பொறியியலாளர் அஸ்லம் சஜா தற்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பின்னர் பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவப் பணிகளில் ஈடுபட்ட அனுபவத்தைக் கொண்டவர். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு சரியாக 14 ஆண்டுகள் பூர்த்தியாகும் இன்றைய நாளில் அனர்த்த பாதுகாப்பு தொடர்பில், பொறியியலாளர் அஸ்லம் சஜா, ‘விடிவெள்ளி’ க்கு வழங்கிய நேர்காணலை இங்கு தருகிறோம்.
Q உலகின் பல பாகங்களிலுமுள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை அதிக அனர்த்த பாதிப்புக்குள்ளாகக்கூடிய நாடாக கணிப்பிடப்பட முடியுமா?
இலங்கையின் மக்கள் தொகையில் 17 வீதமானவர்கள் அனர்த்தங்களினால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழ்கின்ற அதேநேரம், 70 வீதமான மக்கள் அனர்த்தங்களினால் பாதிப்புக்கள் அதிகரித்து வரக்கூடிய ‘ஹாட்ஸ்பாட்’ நிலைமைகளில் வாழ்கின்றனர் என சமீபத்திய உலக வங்கி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நிலநடுக்கம் மற்றும் நிலப்பகுதிகளில் இருந்து வெகு தொலைவிலுள்ள நாடென இலங்கை நம்பப்பட்டாலும் முழு இலங்கைத் தீவும் இந்தியப் பெருங்கடல் சுனாமியால் மற்றும் பெரிய அளவிலான வெப்ப மண்டல சூறாவளிகளால் அச்சுறுத்தப்படக்கூடியதாக காணப்படுகின்றன. அவ்வாறான சுனாமி அனர்த்தம் மீண்டும் ஏற்படுமானால் 2004 ஆம் ஆண்டைப்போல் ஒரு பேரனர்த்தத்தையே சந்திக்க நேரிடும். ஆனால், இவ்வாறான மிக அரிதாக நிகழக்கூடிய பாரிய தாக்கத்தை விளைவிக்கக்கூடிய சுனாமி அனர்த்தங்களை விட நாளாந்த வாழ்வில் வெள்ளங்கள், வறட்சி, நிலச்சரிவுகள் மற்றும் சூறாவளிகள் வருடந்தோறும் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இலங்கைத் தீவின் எந்த ஒரு நிலமும் இந்த மிகச்சிறிய அளவிலான காலநிலை மாற்றத்திலிருந்தும் அனர்த்த நிலைமையிலிருந்தும் பாதுகாப்பாக இருப்பதாகத் தோன்றவில்லை. 2017இல் மாத்திரம் உலகின் பல நாடுகளில் அனர்த்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களை மையமாக வைத்து ஜேர்மன் நிறுவனம் காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பான உலக நாடுகளின் தர வரிசையினை வெளியிட்டுள்ளது. இத்தரவரிசையில் உலகளாவிய ரீதியில் இலங்கை இரண்டாவது இடத்தை அடைந்திருப்பது எதிர்காலத்தில் இலங்கை பல அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய ஆபத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
Q மிக அண்மித்த காலப்பகுதியில் ஏற்பட்ட அனர்த்தங்கள், அதற்கு முந்திய காலங்களைவிட பாரிய பொருளாதார இழப்பினை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
கடந்த பல தசாப்தங்களாக உலகம் முழுவதும் பேரழிவு நிகழ்வுகள் பல சமூகங்களை அழித்தன. இயற்கை பேரழிவுகள் காரணமாக கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக 600,000 பேர் உயிரிழந்தனர். 4.1 பில்லியன் மக்கள் காயமடைந்தனர் அல்லது வீடற்றவர்கள் மற்றும் அவசர உதவி தேவைப்பட்டவர்களாக மாறினர். பொருளாதாரம் மற்றும் சமூக உட்கட்டமைப்புகளில் கணிசமான முதலீடுகள் பெருமளவில் பேரழிவுகளால் சேதமடைந்துள்ளன என சமீபத்திய அனர்த்த ஆய்வுகள் காட்டுகின்றன. 2017 ஆம் ஆண்டு மொத்த இயற்கை பேரழிவுகள், இறப்புக்கள் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை அதற்கு முந்திய வருடங்களுடன் ஒப்பிடும் போது சற்று குறைவடைந்திருந்தாலும் 2017 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகமான பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்டன. முந்தைய பத்தாண்டுகளில் (2007–-2016) ஒப்பிடும்போது அனர்த்தங்களினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கள் கிட்டத்தட்ட 50 வீதத்தினால் அதிகரித்துள்ளன.
