலம் பிற சமூகத்தினரது ஆவேசத்தை தூண்டி விட முயற்சிக்கலாகாது. முஸ்லிம் சமூகம் அரசிடமிருந்து மாத்திரம் சலுகைகளையும் உரிமைகளையும் எதிர்பார்த்திருக்காமல் தாமாகவே ஆற்ற வேண்டிய பணிகளை திறம்பட நிறைவேற்றுவதில் முனைப்பாக இருக்க வேண்டும். 

’உரிமைகளுக்கு முன் கடமைகள்’ என்பதே முஸ்லிமின் தாரக மந்திரமாகும்.முஸ்லிம் அரசியல் வாதிகள் தமது தனிப்பட்ட அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தமக்குக் கிடைத்த வெற்றியைப் பாவிக்காமல் நாட்டு, மற்றும் சமூக நலன்களுக்காக மட்டுமே செயலாற்ற வேண்டும். முஸ்லிம் சமூகம் அதிகம் நொந்து போயிருக்கிறது. அத்துடன் அரசின் மீது பொதுவாகவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் உலமாக்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் போன்றோர் மீது குறிப்பாகவும் முஸ்லிம் சமூகம் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறது. ஆழமான ஈமான்,சமாதான சகவாழ்வு,ஒற்றுமை,தைரியம் பொது நலன்,இதயசுத்தி, ஒழுக்க விழுமியங்கள், தொடர்ச்சியான செயல்பாடுகள், திட்டமிடல், ஆலோசனை என்பனவே முஸ்லிம் சமூகத்தின் மீட்சிக்கான வழிகளாகும்.

கடந்த கால செயல்களிலிருந்து படிப்பினை பெற்று அல்லாஹ்வின் அச்சத்தை முன்னிறுத்தி செயல்படும் காலமெல்லாம் இன்ஷா அல்லாஹ் சமூகம் முன்னேற்றம் காணலாம்.