Q இலங்கையில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட அனர்த்தங்கள் பற்றியும் அவற்றினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கள் பற்றியும் குறிப்பிட முடியுமா?
இலங்கையில் 2017 ஆம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு 25 மாவட்டங்களில் 15 மாவட்டங்களை பாதித்தன. அத்துடன் 203 பேரை கொன்றதுடன் 96 பேர் காணாமல் போயிருந்தனர். 9000 வீடுகள் அழிக்கப்பட்டன. 75,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2017 வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகள் விவசாயம், போக்குவரத்து, தொழில் மற்றும் வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளை பாதிப்புக்குள்ளாக்கியது. இவ்விழப்புக்களின் பெறுமதி இலங்கை நாணயப்பெறுமதிப்படி 70 பில்லியன் ரூபாக்களையும் தாண்டிவிட்டதாக இவ்வனர்த்தங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் பேரழிவுகள் காரணமாக அதிகப்படியான தாக்கம் ஆசிய கண்டத்திலேயே ஏற்பட்டுள்ளது. உலகிலே மொத்தமாக பாதிக்கப்பட்ட மக்களில் 85 வீதம் ஆசிய கண்டத்தில் உள்ளனர். அதேபோல் உலகிலே ஏற்பட்ட மொத்த இழப்புக்களில் 78வீத பொருளாதார பாதிப்பையும் பேரழிவு நிகழ்வுகளில் 62 வீதத்தையும் மற்றும் 69 வீத இறப்பு எண்ணிக்கையையும் ஆசிய கண்டமே பதிவு செய்துள்ளது.
2002ஆம் ஆண்டிலிருந்து அனர்த்தங்களினால் ஏற்பட்ட தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேவேளை வரட்சியினால் குருநாகல், ஹம்பாந்தோட்டை, புத்தளம், அநுராதபுர மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தன. இதே போக்கு எதிர்காலத்திலும் காணப்படும். காலநிலை மாற்றத்தினால் கடந்த காலங்களைவிட எதிர்வரும் வருடங்களில் குறுகிய காலப்பகுதியில் அதிக வரட்சியும் மற்றுமோர் குறுகிய காலப்பகுதியில் – அதாவது பருவப்பெயர்ச்சி காலப்பகுதியில் அதிக மழைவீழ்ச்சியும் ஒரே ஆண்டில் ஒரே பிரதேசத்தில் ஏற்படுகின்றன.
இவை தவிர சூறாவளி, நிலச்சரிவு, அதிக வெப்ப அலைகள் என்பனவும் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இலங்கை தொடர்ந்தும் புதிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் இந்நிலையில் குறிப்பாக நகர்ப்புறங்களின் பொருளாதார, சமூக செயற்பாடுகள் அதிகரிப்பதனால் அனர்த்த ஆபத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய செயற்பாடுகளில் பொதுமக்களும் அரச தனியார் நிறுவனங்களும் ஈடுபடுவதனால் தொடர்ந்தும் கடந்த காலங்களைவிட எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் அதிக பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும்.
Q அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதிலும் அபிவிருத்தி விடயங்களில் அனர்த்த ஆபத்தை குறைக்கக்கூடிய விடயங்களை உள்வாங்குவதிலும் அரச மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் வகிபாகம் எவ்வாறு காணப்படுகிறது?
இந்த தீவிரமான காலநிலை நிகழ்வுகளை எதிர்த்து பிராந்திய மற்றும் உலகளாவிய அணுகுமுறைகள் மற்றும் பல திட்டங்கள் பிரேரிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையில் தேசிய ரீதியில் இக்கொள்கைகளுக்கமைய அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கண்காணிப்பில் “பாதுகாப்பான இலங்கை” எனும் தொனிப்பொருளில் இலங்கை தேசத்திற்கான அனர்த்த முகாமைத்துவ திட்டம் 2013-–2018 மேற்கொள்ளப்பட்டிருந்தது. சர்வதேச அனர்த்த ஆபத்து குறைப்பிற்கான 2015-–2030 வரையான மூலோபாயங்களை வலியுறுத்தும் அதேவேளை, அதிகரித்து வரும் பேரழிவு மற்றும் காலநிலை அபாயங்கள் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் உள்ளூர் நடவடிக்கைகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. அனர்த்த ஆபத்து உணர்திறனுள்ள அபிவிருத்தி அணுகுமுறை, அனர்த்தங்களை எதிர்கொள்ளும் சமூக வலுதிறன் மற்றும் நிலையான அபிவிருத்தி செயற்பாடுகளை உள்ளூர் மற்றும் தேசிய மட்டங்களில் கொள்கை வகுப்பாளர்களும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்னிறுத்தி செயற்படவேண்டும். அனர்த்த ஆபத்து குறைப்பு நடவடிக்கைகளில் உள்ளூராட்சி மன்றங்களினதும் உறுப்பினர்களினதும் பங்களிப்பு மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. குறிப்பாக நகர, மாநகர சபைகள் நாம் எதிர்நோக்கியிருக்கும் அனர்த்த அபாய அச்சுறுத்தல்களுக்கு முன்கூட்டியே தேவையான ஆதாரங்களை திரட்டி மக்களை தயார்படுத்த முயற்சிப்பதில்லை. நாடெங்கிலுமுள்ள நகர மற்றும் மாநகர கவுன்சில்கள் கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பெரிய நெருக்கடிக்கு இட்டுச்செல்லும் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் போராட்டத்தில் தமது காலத்தையும் வளத்தையும் செலவழிப்பதால் அனர்த்த அபாய தயார்படுத்தல் செயற்பாடுகளில் தமது கவனத்தை குவிப்பதில் பாரிய சிரமங்களையும் வளப்பற்றாக்குறைகளையும் கொண்டுள்ளன.
இந்தோனேசியாவின் சுலாவேசியில் அண்மையில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆகியவை உலகின் அனர்த்தங்களை முன்கூட்டியே அறியக்கூடிய, மக்களுக்கு அறிவிக்கக்கூடிய புதுமையான தொழில்நுட்ப முறைகள் மற்றும் விரைவான பதிலளிப்பு வியூகங்களுக்கான தேவைகளை மீண்டும் நினைவுபடுத்தியது. எல்லாத் துறைகளிலும் எங்கள் வழக்கமான பணியின் ஒரு பகுதியாக அனர்த்த ஆபத்து குறைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து தனியார் மற்றும் சிவில் சமூக அமைப்பு முறைகளை ஒன்றாக ஒருங்கிணைக்க ஒரு பொறிமுறையை உருவாக்கி அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் பயிற்சியளிக்கப்படவேண்டும்.
Q உலகளாவிய அனர்த்த ஆபத்து குறைப்பு கொள்கை தொடர்பான முக்கிய விடயங்களை கூற முடியுமா?
அதிகரித்துவரும் சனத்தொகை மற்றும் மக்களினது நகர வாழ்வை நோக்கிய இடம்பெயர்வும் வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையின் தொடர்ச்சியான அதிகரிப்பினாலும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு மிகவும் பாதிக்கப்படும் பகுதிகளில் தெற்காசிய நாடுகளே முன்னணி வகிக்கின்றன. 2018 சர்வதேச அனர்த்த குறைப்பு தினத்திற்கான வரிசையில் ‘ பேரழிவுகளினால் ஏற்படும் பொருளாதார இழப்புக்கள் பற்றிய புதிய அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. 2015–-2030 உலக அனர்த்த குறைப்பு கட்டமைப்பு ஏழு உலக இலக்குகளையும் மற்றும் நான்கு முன்னுரிமை நடவடிக்கைகளையும் கொண்டுள்ளன. நான்கு முன்னுரிமை நடவடிக்கைகளில் முதலாவது அனர்த்த ஆபத்தை விளங்கிக்கொள்ளல், இரண்டாவது அனர்த்த ஆபத்து குறைப்பு நடவடிக்கைகளுக்கான நிர்வாகத்தை வலுப்படுத்தல், மூன்றாவது அனர்த்த அபாயத்தை குறைப்பதில் முதலீடு செய்தல், நாலாவதாக அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலைகளை மேம்படுத்துதல் என்பன உள்ளடங்கும்.
Q எதிர்காலங்களில் இலங்கைத்தீவு எதிர்கொள்ளக்கூடிய அனர்த்த ஆபத்து நிலையினைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
வெள்ள அபாயங்கள், கரையோரப் பகுதிகள், வறண்ட நிலங்கள் மற்றும் இதர உயர் இடர் பகுதிகளை நாங்கள் ஆக்கிரமித்துள்ளோம். அவை இயற்கை சமநிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி அனர்த்த பாதிப்புக்களை அதிகரிக்கச்செய்கின்றது. இலங்கையில் எமது செய்தி ஊடகங்களில் தினசரி செய்தித் தலைப்புகளைப் பார்க்கும்போது இயற்கை அனர்த்தங்கள் தவிர்ந்த ஏனைய அனர்த்தங்களையும் நாம் மறக்க முடியாது. – தினசரி ஒவ்வொரு மணி நேரத்திலும் சாலை விபத்துக்கள், யானையினால் தாக்கப்படல், மற்றும் சிறுநீரக நோய்கள் டெங்கு மற்றும் சூழல் மாசடைதல் காரணமாக ஏற்படும் இறப்பு போன்றவற்றை குறிப்பிட முடியும். 2009இல் முடிவடைந்த மூன்று தசாப்த கால யுத்தம் காரணமாக ஏற்பட்ட அழிவுகளை விடவும் மேற்குறிப்பிட்ட அனர்த்தங்களால் ஏற்படும் அழிவுகள் அதிகரித்தவண்ணமுள்ளன.
Q இன்றைய தினம் இலங்கையில் 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட நாளை ஞாபகப்படுத்தும் அதேவேளை, இலங்கை அரசு தேசிய பாதுகாப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது. இதில் பொதுமக்களுக்கு ஞாபகமூட்டப்பட வேண்டிய விடயம் என்ன?
தேசிய பாதுகாப்பு தினமானது டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கை உட்பட 12 நாடுகளில் 200,000 க்கும் அதிகமான உயிர்களைக் காவுகொண்ட 2004 சுனாமி பேரழிவை நினைவுபடுத்துகிறது. அதிகரித்துவரும் பேரழிவு மற்றும் காலநிலை அபாயங்கள் ஆகியவற்றிற்குத் தயார்செய்ய இந்த நாட்களை நினைவுபடுத்துவதன் மூலம் எதிர்கால அனர்த்த பாதிப்புக்களிலிருந்து எம்மை தயார்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக காணப்படுகின்றது. நாங்கள் அதிகம் பேசலாம், எழுதலாம், விவாதம் செய்யலாம். ஆனாலும் இறுதியாக செயற்பாடே விளைவுகளை தரும். ஆகக்குறைந்தது நமது சமூக-சுற்றுச்சூழலில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதற்கு முன்னர் அச்செயற்பாடு அனர்த்த ஆபத்தை அதிகரிக்குமா என்பதை சிந்தித்து செயற்படவேண்டும்.
அனர்த்தம் மற்றும் காலநிலை அபாய உணர்வோடு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அதிகாரிகளுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் மிக முக்கியமாகும். இவ்வாறு மக்களும் அரச அதிகாரிகளும் எதிர்கால அனர்த்த ஆபத்தினை உணர்ந்து தமது அபிவிருத்தி செயற்பாடுகளை செய்யும்போது எமது சமூகங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கின்றன. எங்கள் குழந்தைகள் மற்றும் அடுத்த தலைமுறை இளைஞர்களின் வருங்காலத்திற்காக வாழும் நகரங்களையும் கிராமங்களையும் நாம் இன்னும் காணவில்லை.
எம்மில் புரையோடிப்போயிருக்கும் மோசமான அரசியல் கலாசாரம் மற்றும் ஒரு பொறுப்பான குடிமகனாக நாங்கள் சரியான நேரத்தில் சரியான கொள்கையை சரியான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான எங்கள் பொறுப்பற்ற தன்மைக்கும் நாங்களே பொறுப்புக்கூறவேண்டும். எங்கள் சொந்த வீடுகளிலிருந்தும், எங்கள் குழந்தைகளிடமிருந்தும் எங்கள் பாடசாலைகள், அலுவலகங்களிலிருந்தும் சிறிய செயற்பாடாக ஆரம்பிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். எமது செயற்பாடுகளில் நாம் தாமதிக்கும்போது இன்னும் பல அழிவுகளை சந்திக்கவேண்டியேற்படும். அனர்த்தங்களின் பின்னர் கைவிரிப்பதை விட அவை ஏற்பட முன்னர் சற்று சிந்தித்து சிறு செயல்பாடுகளிலாவது ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும்.
-Vidivelli